காமமும் ஒழுக்கமும்:கடிதங்கள்

அன்புள்ள ஜெ.,

காமத்தின் ஆற்றல் குறித்து, அதன் ஒடுக்குதலில் உள்ள மாபெரும் சவால் குறித்துப் பல கடிதங்கள் வருவதால் இதை எழுதுகிறேன்.

சமீபத்திலேயே என் திருமணம் நடந்தது. அதுவரை சுய இன்பமே என் காமத்தின் ஒரே வடிகால். காம மனநிலை இல்லாத ஒரு வயது என் வாழ்வில் 4 வருடங்கள் முன்புவரை கிடையாது.

4 வருடங்களுக்கு முன் நானும் அந்தப் பொல்லாக் காமத்தை வெல்ல முனைந்தேன். அதாவது காமத்தை தியானிக்க ஆரம்பித்தேன். மாதக்கணக்கில் சுய இன்பத்தை நிறுத்தி வைத்தேன். பீறிடும் காமத்தைத் தடுக்காமல், பின் தொடராமல் கவனிக்க ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் மிகக் கடினமாக இருந்த விஷயம், போகப்போக ஓரளவு கைகூடியது. ஒரு புத்துணர்ச்சியை உணர்ந்தேன். இருமுறை இந்த சோதனையை செய்து பார்த்திருக்கிறேன் (75 நாட்கள் & 100 நாட்கள்). எல்லாம் நல்லபடியாகத்தான் நடந்து முடிந்தது.

ஆனால் அதன்பிறகு நடந்தது நான் எதிர்பாராத ஒன்று. என் காமம் மிகவும் மட்டுப்பட்ட நிலையை அடைந்தது. அழகான ஒரு பெண் நிர்வாணமாக வந்து நின்றால் கூட சலனம் தோன்றுவதில்லை. பல மருத்துவர்களைப் பார்த்து விட்டேன். உடல் ரீதியாக ஒரு குறையும் இல்லை; என் மனப்பிரமை தவிர வேறு ஒன்றும் இல்லை என்பதே எனக்குக் கிடைத்த ஒரே பதில். இதுவரை தாம்பத்திய உறவு இல்லாமலே திருமண வாழ்வை “வெற்றிகரமாக” நடத்தி விட்டேன் :)

இந்தக் கடிதம் உங்களின் மருத்துவ ஆலோசனைக்காக அல்ல (என்றுதான் நினைக்கிறேன்). 25 வருடங்களாக என்னை உக்கிரத்துடன் உலுக்கி வந்த காமப்பிசாசு, வெறும் கவனித்தலின் மூலம் ஓடிவிட்டதா என்ன? அல்லது மருத்துவர்கள் சொல்வது போல் இது வெறும் மனப்பிரமைதானா?

நன்றி

ஆர்.

 

அன்புள்ள ஆர்

உங்கள் கடிதத்தை வைத்துக்கொண்டு ஒன்றும் சொல்ல முடிவதில்லை. மேலும் நீங்கள் ஒன்றும் ஆலோசனை கேட்கவும் இல்லை. பிரச்சினை என்ன என்று உங்களுக்கே தெரியும். நம் சூழலில் உறவுகள் எல்லாம் காமத்தை அடிபப்டையாகக் கொண்டவை. காமத்தைத் தாண்டிச்செல்ல விழைபவர்கள் உறவுகளையும் துறப்பவர்களாகவே இருப்பார்கள். உங்கள் பிரச்சினையில் முக்கியமாகக் கவனிக்கத்தக்கது உங்கள் மனைவியின் நிலைதான். அதை நீங்கள் விட்டுவிட முடியாது. அதற்கேனும் நீங்கள் இப்போதிருக்கும் நிலையில் நிறைவுடன் இருக்க முடியாது. இதை ஒரு குறைபாடாகவே நீங்கள் கவனித்தாகவேண்டும்.

