பகுதி ஆறு : அரசப்பெருநகர்
[ 4 ]
சித்திரை மாதம் முழுநிலவு நாள் காலையில் அக்னிவேசரின் குருகுலத்தில் மாணவர்களுக்கான பயிற்சிமுதிர்வு நிகழ்ந்துகொண்டிருந்தது. களத்தில் வில்லுடன் நின்ற வியாஹ்ரசேனரும் துரோணனும் மாணவர்களை வழிநடத்த, கிழக்குமூலையில் புலித்தோலிட்ட பீடத்தில் அமர்ந்து அக்னிவேசர் அதை நோக்கிக்கொண்டிருந்தார். இளவரசர்கள் ஒவ்வொருவராக வந்து வில்லேந்தி குறிபார்த்து அப்பால் கயிற்றில் கட்டப்பட்டு ஆடிக்கொண்டிருந்த நெற்றுகளை நோக்கி அம்பெய்தனர். சுற்றிலும் நின்றிருந்த பிறமாணவர்கள் அம்புகள் குறிஎய்தபோது வாழ்த்தியும், பிழைத்தபோது நகைத்தும் அந்நாளை கொண்டாடிக்கொண்டிருந்தனர். சேதிநாட்டு இளவரசன் தமகோஷன் அனைத்து இலக்குகளையும் வென்று முதல்வனாக வந்தான்.
வியாஹ்ரசேனரின் பாதங்களைப் பணிந்தபின் துரோணனின் அருகே வந்து “தங்கள் அருள் உத்தமரே” என்று சொல்லி பணிந்தான் தமகோஷன். “வெற்றி திகழ்க” என வாழ்த்திய துரோணன் “வருக” என தமகோஷனை அழைத்துச்சென்று அக்னிவேசரின் பீடத்தின் முன் நிறுத்தினான். “குருநாதரே, இக்குருகுலத்து மாணவர்களில் முதல்வனாக வந்த சேதிநாட்டு இளவரசனை வாழ்த்துங்கள்” என்றான். தமகோஷன் அக்னிவேசரின் பாதங்களைப் பணிந்தான். அக்னிவேசர் எழுந்து புன்னகைத்தபடி “விழியை அம்பு முந்துவதை அடைந்துவிட்டாய். எண்ணத்தை அது முந்துவதை இனி இலக்காகக் கொள்” என்று வாழ்த்தினார்.
தொலைவில் அதுவரை எழுந்த எந்த அம்புகளாலும் வீழ்த்தப்படாத நெற்று ஒன்று மட்டும் கயிற்றிலாடிக்கொண்டிருந்தது. வியாஹ்ரசேனர் புன்னகையுடன் “நாங்கள் தங்கள் வில்வண்ணம் கண்டு நெடுநாட்களாகின்றன குருநாதரே” என்றார். அக்னிவேசர் நகைத்தபடி வேண்டாம் என்று கையசைத்தார். மாணவர்கள் உரத்தகுரலில் “குருநாதரே! வில்லேந்துங்கள்!” என்று கூவினர். அக்னிவேசர் துரோணனை நோக்க அவன் “தனு தழலாகவும் அம்புகள் ஒளியாகவும் ஆகும் தருணத்தை அவர்கள் இன்னும் கண்டதில்லை குருநாதரே” என்றான். அக்னிவேசர் உரக்க நகைத்தபடி தாடியை கையால் சுழற்றி நுனி முடிச்சிட்டுக்கொண்டு சிட்டுக்குருவி போல பீடத்திலிருந்து கீழே குதித்தார்.
துரோணன் அருகே பீடத்தில் மலர் சூட்டப்பட்டு பூசனைசெய்யப்பட்டிருந்த அவரது பழமையான வில்லை எடுத்து அவரிடம் நீட்டினான். இயல்பாக விழித்திருப்பிய அவர் திகைத்தவர் போல பின்னகர்ந்தார். அதை முன்பு கண்டிராதவர் போல விழிகள் ஊசலாட பார்த்தார். மூச்சில் அவரது மெலிந்த மார்பு ஏறியிறங்கியது. பின்பு மெல்லியகுரலில் “அதை அங்கே வை” என்றார். துரோணன் வில்லை மீண்டும் பீடத்தில் வைத்தபின் “குருநாதரே” என்றான். அக்னிவேசர் திரும்பி தன் குருகுலம் நோக்கி நடக்க துரோணன் பின் தொடர்ந்தான். பின்பக்கம் வியாஹ்ரசேனர் மாணவர்களை கலைந்துசெல்லும்படி சொல்வது கேட்டது.
“இன்று சித்திரை மாத முழுநிலவு அல்லவா?” என்றார் அக்னிவேசர். “ஆம்…” என்றான் துரோணன். “இன்றைய நிலவை நான் காண்பேன்” என்றார் அக்னிவேசர். நின்று ஒளிப்பரப்பாக இருந்த வானத்தை ஏறிட்டுநோக்கி “…அது கனிகள் பழுப்பதுபோல நிகழும் என எண்ணியிருந்தேன். மின்னல்போல வருகிறது” என்றார். துரோணன் அவர் சொல்வதை புரிந்துகொள்ளத்தொடங்கினான். “அந்த வில் என் ஆசிரியர் பரத்வாஜர் கைதொட்டு வாழ்த்தி எனக்களித்தது. அறுபத்தாறாண்டுகளுக்கு முன்பு” என்றார் அக்னிவேசர். “இன்று சற்று முன்பு அதை நான் முற்றிலும் அயலாக உணர்ந்தேன். அதை நான் தொட்டதே இல்லை என்பதுபோல.”
துரோணன் நெஞ்சு அதிர “அதெப்படி குருநாதரே?” என்றான். “ஆம், அது அவ்வாறுதான் நிகழும். ஐந்து வயதுமுதல் நேற்றுவரை நான் கற்ற தனுர்வேதத்தின் முதற்சொல்லும் என் நெஞ்சிலிருந்து அகன்றுவிட்டிருக்கிறது” என்றார் அக்னிவேசர். துரோணன் மேலும் ஏதோ சொல்ல உதடசைத்தபின் அதை மூச்சாக ஆக்கிக்கொண்டான். அக்னிவேசர் “கங்கையில் நீராடிவரவிரும்புகிறேன். என் மஞ்சத்தில் புதிய மரவுரியை விரித்துவைக்கச்சொல். இனி எனக்கு உணவும் நீருமென எதுவும் தேவையில்லை” என்றார்.
