பெண்களின் அறிக்கை

பெண்களின் எழுத்து பற்றிய என்னுடைய விரிவான கருத்துக்களுக்கு பதிலாக பெண் எழுத்தாளர்கள் என சிலர் எழுதிய கூட்டறிக்கை ஒன்றை வாசித்தேன். அவர்களில் நாலைந்துபேரை மட்டுமே நான் கேள்விப்பட்டிருக்கிறேன், அவர்கள் பெரிதாக ஏதும் எழுதவில்லை என்பது என் எண்ணம். கேள்விப்படாதவர்கள் இவர்களை விட சிறப்பாக எழுதியிருப்பார்கள் என நம்பலாமா என யோசிக்கிறேன்.

வருத்தம் அளித்த அறிக்கை இது. இதில் உள்ள வசைகள், அவதூறுகள், திரிபுகளுக்காக அல்ல. அவற்றை நான் புதியதாகச் சந்திக்கவில்லை. என் படைப்புகளை, கட்டுரைகளை வாசித்தவர்களிடமே நான் பேசவிரும்புகிறேன். அவர்களுக்கு என் கருத்துக்களின் வரலாற்று நோக்கும், என் படைப்புகளில் உள்ள உணர்வுநிலையும் தெரிந்திருக்கும். பிறருக்கும் எனக்கும் தொடர்பே இல்லை.

என் வருத்தம் இதை ஒரு பதிலாக உட்கார்ந்து எழுதிய எவரும் நான் எழுதிய எவற்றையும் வாசித்திருக்கவில்லை என்பதற்கான எழுத்துவடிவ ஆதாரம் இவ்வறிக்கை என்பதனால். இவர்களின் இலக்கியரசனைக்கும், விவாதங்களை எதிர்கொள்ளும் தரத்துக்கும் இதைவிடப்பெரிய சான்று ஏதுமில்லை என்பதனால். இத்தனைபேர் கூடியும்கூட இந்த தரத்துக்குமேல் ஓர் அறிக்கையை இவர்களால் எழுதமுடியவில்லையே என்பதனால்.

சமகால இலக்கியத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு படைப்பாளியைப்பற்றி ஓர் அடிப்படைப்புரிதல்கூட இல்லாமல் காழ்ப்பரசியல்சார்ந்த அபத்தமான அக்கப்போர்களில் இருந்து திரட்டிக்கொண்ட வெறும் வசையை மட்டுமே முன்வைக்கக்கூடிய இத்தகைய ஓர் எதிர்வினையை உண்மையில் நான் எதிர்பார்க்கவில்லை.

இவர்களைப்பற்றி நான் சொன்னவற்றுக்கு இந்த ஒரே அறிக்கை மட்டுமே சான்று. ஆகவே இது வரலாற்றில் நிற்கவேண்டும் என்று எண்ணுகிறேன். ஆகவே இதை இங்கே பதிவுசெய்கிறேன். இன்று என் வாழ்க்கையின் மிகப்பெரிய உலகியல் கனவு என்பது என் மகள் ஓர் எழுத்தாளராக ஆகவேண்டும் என்பதே. ஆனால் இத்தகைய ஓர் அறிக்கையில் கையெழுத்திடும் ஓர் எழுத்தாளராக அவள் ஆனால் அதைவிட பெரிய வீழ்ச்சியாக எதையும் எண்ணமாட்டேன். எழுத்தாளர் என்பவர் எந்த ஒரு எதிர்வினையையும் அறிவுத்தளத்தில்தான் நிகழ்த்தவேண்டும். இத்தகைய எதிர்வினையை நான் குழாயடிகளில்தான் கண்டிருக்கிறேன்.

மீண்டும் என் வருத்தத்தை தெரிவிக்கிறேன். இந்தப்பெண்களை எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள் என நம்பி இலக்கிய விமர்சனத்தை முன்வைத்தமைக்காக. மிக எளிய இந்த மனங்களைப் புண்படுத்தும் எண்ணம் என்னிடம் இல்லை. ஒரு தருணத்திலும் நான் எழுத்தாளர்கள் அல்லாத எவரையும் கடுமையாக விமர்சனம் செய்ததில்லை. இதில் கையெழுத்திட்ட அனைவரிடமும் அவர்களைப் புண்படுத்தியமைக்காக மன்னிப்பு கோருகிறேன். அமைதிகொள்ளுங்கள் நண்பர்களே, நீங்கள் வாழும் அந்தச் சில்லறைஉலகில் நான் இல்லை.

இதை ஏதேனும் பெண் எழுத்தாளர்கள் வாசிப்பார்கள் என்றால் ஒன்றுமட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இலக்கியம் என்பது இத்தகைய நாலாந்தர அரசியல் வசைநடவடிக்கை மூலம், கும்பல்கூடி கூச்சலிடுவதன்மூலம் செய்யப்படுவதல்ல. அது அர்ப்பணிப்பின், தவத்தின் விளைவாக நிகழ்வது. அதை அளிக்கும் ஒருவர் இத்தகைய ஓர் அவதூறு-வசை அறிக்கையில் கையெழுத்திடும் கீழ்மை நோக்கிச் செல்லமாட்டார். தனித்து நிற்கும் குரலையே நாம் இலக்கியவாதியின் குரல் என்கிறோம்.

பெண்களின் கூட்டறிக்கை

முந்தைய கட்டுரைகமலா தாஸ் கட்டுரைகள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 20