அம்பை தி இண்டு தமிழில் எழுதிய இந்தக்கட்டுரை பெண்எழுத்தாளர்கள் எந்த எல்லை வரை செல்வார்கள் என்பதற்கான ஆதாரம்.
முதலில் இக்கட்டுரை என்னைப்பற்றி பேசத்தொடங்குகிறது. என் படத்தைப் போட்டு கட்டுரை பிரசுரமாகியிருக்கிறது. ஆனால் நான் பெண் எழுத்துப்பற்றி என்ன சொன்னேன் என அக்கட்டுரை பொருட்படுத்தவே இல்லை.
நான் முதன்மையான பெண் எழுத்தாளர்களை புகழ்ந்து, விரிவாக ஆராய்ந்து கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். இந்தியாவின் தலைசிறந்த பெண் எழுத்தாளர்களை முன்வைத்து அந்தத் தரத்தில் எழுதும் எழுத்துக்களை எதிர்பார்க்கிறேன் என்றும் ஆனால் எதுவுமே எழுதாமல் இங்கே பெரும்பாலான பெண்கள் ஊடகதந்திரங்கள் மூலம் எழுத்தாளர்களாக அறியப்படுகிறார்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன். ஆனால் காத்திரமாக எழுதும் பெண்களும் சிலர் இருக்கிறார்கள் என்றேன்.
அம்பையின் இக்கட்டுரை அந்தக்கருத்துக்களை அதன்மேலான அறிவுபூர்வமான எதிர்வினையை முழுமையாகவே விட்டுவிட்டது. அதற்குப்பதிலாக யாரோ சில ஆண் எழுத்தாளர்கள் அவரைப்பற்றியும் பிற பெண் எழுத்தாளர்களைப்பற்றியும் ஆபாசமாகவும் வன்மத்துடனும் சொன்னவற்றைப்பற்றி பட்டியலிடுகிறது. எந்த ஆதாரமும் இன்றி. அவற்றில் சிலவற்றைச் சொன்னவன் நான் என்னும் விஷம் தோய்ந்த குறிப்பை வாசகர்களுக்கு அளிக்கிறது. ஓர் ஆபாசவசை பாடி என என்னைச் சித்தரிக்கிறது.
காலை முதலே அம்பையை அவ்வாறு அவமதித்தவன் நானா என்று கேட்டு தொலைபேசி அழைப்புகள், செவிகூசும் வசைகள். பெண்களும் சிறந்த கெட்டவார்த்தைகளைச் சொல்கிறார்கள். மேல் ஷாவனிஸ்ட் பிக் என்பதில் பிரச்சினை இல்லை. என்னை எந்த மிருகத்துடன் ஒப்பிட்டாலும் எனக்கு சம்மதமே. பெண்ணியப் பெண்கள் அதிகமும் மதர் ஃபக்கர், பாஸ்டர்ட் என்னும் சொற்களைப் பயன்படுத்தி என்னை ஏசினார்கள். அவை பெண்ணியத்துக்கு உகந்த சொற்களா என்ன?
எல்லாருக்குமாக நான் கொடுக்கவிரும்பும் வாக்குமூலம். ஒன்று நான் எந்தப்பெண் எழுத்தாளரைப்பற்றியும், அல்லது ஆண் எழுத்தாளரைப்பற்றியும் எவருக்கும் எதுவும் தனிப்பட்ட முறையில் எழுதவோ பேசவோ செய்ததில்லை. என் கருத்துக்கள் எல்லாமே வெளிப்படையானவை. இரண்டு, எந்தப்பெண் எழுத்தாளரிடமும் எப்போதும் ஓரிரு சம்பிரதாயச் சொற்களுக்கு அப்பால் பேசியதில்லை. ஏனென்றால் ஒரு பூசலென வரும்போது அந்தப் பேச்சையே திரித்து தன் மீதான ஆபாசத்தாக்குதல் என்று சொல்லக்கூடிய பல சோட்டா பெண் எழுத்தாளர்கள் இங்கே உண்டு என நான் அறிவேன். இனி எந்தப் பெண்ணிடமும் போனில்கூட ஹலோவுக்கு அப்பால் பேசவும் மாட்டேன்.
அம்பை இக்கட்டுரையில் வைக்கும் வாதங்கள் மிக அபத்தமானவை. பெண்ணெழுத்தாளர்கள் முக்கியமான எதையும் படைக்கவில்லை என்று சொல்பவர்கள் கூடவே பெண்களின் ஒழுக்கத்தை கேள்விகேட்கிறார்கள், அவர்களின் எழுத்துச் சுதந்திரத்தை மறுக்கிறார்கள், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை தாக்குகிறார்கள், ஆபாசமாக வசைபாடுகிறார்கள், பெண்கள் எழுதவேகூடாது என்கிறார்கள் என்றெல்லாம் வரிந்துகொண்டு அதற்கு பதில் சொல்கிறார்.
என் இணையதளத்திலேயே இவை ஒவ்வொன்றையும் பற்றி எழுதப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் உள்ளன. பொதுவெளிக்கு வரும் பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கையை ஆராய்வதற்கு எதிராக, அவர்களின் ஒழுக்கத்தைப்பற்றிய பேச்சுகளுக்கு எதிராக, அவர்களின் பாலியல்சார்ந்த எழுத்துச்சுதந்திரத்துக்கு ஆதரவாக மீண்டும் மீண்டும் எழுதியிருக்கிறேன். ‘எதையும் எழுதும் சுதந்திரம்’ இன்றி எழுத்துச்சுதந்திரம் இல்லை என்று வாதிட்டிருக்கிறேன். ஒருதருணத்திலும் ஒரு படைப்பாளியைப்பற்றியும் அவர்களின் எழுத்துரிமைசார்ந்து ஒரு வரியையும் எதிர்மறையாகச் சொன்னதில்லை.
அதாவது இவர்களிடம் இருப்பது ஒரு பதில். அதை எங்கும் சொல்வார்கள், எதற்கும் சொல்வார்கள். இந்த ‘அறிவு வறுமை’யைத்தான் நான் சுட்டிக்காட்டுகிறேன் . எங்கள் எழுத்தைப் பற்றி ஏதேனும் சொன்னால் முச்சந்தியில் அவமதிப்போம் என்கிறார்கள். இங்கும் அறிவையும் கல்வியையும் தர்க்கத்தையும் அல்ல பெண் என்னும் அடையாளம் அளிக்கும் சலுகையையே பயன்படுத்துகிறார்கள்.
பெண் எழுத்தாளர்கள் மீது ஆண் எழுத்தாளர்கள் [பாரதி முதல் இன்றுவரை] பாலியல் அவதூறு மற்றும் தாக்குதல்களை மட்டுமே முன்வைத்திருக்கிறார்கள் என்கிறார் அம்பை. ஆதாரமற்ற ஒற்றைப்படையான கீழ்த்தரத் தாக்குதல் என்றால் இதுதான். இதைத்தான் பாலியல் அவமதிப்பு என்று சொல்லவேண்டும். பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் பாலியல் அவமதிப்புக்கு ஆளாகக்கூடும். அவர்களுக்கும் சுயமரியாதையும் சமூகமரியாதையும் உண்டு. அதைமட்டும் அம்பை சமூகத்துக்குமுன் வைத்துக்கொள்கிறேன்.