வள்ளுவரும் அமணமும்

வணக்கம் ஜெயமோகன் அண்ணா

தற்போதுதான் கொற்றவை வாசித்து முடித்தேன். இறுதி அத்தியாயத்தை படிக்கும் போது ஒரு கணம் கண்மூடி இளம் வயதிலேயே இழந்த என் தாயை நினைத்து கொண்டேன். பொதுவாக நான் உணர்ச்சிவசப்படும் டைப் அல்ல ஆனால் இதை கடந்த மூன்று வாரங்களாக படித்து வருகையிலேயே பலவிதமான் மன எழுச்சிகளையும் வீழ்ச்சிகளையும் அடைந்தேன். விஷ்ணுபுரம் கூட இத்தனை பாதிக்கவில்லை(அதுவே ஓராண்டுக்கு முன்பு நான் படித்த உங்களின் முதல் எழுத்து).

கொற்றவை படிக்க படிக்கவே சமணர் பற்றிய பல கேள்விகள் என்னுள் எழுந்தன. அதில் ஒன்று அக்காலத்தில் வாழ்ந்த சமண முனி அனைவரும் ஆடை இன்றிதானே இருந்தனர்? தமிழக சமணர் அனைவரும் அடிப்படையில் திகம்பரர் என்று அறிகிறேன். சுவேதம்பரர் வெள்ளை உடை உடுத்தியவர் பெரும்பாலும் வட பாரத சமணர்களே எனவும் படித்துள்ளேன். அக்காலத்தில் ஆடையின்றி திரிந்த திகம்பர சமணர்களை பற்றிய மக்களின் கருத்து என்னவாக இருந்திருக்கும்? சென்னை புரசைவாக்கம் சவுகார்பேட் போன்ற பகுதிகளுக்கு வரும் அம்மண சாமியார்கள் மீது மக்கள் கல் எறிந்து எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.

நான் ஃபேஸ் புக்கில் வள்ளுவர் ஒரு சமணராக இருந்திருக்கும் பட்சத்தில் திகம்பரரான அவர் ஆடை எதுவும் அணிந்திருந்து இருக்க மாட்டார் என்று எழுதியதற்கே கடுமையாக வசை பாடினார்கள். நாம் பார்க்கும் வள்ளுவரின் படம் கொண்டையும் தாடியுமாக ஒரு டிபிகல் இந்து முனிவரின் படம் போலவே வரையபட்டுள்ளது அன்றைய கருணானிதி அரசினால். சமணம் வீழ்ந்ததற்கு இத்தகைய கடும் நெறிகளும் ஒரு காரணமா?

சிவகுமார்

சென்னை

சமண வள்ளுவர்
சமண வள்ளுவர்
சைவ வள்ளுவர்
சைவ வள்ளுவர்
அரசாங்க வள்ளுவர்
அரசாங்க வள்ளுவர்

அன்புள்ள சிவக்குமார்

கொற்றவையுடன் உங்கள் மனம் தொடர்புகொள்ள முடிந்தது குறித்து மகிழ்ச்சி.

பொதுவான சில புரிதல்களை உங்கள் கடிதத்தில் முன்வைத்திருக்கிறீர்கள்

சமணத்தில் திகம்பரம் சுவேதாம்பரம் என்னும் இரு பிரிவுகளும் பல உட்பிரிவுகளும் உண்டு. தென்னகத்தில் பெரிதும் திகம்பரமே இருந்தது. ஆனால் திகம்பர சமணத்தில் அனைத்து துறவிகளும் அமணர்கள் அல்ல. அது ஒரு உச்சநிலை மட்டுமே. முற்றும் துறந்தவர்களுக்குரியது. ஆகவே வள்ளுவரோ திருத்தக்கதேவரோ திகம்பரர்களாக இருந்திருக்கவேண்டியதில்லை. திகம்பரர்களுக்கு காவியமும் கலைகளும்கூட உலகியல்விஷயங்கள்தான்.