கங்கையில் நீராடி வந்து புத்தாடை அணிந்து மரவுரியிட்ட மஞ்சத்தில் வடக்குநோக்கி படுத்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டார். சற்று நேரத்திலேயே குருகுலமெங்கும் செய்தி பரவிவிட்டது. வியாஹ்ரசேனர் வந்து துரோணனிடம் “நாம் எவருக்கேனும் செய்தி அறிவிக்கவேண்டுமா?” என்றார். அவன் “குருநாதர் இன்னும் நல்லுணர்வுடன்தான் இருக்கிறார். தேவையென்றால் அவரே சொல்வார்” என்றான்.
துரோணன் அக்னிவேசரின் அருகிலேயே அமர்ந்திருந்தான். மாலை மயங்குவது வரை அக்னிவேசர் கண்களை மூடி அசையாமல் கிடந்தார். கோடைவெயிலேற்று வெந்த மண் மீது புழுதியை அள்ளிச்சுழற்றிச் சென்ற காற்றின் ஓசையை நாணல்காட்டுக்குள் கேட்கமுடிந்தது. வறுபட்ட கூழாங்கற்கள் காற்றில் வாசனையை விட்டு மெல்ல ஆறிக்கொண்டிருந்தன. கங்கைக்குமேலிருந்து கரைநோக்கி வந்து மரங்களின் மேல் கூடணையவிழையும் பறவைகளின் பூசல் ஒலித்தது. காட்டிலிருந்து வந்த காற்றில் வாடிய தழைகளின் வாசம் இருந்தது.
அந்தியின் குளிர்காற்று சேற்று மணத்துடன் கங்கையிலிருந்து எழுந்து சாளரம் வழியாக உள்ளே வந்ததும் விழிதிறந்து “மாணவர்களை வரச்சொல்” என்றார். வியாஹ்ரசேனர் மாணவர்கள் ஒவ்வொருவரையாக உள்ளே அனுப்ப அவர்கள் கூப்பிய கரங்களுடன் வந்து அக்னிவேசரின் கால்களைத் தொட்டு வணங்கி வெளியேறினர். இறுதியாக வியாஹ்ரசேனர் வணங்கியதும் அக்னிவேசர் “வியாஹ்ரரே இனி நீர் இரண்டாம் அக்னிவேசர் என்றழைக்கப்படுவீர். இக்குருகுலம் உம்முடையது. உமது சொல்வழியாக எழும் மூன்றாம் அக்னிவேசருக்கு இதை அளித்துவிட்டு வாரும். உமக்காகக் காத்திருக்கிறேன்” என்றார்.
வியாஹ்ரசேனரின் உதடுகள் இறுக, கழுத்துத்தசைகள் தாடியுடன் சேர்ந்து அசைந்தன. கனத்த புருவங்கள் ஒன்றையொன்று தொட தலைகுனிந்து கைகூப்பி நின்றார். “வியாஹ்ரரே, இனிமேல் ஒவ்வொருமுறை வில்லெடுக்கையிலும் நீரே அக்னிவேசன் என எண்ணிக்கொள்ளுங்கள். இன்றுவரை நீங்கள் பிழைத்த அம்புகளெல்லாம் என் மீதான அச்சத்தினாலேயே. என்னை உங்களுக்குமேல் நிறுத்தவேண்டுமென விரும்பும் தேவன் உங்கள் ஆன்மாவில் குடியிருந்தான். இனி உங்களை அவன் நிகரற்றவனாக ஆக்குவான். ஆம், அவ்வாறே ஆகுக!” என்று கைகளைத் தூக்கி அவரை வாழ்த்தினார்.
அவர் கையை அசைத்ததும் வியாஹ்ரசேனர் வெளியே சென்றார். துரோணன் அவர் தன்னிடம் பேசப்போவதை எதிர்நோக்கி காத்திருந்தான். ஆனால் அக்னிவேசர் விழிகளைமூடிக்கொண்டு தன்னுள் மீண்டும் அமிழ்ந்துகொண்டார். இரவு கனத்து வந்தது. வெளியே பறவைகளின் ஒலியடங்கி சில்வண்டு நாதம் எழுந்தது. காற்றில் கங்கையின் நீர்வாசனை நிறைந்திருந்தது. வெக்கையில் உடல் வியர்த்து வழிய துரோணன் மயிலிறகு விசிறியால் அக்னிவேசருக்கு விசிறிக்கொண்டிருந்தான். அவரது உதடுகள் அசைந்தபோது நெஞ்சு திடுக்கிட்டுத் துடிக்க எழுந்து செவிகூர்ந்தான். அவர் கண்களைத் திறக்காமலேயே “நிலவெழுந்துவிட்டதா?” என்றார்.
“ஆம் குருநாதரே” என்றான் துரோணன். “எழுந்து அதை மேகம் மறைக்கிறதா என்று பார்” என்றார் அக்னிவேசர். துரோணன் எழுந்துசென்று பார்த்தான். முற்றத்து மரங்களின் இலைகளுக்கு நடுவே தெரிந்த வானம் மேகமற்ற துல்லியத்துடன் நிலவொளிபெருகி ததும்பிக்கொண்டிருக்க கிழக்கே எழுந்த செந்நிறமான முழுநிலவு வட்டத்தின் மேல்பாதியை மேகக்கீற்று ஒன்று மறைத்திருந்தது. நிலவு தன்மேல் ஒரு மெல்லிய வெண்மேலாடையை அணிந்திருப்பதுபோலத் தோன்றியது. திரும்பிவந்து குனிந்து “ஆம் குருநாதரே, மெல்லியமேகம்” என்றான். அவர் புன்னகைசெய்து அமரும்படி கைகளைக் காட்டினார்.
