அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
விடுமுறை நாளில் அமர்ந்து பிடித்தவருக்கு கடிதம் எழுதுவதன் சுகத்தை அனுபவித்த முந்தைய தலைமுறையின் நீட்சியாகவே இதை ஆரம்பிக்கிறேன். ஒரு எழுத்தாளனை -படைப்பு ரீதியாக- விமர்சிக்க அனேக விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் அதற்கெல்லாம் படிக்க வேண்டும். படிப்பதற்கு நேரமும் இல்லாமல் விருப்பமும் இல்லாமல் அந்த எழுத்தாளன் சொன்ன ஒரு வரியை வடிவேலு வசனத்துடன் கிண்டல் செய்யும் போர்க்குணம் இல்லாதஇளைய சமுதாயத்தின் மீது எனக்கு கோபம் இருந்தால் அது வானம் பார்த்து நான் எச்சில் துப்பிக் கொள்வதற்கு சமானம். ஆனால் எந்த எழுத்தாளனையும் ஏறி மிதிப்பதற்கு முன் அவன் எழுதிய ஒரு புத்தகத்தையாவது எங்கள் ஆட்கள் படித்து விட வேண்டுமென்றுதான் தினமும் பூண்டி மாதாவிடம் வேண்டிக்கொள்கிறேன். குறிப்பாக உங்கள் விஷயத்தில் காவடி ஆட்டம் ஆடும் மழைக் காளான்களுக்கான பிரார்த்தனை ஒரு பொருத்தனையோடு என்னிடம் தொக்கி நிற்கிறது.
விஷயத்திற்கு வருகிறேன், ‘என் வீட்டில் யாருமில்லை வா குடிக்கலாம்’என ஒருவர் அழைத்தார் -நண்பர்களிடம் இப்படியொரு அழைப்பு வந்தால் இந்த மனம் ஏன் முதன்முறை பறக்கும் பறவையைப் போல சிறகடிக்கிறது- என்னுடைய மாதக் கடைசி நிலவரத்தை அறிந்தவராய் தரமான ரம் மற்றும் அதற்கு தேவையான தொடுகறியை எல்லாம் வாங்கி வைத்துத்தான் என்னை அவர் அழைத்திருந்தார். அதைப்பார்த்தவுடன் கண்ணீர் மல்க நண்பருடைய உச்சந்தலையில் முத்தம் கொடுக்க வேண்டும் போலிருந்தது. சரி, இந்தக் கடிதம் எதைப்பற்றி என்று பற்களைக் கடிக்காதீர்கள். எந்த ஒரு கதையையும் நேர்க்கோட்டில் சொல்லாமல் தலையைச் சுற்றி மூக்கைத் தொட வேண்டும் என்கிற தோஷம் உங்களிடமிருந்துதான் வந்தது. தவிர, இப்போது நான் குடித்திருக்கிறேன். அரை மணி நேரம் குடை ராட்டினத்தில்தொடர்ந்து சுற்றி விட்டு கீழே இறங்கியது போல கிறுகிறுவென்று இருப்பதால்என்ன எழுதிக் கொண்டிருக்கிறேன் என்கிற பிரக்ஞை இல்லை.போதிலும் ஒருவாறாக சமாளித்து சொல்ல வந்ததை சொல்லிவிட்டு தூங்கி விடுகிறேன்.
நண்பரும் உங்களைப் போன்ற ஒரு எழுத்தாளர் என்பதால் அவர் உடல் இப்போது கொண்டிருக்கும் போதையை தன்னுடைய முதுகுத்தண்டில் யாரோ பொம்மை கார் ஓட்டுவது போல இருக்கிறதென்று உவமையோடு சொன்னார். பிறகு செல்போனை காதில் வைத்தபடி அறையை விட்டு வெளியே சென்று விட்டார். நான் இக்கணம் தனிமையில் இருக்கிறேன். நாற்காலியில் அமர்ந்தபடி கண்களை மூடாமல் இமைகளை மட்டும் மூடினேன். இம்மாதிரியான போதையில் காதலிகளை நினைத்து பொறுமுவது எனக்கு சலிப்பாகி விட்டது. ஒரு மாறுதலுக்கு இன்று முடித்த உங்களுடைய“வெள்ளை யானை” நாவலை அசை போட ஆரம்பித்தேன். சொல்வதற்கு சில விஷயங்கள் இருக்கிறது அதைப் பற்றி உங்களிடம் பேசி(யே) விடலாமா என்று நப்பாசையில் பாதி கண்ணில் உங்கள் நம்பரை செல்போனில் தேடினேன். இல்லை. ஒருவேளை நான் பேசினாலும் அது உங்களுக்கு புரியாது காரணம் என்னுடைய பேச்சில் கொழகொழப்புத்தன்மை இப்போது அதிகம் இருக்குமென்று என்னால் உணர முடிகிறது. போதை.