வள்ளுவருக்கு இப்போதிருக்கும் சித்திரம் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் வரையப்பட்டது. திருக்குறள் தீபாலங்காரம்- ஜமீன்தாரிணி உரை என்னும் நூலில் இந்தப்படம் இருந்தது என்று சொல்லி அறிந்திருக்கிறேன். அதற்கு முன் ஏதாவது சுவரோவியங்களில் இருந்ததா என தெரியவில்லை. ஆய்வாளர்கள்தான் சொல்லவேண்டும்.

இன்றைய இச்சித்திரம் சைவர்களால் உருவாக்கப்பட்டது. ஒரு சைவ முனிவரின் தோற்றம் வள்ளுவருக்கு அளிக்கப்பட்டது. அகத்தியர், விஸ்வகர்மர் ஆகிய இரு சிலைவடிவங்களை ஒட்டி இது அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். பின்னர் தமிழக அரசு இப்படத்தை ஏற்றுக்கொண்டபோது பூணூல் மட்டும் மறைக்கப்பட்டது.

அதற்கு முன்னரே பதினேழாம் நூற்றாண்டில் வள்ளுவரைப்பற்றிய கதைகள் சைவர்களால் உருவாக்கப்பட்டன. தமிழ்நாவலர்சரிதை என்ற தனிப்பாடல்திரட்டு நூலிலேயே அம்முயற்சி தொடங்கியது.வள்ளுவர் நெசவாளர் என்றும், அவர் மனைவிபெயர் வாசுகி என்றும், அவர் மயிலாப்பூரில் வாழ்ந்தார் என்றும் கதைகள் உருவாக்கப்பட்டன

அதற்கான காரணம் திருவள்ளுவர் பறையர்சாதியின் பூசகப்பிரிவான வ்ள்ளுவர் குலத்தவர் என்று பரவலான நம்பிக்கை இருந்தமைதான். வள்ளுவமாலை போன்ற பதினைந்தாம் நூற்றாண்டு நூல்களிலேயே அந்தக்குறிப்பு உள்ளது. அவர் தெய்வப்பறையர் என்று அழைக்கவும் பட்டிருக்கிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வள்ளுவர் வெற்றிகரமாக அந்த அடையாளத்தில் இருந்து ‘மீட்கப்பட்டு’ இன்றைய அடையாளத்துக்குள் கொண்டுவரப்பட்டார்

வள்ளுவர் சமணர் என்றும், குந்துகுந்தாச்சாரியரின் மாணவர் என்றும் சமணர்கள் நம்புகிறார்கள். அவர் பெயரும் குருவின் தொடர்ச்சியாக குந்துகுந்தாச்சாரியார் என்று அழைக்கப்பட்டது என்கிறார்கள். சிரவணபெளகொளாவில் அவருடைய சமாதியிடம் உள்ளது என்கிறார்கள்.

கடைசியாக, இன்று நம்மிடையே உள்ள ஒழுக்க மதிப்பீடுகள், உடைசார்ந்த வழக்கங்கள் எல்லாமே இஸ்லாமியர் ஆட்சிக்காலத்திலும், நாயக்கர்- மராட்டியர் ஆட்சிக்காலத்திலும், பின்னர் வெள்ளையர் ஆட்சிக்காலத்திலும் உருவாகி வந்தவை. பண்டைய தமிழகத்தில் அமணர்களின் தோற்றம் இயல்பாகவே ஏற்றுக்கொள்ளப்பட்டது. இன்று நமக்கு சமணம் பற்றி ஏதும் தெரியாதகாரணத்தால் எதிர்ப்பு உருவாகிறது.

அமணர்களை எதிர்த்த சைவர்கள் அவர்களின் தோற்றம் பற்றிய வெறுப்பை உருவாக்கினார்கள். ஆயினும் அது நம் பண்பாட்டில் இன்றும் இருக்கிறது. சைவத்துக்குள்ளேயே வாழ்கிறது.சித்தர்கள் என்பவர்கள் சமண திகம்பரர்களின் இன்னொரு வடிவம்தானே? சித்தர்களின் அழுக்கையும் நிர்வாணத்தையும் நாம் ஏற்றுக்கொள்கிறோமே?

ஜெ

முந்தைய கட்டுரைஆண் என்பது…
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 35