துரோணன் அருகே அமர்ந்துகொண்டான். “தனுர்வேதமென்றால் என்ன என்று நீ என்னிடம் பதின்மூன்று வருடம் முன்பு சொன்னதை நினைவுகூர்கிறாயா?” என்றார் அக்னிவேசர். “ஆம்” என்றான் துரோணன். அக்னிவேசர் “அதை நான் இப்போதுதான் முற்றிலும் புரிந்துகொண்டேன். வில் என்பது ஒரு புல் மட்டுமே என்றும் தனுர்வேதமென்பது புல்லை அறிந்துகொள்ளும் ஞானம் என்றும்…” பெருமூச்சுடன் “ஆம்” என்றபின் அக்னிவேசர் புன்னகைசெய்தார். அத்தனை அழகிய புன்னகையை அதுவரை கண்டதில்லை என துரோணன் உணர்ந்தான்.
“வியப்பாக இருக்கிறது. நான் வந்துசேர்ந்த சொல்லில் இருந்து நீ தொடங்கியிருக்கிறாய். எங்குசென்று சேர்வாய்?” என்றார் அக்னிவேசர். “உன்னை ஷத்ரியனாக ஆகும்படி சொல்லி உன் தந்தை இங்கனுப்பினார். ஆனால் உன்னுள் இருப்பவன் ஷத்ரியனல்ல. ஷத்ரியனுக்கு வில் என்பது ஒருபோதும் வெறும்புல்லாக முடியாது.” துரோணன் திடமாக “ஆம் குருநாதரே, நான் ஷத்ரியனல்ல. நான் பிராமணனே” என்றான்.
“ஆனால் உன்னை பிராமணனாக ஆக்கவேண்டியவர் உன் தந்தை அல்லவா?” என்றார் அக்னிவேசர். “தன் மடிமீது உன்னை வைத்து அவர் ஜாதகர்மம் செய்திருக்கவேண்டும். உனக்கு தன் குலமூதாதையர் பெயரை சூட்டியிருக்கவேண்டும். ஏழு தலைமுறையினருக்கும் நீரளித்து சொல்லளித்து நிறைவுசெய்து அவர்கள் சூழ உனக்கு உபவீதம் அணிவித்திருக்கவேண்டும். அதன்பின்னரே உன்னை பிராமணன் என்று இவ்வுலகம் ஏற்கும்.” துரோணன் அவரையே நோக்கி அமர்ந்திருந்தான்.
“உன் தந்தையிடம் செல்” என்றார் அக்னிவேசர். “அவரிடம் சொல், நீ ஆன்மாவால் அந்தணன் என்று. உன்னை அவரால் தன் குலத்துக்குள் சேர்க்கமுடியும்.” துரோணன் மெல்லிய திடமான குரலில் “குருநாதரே, அவரிடம் நான் செல்லப்போவதில்லை” என்றான். அக்னிவேசர் “ஆம் நான் அதை எண்ணினேன்” என்றார். “மேகம் விலகிவிட்டதா என்று பார்” என்றார். அறைக்குள் வந்த நிலவொளியாலான சாளரச்சதுரம் மங்கலடைந்திருப்பதைக் கண்டு நிலவை மேகம் மூடியிருப்பதை உணர்ந்து “இல்லை குருநாதரே” என்றான் துரோணன் .
அக்னிவேசர் தன் கையை நீட்டி அவன் கையைப்பற்றினார். அவரது கை தாமரைக்கொடி போல குளிர்ந்து ஈரமாக இருந்தது. “இனி உன்னை ஒருவர் மட்டிலுமே பிராமணனாக்க முடியும். நீ பரசுராமரை தேடிச்செல். உன்னைப்போலவே வில்லெடுக்க நேர்ந்த பிராமணன் அவர். தன் வில் இழைத்த பாவத்தை சமந்தபஞ்சகத்தில் முற்றிலும் கழுவி மீண்டும் பிராமணராக ஆனார். அவர் உன்னை தன் மைந்தனாக ஏற்றுக்கொண்டாரென்றால் நீ பிருகுகுலத்து பிராமணனாக ஆகமுடியும்.”
துரோணன் “புராணங்களில் வாழும் பார்க்கவராமனையா சொல்கிறீர்கள் குருநாதரே?” என்றான். “துரோணா, பெருங்குருநாதர்கள் இறப்பதில்லை” என்றார் அக்னிவேசர். சட்டென்று அவருக்கு மூச்சு வாங்கியது. தன் கைகளை மார்பின் மேல் வைத்து கோத்துக்கொண்டார். விரல்நுனிகள் நடுங்கிக்கொண்டிருப்பதை துரோணன் பார்த்துக்கொண்டிருந்தான். தன் கண்ணொளி தெளிந்து வருவதை உணர்ந்தான். அக்னிவேசரின் வெண்ணிறத் தாடியின் முடியிழைகள் ஒளிகொண்டன. மெல்லிய பிசிறுகள் வெண்தாமரை புல்லிகள் போல மின்னின. அவன் எழுந்து வெளியே நோக்கினான். வானில் முழுநிலவு பிசிறற்ற விளிம்புவட்டம் சுடர்விட நின்றிருந்தது.
நாற்பத்தொன்றாம் நாள் அக்னிவேசரின் நீர்க்கடன்கள் முடிந்தபின் துரோணன் மான்தோல் மூட்டையில் ஒரே ஒரு மரவுரியாடையை மட்டும் எடுத்துக்கொண்டு குருகுலத்திலிருந்து விடைகொண்டு கிளம்பினான். செம்மண்ணும் கூழாங்கற்களும் பரவிய புல்காய்ந்து கிடந்த பாதையில் காலடி எடுத்து வைக்கும்போதுதான் அவன் பதினைந்து வருடங்களுக்குப்பின் அக்குருகுலத்தை விட்டு வெளியே செல்வதை உணர்ந்தான். திரும்பி குருகுலத்தின் ஓங்கிய அசோகமரங்களையும் தேவதாருக்களையும் நடுவே அக்னிவேசரின் குடிலுக்குப்பின்னால் நின்ற அரசமரத்தையும் சிலகணங்கள் நோக்கியபின் குனிந்து தன் காலடியில் நின்றிருந்த தர்ப்பையின் ஒரு தாளைப் பிய்த்து கையில் எடுத்துக்கொண்டு நடக்கத்தொடங்கினான்.
