புத்தக வெளியீடு,கடிதங்கள்

அன்புள்ள எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களுக்கு.,

நலம். நலமறிய ஆவல். 19 ஆம் தேதி நடக்கும் பத்து புத்தக வெளியீட்டுவிழாவுக்கான வீடியோவை youtube ல் போடமுடியுமா என விழா ஏற்பாட்டாளர்களிடம் தயவு செய்து கேட்க முடியுமா? நேரில் வர முடியாதவர்களுக்கு  விழாவை பார்க்க ஒரு  சந்தர்ப்பமாக அமையும்.

நூல் வெளியீடுக்கு எப்படி வாழ்த்துவது என்று தெரியவில்லை, ஆகவே பொதுவாக சொல்லிவிடுகிறேன். பத்து புத்தகங்களும் பல லக்க்ஷம் பிரதிகள் விற்று , அனைவும் விரும்பி பாராட்ட வாழ்த்துக்கள்.!

கூடிய விரைவில் நேரில் சிந்திப்போம்

பாலாஜி கோனார்
Dallas,TX

அன்புள்ள ஆனந்தக்கோனார்,

பொதுவாக இங்கே தமிழ் இலக்கியக்கூட்டங்களை எல்லாம் யாரும் வீடியோ பதிவெல்லாம் செய்வது இல்லை. தனிப்பட்ட முயற்சியினால் சிலர் செய்கிறார்கள் என்று நினைக்கிறேன். அரசியல் பதிவுகள் வேறு ரகம். ஜெயமோகன் என்று அடித்து தேடினாலே என் மனநிலையைப் பற்றி எனக்கே சந்தேகம் வரக்கூடிய கனிமொழியின் கோபப்பதிவு தெரிவதனால் நானெல்லாம் அதைப் பார்ப்பதே இல்லை. பொதுவாக இம்மாதிரி ஏற்பாடுகளை நானே செய்வதில் எனக்குச் சங்கடம் உண்டு. ஏதாவது நண்பர்களிடம் ஒரு செல்போன் வீடியோவாவது எடுக்கச் சொல்கிறேன்.

லட்சம் பிரதிகளா? நக்கலா? பத்துநூலும் வருடத்திற்கு ஆயிரம் பிரதிகள் விற்றாலே எனக்கெல்லாம் கொஞ்சம் மேட்டிமைத்தனம் பேச்சு நடத்தையில் வந்துவிடும் என்று நினைக்கிறேன். சென்ற வருடம் விற்பனையில் இருக்கும்   என் நாற்பத்திரண்டு நூல்களுக்காக  மொத்தமாக வாங்கிய ராயல்ட்டியே பதிநான்காயிரம் ரூபாய்தான். தமிழ் நூல்களை வாங்கிப்படிப்பவர்கள் மிக மிக மிக மிகக் குறைவு. விற்பனையில் சுஜாதா, சாரு,எஸ்.ராமகிருஷ்ணன், நான் என ஒரு வரிசை இருப்பது உயிர்மையின் விளம்பரங்களில் இருந்து தெரிகிறது. எனக்கு இந்த நிலைமை என்றால் எஸ்.ராமகிருஷ்ணன் இன்னும் ஐந்து பிரதி அதிகம் விற்பவராக இருப்பார் என்று நினைக்கிறேன். உழக்குக்குள் வழக்கு.

வாழ்த்துக்களுக்கு நன்றி

ஜெ

 

அன்புள்ள எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களுக்கு.,

வீடியோ எடுக்க ஏற்பாடு செய்ய முயல்வதற்கு மிக்க நன்றி. சென்னையில் இருக்கும் உங்கள் வாசக நண்பர்கள் கண்டிப்பாக உதவுவார்கள் என்று  எண்ணுகிறேன். இன்று மாலைவரை பல்வேறு தமிழ் இலக்கியவாதிகளின் வலைதளங்களுக்கு சென்று நிறைய படித்தேன். இலக்கிய எழுத்திற்கு ஒரு கூடுதல் பரிமாணமாக இவை போன்ற பதிவுகளும், விமர்சன பதிவுகளும் அமையும் என நினைக்கிறேன். அவசியம் ஏற்பாடு செய்யவும். இது சம்பந்தமாக உங்கள் வாசக நண்பர்களை  நான் நேரடியாக தொடர்பு கொள்ளமுடியுமானால் கண்டிப்பாக செய்வேன். ஈமெயில் அல்லது போன் நம்பர் அனுப்பவும்.