நூற்றுக்கு தொண்ணூறு விழுக்காடு இது உங்கள் மனதின் பாவனை சம்பந்தமானது. நுட்பமான ஏதாவது அச்சங்கள் அல்லது தயக்கங்கள் இருக்கலாம். அதை நீங்கள் சரியான மருத்துவரிடம் கலந்துரையாடி தீர்த்துக்கொள்ளலாம். சிறிய அளவில் ஏதேனும் மருந்துக்கள் இருக்குமென்றாலும் பயன்படுத்தலாம். ஆனால் இப்பிரச்சினையை நீங்கள் சரிசெய்தே ஆகவேண்டும். ஏனென்றால் நீங்கள் இருக்கும் நிலையில் உங்கள் மனைவிக்கு நீங்களிழைக்கும் அநீதி உள்ளது. அதை நீங்கள் அலட்சியம்செய்ய முடியாது. அநீதிமீது நாம் நம் வாழ்க்கையை உருவாக்கிக் கொண்டு அமர்ந்திருக்க முடியாது

உடலில் தோன்றும் இயலாமை அல்லது விலக்கம் அல்ல காம ஒறுப்பு என்பது. அந்த காமம் இருந்த இடத்தில் மேலும் உன்னதமான விஷயங்கள் நிறைவதே. நீங்கள் இன்றிருக்கும் நிலை எப்படிப்பட்டது என தெரியவில்லை. அது ஓர் அதிர்ச்சியுடன் வேறேதாவது தளத்தில் வெளிப்படவும் கூடும்.

யோசிக்கவும்

ஜெ

 

அன்புள்ள ஜெயமோகன்

உங்கள் எல்லா மடல்களுக்கும் நன்றி.
ஒழுக்க நெறி பற்றி உங்கள் விளக்கங்கள் சில ஐயங்களை தீர்த்தன.  ஆனால் ஒன்று மட்டும் என் மனதை அறிவை உறுத்தி கொண்டே இருக்கிறது.  இது பற்றி என் விபரம் தெரிந்த நாள் முதலாய் பல பேரிடம் கேட்டு இருக்கிறேன்.  அதிக பிரசங்கி என்று பேர் வாங்கியதுதான் மிச்சம்.  கிழக்கிலும் மேற்கிலும் உதித்த பல தத்துவ  வரலாற்று படித்த என் தந்தையிடம் பல முறை விவாதித்தும் இதற்கு பதில் கிடைக்கவில்லை.  ஆண்களுக்கே உள்ள அகம்பாவம்,  ஈகோ என்று முடிவுக்கு வருவேன்.  நீங்களும் ஆண்தான் அதனால் எனது இந்த கருத்துக்கு மன்னிக்க.

குழந்தை பெற்று வளர்ப்பவள் என்பதாலேயே பெண்ணுக்கு ஒழுக்க நெறிகள் இன்னும் கடுமையாக இருந்தன என்று கூறி இருக்கிறீர்கள்.  என் தந்தையும் இதையே கூறினார்.  ஆனால் நான் என் வாழ்கையில் நான் கண்டவை பார்த்தவை இதற்கு நேர் மாறாக இருக்கிறதே.  ஒழுக்க மீறல் பெண்ணிடம் என்றால் குழந்தைகள் பாதிக்க படும் என்று நம்பப் டுகிறது.  ஆனால்  ஆணின் ஒழுக்க மீறலும் அதனால் ஏற்பட்ட பொறுப்பற்ற தன்மையினாலும் சீரழிந்த குடும்பங்கள் அதிகம்.  நான் வளர்ந்த ஊரில் என் வீட்டை சுற்றி சில பல குடும்பங்கள் இருந்தன.  அவை சாதியில் மேல் வர்க்கத்தை சேர்ந்தவை.  அந்த குடும்பங்களில் உள்ள பெண்கள் (குழந்தைகள் பெற்ற தாய்மார்கள்) ஒழுக்கம் மீறியவர்கள்.  ஆனால் அந்த பெண்கள் தங்கள் குடும்பத்தையோ அல்லது குழந்தைகளையோ புறக்கணிக்க வில்லை.  அந்த குடும்பத்து குழந்தைகள் எல்லாம் நன்கு படித்து முன்னேறி இன்று டாக்டர் ஆகவோ எஞ்சினியர் ஆகவோ, வங்கி அதிகாரி ஆகவோ உள்ளனர்.
எந்த குழந்தையும் பாதிக்கப்படவில்லை.  இந்த சாதியில் உள்ள சமூகத்தில் ஆணுக்கு கட்டுபாடுகள் அதிகம் இருக்கின்றன.  இதை நீங்களும் பார்த்து உணர்ந்து இருப்பீர்கள்.