பரசுராமரின் குருகுலத்தைத் தேடி அவன் பதினெட்டுமாதம் பயணம் செய்தான். வழிவழியாக சொல்லில் இருந்து சொல்லுக்குச் சென்றுகொண்டிருக்கும் புராணங்களாக மட்டுமே அவர் இருந்தார். அக்கதைகளைப் பற்றிக்கொண்டு கங்கைக்கரை கிராமங்கள் வழியாக வேளாண்மக்களும் ஆயர்குடியினரும் அளித்த உணவை உண்டும் காடுகளில் காய்கனிகள் தேர்ந்தும் நடந்து மூன்றுமாதங்களுக்குப்பின் அவன் குருஷேத்ரத்தின் சமந்தபஞ்சகத்தை வந்தடைந்தான். வர்ததமானநகரியில் அவன் சந்தித்த இளம்சூதன் சீருகன் அவனும் சமந்தபஞ்சகத்துக்கு சென்றுகொண்டிருப்பதாகச் சொன்னான். செல்லும்வழியில் மேலும் இருவர் சேர்ந்துகொண்டனர்.
வழியெங்கும் சீருகன் பரசுராமனின் கதையைச் சொன்னபடியே வந்தான். அத்தனை புராணங்களிலும் பார்க்கவராமனின் கதை ஊடுகலந்து கிடப்பதை துரோணன் அறிந்தான். “அவர் அழிவற்றவர். இமயமலை முகடுகளைப்போல மானுடத்துக்கு மேல் குளிர்ந்த வெண்முடியுடன் எப்போதும் இருந்துகொண்டிருக்கிறார்” என்றான் சீருகன். “பிருகு குலத்து பிராமணர்கன் இல்லங்களில் நிகழும் எரிசூழ்கையில் எப்போதும் அவருக்கென ஒரு கை அன்னம் அவியாக்கப்படுகிறது. எங்கு தன்னிச்சையாக நெருப்பெழுகிறதோ அங்கே அவர் பெயர் சொல்லப்படவேண்டுமென்கிறார்கள்” என்றார் முதுசூதரான சம்புகர்.
குருஷேத்ரத்துக்கு அவர்கள் பின்மதியத்தில் வந்துசேர்ந்தனர். கங்கைக்கு மிக அருகே அத்தகைய பெரும்பொட்டல்வெளி இருப்பதைக்கண்டு துரோணன் வியந்தான். அவர்கள் வந்த பாதையின் இருபக்கமும் விரிந்துகிடந்த குறுங்காடும் ஊடே வெயில்பரவிய பசும்புல்வெளிகளும் மெல்ல தேய்ந்து மறைய குருதியாலான ஏரி அலையின்றிக் கிடப்பதுபோல செக்கச்சிவந்த மண் விழியெட்டும் தொலைவு வரை தெரிந்தது. ஆனி மாதத்தில் விட்டுவிட்டுப்பெய்துகொண்டிருந்த மழையில்கூட அதன்மேல் புல்முளைத்திருக்கவில்லை.
“முன்னாளில் இந்திரன் விருத்திராசுரனின் ஆயிரம் தலைகளையும் லட்சம் கரங்களையும் வெட்டிக்குவித்திட்ட இடம் என்று புராணங்கள் சொல்கின்றன. இங்கே விழுந்த குருதியால் இம்மண் இப்படி செந்நிறம் கொண்டிருக்கிறது. விருத்திரனின் தீச்சொல்லால் இந்நிலத்தில் புல்லும் முளைப்பதில்லை” என்றார் சம்புகர். “விருத்திராசுரனின் ஆயிரம் தலைகளும் குருதிவிடாய்கொண்ட ஆயிரம் தெய்வங்களாக இந்நிலத்தில் வாழ்கின்றன. அவனுடைய லட்சம் கைகளும் ஊன் தேடும் கழுகுகளாக இந்நிலத்துக்குமேல் சுற்றிக்கொண்டிருக்கின்றன.”
“இங்கே சூதர்களின் பூசனையொன்றின்போது சன்னதம் கொண்டெழுந்த முதுசூதர் குருஷேத்ரம் மீண்டும் குருதியிலாடவிருக்கிறது என்று வருகுறி சொன்னார் என்கிறார்கள். அச்சொல் நாவிலிருக்கவே அவர் குருதி உமிழ்ந்து விழுந்து இறந்தாராம்” என்றான் சீருகன். “அச்செய்தி ஒவ்வொருநாளும் பாரதவர்ஷமெங்கும் பரவிக்கொண்டிருக்கிறது. குருஷேத்ரம் அன்னை காளியின் மாபெரும் பலிபீடம் என்று சூதர்கள் பாடுகிறார்கள். அன்னைக்கு உகந்த உயர்ந்த பலிஉயிர்கள் நாடுகள் தோறும் பிறந்து வளர்ந்துகொண்டிருக்கின்றன.”
துரோணன் குனிந்து அந்த மண்ணை அள்ளி நாவிலிட்டு “உவர்மண்” என்றான். “இத்தனை உவர்க்கும் மண்ணில் புல் முளைக்க வாய்ப்பில்லை.” சம்புகர் “அது விருத்திராசுரனின் குருதியில் இருந்த உப்பு” என்றார். துரோணன் புன்னகையுடன் “அவ்வாறெனில் அதுவே” என்றான். அவர்கள் முந்தையநாள் மழையில் செம்மண் ஊறிக்கிடந்த குருஷேத்ரத்தின் வழியாக நடந்தனர். அவர்களுடைய பாதங்கள் குருதிபடிந்தவையாக ஆயின. சுவடுகள் தசைக்குழிகளாக நிணம் ஊறின. அங்கே எழுந்திருந்த சிதல்புற்றுகள் குருதிக்கட்டிகள் போலவும் வெட்டிக்குவித்த ஊன்போலவும் தோன்றின. புற்றுக்குள் இருந்து எழுந்த நாகம் ஒன்று அவர்களை நோக்கித் திரும்பி நா பறக்க நோக்கிவிட்டு வழிந்திறங்கி நெளிந்தோடியது.