சரி, சொல்ல வந்ததை சீக்கிரம் சொல்லி விடுகிறேன் பிறகு நண்பர் வந்தவுடன் நகுலன், லா.ச.ரா என பேசி ஆட்டோகிராப் சேரன் போல விசும்ப ஆரம்பித்து விடுவார்.
எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய “எனது இந்தியா” என்கிற தடித்த வரலாற்று புத்தகத்தை முழுதும் படித்திருக்கிறேன். அதில் சென்னை ஐஸ் ஹவுஸ் பற்றி அவர் எழுதிய பத்து பக்கத்தில் ஐஸ் ஹவுஸ் தொழிலாளர்கள் செய்த வரலாற்று சிறப்பு மிக்க வேலை நிறுத்தத்தைப் பற்றி எங்கும் குறிப்பிடவில்லை. போலவே தினத்தந்தியில் வந்து கொண்டிருந்த “வரலாற்றுச் சுவடுகள்” பகுதியிலும் அதைப்பற்றி படித்த ஞாபகங்கள் இல்லை. தெரிந்தோ தெரியாமலோ மற்றவர்களால் இருட்டடிப்பு செய்யப்பட்ட (இந்தியாவிலேயே முதல் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்)சம்பவத்தை நூலாய்ப்பிடித்து நாவல் நெய்திருக்கிறீர்கள். இதுவே வெள்ளை யானையிடம் எனக்கு ஈர்ப்பு ஏற்பட காரணம்.
கூடவே கதை சொல்லியாய் நீங்கள் தேர்ந்தெடுத்த ஹெய்டன் பாத்திரம்.தாழ்த்தப்பட்டவர்களை மையப்படுத்தி எழுதப்பட்ட இந்நூலில் அவர்கள் யாரையும் பேசு பொருள் ஆக்காமல் அவர்களை அடிமை செய்யவந்த வெள்ளைக்காரன் பார்வையில் மொத்தகதையும் நகர்வது அயர்ச்சியை தவிர்த்தது. தன் காதலி மரிஸாவை சந்திப்பதற்கு முன் ஹெய்டன் தனக்குளே பேசிக்கொள்ளும் வார்த்தைகள் தன்னிலை உணர்தலின் உச்சம். (பக்கம்-366)
தாதுப்பஞ்சத்தின் கோராமையை பிரதிபலிக்க முயன்று தேவையற்ற விவரணைகளால் இருநூறு பக்கம் நாவல் நானுறு பக்கம் தொட்டிருக்கிறது. நாவலை எழுத ஆரம்பிப்பதற்கு முன்பு இதை இத்தனைப் பக்கம்தான் எழுத வேண்டுமென்று கல்கத்தா காளியிடம் சத்தியம் செய்துவிட்டு ஆரம்பிப்பீர்களா என்கிற சந்தேகம் படிக்கும்போது இடையிடையே எழுந்தது.
வெள்ளை யானை வெளிவந்தவுடன் சுடச்சுட படித்துவிட்டு கேலி, கிண்டல் செய்த இலக்கியவாதிகளை ஏனோ ஒருசாதி அடையாளத்துடனேயே இப்போது நினைத்துப் பார்க்க தூண்டுகிறது. அதே சமயம் இது தலித் நாவல் என்று சொன்னால் நீங்களே சிரிப்பீர்கள். படித்து முடித்தவுடன்எந்த பச்சைக் குருதியின் வாசனையையும் நான் உணரவில்லை.
அத்தோடு நாவலின் பின் அட்டையில் இந்த அழிவுக்கு நாம்தான் கூட்டு பொறுப்பு ஏற்க வேண்டும் எனச் சொல்லி இருக்கிறீர்கள். அது யாருக்கு? நம்மை ஆண்ட பிரிட்டிஷாருக்கா? நான் உயர்சாதி என்று-ஏதோ ஒரு வகையில்-பீத்தலோடு அப்போதிலிருந்து இன்றுவரை இருக்கும் ஆரியர்களுக்கா? அல்லது நாவலை படிக்கும் தலித்துகளும் ஆசனவாயில் ஊசி குத்துவது போல உணர்ந்து கூட்டுப் பொறுப்பு ஏற்க வேண்டுமா?
