விஷ்ணுபுரம்,காடு,ரப்பர்,பரிணாமம்,பத்மவியூகம்:கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

உங்கள் காடு நாவலை படிக்கக் கையிலெடுத்தபோது, ராபர் நாவலை சற்று நினைவுகூர்ந்தேன். ரப்பர் உங்கள் முதல் நாவல், அதுவும் உங்கள் இருபத்துநான்காவது வயதில் எழுதியது என்று என்னால் நம்ப முடியவில்லை. கடந்த இருபத்தைந்து வருடங்களாக பலரும் பலவிதங்களில் ரப்பர் குறித்து தங்கள் உயர்வான விமரிசனங்களை சொல்லியிருப்பார்கள். உங்களுக்கும் அது புளித்துப் போயிருக்கும்.

ரப்பர் படித்து ஒரு மூன்று அல்லது நான்கு மாதங்கள் ஆகியிருக்கும். ஆனால்

என்நினைவுகளில்  எஞ்சியது என்னவோ குளம்கோரியும் அவனது  நாயர்  டீக்கடை  பெஞ்சு சொற்பொழிவும்தான். வன் சொன்ன வரலாற்று நிகழ்வுகளை ஏன் நீங்கள் ஒரு புதினமாக எழுதக்கூடாது? அதுவழி தென்திருவிதான்கூரின் வரலாற்றி ஒரு வித்தியாசமான  கோணத்தில்  சொல்லலாமே.

திப்புவின் பட்டாளத்தை நாயரின் யானைப்படை வழிமறித்து சண்டையிட்டது, மத்தகத்தில் வரும்  மதம்பிடித்த யானைதான் நினைவுக்கு வந்தது. அதைப்போல் உங்கள் ஏழாம்  உலகம்  நாவலின்  கரு  ரப்பர்  நாவளிளிலுள்ள  “பிச்சைகாரர்கள்  வரிசைபோல்  சிரட்டைகள்  ஏந்திய  மரங்கள்”  என்னும் வரிகளிலிருந்து உருவானதாக  நினைக்கின்றேன்.

மொத்தத்தில், ரப்பர் என்பது மனித கொடூரத்தின் (கொலை, கொள்ளை, வஞ்சகம்,  ஏமாற்று ….)  எழுச்சியும்  வீழ்ச்சியும் என்றே எனக்குப்படுகின்றது.

ஒரு வரலாற்று நாவலை எதிர்பார்த்து,

அன்புடன்,

கிறிஸ்.

 

அன்புள்ள கிறிஸ்டோபர் ஆன்டனி

ரப்பர்கூட ஒரு வரலாற்று நாவல்தான். சமகால வரலாறு. வரலாற்றில் புறந்தள்ளப்பட்டவர்கள் எப்போதுமே வரலாற்றை வேறு கோணத்தில் பார்க்கிறார்கள். குளம்கோரி அத்தகையவன்

அசோகவனம் திருவிதாங்கூர் வரலாறுதான். 1720 முதல்…

ஜெ

 

அன்புள்ள ஜெயமோகன்,
நான் ஒரு மென்பொறியாளன். தங்களின்   எழுத்துக்களையும், வலைத்தளத்தை தொடர்ந்து படித்து வருகிறேன்.  தங்களின் அறிவியல் சிறுகதைகளின் அதிதீவிர வாசகன்.  குறிப்பாக, ஐந்தாவது மருந்து, பூர்ணம், உற்று நோக்கும் பறவை  சிறுகதைகளை குறைந்தது நூறு முறை படித்திருப்பேன்…  அத்துடன்  சக்தி தீபாவளி மலரில்   இந்திய விண்வெளி மையத்தை நக்கலடித்து  வெளிவந்த ஒரு சிறுகதை (பெயர் மறந்துவிட்டது..  குறைந்தது ஆறு வருடங்களுக்கு முன்பு ) மிக நன்றாக இருந்தது..  ஆனால் துயரத்தையே   முடிவாக கொண்ட தங்களின் ஆக்கங்களை எவ்வளவு முயன்றும்   என்னால் படிக்க முடியவில்லை. ஏன் என்று தெரியவில்லை. விஷ்ணுபுரத்திலும் தத்துவ விவாதங்கள் மட்டுமே என்னை கவர்ந்தது.    தமிழில்  அறிவியல் புனை கதை படிப்பதில் கிடைக்கும்  நிறைவு வேறு எதிலும்  எனக்கு கிடைப்பதில்லை . கிட்டத்தட்ட பேரானந்தத்தில் திளைப்பேன்  .. ஆனால் தாங்கள் இப்பொழுது அறிவியல் சிறுகதைகள் எழுதுவதில்லை .தமிழில் கிடைக்கும் மற்ற அறிவியல் கதைகளும் உள்ளீடின்றி உள்ளன…  ஒரு எதிர்வினையில் அதில் தங்களுக்கு முழுமையான ஆர்வமில்லை என்பது போல் கூறியிருந்தீர்கள்.. ஒரு வகையில் இது என் போன்றவர்க்கு  துரதிர்ஷ்ட்டமே..