குருஷேத்ரத்தின் வடக்குமூலையில் இருந்தது சமந்தபஞ்சகம் என்னும் ஐந்து தடாகங்கள் கொண்ட தாழ்நிலம். வழுக்கும் ஈரச்செம்மண் வழியாக அவர்கள் இறங்கிச்சென்றனர். நீர் வழிந்தோடிய செம்மண்தடங்கள் குருதி ஆறாத வாள்புண்கள் எனத் தோன்றின. ஆனால் அவற்றில் ஊறிவழிந்தோடிய நீர் தெளிந்திருந்தது. அவை முதல்குளத்தில் ஓசையுடன் கொட்டிக்கொண்டிருந்தன. அரைவட்டவடிவில் அமைந்த வட்டவடிவமான குளங்கள்.
அந்த ஐந்து குளங்களைச் சுற்றியும் மரங்களோ செடிகளோ நாணல்களோகூட இருக்கவில்லை. வெட்டவெளியில் வானப்படிமம் காற்றில் நெளிய அவை கிடந்தன. நீர்ப்பரப்பின்மீதும் கரைகளிலும் பறவைகளும் இல்லை. அருகே செல்லும்தோறும் அவை நினைத்ததைவிடப்பெரிய குளங்கள் என்பதை துரோணன் அறிந்தான். இயல்பாக மண்ணில் உருவான ஐந்துபெரும் பள்ளங்கள் அவை என்று தோன்றியது. மண்ணுக்குள் ஓடிய பிலங்கள் மீது மேல்மண் இடிந்து அமிழ்ந்திருக்கலாமென துரோணன் எண்ணிக்கொண்டான். அரைவட்டத்தின் நடுவே சென்று நின்றபோது ஐந்து குளங்களையும் ஒரேசமயம் காணமுடிந்தது.
அருகே சென்று குனிந்தபோது நீர் மிகத்தெளிந்திருப்பதைக் கண்டான். அடியாழத்து செம்மண் படுகை தொட்டுவிடலாமென்பதுபோல மிக அருகே அலைகள் நெளிய தெரிந்தது. மென்சதைக்கதுப்பில் மேலண்ணத் தசை போல செந்நிறமான அலைகள் படிந்திருந்தன. கைநிறைய நீரை அள்ளியபோது சம்புகர் “குடிக்கமுடியாது. உப்பு நிறைந்த பரசுராமரின் கண்ணீர் அது” என்றார். அப்போதுதான் அந்தக்குளத்தில் மீன்களே இல்லை என்பதை துரோணன் கண்டான். ஒரு சிறு உயிரசைவுகூட நீரில் இல்லை.
சூதர்கள் அங்கே அமர்ந்து பாடத்தொடங்கினார்கள். சமந்தபஞ்சகத்துக்கு வந்து ஷத்ரியவீரர்களின் கொழுத்த குருதியால் ஐந்து குளங்களை அமைத்த பரசுராமரின் கதையை. நூறாண்டுகாலம் அங்கே தவம்செய்து தன் மூதாதையரிடம் பரசுராமர் மன்னிப்பு கோரினார். அவருடைய கண்ணீரால் ஐந்து குளங்களும் நிறைந்து தெளிந்தன. அவனால் அக்குளங்களை குருதித்தேக்கங்களாக பார்க்கமுடிந்தது. ஒரு பெருவெள்ளம் வருமென்றால் அவை அப்படி ஆகக்கூடும்.
சூதர்கள் சமந்தபஞ்சகத்தில் செய்யும் சடங்குகள் பல இருந்தன. தங்கள் யாழ்களுக்கு புதியகம்பிகளை மாற்றிக்கொண்டார்கள். முழவுகளுக்கு தோல்மாற்றினார்கள். “சமந்த பஞ்சகத்தின் கரையில் உண்ணாநோன்பிருந்து வந்து அமர்ந்து வாத்தியங்களை புதுப்பித்தபின் இந்த ஐந்து தடாகங்களிலும் நீராடி எழுந்தால் சூதர்கள் மறுபிறப்படைகிறார்கள். பன்னிரண்டாண்டுகளுக்கு ஒருமுறை அவர்கள் அவ்வாறு தங்கள் பழைய சொற்களை உதறி புதிதாக எழுவார்கள்” என்றார் சம்புகர். சீருகன் “சூதர்கள் நீராடுவதற்கு கண்ணீரன்றி உகந்தது எது?” என்றான்.
நான் ஏன் வந்தேன் என துரோணன் எண்ணிக்கொண்டான். பரசுராமரைப் பற்றிய நூற்றுக்கணக்கான புராணக்கதைகளுக்கு அப்பால் தொட்டறியும் உண்மையாக அறியவந்தது சமந்தபஞ்சகம் ஒன்றே. அங்கே வருவதைத் தவிர வேறுவழியில்லை. சூதர்கள் சடங்குகளை முடித்துவிட்டு வந்தனர். தங்கள் மரவுரியாடைகளைக் களைந்து வெற்றுடலுடன் நீரில் இறங்கினர். “இறங்குங்கள் உத்தமரே. தோல்வியறியா மாவீரரின் கண்ணீரில் நீராடுங்கள்” என்றான் சீருகன்.
கரையில் நின்றிருந்த துரோணன் மரக்கிளையில் வந்தமரும் பறவைபோல அவ்வெண்ணத்தை அடைந்தான். “சம்புகரே, இதேபோன்ற ஐந்து குளங்கள் வேறெங்காவது உள்ளனவா?” என்றான். “இல்லை. நானறிய ஏதுமில்லை” என்றார் சம்புகர். “இருக்கின்றன. நான் அறிவேன். எங்கோ. வடக்கே இமயத்தில். அல்லது தெற்கே விரிநிலவெளியில். அங்கிருக்கிறார் பரசுராமர்” என்றான் துரோணன். சம்புகர் “ஐந்து குளங்கள் கொண்ட பிறிதொரு இடத்தை நானறிந்ததே இல்லை உத்தமரே. தாங்கள் அதைத் தேடி நாட்களை இழக்கவேண்டாம்” என்றார்.