நீங்கள் தமிழ் புத்தக விற்பனை பற்றி சொன்னபோது எனக்கு கண்ணில் ரத்தம் வந்து விட்டது. கடந்த சில நாட்களாக நான் உங்கள் வெப்சைட் மற்றும் திரு எஸ். ராமகிருஷ்ணன், சாரு ஆகியோர்களின் வெப்சைட்யும் படித்து வருகிறேன். ஒவ்வொருவரை பற்றியும் ஒவ்வொரு அபிப்ராயம் இருந்தாலும், அனைத்திலும் என்சிறு வாசிப்பில் கண்ட ஒரு ஒற்றுமை, இலக்கியத்தில் பால் கொண்ட பிடிப்பால் நீங்கள் தரும் அயராத கடும் உழைப்பு. Hard work pays என்று சொல்வார்கள், தமிழ் இலக்கிய உலகில் அது இல்லை போல. நான் வெறும் பணத்தை சொல்லவில்லை, பரவலான ஒரு அங்கீகாரத்தை சொல்லுக்கிறேன்.

இதைபற்றி புலம்ப எனக்கு ஒரு அருகதையும் கிடையாது,ஏனெனில் முன்பு சொன்னது போல் நான் உங்களின் புத்தகம் ஒன்று கூட வாசிக்கவில்லை. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஓசியில் கிடைத்த மக்சீம் கோர்கி சிறுகதைகளும் ( இப்போது மறந்து விட்டது; புத்தகம் எங்கே என்றே தெரியவில்லை; சில தலைப்புகள் மட்டும் என்மனதில்  உள்ளது, கிழவி , ஒருமுறை இலையுதிர் காலத்தில் , திருடன்  ) , தாய் தமிழ் பதிப்பும் ( திருச்சியில் கடந்த வருடம் என் தம்பி திருமணதிற்கு வந்த போது பழைய புத்தக கடையில் வாங்கினேன், கடந்த ஒன்றரை வருடத்தில் இருபத்தைந்து பக்கம் படித்துள்ளேன்)  தவிர நான் படித்தது அமரர் திரு. சுஜாதா அவர்களின் சில கட்டுரை தொகுப்பும் , சில நாவல்களும் மட்டுமே. மிகவும் குற்ற உணர்வாய் அறிகிறேன். இத்தனைக்கும் எனக்கு தமிழ் பிடிக்கும், கூடுமான வரை தமிழில் பேச, நல்ல வாக்கியங்களை மேற்கோள் காட்ட பிடிக்கும், இருந்தும் வாசிக்காமல் இருந்து விட்டேன்.

என்போன்றவர்களே மிகவும் உள்ளனர். இதை ஒரு Case Study யாக செய்து , இவ்வளவு குறைந்த reader engagement க்கு என்ன காரணம் என்று அறிய வேண்டும். இதற்கு எதாவது செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது, எங்கிருந்து ஆரம்பிக்க என்றுதான் தெரியவில்லை. உங்களின் சில வாசகர்களை ஒன்றிணைத்து இது சம்பந்தமாக முதலில் பேச ஆரம்பிக்கலாம்.

முதலில் நாம் ஆரம்பித்தால் மற்றவர்களும் நமது சிந்தனையில் சேருவார்கள்.

உங்களின் யோசனைகளை தெரியப்படுத்தவும். நேரில் சந்திக்கும் போது, இதற்கு ஒரு செயல் வடிவம் கொடுக்கலாம்.

கண்டிப்பாய் முயல்வோம் ..!