மீண்டும் தங்களின் அறிவியல் சிறுகதைகளை எதிர்பார்த்து ,
சங்கரன்,
ஈரோடு.

 

அன்புள்ள சங்கரன்

உங்கள் மனம் தத்துவத்தில் அதிகமாக ஈடுபடுகிறதென நினைக்கிறேன். பின் தொடரும் நிழலின் குரலும் உங்களுக்குப் பிடிக்கும் என்று நினைக்கிறேன். ‘ரிபப்ளிகோ கோ’ என அதில் ஒரு கோழி கூவுகிறது. அந்த க்கொழியை வாசித்தபின்னர்தான் தத்துவத்தை சரியாக உள்வாங்க முடியும். தத்துவத்தை ஓரத்தில் ஒரு சின்ன சிரிப்பு இல்லாமல் அணுகினால் நமக்கு அசட்டு கர்வம் மிஞ்சிவிட வாய்ப்புள்ளது.

அறிவியல் புனைகதைகள் எழுத வேண்டும். சில கருக்கள் கைவசம் உள்ளன. பார்ப்போம்

ஜெ

 

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு..,
நலம் அறிய விருப்பம் சார்.தற்போது தான் உங்களின் “வாழ்விலே ஒரு முறை ” என்ற சிறு அனுபவ கட்டுரை (சிறுகதை)  நூலை படித்து முடிதேஅன். எடுத்தது கண்டார் ;இட்டது கண்டார் ; என்ற வாக்கியங்களுக்கு ஒப்ப உங்களிடமிரிந்து மிக ஈரமான ஒரு நூலை சலுதியில் வாசித்த அனுபவத்தை தந்தது .இந்த  நூலில் கவித்துவமான வரிகளை மிக அசாதாரணமாக கடந்தபடி செல்கிறது வசீகரமான உங்களது  நடை.அது இந்த நூலை எத்துணை தடவை படித்தாலும் புத்தம் புதிதாக வாசிக்கிற அனுபவத்தையே கொடுக்கும். அனைத்தையும் சுய அனுபவ  தன்மை வாய்ந்த சிறு கதைகளாக எண்ணியே படிதேஅன் (கடைசி கட்டுரை தவிர்த்து ,நெறைய பளிச் அதில் ,சில வற்றை ரியல் டைம் உரையாடலில் (பேஸ்ட்) பயன்படுத்தலாம் என்று உள்ளேன். ).சம்பவங்கள் வெவ்வேறாக இருந்தாலும்  எல்லா சிறுகதைகளுக்கும் ஒரு பொது தொடர்பு உள்ளதை ஊகிக்க முடிகிறது .. வேப்பமர நிழல் என்று சொல்ல தோன்றுகிறது இந்த  சிறு புத்தகத்தை. ஆசிரியருக்கு என்னுடைய ஸ்பெஷல் ஆன நன்றிகள்.


Regards
dineshnallasivam

தினேஷ் நல்லசிவம்

 

அன்புள்ள தினேஷ்

வாழ்விலே ஒரு முறை ஒரு ஸ்பெஷல் புத்தகம். புனைவினால் என்னிடமிருந்து பிரிக்கபப்டாதது அது

ஜெ

 

ஆழ்நதியைத் தேடி புத்தகத்தை படித்தேன். அதில் நித்ய சைத்தன்ய யதியை விமர்சிக்கும் போது சுந்தர ராமசாமி சொன்னதையும் அதற்கு நித்ய சைத்தன்ய யதி சொன்னதையும் எழுதியிருக்கிறீர்கள். இயல்பான உணர்ச்சியான காமத்தை எதற்காக தான் அடக்கி வைத்திருப்பதாக நித்ய சைத்தன்ய யதி உங்களிடம் சொன்னார்? அதை நீங்கள் அந்த புத்தகத்தில் எழுதவைல்லையே

“daydasher

அன்புள்ள நண்பருக்கு

இயல்பான  என்ற சொல்லை அப்படி பயன்படுத்த முடியுமா என்ன? இயல்பான என்றால் யாருக்கு?