அவர்கள் ஈரம் வழியும் உடலுடன் முதற்குளத்திலிருந்து எழுந்து மந்திரங்களைச் சொன்னபடி இரண்டாவது குளத்துக்குச் சென்றனர். கரையில் அவர்களையே நோக்கி நின்ற துரோணன் மூன்றாவது குளத்திலிருந்து எழுந்த சம்புகர் சொன்ன ஒற்றைச் சொல்லைக் கேட்டு “சம்புகரே, நீர் இப்போது சொன்னதென்ன?” என்றான். “என்ன?” என்று அவர் திரும்பக்கேட்டார். “அந்த மந்திரத்தைச் சொல்லுங்கள். முழுமையாகச் சொல்லுங்கள்” என்றான் துரோணன். சம்புகர் தயங்கியபடி “கடலை உண்டவனும் பஞ்சாப்சரஸில் தவம் செய்தவனும் பெருநதியை கமண்டலத்தில் அடக்கியவனுமாகிய அகத்தியனே இச்சொற்களைக் கேளுங்கள்” என்றார்.
“சம்புகரே, அந்த பஞ்சாப்சரஸ் எங்குள்ளது?” என்றான் துரோணன். “பஞ்சசரஸ் என்றும் அழைக்கப்படும் அது ஒரு குளம். அயோத்திராமன் வனம்புகுந்தபோது தெற்கே அகத்தியரை சென்றுகண்டார். அகத்தியர் ராமனையும் சீதையையும் தம்பியையும் பஞ்சாப்சரஸ் என்னும் நீலத்தடாகத்துக்குக் கொண்டுசென்று காட்டினார். அது சூதர்களின் ராமகதைப்பாடலில் வருகிறது” என்றார் சம்புகர். “அந்த இடம் தெற்கே தண்டகாரண்யத்தின் நடுவில் ஏழு மலைகளால் சூழப்பட்ட சப்தசிருங்கம் என்னும் காட்டுக்குள் உள்ளது.”
“அந்தத் தடாகத்தின் கதையை பராசரரின் புராணசம்ஹிதை சொல்கிறது” என்றான் சீருகன். “அத்தடாகத்தின் நீரின் மீதமர்ந்து மாண்டகர்ணி என்னும் முனிவர் தவம்செய்துவந்தார். ஆயிரம் வருடம் அவர் தவம்செய்து தன் முழுமையை நெருங்கியபோது ஆயிரம் வருடம் அவர் மிதந்த அந்த ஆழத்திலிருந்து ஐந்து அழகிய குமிழிகள் மிதந்து மேலே வந்தன. அவை ஐந்து பேரழகான அப்சரஸ்களாக மாறின. ஒன்றில் இன்னொன்று பிரதிபலித்து பேரழகின் முடிவின்மையாகி அவரைச்சூழ்ந்தன. தவம் கலைந்த முனிவர் சினந்து அவர்களை தாமரை மலர்களாக ஆக்கினார்.”
“நீலம், சிவப்பு, மஞ்சள், வெண்மை, இளம்பசுமை என்னும் ஐந்து வண்ணங்களில் அந்தத் தடாகத்தை அவர்கள் நிறைத்தனர். அவர்களின் அழகால் வெல்லப்பட்ட மாண்டகர்ணி தன்னை பெரிய விழிகள் கொண்ட ஒரு பச்சைமணித் தவளையாக ஆக்கிக்கொண்டார். அவர்களின் பேரழகை பார்த்துப்பார்த்து அகம் நிறையாமல் தன்னிலிருந்து லட்சோபலட்சம் முட்டைகளை இட்டு தவளைகளை உருவாக்கினார். அவை ஒவ்வொரு இதழிலும் அமர்ந்துகொண்டு அவர்களின் அழகை வியந்து பாடின. தாமரை வண்ணங்களும் தவளைநாதமும் நிறைந்த அந்தத் தடாகமே மண்ணிலிருப்பவற்றில் அழகானது என்று பராசர சம்ஹிதை சொல்கிறது.”
“அந்த இடம்தான்” என்றான் துரோணன். “நான் இப்போதே கிளம்புகிறேன்” என்று தன் மான்தோல் மூட்டையை எடுத்துக்கொண்டான். “உத்தமரே, அது நெடுந்தொலைவு. தண்டகாரண்யம் விந்தியனுக்கு அப்பாலுள்ளது” என்றார் சம்புகர். “நான் அங்குசெல்வதற்காகக் கிளம்பி மூன்றுமாதங்களாகின்றன சூதரே” என்றபின் துரோணன் நடந்தான். மறுநாள் காலை கங்கைக்கரையை சென்றடைந்தான். வணிகர்படகில் ஏறி அங்கநாட்டுக்குச் சென்று அங்கிருந்து காட்டுப்பாதையில் பயணம்செய்து விந்தியமலையை ஏறிக்கடந்து விதர்ப நாட்டினூடாக சென்று கோதாவரியைத் தாண்டி தண்டகாரண்யத்தை அடைந்தான்.
தண்டகாரண்யத்தில் எவருக்கும் பஞ்சாப்சரஸ் என்னும் தடாகத்துக்குச் செல்லும் வழி தெரிந்திருக்கவில்லை. அப்பெயரை அறிந்திருந்த சூதர்கள் சிலர் அது புராணங்களில் சொல்லப்படும் தடாகமென்றே எண்ணியிருந்தனர். தண்டகாரண்யத்தின் ஆயர்குடிகளிலும் வேடர்கிராமங்களிலும் அவன் எட்டுமாதம் அலைந்து திரிந்தான். அடர்காட்டிலிருந்த வேடர்கிராமம் ஒன்றில் அவனை அங்கே மலைமீதிருந்த அஷ்டவடி என்னும் குருகுலத்துக்கு ஆற்றுப்படுத்தினர். அஷ்டவடி குருகுலத்தில் இருந்த பாரிஜாதர் என்னும் முனிவர் பஞ்சாப்ஸரஸ் செல்லும் வழியை அறிந்திருந்தார். முந்நூறாண்டுகாலமாக அங்கே பரசுராமனின் குருகுலம் இருப்பதையும் அவரே சொன்னார்.