எல்லா விஷயத்தையும் தொட்டுவிட வேண்டும் என்கிற பிராயசையில் தலித்துகளை வைத்து ஒரு புத்தகம் எழுதி இருக்குறீர்கள். போதிலும் இதையாவது எழுதி இருக்குறீர்களே என்று ரம் நாற்றம் அடிக்கும் வாயோடு உங்கள் கன்னத்தில் ஒரு முத்தம் இட்டுக் கொள்கிறேன்.குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு என்று நினைக்காதீர்கள் ஜெமோ, இது கொஞ்சம் காஸ்ட்லி ரம்.
நன்றி
தமிழ்ப்பிரபா.
அன்புள்ள தமிழ்ப்பிரபா,
போதையில் கடிதம் எழுதியிருக்கிறீர்கள். வாசித்ததும் போதையிலாக இருக்காதென நம்ப விழைகிறேன்.
எந்தப்பக்கத்திலிருந்தும் நாவலுக்குள் வாசல் திறந்து நுழையலாம். நீங்கள் உங்கள் வீட்டிலிருந்து நுழைந்திருக்கிறீர்கள். நாவலைப்பற்றி நீங்கள் கேட்பவற்றுக்கெல்லாம் நாவலிலேயே விடை உள்ளது.போதையிலிருந்து மீண்டபின் இன்னொருமுறை வாசிக்கலாம், யோசிக்கலாம்
நாவலின் கருவே தாதுவருஷப் பஞ்சம்தான். அது மொத்த நாவலிலும் ஒரே அத்தியாயத்தில் வெறும் இருபது பக்கங்களுக்குள்தான் சொல்லப்பட்டுள்ளது.
நான் உயர்ந்த சாதி என எண்ணிக்கொள்பவர்கள் ஆரியர்கள் மட்டும்தான் என்று உயர்ந்தசாதி ரம்மின் புட்டிமேல் எழுதப்பட்டிருக்காதென்று நினைக்கிறேன்.
‘நாம்’ என்பது நான் இன்னசாதி என தன்னை அடையாளப்படுத்தி, இன்னாரைவிட மேல் என உணரும் அனைவரும்தான். அதில் தலித்துக்களும் அடக்கம் என்பதே என் எண்ணம்.
[போதையில் உள்ளவர்களைச் சேர்க்கமுடியுமா என்று தெரியவில்லை. அவர்கள் தனி சாதி என்று சொல்லிக்கொள்கிறார்கள். அதற்குள் நால்வருண அமைப்பு வேறுமாதிரி என்று சொன்னார்கள். ஸ்காட்ச், காஸ்ட்லி ரம், டாஸ்மாக்,சுண்டக்கஞ்சி என்று]
‘சுடச்சுட’ வாசித்துவிட்டு மறைவாக பழங்கதைகள் சொல்பவர்களின் பிரச்சினையை நானும் அறிவேன். கருத்துக்களைச் சொல்லி விவாதிக்க அதற்கான தன்னம்பிக்கையும் ரசனையும் வாசிப்புப்புலமும் வேண்டும். துரதிர்ஷ்டவசமாக உயர்ந்தசாதி ரம்மும் அதை அவ்வளவாக அளிப்பதில்லை.
எப்படியோ நீங்கள் வாசித்து முடித்ததிலும் எழுதியதிலும் மகிழ்ச்சி. இன்னொருமுறை ஆங்காங்கே நினைவூட்டிக்கொள்ளவாவது முடிந்தால் அந்நாவல் பேசும் அதிகாரத்தின் இயக்கவிதிகளை, பின்னிச்செல்லும் படிமங்கள் மூலம் முன்வைக்கப்படும் தரிசனத்தை நீங்கள் கண்டுகொள்ளவும்கூடும்.
இன்னும் பிற நாவல்களையும் இதேபோல வாசித்துவீட்டீர்கள் என்றால் ஒரே அறக்கேள்வியைத்தான் அனைத்தும் வெவ்வேறு கோணங்களில் அணுகுகின்றன என்றும் காண்பீர்கள். அது ஏய்டனின் சிக்கலென்ன, அவன் யார் என அறிய உதவும்.
எதற்கும் ஒருமுறை மற்ற மூன்று வகைளுடன் நாவலை வாசித்துப்பாருங்கள்.
நன்றி
ஜெ