உணவுண்டு ஓய்வெடுத்து இனவிருத்தி செய்வது மட்டும்தானே மனிதனுக்கு ‘இயல்பானது’ இமய மலை ஏறுவதும் இதிகாசம் எழுதுவதும் விண்வெளிக்குச் செல்வதும் எல்லாம் இயல்பற்றவை அல்லவா? ஒருநாளில் பத்துமணி நேரம் எழுதி வாசிக்கும் என்னை அண்டை வீட்டு நண்பர் கொஞ்சம் மனநிலை சரியில்லாதவர் என்றே எண்ணுகிறார்.

வாழ்க்கையை வாழ்தல் வாழ்க்கையை அறிதல் இரண்டும் இரண்டு. ஒருவருக்கு இயல்பாக உள்ளது இன்னொருவருக்கு இயல்பற்றது. காமம் சாதாரணர்களுக்கு இயல்பானது. ஆனால் வாழ்க்கையை அறிய வாழ்க்கையை விட்டு விலகி நிற்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு அது விலக்கப்படவேண்டியது

ஜெ

 

அன்புள்ள ஜெயன்

உங்கள் மிகச்சிறந்த படைப்பான பத்ம வியூகம் இணையத்தில் உள்ளதா?

நான் இப்போது ஈழத்தமிழர்களின் சிக்கல்களைப்பற்றி ஒரு நாடகம் எழுதி கொண்டிருக்கிறேன். நான்கு ஒன்றுமறியாத குழந்தைகள் போரின் அகதிகளாக ஆகி தங்கள் துயரங்களுக்குக் காரணமானவர்களை தேடிச்செல்கிறார்கள்.  ஐக்கியநாடுகள் இந்தியாவை குற்றம்சாட்டுகின்றது. இந்தியா தமிழ்நாட்டை. தமிழ்நாடு எல்.டி.டியை. குற்றச்சாட்டுகள் போய்க்கொண்டே இருக்கின்றன. எப்படி நாடகத்தை முடிப்பது என எண்ணத்தில் இருக்கிறேன்.

பத்மவியூகம் குறுநாவலை காலச்சுவடு இதழில் வாசித்தேன். நதிக்கரையில் குறுநாவலை உங்கள் இணையதளத்தில் வாசித்தேன். அவை சில பதில்களை அளித்தன. பத்மவியூகத்தை மீண்டும் வாசிக்கவேண்டும்

மகாதேவன்

 

அன்புள்ள மகாதேவன்

பத்ம வியூகம் ஜெயமோகன் குறுநாவல்கள் என்ற தொகுதியில் உள்ளது. அக்காலத்தில் ஈழ நிகழ்வுகளுக்கு எதிர்வினையாக எழுதப்பட்டவைதான் மகாபாரதக் கதைகள் அனைத்துமே. நீங்கள் துளி விஷம் என்ற கதையையும் வாசிக்கலாம். அது இக்கதைகளுக்கு ஒரு மறுதரப்பு.

நெடுநாள் முன்னர் ஒரு நண்பர் சிங்களக்குழந்தைகள் புலிகளின் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட ஒரு படத்தைப் பார்த்து ‘தாயளிங்க சாகட்டும்’ என்றார். எளிய இனிய நண்பர். வன்முறையெ அறியாதவர். இன்று நமது மடியில் நம் குழந்தைகளின் சடலம் கிடக்க அந்த ‘துளிவிஷம்’ தான் காரணம்

ஜெ

 

அன்புள்ள ஜெ

உங்கள் இணையதளத்தில் பரிணாமத்தைப் பற்றிய ஒரு கடிதத்தை வாசித்தேன். பரிணாமம் என்ற தலைப்பு மிகவும் குழப்பக்கூடியது. ஏதோ அறிவியல்கதை என்ற எண்ணத்தை அது உருவாக்கிவிடுகிறது. சுஜாதா கூட அந்தக்கதை தமிழின் நல்ல அறிவியல் கதைகளில் ஒன்று என்று சொல்லியிருந்தார் என்று ஞாபகம்.

