என் எதிர்வீட்டுக்காரரும் நண்பருமான அனில்குமார் 27-6-2014 அன்று மரணமடைந்தார். வயது நாற்பத்தைந்துதான். மாரடைப்பு. அதிக நெருக்கமில்லை என்றாலும் அண்டைவீட்டாருடன் உள்ள நல்லுறவு எப்போதும் அவரிடம் இருந்தது. காலைநடை செல்லும்போது சந்தித்துக்கொண்டால் பேசிக்கொள்வோம். பொதுவாக பிள்ளைகளின் படிப்பு அல்லாமல் வேறு ஆர்வம் அவருக்கில்லை. அதில் எனக்கு பெரிய ஆர்வம் இல்லை. ஆனாலும் மணிக்கணக்காகப் பேசமுடிந்தது. காரணம் அவர் நல்ல மனிதர்.
உயர்நிலைப்பள்ளி ஆசிரியர். மாலத்தீவில் அவரும் துணைவியும் பணியாற்றிய காலத்தில்தான் பதினைந்தாண்டுகளுக்கு முன் எதிரில் வீடு கட்டினார்கள். நானும் வீடுகட்டியது அப்போதுதான். பின்பு இந்தியா மீண்டும் சமீபத்தில் இருவரும் விருதுநகரில் பணியாற்றி வந்தார்கள். இரு பெண் குழந்தைகள். இருவரும் இங்கே பாட்டிதாத்தாவுடன் இருந்தனர்
அனிலின் மரணம்போல துயரமான வேடிக்கையை நான் சமீபத்தில் கண்டதில்லை. அவருக்கு மெல்லிய மாரடைப்பு ஒன்று ஒரு வருடம் முன்னரே வந்திருக்கிறது.அதற்கு மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார். 26 அன்று மாலை நெஞ்சை அடைத்திருக்கிறது. விருதுநகரில் ஒரு டாக்டரிடம் காட்டியிருக்கிறார். அவர் ஸ்டெத் வைத்து பார்க்கவில்லை. எப்படி நெஞ்சடைக்கிறது என்று நான்கு கேள்விகளையும் கேட்கவில்லை. நம் வழக்கமான புயல்வேக சிகிழ்ச்சையாளர். வாயுத்தொல்லைக்கான மாத்திரை எழுதிக்கொடுத்துவிட்டார்
அதை சாப்பிட்டுவிட்டு படுத்தவருக்கு அதிகாலையில் மீண்டும் நெஞ்சுவலி வந்திருக்கிறது. சர்க்கரை நோய் உள்ளவராகையால் வலி மிதமானதாகவே இருந்தது. ஆனால் வியர்வையும் மூச்சுத்திணறலும் களைப்பும் இருந்தது. மனைவியிடம் ஊருக்கே சென்றுவிடலாம், அங்கே சிகிழ்ச்சை எடுத்துக்கொள்ளலாம் என்று சொன்னார்.மனைவி அவரை மாடிப்படியில் இறக்கி ஒரு டாக்ஸியில் ஏற்றி நாகர்கோயிலுக்குக் கிளம்பினார்.
வழியிலேயே உடல் சில்லிடத் தொடங்கியது. பயந்துபோய் நெல்லையின் ஆஸ்பத்திரிகளுக்குக் கொண்டுசென்றார். நான்கு தனியார் மருத்துவமனைகளில் இரவில் மருத்துவர்கள் இல்லை. கூப்பிட்டால் வருவதற்கும் எவருமில்லை. ஒன்றில் கதவையே திறக்கவில்லை. கடைசியாக ஒரு மருத்துவமனைக்குள் சென்றபோது அங்கிருந்த பயிற்சி மருத்துவர் நோயாளி இறந்து ஒருமணிநேரமாகிறது என்றார். அவ்வளவுதான்
எல்லா இடத்திலும் அறியாமையும் பொறுப்பின்மையும். முதல் குற்றவாளி அவர்தான். முதல் மாரடைப்புக்குப்பின்னராவது அதைப்பற்றி கொஞ்சம் தெரிந்துகொண்டிருக்கலாம். தமிழகத்தில் நாட்டுமருத்துவம் வழியாக அனைவருக்கும் தெரிந்திருக்கும் இரு அபத்தமான மருத்துவக் கொள்கைகள் உண்டு. ஒன்று உணவில் சூடு- குளிர்ச்சி என்னும் பிரிவினை. இன்னொன்று வாயுத்தொல்லை. எந்த உணவைப்பார்த்தாலும் அது சூடா குளிர்ச்சியா என்பார்கள். எந்த வலியையும் வாயுத்தொல்லை என்பார்கள்
சென்ற பத்தாண்டுகளில் பெரும்பாலான மாரடைப்பு மரணங்கள் சம்பந்தப்பட்டவர்களால் வாயுத்தொல்லை என்று புரிந்துகொள்ளப்பட்டமையால் நிகழ்ந்தவை. ஆகவே நம் வார இதழ்கள் கூட வாயுத்தொல்லைக்கும் மாரடைப்புக்குமான வேறுபாட்டைப்பற்றி மீண்டும் மீண்டும் செய்திவெளியிடுகின்றன. மாரடைப்பு என்றால் வேர்க்கும், மூச்சுவாங்கும், வலி நகரும், முதுகும் கையும் கழுத்தும் நோக்கி பிடிப்பு செல்லும் என சென்றவாரம்கூட ஒரு நாளிதழ் இணைப்பில் போட்டிருந்தனர். நானே பதினைந்து முறையாவது வாசித்திருக்கிறேன்
ஆனால் நண்பர் அவரது வேலைக்கு அப்பால் எதையுமே தெரிந்துகொள்ளக்கூடியவர் அல்ல. அவரது மனைவியும்தான். முன்னுதாரணமான நடுத்தர வர்க்கம். அவர்களுக்கேற்ற நடுத்தரவர்க்க மருத்துவ உலகம். பத்து முதல் ஐந்து வரை நோய் வந்தால் போதுமென்ற எண்ணம் கொண்ட, அன்றாட வழக்கத்துக்கு மேலாக எதையும் சிந்திக்காத குமாஸ்தா டாக்டர்க்ள்.
நான்கு வருடங்களுக்கு முன் என் மகளுக்கு விடியற்காலையில் வாந்தியும் வயிற்றுப்போக்கும் வந்தபோது பதறியடித்துக்கொண்டு ஆஸ்பத்திரிகளுக்குச் சென்றேன். எந்த இடத்திலும் டாக்டர்கள் இல்லை. எல்லாருமே பத்துமணிக்குத்தான் வருவார்கள். கடைசியில் அ.கா.பெருமாள் அவருக்குத்தெரிந்த ஒரு டாக்டரை எழுப்பி அங்கே அவளை சேர்த்து சிகிழ்ச்சைக்கு ஏற்பாடு செய்தார்.
இளமையான மீசையுடன், திகைத்தவர் போல அனில்குமார் கண்ணாடிப்பேழைக்குள் கிடந்தார். நாள் முழுக்க நிலைகொள்ளாமல் எவருடனோ எரிச்சலுடன் இருந்தேன். நள்ளிரவில் சமாதானமாகிவிட்டேன். அவரது விதி. நம் விதி. அவ்வளவுதான்