பழசிராஜா சில பண்பாட்டு ஐயங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

நானும் பழசி ராஜா பார்த்தேன். ஒரு இடத்தில் “தேவாரம் ஓதுவது” என்று வசனம் வருகிறது. அடுத்து மம்முட்டியின் வீட்டில் “ஆண்டாள் திருப்பாவை” ஒலிக்கிறது..ஏது திருவாசகம் கேரளாவில்?.மலையாள வசனத்தை அப்படியே விட்டிருக்கலாமே?அடுத்து அந்த திருப்பாவை பின்னணி,(இது உங்கள் கையில் இல்லை என்று தெரியும்) எப்படி வந்தது.அப்படியே மலையாள பின்னணியை வைத்திருக்கலாமே.

பாடல்கள் மலையாளமே மண் மணத்தோடு இருக்கிற்து. தமிழ் “அபார்ட்”ஆகி
விட்டது.காரணம் தமிழ்படுத்தல்.

நன்றி.

 

அன்புள்ள ரவிசங்கர்,

தேவாரம் என்ற சொல் கேரளத்திலும் பிரபலம். கலைபூஜை என்ற பொருளில் இப்போது பயன்படுத்தப்படுகிறது. குளியும் தேவராமும் என்ற சொல்லாட்சியே உள்ளது. 200 வருடம் சோழர் ஆட்சி கேரளத்தில் இருந்தது. அந்தக்காலத்தில் தேவாரம் திருவாசகம் மிகவும் பிரபலமாக இருந்தது. 1800 களில் கேரளத்தில் பல பூஜைகளில் தேவாரம் திருவாசகம் பாடப்பட்டிருந்தது.

திருப்பாவை, திருப்பள்ளி எழுச்சி எல்லாமே கேரளத்தில் பதினெட்டாம் நூற்றாண்டில் உண்டு. திருவஞ்சைக்குளம் போன்ற பல ஆலயங்கள் 19 ஆம் நூற்றாண்டுவரைகூட தஞ்சை சைவ ஆதீனங்களால் நிர்வகிக்கப்பட்டன. இப்போதும் ஒரு ஆசாரமாக அந்த வழக்கம் நீடிக்கிறது. அதை நன்றாக தெரிந்தே ராஜா அங்கே அந்த இசையை போட்டிருக்கிறார். அவரளவுக்கு கேரள வரலாறு மலையாளிகளுக்கே தெரியாது. அவரே அவர்களுக்கு தகவல்களைச் சொல்லிக்கொடுப்பதை கண்டிருக்கிறேன்

ஆரம்பகால கேரள இலக்கியங்கள் கண்ணச்ச ராமாயணம் சம்புக்கள் போன்றவை அப்படியே தூய தமிழில் கம்பராமாயணம் போலவே இருக்கும். தேவாரத்தை ‘இமிடேட்’ செய்த பல பக்திப்பாடல்கள் அங்கே இருந்தன. அவையும் தேவாரம் என்றே அழைக்கப்பட்டிருந்தன. 16 ஆம் நூற்றாண்டுமுதல்தான் மெல்லமெல்ல மலையாளாத்தன்மை மேலோங்கி 19 ஆம் நூற்ராண்டுக்குப்பின்னரே தமிழ் பின்வாங்கியது. இன்றைய மலையாளம் என்பதே 16 ஆம் நூற்றாண்டில் உருவானதுதான்.

ஜெ

 

அன்புமிக்க ஜெயமோகன்..

வணக்கம்.

பழஸிராஜா’ படம் பார்த்தேன். அந்த இரண்டரை மணிநேரம் என்னையும் மறந்து அமர்ந்திருந்தேன் என பழைய உவமையோடு சொன்னாலும் அதுதான் உண்மை.

த‌மிழ்திரைப்ப‌ட‌ங்க‌ளில் பார்த்து அலுத்துப்போன‌ ய‌தார்த்த‌த்தை மீறிய‌ காட்சிக‌ளிலிருந்து இய‌ல்பாக‌ ந‌க‌ருவ‌திலிருந்து நிறைய‌ சொல்ல‌வேண்டும்.

குறிப்பாக‌ இளைய‌ராஜா வின் பின்ன‌ணி இசை.எப்போதேனும் நேரில் ச‌ந்திக்க நேரிடுகையில் இன்னும் கொஞ்ச‌ம் ப‌கிர‌விருப்ப‌ம்.