பாரிஜாதரின் வழிகாட்டுதலின்படி மலைச்சரிவினூடாக நடந்துசென்று அஷ்டமுடி என்னும் மலைக்காட்டை அடைந்தான் துரோணன். அங்கிருக்கும் மலைச்சுனைகளிலிருந்து பிறந்து மலையிறங்கிச்செல்லும் லலிதகாமினி என்னும் சிற்றாறின் கரைவழியாகச் சென்று தண்டகாரண்யத்தின் ஆழத்திற்குள் புகுந்தான். நாணலும் தர்ப்பையும் கோரையும் அடர்ந்த சேற்றுக்கரை வழியாக பகலெல்லாம் நடந்தும் இரவில் மரக்கிளைகளின் கவரில் துயின்றும் இருபத்தெட்டு நாட்கள் நடந்து சென்று லலிதகாமினி இரு பெரும்பாறைகளின் நடுவே புகுந்து மறுபக்கம் அருவியாகக் கொட்டும் முனையை அடைந்தான். அங்கிருந்து வலப்பக்கமாகப் பிரிந்துசெல்லும் ஓடை பஞ்சாப்சரஸை அடையும் என்று பாரிஜாதர் சொல்லியிருந்தார்.
ஓடையை ஒட்டி துரோணன் நடந்துசெல்லும்போது புதர்களின் இலைகளுக்குள் இருந்து மூன்று இளைஞர்கள் கைகளில் குறிபார்த்த அம்புகள் தொடுக்கப்பட்ட வில்லுடன் எழுந்தார்கள். முதல் இளைஞன் “நில், நீ யாரென்று சொல்” என்றான். துரோணன் தன் உபவீதத்தை வலக்கையால் பற்றியபடி “பரத்வாஜமுனிவரின் மைந்தனும் அக்னிவேசரின் மாணவனுமாகிய என் பெயர் துரோணன். பரசுராமரைப் பார்க்கும்பொருட்டு கங்கைக்கரையில் இருந்து வருகிறேன்” என்றான். அவனிடம் வினவிய புவனன் என்னும் இளம்மாணவன் தன் வில்லைத் தாழ்த்தி தலைவணங்கி “பரசுராம குருகுலத்துக்கு தங்களை வரவேற்கிறோம் உத்தமரே” என்றான். பிற இருவரும் வில் தாழ்த்தி வந்து பணிந்தனர். துரோணன் அவர்களை வாழ்த்தி “இத்தருணத்தில் நான் பரசுராமரை சந்திக்கலாகுமா?” என்றான்.
“பரசுராம குருமரபின் பதின்மூன்றாவது பரசுராமர் இப்போது வித்யாபீடத்தில் அமர்ந்திருக்கிறார். இப்போது நூறாண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் மகாபூதானயாகம் பன்னிருநாட்களாக நிகழ்ந்துகொண்டிருக்கிறது. வேள்வித்தடைசெய்ய மன்னர்களோ வேடர்களோ வரக்கூடுமென்பதனால் பஞ்சாப்சரஸைச் சுற்றி காடுமுழுவதும் பரசுராமகுருகுலத்து மாணவர்களாகிய நாங்கள் காவல்காத்துக்கொண்டிருக்கிறோம். இன்று வேள்வியின் இறுதிநாள். மாலைச்சூரியன் அணைவதற்குள் வேள்விமுடிந்து எரி அணையவேண்டும் என்பது நெறி” என்றான் புவனன்.
துரோணன் “பூதான யாகம் என்பது பரசுராமரால் நிகழ்த்தப்பட்டதல்லவா?” என்றான். “ஆம் உத்தமரே. பாரதவர்ஷத்தை இருபத்தொருமுறை சுற்றிவந்த முதல்குருநாதர் தான் வென்ற நிலத்தை பகிர்ந்தளித்தார் என்கின்றன புராணங்கள். சமந்தபஞ்சகத்தில் மகாகாசியபர் தலைமையில் நிகழ்ந்த முதல்பூதானவேள்வியில் கிழக்குத் திசையை அத்துவரிய குலத்துக்கும், வடக்கை உதகாத குலத்துக்கும், மத்திய தேசத்தை ஆசியப குலத்துக்கும், ஆரிய வர்த்தத்தை உபதிரஷ்ட குலத்துக்கும் அதற்கு அப்பால் உள்ள நிலத்தை சதசிய குலத்துக்கும் அவர் அளித்தார் என்று பரசுராமரின் கதையைச் சொல்லும் சூர்ப்பவிஜயம் என்னும் புராணம் சொல்கிறது.”
“இக்குலங்களெல்லாம் அந்தந்தப் பகுதிகளில் வாழ்ந்திருந்த தொன்மையான குடிகளே. அவர்களை அடக்கியாண்ட ஷத்ரியகுலங்களை அழித்தபின் அக்குடிகளை தன் வேள்விச்சுடர்முன் அமரச்செய்து உபவீதம் அணிவித்து காயத்ரியையும் வேதங்களையும் அளித்து பிராமணர்களாக்கி தன்னுடைய பிருகுகுலத்தில் இணைத்துக்கொண்டு அவர்களுக்கு அந்நிலங்களை முதல்குருநாதர் அளித்தார். நூறாண்டுகளுக்கு ஒருமுறை அச்சடங்கு தொடர்ந்து நடைபெறவேண்டுமென அவர் விதித்தார். அவரது ஆணைப்படி பாரதவர்ஷத்தில் உருவாகிவரும் புதிய ஜனபதங்களைச்சேர்ந்த பதினெட்டு குலங்கள் தேர்வுசெய்யப்பட்டு இங்கே பஞ்சாப்சரஸின் கரையில் நிகழும் மகாபூதான வேள்வியில் எரிமுன் அமரவைக்கப்படுவார்கள்” புவனன் சொன்னான்.