இனி என் உறவு குடும்பங்களில் சிலவற்றில் ஆண்கள் ஒழுக்கம் மீறியவர்கள்.  ஒரு ஒழுக்க நெறியை மீறினால் கூடவே வரும் மற்ற மீறல்களும் சேர்ந்தன.  அந்த குடும்பங்கள் நடுத் தெருவுக்கு வந்தன.  ஒரே ஒரு குடும்பத்தில் மட்டும் மனைவி படித்து பட்டம் பெற்றவர் என்பதனால் வேலை பார்த்து குடும்பத்தைக் காப்பாற்றினர்.  சில குடும்பங்களில் லட்ச கணக்கான சொத்துக்கள் கரைந்தன.

இந்த விஷயத்தில் சமூக நம்பிக்கைக்கும் அதனால் வந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள ஒழுக்க நெறி வேறுபாடுகளுக்கும்,  சமூகத்தில் நாம் பார்க்கும் நடை முறை சாட்சியங்களுக்கும் தொடர்பு இல்லையே.
உங்களுடன் வீண் தர்க்கம் செய்வதாக என்ன வேண்டாம்.  கிட்டத்தட்ட 40 வருடங்களாய் உள்ள சந்தேகங்கள்.
உங்களிடம் இருந்து ஒரு அறிவார்ந்த விவாதமோ அல்லது பதிலோ வரும் என்பதால் இந்த மடல்.

அன்புடன் சிவா சக்திவேல்

 

அன்புள்ள சிவா,

எங்கும் எப்போதும் வாழ்க்கைச்சூழல் ஒன்றே. கடந்த இருபதாண்டுக்காலத்து கடைநிலை தளத்து தொழிற்சங்க அனுபவத்தில் நானே பார்த்த சில விஷயங்கள் உண்டு.  முக்கியமாக மனிதர்களுக்கு ஒழுக்கமெல்லாம் பெரிய சிக்கல்கள் அல்ல வாழ்க்கையை எப்படியாவது வாழ்ந்து விடத்தான் மனிதர்கள் துடிக்கிறார்கள். பிறனுடன் தொடர்பு கொண்டிருந்த, ஓடிப்போய் திரும்பிவந்த, மனைவியரை கணவர்கள் குழந்தைகளின் பொருட்டு ஏற்றுக்கொள்வதை நான் பலமுறை கண்டிருக்கிறேன். காலப்போக்கில் கசப்புகள் மறைந்து போவதையும் கண்டிருக்கிறேன்.

நாம் தமிழக ஒழுக்க நெறி என சொல்வது பெரும்பாலும் இங்கிருந்த நிலப்பிரபுத்துவ உயர்குடிகளின் ஒழுக்கவியலையே. அது பெண்ணை அடிமைப் படுத்தி வீட்டுக்குள் பூட்டி வைத்திருந்த நெறி. ஆனால் அது இங்கிருந்த மக்களின் 10 சதவீதத்தவரின் நெறி மட்டுமே. எல்லா சமூகங்களிலும் நெறிகள் உண்டு. அவை அவர்களின் வாழ்க்கையின் தேவைகள் வசதிகள் கட்டாயங்களுக்கு உட்பட்டவையாக இருக்கும்.

ஒழுக்கம் போன்றவற்றை சமூகப்பரிணாமம், பொருளாதார அமைப்பின் வளர்ச்சி போன்றவற்றுடன் சம்பந்தப்படுத்தாமல் அணுகும் முறையே தவறானது. எந்த நெறியும் எதிர்மறையான நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதாக இருக்காது. ஒரு சமூகத்தின் கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்கு கொஞ்சம் கூட உதவாத ஒரு விஷயம் ஒரு சமூகத்தில் தோன்றி நீடிக்காது. அதாவது யாரையாவது அடிமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே கொண்டு ஒரு சமூக அமைப்பு உருவாகாது. அது உருவாவதற்கான காரணங்கள் இருக்கும். நீடிப்பதற்கான காரணங்கள். இருக்கும். சமூக அநீதி என்பது  காலாவதியாகி போன பின்னரும் நீடிக்கும் சமூக நெறியே. தன் பணியை ஆற்றிய பின்னரும் உதிர மறுத்து ஒரு மனநிலையாக நீடிக்கும் ஒரு சமூக வழக்கம் மட்டுமே.