சில‌ விஷ்ய‌ங்க‌ளை ப‌ற்றி தெரிந்துக்கொள்ளுமாவ‌லில் கேட்க‌ விரும்புகிறேன்.

1. ப‌ழ‌ஸிராஜா சைவ‌த்திற்கான‌ அடையாள‌ங்க‌ளோடு இருக்கையில் ஒரு வ‌ய‌தான‌ பெண்ம‌னி ‘நாராய‌ணா’ என‌ சொல்வ‌து..

2. ப‌ழ‌ஸிராஜா முத‌லில் ப‌டை அமைத்த‌ சில‌ காட்சிக‌ளுக்கு பிற‌கு ப‌டை வீர‌ர்க‌ள் இட‌துபுற‌மாக‌ பூணூல் மாட்டிவ‌ருவ‌து போல‌ இருந்த‌தே.. இட‌துபுற‌மாக‌ அணிவ்து உண்டா..[ ராஜேந்திர‌ சோழ‌ன் கால‌த்தில்தான் த‌ச்ச‌ர்க‌ள் பொற்கொல்ல‌ர்க‌ளுக்கு பூணூல் அணிவ‌த‌ற்கான‌ அனும‌தி வ‌ந்த‌தாக‌ ஆய்வு ந‌ண்ப‌ர் ஒருவ‌ர் சொன்னார்]

3. ப‌ழ‌ஸிராஜா த‌ற்கொலை செய்து இற‌ந்த‌தாக‌வும் ஒரு ப‌திவில் வாசித்தேன். இது ப‌ற்றியும் சொல்ல‌முடியுமா?

ந‌ன்றி.

அன்புட‌ன்
விஷ்ணுபுர‌ம் ச‌ர‌வ‌ண‌ன்
குட‌ந்தை.94437 54443

 

அன்புள்ள சரவணன்

1. பூணூல் என்பது பிராமணர்களுக்கு உரிய அடையாளம் அல்ல. இப்போதும்கூட குமரியில் பிராமணரல்லாதவர்களின் பூணூலே அதிகம். பூணூல் என்பது ஏதேனும் ஒரு கல்விக்கான அடையாளம்.  சிற்பம் மரவேலை மருத்துவம் போன்றவற்றை கற்றவர்கள் பூணூல் போடுவார்கள். களரி அப்பியாசம் செய்பவர்கள் போடுவார்கள். பழங்காலம் முதலே இந்த வழக்கம் ஓர் அடையாளமாக இருந்தது. அதை வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு அரசர்கள் முறைப்படுத்தியிருக்கிறார்கள் அவ்வளவுதான். களரி பயில்பவர்கள் இடப்பூணூல் போடுவார்கள்

2. கேரளத்தில் சைவ வைணவ பேதம் என்றுமே இருந்ததில்லை. அங்கே இரண்டும் ஒன்றே. சைவர்கள் வைணவர்கள் என தனிச்சாதிகளே அங்கே இல்லை. சொல்லப்போனால் இரண்டுமே சாக்த மதத்தின் இரு கிளைகள் போல.

3 பழசிராஜா தற்கொலை செய்துகொண்டிருக்கலாம்.  உண்மையில் அவர் காடுவழியாக குடகுக்குச் செல்லும் வழியில் பேபரின் படையால் மறிக்கப்பட்டார். சரணடைய மறுத்து வெறும் வாட்களுடன் துப்பாக்கிகளுக்கு எதிராக போராடி உயிர் துறந்தார். அவரை பேபர் அடையாளம் காணவில்லை. அவர் தாடி வளர்த்து சாமியார் போல் இருந்தார். பழசியின் மனைவியைக் கொண்டுவந்து காட்டி அவள்தான் பழசியை சடலங்களில் இருந்து பிரித்துக் காட்டினாள். பேபர் அவரை அனைத்து மரியாதைகளுடன் பல்லக்கில் அனுப்பி வைத்தார். பேபரின் குறிப்புகளே பழசியைப்பற்றிய முதன்மை ஆதாரங்கள்

இந்திய மக்கலை காட்டுமிராண்டிகளாக எண்ணப்பழகியிருந்த பேபருக்கு பழசி ராஜாவுடன் இருநாள் தங்கியிருந்தது அவரது பெருந்தன்மையையும் நிதானத்தையும் அறிய உதவியது. அவர் சொல்லும் வரிகள் அவரது நாட்குறிப்பில் அவரே எழுதியவை.