ஆனால் அந்தக்கதை உண்மையில் சரித்திரத்தைப்பற்றிய கதை அல்லவா? நம்முடைய சரித்திரத்தை வெள்ளைக்காரர்கள் எழுதுவதற்கும் நாம் எழுதுவதற்கும் இடையே உள்ள வேறுபாடுதானே அந்தக் கதையின் கருத்து? நாம் நம்முடைய வீழ்ச்சியையும் நம்முடைய முற்கால பெருமையையும் சொல்லும்போது பரிணாமத்திலேயே கைவிடப்பட்ட மக்களின் போலிப்பெருமிதம் என்றுதானே அவர்கள் சொல்கிறார்கள்? அதைத்தான் அந்தக்கதை சொல்லுகிறது? என் வாசிப்பு சரிதானே?

சிவகுமார்

 

அன்புள்ள சிவகுமார்,

உண்மைதான். அந்தக்கதை சரித்திரத்தைப்பற்றியதுதான். ஆனால் இந்திய சரித்திரத்தைப் பற்றி மட்டுமல்ல. நம் ‘உயர்சாதி’ வரலாற்றாசிரியர்கள் எப்படி தலித் வரலாற்றை பார்க்கிறார்கள், அவர்கள் பரிணாமத்தில் குறைந்த பழங்குடிகள் என்று தானே?  அவர்களின் முற்கால வரலாற்றை அவர்கள் சொல்லும்போது எப்படி எடுத்துக்கொள்கிறார்கள்?

ஜெ

 

மதிப்புக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

சிறுகதை — ஒரு சமையல் குறிப்பு வாசித்தேன். மிக அருமையாக உள்ளது, வளர்ந்து வரும் என் போன்ற எழுத்தாளர்கள் கற்றுக் கொள்ள நிறைய விடயங்கள் அதில் இருக்கின்றன.

உங்களுடைய நேரத்துக்கும் அந்தப் பணிக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றி.

அன்புடன்

ஸ்ரீரஞ்சனி

 

அன்புள்ள ஸ்ரீரஞ்சனி

சிறுகதைகளைப்பற்றிய அந்தக் குறிப்பை பலர் வாசித்து பயனுள்ளது என்று சொல்கிறார்கள். சிறுகதைகளின் வடிவம் என்ன அடைந்தது என்பதே அதில் உள்ளது. என்ன அடைய முடியும் என்பது கலைஞனின் சவால்
ஜெ

 

அன்புடன் ஜெயமோகன் அவர்களுக்கு,

உங்களின் பதிலுக்கு மிக்க நன்றி.

நீங்கள் தகுந்த உதாரணங்களுடன் ஒரு நல்ல சிறுகதை எப்படி இருக்க வேண்டும் என்று காட்டியிருக்கிறீர்கள். ஒரு ஆசிரியர்  எவ்வளவு தான் நன்றாகப் படிப்பித்தாலும் வகுப்பில் உள்ள எல்லா மாணவர்களும் படிப்பித்த அத்தனையையும் கிரகித்து பரீட்சையில் சித்தியடைவதில்லைத் தானே. அதே வேளையில் அதில் ஒரு சிலர் ஆவது நல்ல முறையில் சித்தியடைய அந்த ஆசிரியரின் கற்பித்தல் உதவுவது மாதிரி எங்கோ ஓரிரு சிறுகதைகளாவது நல்ல முறையில் வர உங்களின் கட்டுரை உதவும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு.

இனி மேல் நான எழுதும் போது நீங்கள் சொன்னவை கொஞ்சமாவது என் நினைவுக்கு வரும். இதுவரை அப்படி ஒரு சிந்தனை வரக் கூடியதாக எதையும் நான வாசிக்கவில்லை. ஆனபடியால் இது ஒரு நல்ல பட்டறையாக ஒரு கலைஞ்ன் தன சவாலை எதிர் கொள்ள உதவும்.

ஸ்ரீரஞ்சனி

(கனடா)

முந்தைய கட்டுரைகாந்தியின் கிராமசுயராஜ்யம் – 2
அடுத்த கட்டுரைஜெயமோகன் நூல்வெளியீடு,முகங்கள்