 

அன்புடன்.,
பாலாஜி கோனார்
அன்புள்ள ஜெ

 

பத்து நூல்கள் வெளியிடுவதற்கு வாழ்த்துக்கள். ஆனால் இப்படி கொத்து கொத்தாக நூல்களை வெளியிடுவது சரியா என்ற எண்ணம் எனக்கு ஏற்படுகிறது. நூல்கள் வாசகர் கவனத்துக்கே வராமல் போய்விடும் அல்லவா? புத்தகங்களுக்கு எந்தக் கவனமும் வருவதில்லை. உதாரணமாக போன வருடம் உங்களுடைய மூன்று நூல்கள் வெளிவந்தன. ஊமைச்செந்நாய், நிகழ்தல், தன்னுரை. மூன்றைப்பற்றியும் எங்கும் எவரும் ஒருவரிகூட எழுதியதை நான் வாசிக்கவில்லை. இப்போது இந்த நூல்கள் அந்த நூல்களின் மீது போய் விழுந்துவிடும். நூல்களை இப்படி ஒட்டுமொத்தமாக வெளியிடுவதை தவிர்ப்பதே நல்லது என்று நினைக்கிறேன்

கணேஷ் ஸ்ரீராம்
[தமிழாக்கம்]
அன்புள்ள கணேஷ்,

நீங்கள் சொல்வதில் ஓர் உண்மை இருக்கிறது. ஆனால் பத்துநூல் என்பது ஒரு ஆச்சரிய அம்சம் உள்ள செய்தி. ஆகவே அதன் தலைப்புகளைக் கவனிப்பார்கள். தனித்தனியாக அவை வெளிவந்தாலும் யாரும் கவனிப்பார்கள் என்று எனக்குப் படவில்லை. ‘தன்னுரை’ குறித்து மட்டும் அரவிந்தன் நீலகண்டன், அகிலன் என இரு நண்பர்கள் எழுதியிருக்கிறார்கள். இணையத்தில். மற்றபடி எந்த பதிவும் இல்லை. ஆனால் இது எல்லா நூல்களுக்கும் உள்ள நிலைமை. ஒரு சமகாலப் படைப்பை வாசித்துக் கருத்து சொல்லும் ஒரே தமிழ் எழுத்தாளன் நான்தான். என் நூல்களையும் நானே வாசித்துக் கருத்து சொன்னால் அது நாகரீகமாக இருக்காது இல்லையா?

நூல்கள் வெளிவந்தால் ஒரு வருடத்துக்கு பொதுவாக எதிர்வினைகளே இருப்பதில்லை.  அவை தனிப்பிரதிகளாக அதிகம்போனால் தமிழகம் முழுக்க நூறுக்குள் தான் விற்கும். மற்றவை கல்லூரி நூலகங்கள் தனியார் நூலகங்கள் வாங்குபவை. அவற்றில் அந்நூல்களை அட்டவணையிட்டு வைக்க ஒருவருடம் கூட ஆகும். காடு நாவலுக்கு நூலகத்தில் படித்துவிட்டு எழுதும் வாசகர் கடிதங்கள் இப்போதுதான் எழுதுகிறார்கள்.

ஆக நூல்களை வெளியிடுவதனால் உடனடி எதிர்வினை அனேகமாக இருக்காது. அச்சில் நூல்களை பார்க்கும் சந்தோஷத்துடன் அப்படியே விட்டுவிடவேண்டியதுதான். அது எப்படியோ எப்போதோ விற்று மெல்ல மெல்ல நான்கு வருடத்தில் காலியாகும். அடுத்த பதிப்பு வரும். கொஞ்சம் புத்தகங்கள் வந்துவிட்டால் இது ஒரு டிசம்பர் தினவு அல்லாமல் வேறொன்றுமில்லை என்று நமக்கே தெரிந்துவிடும்.