“உத்தமரே, அதர்வ நெறிப்படி இங்கு நிகழும் இவ்வேள்வியின் முடிவில் அவர்கள் பிருகு குலத்துக்குள் எடுத்துக்கொள்ளப்படுவார்கள். ஹிரண்யகர்ப்பம் என்னும் இச்சடங்கில் அவர்களின் உடலில் இருந்து பதினெட்டு குருதிச்சொட்டுகள் வேள்விநெருப்பில் விடப்பட்டு அவர்களுடைய இறப்பு நிகழ்த்தப்படும் அதன்பின் மகாகுருநாதரின் பதினெட்டு துளி குருதியால் பஞ்சாப்சரஸ் என்னும் தடாகம் பசுவின் கருவறையாக ஆக்கப்படும். அதில் மூழ்கி அவர்கள் மறுபிறப்பெடுத்து வரும்போது அவர்களுக்கு வேள்வியன்னம் பகிர்ந்தளிக்கப்படும். அதே விகிதத்தில் அவர்களின் நிலங்கள் அவர்களுக்கே அளிக்கப்படும். அதை எதிர்க்கும் ஷத்ரியர்கள்மீது பிருகுகுலத்தவர் அனைவரும் இணைந்து போர்தொடுக்கவேண்டும் என்பது பரசுராமரின் கட்டளை. பாரதவர்ஷத்தையே பிருகுகுலம் ஆளவேண்டுமென்பது பார்க்கவராமரின் ஆணை. அதை நிகழ்த்துவதே எங்கள் குருகுலத்தின் கடமை” என்றான் புவனன்.
திகைத்து கைகூப்பி துரோணன் நின்றுவிட்டான். “புவனரே, இங்கே இச்சடங்குக்காகவே என்னை என் ஆசிரியர் வரச்சொன்னார் என இப்போது உணர்கிறேன். என் வாழ்க்கை முழுமைபெறும் கணம் இங்கு நிகழவிருக்கிறது. என்னை வேள்விமுடிவதற்குள் பரசுராமரின் வேள்விச்சாலைக்கு கொண்டுசெல்லுங்கள்” என்றான். புவனன் ஓர் இளம்மாணவனிடம் “சுஷமரே, இவரை அழைத்துச்செல்க. குறுகிய வழியில் விரைவாக” என்றான்.
சுஷமன் மிக இளம்வயதுடையவனாக இருந்தான். ஓடைக்கரையில் அடர்ந்திருந்த முள்மூங்கில் காடுகளின் வழியாக அவன் விரைந்து சென்றான். அந்தப்பாதை பழக்கமில்லாததனால் துரோணன் கால்கள் தடுமாறியும் முட்களில் உரசிக்கொண்டும் அவனைத் தொடர்ந்து சென்றான். “இங்கு மிக விரைவாகவே அந்தி எழுந்துவிடும் உத்தமரே” என்றான் சுஷமன். “இல்லை, என் தவம் வீணாகாது. தெய்வங்கள் என்னை கைவிடா” என்றான் துரோணன். “கைவிடுமென்றால் அர்ப்பணத்துக்கும் உபாசனைக்கும் பொருளே இல்லை. கண்ணீர் வெறும் நீரென்றே ஆகும்.”
அவர்கள் வைத்த ஒவ்வொரு காலடிக்கும் காட்டுக்குள் ஒளியடங்கியபடியே வந்தது. இலைகள்மேல் விழுந்துகிடந்த ஒளிவட்டங்கள் ஒவ்வொன்றாக விழிமூடின. தலைக்குமேல் பறவைகளின் ஒலி வலுத்துச்சென்றது. காட்டுச்சுனைகளின் நீரின் கருமை அடர்ந்தது. “அதோ வேள்விப்புகை எழுகிறது. அதுதான் பஞ்சாப்சரஸின் வேள்விச்சாலை” என்றான் சுஷமன். அதைக்கேட்டதுமே துரோணன் ஓடத்தொடங்கினான். “ஓடவேண்டாம் உத்தமரே. இந்த முள்மூங்கில்வெளியில் ஓடமுடியாது!” என்று கூவியபடி சுஷமன் பின்னால் வந்தான். துரோணன் விரையும்தோறும் முள்மூங்கில்கூட்டங்களின் கைகள் பெருகி வந்து அவனைப் பற்றிக்கொண்டன. கூர் உகிர்களால் அவன் தசையை கவ்விக்கிழித்து குருதி சொட்டி ஆடின.
எதையும் உணராதவனாக துரோணன் ஓடிக்கொண்டிருந்தான். வழுக்கும்பாறைகளில் சறுக்கி இறங்கியும், சிற்றோடைகளை தாவிக்கடந்தும், மூச்சு சீற, கண்ணீர் மார்பில் சொட்டிச்சிதற, வாய் ‘குருநாதரே! குருநாதரே!’ என்று அரற்றிக்கொண்டிருக்க. அவன் உடலை தூக்கிச்சென்ற அகம் உடலென்னும் எடையைப்பற்றி, அதன் சமநிலையின்மையைப்பற்றி ஒவ்வொரு கணமும் உணர்ந்து பரிதவித்தது. அவன் உடைகள் முட்களால் கிழிபட்டு விலகின. ஆடையற்ற உடலெங்கும் குருதி வழிய அவன் கருவறை கிழித்து மண்ணுக்கு வந்த குழவி போலிருந்தான்.
சிற்றோடை ஒன்றுக்கு அப்பால் தாமரையிலைகளாலும் மலர்களாலும் மூடப்பட்ட பஞ்சாப்சரஸையும் அதன் கரையில் ஈச்சையோலைகளால் கட்டப்பட்ட சிறிய வேள்விச்சாலையையும் அவன் கண்டான். அங்கே எரிகுளத்தைச் சுற்றி மரவுரி அணிந்து உபவீதமிட்டு அமர்ந்திருந்த பன்னிரு வேடர்குலத்தலைவர்களுக்கு முன் வெண்குழலை தலைக்குமேல் குடுமியாகக் கட்டி நீண்ட வெண்தாடி மார்பில் ஆட புலித்தோல் அணிந்து அமர்ந்து வேள்விச்செயலில் ஈடுபட்டிருக்கும் பரசுராமரின் தோற்றம் காற்றில் அள்ளி விலக்கப்பட்ட வேள்விப்புகைக்கு நடுவே திரைச்சீலைப்பாவை போல நெளிந்தபடி தெரிந்தது. இரு கைகளையும் விரித்து அசைத்து “குருநாதரே!” என்று அவன் கூவுவதற்குள் இறுதி அவியை எரியிலிட்டு வேள்வியை முடிக்கும் கையசைவுகளுடன் பரசுராமர் தர்ப்பைப்பீடத்தில் இருந்து எழுந்துவிட்டார்.