ஜெ

 

அன்பு திரை வசன எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு…

இம்மடலை உங்களுக்கு எழுதுவதில் நியாயம் இருக்கின்றதா என்று தெரியவில்லை.நேற்று பின்னிரவுக் காட்சியில் கழக்குட்டம் க்ருஷ்ணா தியேட்டரில் நான்பார்த்தது மலையாள வெர்ஷன். இருப்பினும் வேறு யாருக்குச் சொல்ல முடியும்என்றும் தோன்றாததால் உங்களுக்கே எழுதுகிறேன்.

‘சிறைச்சாலை’ கொடுத்த உணர்வில் பாதியைக் கூட ‘பழசி’ தரவில்லை.

படம் முழுக்க ஜெயன், சரத் ஆகியோர் போரிடும் காட்சிகள் தான் வருகின்றனவே ஒழிய, மம்முட்டி அவ்வப்போது மீட்டிங் போட்டு, அவரது வழக்கமான மெளனப் புன்னகை சிந்துகிறார். மிகச்சில சமயங்களில் மட்டுமே களத்தில் இருக்கிறார். அதுதான் தலைவரோ?

ஜெயனும், பத்மப்பிரியாவும் அம்பு விடுகிறார்கள்; வெள்ளையர்கள் அடர் ரோஸ்
திரவம் நிரம்பிய கோப்பைகளை மோதிக் கொள்கிறார்கள்; சோற்றை உருண்டையாக்கும்கலையைக் கற்றுத் தந்ததற்காக கடைசியில் ஒரு வெள்ளையர் ‘He is our enemy; but he is a great warrior; a great leader’ என்கிறார். அப்படி என்ன செய்து விட்டார் என்று சரியாகப் புரியவில்லை.

தூக்கில் போடுவதைக் கண்டதும் அந்த வெள்ளை மனைவி படகேறி விடுகிறார். அவருக்கு இப்படி நடப்பது எதுவும் லண்டனில் சொல்லித்தரப்படவில்லையா?
‘அதிதி தேவோ பவ’ என்று பழசி உண்மையிலேயே நடந்து கொண்டது வரலற்றில் இருக்கிறதா..? மஞ்சள் அரைத்த வசனங்களுக்கும் வரலாற்றில் இடமிருந்திருக்காது தானே?

சரத், சுமனைக் கொள்ளும் காட்சியில் தேர்ந்த நடிப்பைப் பார்க்க முடிந்தது.
அலட்டலே இல்லாத நடிப்பு என்று தான் மற்றவர்களைச் சொல்ல வேண்டும். கனிகாவை நன்றாக ‘கவனிக்க’ முடிந்தது.

க்ளைமாக்ஸ் மிகச் சினிமாத்தனமாக இருந்தது. அதைப் பற்றிச் சொல்லவே
முடியவில்லை. அத்தனை பீரங்கிகளும், துப்பாக்கிகளும் எதிரில்
நீட்டப்பட்டிருக்கும் போது, அத்தனை நாட்களாக களத்திற்கு வராத ராஜா வெறும் ஒற்றைக் கத்தியைச் சுழற்றிக் கொண்டு சென்றது, ‘வாங்கடா.. என்னைச்
சுடுங்கடா..’ என்பது போல் இருந்தது. ராஜா இங்கிலீஷ் வேறு பேசுகிறார்.

எனக்குப் பழசிராஜாவின் வரலாறு தெரியாது. ஆனால் இந்தப் படத்தைப்
பார்ப்பதன் மூலம் அவரது வாழ்க்கையைத் தெரிந்து கொள்ள முடியும் என்றும்
என்னால் நம்ப முடியவில்லை. ஒரு புனைவு ராசாவின் கதை போல் தான்
எடுக்கப்பட்டிருப்பதாக நினைக்கிறேன்.

நன்றிகள்.

அன்புடன்,
இரா.வசந்த குமார்.

 

அன்புள்ள வசந்தகுமார்

காலாபானிக்கு பிராந்தியப் பண்பாட்டு அடையாளம் இல்லை. பழசி ராஜாவுக்கு அதுவே ஆதாரம். அதற்குள் செல்ல முடிந்தால்மட்டுமே அதை ரசிக்க முடியும்

ஜெ

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைகடவுளற்றவனின் பக்திக் கதைகள் : மனுஷ்யபுத்திரன் கவியுலகு