ஆனால் சிலசமயம் அவசரமாக எதிர்வினைகள் பதிவாகும். நூல் வாசகர்களால் விரும்பப்பட்டு பலர் அதைப்பற்றி ஆங்காங்கே ஏதாவது பாராட்டிச் சொன்னால் உடனே எதிர்மறைக் கருத்துக்கள் பதிவாகும்.  இணையத்தில் நூல் வெளிவந்ததுமே ‘நல்லா இல்லே’ என்று கருத்துக்கள் பதிவாவது எளிது. என் நாவல்களில் விஷ்ணுபுரம், காடு இரண்டும்தான் அதிகமான வாசகர்களைக் கவர்ந்தவை. இரண்டுமே வெளிவந்ததுமே சுடச்சுட ‘நன்றாகவே இல்லை’ என்ற மாதிரி காலச்சுவடு ‘கருத்து’ எழுதியது. காடு நாவல் வந்த சிலநாட்களில் இணையத்தில் அம்மாதிரி பதிவுகள் வந்தன. ஆனால் அந்தக் கருத்துக்களும் வாசகர்களை பாதிப்பதில்லை.

ஆக, ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இதுதான். கண்ணுக்கு தெரியும் வாசகர்கள் மிகவும் குறைவு. அனேகமாக வாசகர்களே இல்லை. இருப்பது இலக்கிய வம்புச்சூழல் மட்டுமே. ஆனால் யாரோ எங்கோ கொஞ்சம் வாசிக்கவும் செய்கிறார்கள். அவர்களை வம்புகள் பாதிப்பதும் இல்லை. அந்த வாசகர்களை நம்பி இருட்டுக்குள் கைகளால் துழாவியபடிச் செல்வது போன்ற பயணம்தான் இது.

சிலசமயம் ஆழமான மனச்சோர்வும் சிலசமயம் யார் படித்தால் என்ன படிக்காவிட்டால் என்ன என்ற திமிரும் கலந்து வரக்கூடிய ஒரு சூழல்.

ஜெ

ஆனந்த விகடன் பேட்டி 2007

கேள்வி :தொடர்ந்து என்ன எழுதறதா இருக்கீங்க?

முக்கியமா ஒரு நாவல். அசோகவனம்’. என் அம்மா பாட்டிகளைப்பத்தி. பெரிய நாவல். நாலு தடவை எழுதிப்பாத்தேன். வரவில்லை. வாரதுவரை கதவை தட்டிக்கிட்டே இருக்கவேண்டியதுதான். சமயத்தில சம்பந்தமே இல்லாம இன்னொரு நாவல் வந்திரும். காடு’, ‘ஏழாம் உலகம்எல்லாம் அப்டி வந்ததுதான். அப்றம் வேதாந்த மரபு பத்தி விரிவா ஒரு தத்துவ நூலை எழுதற திட்டம் இருக்கு. ஆராய்ச்சி நடந்திட்டிருக்கு. இந்த வருஷம் வரும்னு நினைக்கிறேன்.

அன்புள்ள ஜெயமோகன்

உங்கள் கவனத்துக்காக

இதுதான் நீங்கள் எழுதியவற்றிலேயே மிகவும் தாமதமான நாவல் இல்லையா?  அசோகவனத்தை முடிக்கும் நிலைமையில் இருக்கிறீர்களா?

நன்றி

எம்.ரவீந்திர நாதன்

 

அன்புள்ள ரவீந்திரநாதன்

இரண்டு வருடம் தானே ஆகிறது?

உண்மையில் நான் அசோகவனத்தைப்பற்றி முதலில் அறிவித்தது 1991ல். விஷ்ணுபுரம் அசோகவனம் என்று இருநாவல்கள் எழுதுவேன் என்று சுபமங்களாவில் சொன்னேன். எழுத ஆரம்பித்து நான்கு வருடங்கள் ஆகின்றன.

நாலில் மூன்று முடிந்துவிட்டது. மேலே செல்லவேண்டும்

இந்தவருடம் முடிக்கவேன்டும். பார்ப்போம்

ஜெ

 

அன்புள்ள மிஸ்டர் ஜெயமோகன்

உங்கள் நூல்கள் உயிர்மை நூல்கள் தவிர பிற நூல்கள் எவையும் இணையம் மூலம் வாங்கக்கிடைப்பதில்லை. நூல்கள் விற்கவில்லை என்பவர்கள் இணையத்தில் புத்தகங்களை விற்க ஏன் ஏற்பாடு செய்யக்கூடாது?