நான் ஒழுக்க விஷயங்களை புனிதமானது என நினைக்கவில்லை. பண்பாடு என்பது ஒழுக்கத்தின் அடிபப்டையில் தீர்மானமாகக்கூடியது என்றும் எண்ணவில்லை. ஒழுக்கம் என்பது பண்பாட்டின் ஒரு சிறிய வெளிப்பாடு மட்டுமே. பண்பாடு என்பது ஆழ்மனப்படிமங்கள், அவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்கும் விழுமியங்கள், விழுமியங்கள் செயலுக்கு வரும்போதுள்ள ஆசாரங்கள் மற்றும் சடங்குகள் ஆகியவற்றால் ஆன ஒரு தொடர்ச்சி மட்டுமே. ஒழுக்கம் என்பது அப்பண்பாட்டின் ஒரு நடைமுறைத்தளம்.

ஏதேனும் விதமான ஒழுக்கக் கட்டுப்பாடுகள் இல்லாமல் ஒரு சமூகம் இருக்க முடியாது. ஒரு சமூகம்  நாகரீகமடையும் தோறும் அங்கே ஒழுக்க கட்டுப்பாடுகள் அதிகரிக்கும். அமெரிக்கா முதலிய நாடுகளில் கடந்த அரைநூற்றாண்டில் பொதுவான பழக்கங்கள் சார்ந்த எத்தனையோ புதிய ஒழுக்கங்கள் உருவாகி கறாராக கடைப்பிடிக்கப்படுவதைக் காணலாம். ஆகவே ஒழுக்கத்தை வெறுமே அடக்கு முறையாக காண்பதெல்லாம் பக்குவமின்மை மட்டுமே . ஓர் ஒழுக்கம் நடைமுறையில் மேலான மானுட உறவுகளை உருவாக்குமா, மேலான அற அடிப்படையை நிலைநாட்டுமா , சமூகத்தின் ஒட்டு மொத்தச் செயல்பாட்டுக்கு சாதகமானதாக இருக்குமா என்பதே அளவுகோல்

உங்கள் அப்பா சொன்னது வழக்கமாக சொல்லப்படுவது. குடும்பத்தில் பெண் ஒழுங்காக இருந்தால் பிள்ளைகள் நன்றாக இருக்கும் என்பது. நான் சொன்னது அதுவல்ல. பெண்களுக்கு குழந்தைப்பேறு இருக்கிறது. குழந்தையின் அடையாளமும் முழு வாழ்க்கையும் பிறப்பாலேயே தீர்மானமாவதே அன்றைய நிலப்பிரபுத்துவம். ஆகவே அக்குழந்தையின் பிறப்பை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் சமூகம் முயன்றது. அதனால்தான் பெண்கள் கட்டுப்படுத்தப்பட்டார்கள். அது பெண்மீதான கட்டுப்பாடல்ல, கருவறை மீதான கட்டுப்பாடே

அதாவது அன்று குலம் என்பதே முக்கியமான சமூக அடையாளம். சமூகத்தின் அடிபப்டை அலகே அதுதான். உலகம் முழுக்க பிறப்புதான் ஒருவனின் தகுதியை தீர்மானித்தது. பிறப்பின் அடிப்படையிலேயே ஒருவன் குடிமகனா பிரவுவா, பிராமணனா வைசியனா என்று முடிவு கட்டினார்கள். ஆகவே பிறப்பு வரையறுக்கப்பட்டது.  கருவறை கட்டுப்படுத்தப்பட்டது. அந்த விழுமியங்கள் இன்றும் நீடிக்கின்றன

இன்று அந்த நிலை இல்லை. இன்றும் பிறப்பு எங்கே தீர்மானமான இடத்தை வகிக்கிறதோ அங்கே பெண்ணின் கருவறை மீது கட்டுப்பாடுகள் அதிகம் உள்ளன. ஆனால் நவமுதலாளிய அமைப்பில் பிறப்பு அல்ல தகுதி மட்டுமே முக்கியமென்னும்போது அந்த  ஒழுக்கம் காலாவதியாகிறது. இன்று ஒரு பெருநகர் முதலாளியச் சூழலில் அம்மா நெறிகளை மீறினாள் என்பதனால் அந்த பிள்ளைகளின் அடையாளம் சிக்கலுக்குரியதாக ஆவதில்லை. ஆகவே ஒழுக்க நெறி மாறுபடுகிறது, அவ்வளவுதான்

ஜெ

முந்தைய கட்டுரைகடவுளற்றவனின் பக்திக்கவிதைகள் 3
அடுத்த கட்டுரைசாகித்ய அகாடமி விருதுகள்