ஜெயராம்

[தமிழாக்கம்]

 

உங்கள் கடிதம்போன்ற பல கடிதங்களுக்கு ஏற்கனவே பதில் போட்டிருகிறேன். இணையத்தில் உயிர்மை புத்தகங்கள் கிடைக்கின்றனவே, எத்தனை பேர் வாங்குகிறார்கள்? ஒரு நூல் ஐந்தாறு பிரதிகள்கூட விற்பதில்லை. இணையம் வழியாக புத்தகம் வாங்கும் தமிழர்கள் மிகமிகக் குறைவு. அவர்களை நம்பி எந்த அமைப்பையும் உருவாக்கி நடத்த முடியாது. உருவாக்கப்பட்ட அமைப்புகள் எல்லாமே ஏற்கனவே நின்றுவிட்டன. இதுவே உண்மை.

நீங்கள் புண்படாவிட்டால் ஒன்று சொல்கிறேனே, இப்போது சட்டென்று ஏதோ ஒரு நூல் உங்களுக்கு தேவைப்படுகிறது. அதனால் இந்தக் கோபம். மற்றபடி ஒரு முந்நூறு ரூபாய்க்காவது நீங்கள் இணையம் வழியாக புத்தகம் வாங்கியிருப்பீர்கள் என நான் நம்பவில்லை

ஜெ

 

அன்புள்ள ஜெ

இந்தவருடம் உங்களுடைய பழைய நாவல்கள் எவையேனும் மறுபதிப்பு வருகின்றனவா? நான் கேட்டபோது பல நூல்கள் வெளிவரவேயில்லை என்றார்கள்

சங்கீதா ராம்

 

அன்புள்ள சங்கீதா

இந்தவருடம் மறுபதிப்பாக கிடைக்கும் நூல்கள்

1 விஷ்ணுபுரம் – கவிதா பதிப்பகம்

2 கன்யாகுமரி கவிதா பதிப்பகம்

3 ரப்பர் – கவிதா பதிப்பகம்

4 பனிமனிதன் கிழக்கு பதிப்பகம்

5 இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் கிழக்கு பதிப்பகம்

6 நாவல் [கோட்பாடு] கிழக்கு பதிப்பகம்

7 பின் தொடரும் நிழலின் குரல் தமிழினி பதிப்பகம்

8 காடு தமிழினி பதிப்பகம்

9 ஏழாம் உலகம் தமிழினி பதிப்பகம்

10 ஆயிரங்கால் மண்டபம் சிறுகதைகள் கவிதா பதிப்பகம்

11 திசைகளின் நடுவே சிறுகதைகள் கவிதா பதிப்பகம்

12 மண் சிறுகதைகள் கவிதா பதிப்பகம்

13 வாழ்விலே ஒருமுறை அனுபவக்கதைகள்  கவிதா பதிப்பகம்

14 சங்க சித்திரங்கள் கவிதா பதிப்பகம்

 

மதிப்பிற்குரிய ஜெயமொகன் அவர்களுக்கு,
தங்களின் புத்தகங்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் வெளிவந்துள்ளனவா?

நன்றிகளுடன்

பாலாஜி

 

அன்புள்ள பாலாஜி

மூன்று சிறுகதைகள் மட்டுமே ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. சாகித்ய அக்காதமி இதழ்களில்.

சமீபமாக காடு நாவலின் ஆங்கில மொழியாக்கத்தை கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

FOREST

translated by Janaki Vengatraman

ஜெ

 

அன்புள்ள ஜெ

இந்த வருடம் புத்தகக் கண்காட்சிக்கு வருவீர்களா?

சுரேஷ் அருணாச்சலம்

 

இல்லை. பதினெட்டு முதல் இருபது வரை சென்னை. திரும்புவது இருபதாம் தேதி. மீண்டும் எப்படி ஜனவரி ஒன்றாம் தேதி வருவது? பட்ஜெட் உதைக்குமே…ஓங்கி. கொஞ்சம் கறாரான கீச்சுக்குரல் கொன்ட பட்ஜெட்

ஜெ

முந்தைய கட்டுரைவிவேக் ஷன்பேக், கடிதங்கள்
அடுத்த கட்டுரைவிவேக் ஷன்பேக் சிறுகதை – 2