காந்தியின் கிராமசுயராஜ்யம் – 2

காந்தி சொன்ன கிராம சுயராஜ்யம் முன்மாதிரிகள் இல்லாத ஒன்றா என்ன? முன்மாதிரிகள் இருக்கும் என்றால் அவை எவ்வாறு முற்காலங்களில் செயல்பட்டிருக்கின்றன.  இக்கேள்வியிலிருந்தே கிராம சுயராஜ்யத்தின் சாத்தியங்களைப் பற்றி யோசிக்க முடியும்.

நாஞ்சில்நாட்டில் சென்றநூற்றாண்டின் இறுதிவரை இருந்த கிராமசுயாட்சி முறை குறித்து முனைவர்.அ.கா.பெருமாள்  எழுதியிருக்கிறார். மலையாளத்தில் முனைவர் திரிவிக்ரமன் தம்பி விரிவாக ஆராய்ந்திருக்கிறார். நாஞ்சில்நாடு வளமான நஞ்சைநிலம். இங்கே விவசாயத்திற்காக குடியேற்றப்பட்ட மக்கள் மெல்ல பரவி விளைநிலங்களை அமைத்தபோது நூற்றுக்கணக்கான கிராமங்கள் உருவாயின. இக்கிராமங்கள் தங்கள்மீது பிறரது மேலாதிக்கம் ஏதும் இல்லாமல் சுதந்திரமாக ஒரு நிர்வாக முறையை உருவாக்கிக் கொண்டன. இதுவே பிடாகை முறை எனப்படுகிறது

நாஞ்சிநாட்டுப் பிடாகைகள் பன்னிரண்டு.[ மேல்பிடாகை, நடுப்பிடாகை, படப்பற்று பிடாகை, அழகியபாண்டியபுரம் பிடாகை, அனந்தபுரம் பிடாகை,தாழக்குடி பிடாகை,கோட்டாறு பிடாகை,பறக்கை பிடாகை, தேர்ப்பிடாகை, சுசீந்திரம் பிடாகை,தோவாளை பிடாகை, அகஸ்திஈஸ்வரம் பிடாகை] பிடாகை என்றால் சிறுகிராமங்கள் அடங்கியது. பிடாகை என்பது ஒரு தன்னிறைவான கிராமக்கூட்டமைப்பு. பொதுவாக அருகருகே இருக்கும் கிராமங்களை பொதுவான நீர்ப்பங்கீடு, பொதுநிலம், பொதுக்கோயில் ஆகியவற்றின் அடிபப்டையில் பிடாகையாக தொகுக்கிறார்கள்.

ஒருபிடாகையைச் சேர்ந்த மக்கள் ஒருபொது இடத்தில்கூடி தங்கள் தலைவர்களைத் தேர்வுசெய்வார்கள். அந்தபிடாகைத்தலைவர்கள் பன்னிரண்டுபிடாகைகளும் கூடும் சபைகளில் பிரதிநிதிகளாகப் பங்குகொள்வார்கள். தங்களுக்குரிய தேவைகளை தாங்களேகூடி தீர்மானித்து இணைந்து செயல்படுவார்கள். பன்னிரண்டுபிடாகைகளும் சுசீந்திரம் கோயிலில் உள்ள செண்பகராமன் மண்டபத்தில் கூடுவது வழக்கம் என்று அ.கா.பெருமாள் கூறுகிறார்.

நாஞ்சில்நாட்டில் உள்ள முக்கியமான பிரச்சினை நீர்ப்பாசனம்தான். குளங்களைப் பராமரிப்பதும் ஆற்றுநீரை குளங்களுக்குச் சமமாக பங்கிட்டுக்கொள்வதும் விவசாயத்துக்கு இன்றியமையாதது.  இதற்காகவே பிடாகை அமைப்பு உருவாகியது. வேளாண்மைக்குத் தேவையான தழையுரங்களுக்காக பொதுவான காடுகளை பராமரிப்பதும், ஊருப்பொதுவான மேய்ச்சல்நிலங்களை பராமரிப்பதும், சந்தைகளை நிர்வாகம்செய்வதும், சாலைகளையும் பொதுவழிகளையும் அமைத்துப் பாதுகாப்பதும் இவற்றின் பணிகளாக ஆயின. எந்தவிதமான புறக்கட்டுப்பாடும் இல்லாமல் இந்த கிராம நிர்வாக அமைப்பு குறைந்தது எண்ணூறு வருடம் சீராக இயங்கி வந்திருக்கிறது என்பது வரலாறு.

நாஞ்சில்நாட்டில் பிடாகைக்காரர்கள் கூடி பழையாறுக்குக் குறுக்காக தடையணை கட்டி நீரை பறக்கை வரை கொண்டுசென்றிருக்கிறார்கள். வழியெங்கும் குளங்களை நிரப்பியிருக்கிறார்கள். ஏராளமான சிறு கால்வாய்களை அந்தந்த பிடாகைமக்களே வெட்டியிருக்கிறார்கள். நாஞ்சில்நாட்டில் இருந்த நீர்ப்பாசனமுறை இந்தியாவிலேயே சிறந்தது என்று சொல்லப்படுகிறது. நீரின் தேவையும் நீரின் இருப்பும் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு சீராக பொதுவினியோகம் செய்யப்பட்டது. ஒவ்வொரு வருடமும் ஏரிகள் ஊர்ப்பொது உழைப்பில் தூர்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டன. இவற்றுக்கான ஆவணங்கள் மதிலகம் ஆவணங்கள் என்று சொல்லப்படும் கேரள அரசு சேகரிப்புகலிலும் அழகியபாண்டியபுரம் முதலியார் ஓலைக்குறிப்புகளிலும் கிடைக்கின்றன.

இவற்றுக்கும் மேலாக நாஞ்சில் நாட்டுப்பிடாகைகள் கஞ்சிப்புரைகள் போன்ற அறச்சாலைகளை நிர்வகித்து வந்தன. அதற்காக ஊர்ப்பொதுவில் நிலம் ஒதுக்கப்பட்டிருந்தது.பல இடங்களில் நூற்றாண்டுகளாகச் செயல்பட்டுவந்த கஞ்சிப்புரைகள் இந்தியாவை சீரழித்த பெரும்பஞ்சங்களின் வீச்சு நாஞ்சில்நாட்டில் பரவாமல் தடுத்தன. ஊர்த்திருவிழாக்களும் பிடாகைக்காரர்களால் நடத்தப்பட்டன. கலைஞர்களை பேணவும், கல்விமான்களைப் பேணவும், கிராமத்துக்கு வரும் நாடோடிகளை பேணவும் இக்கிராமசபைகள் அமைப்புகளை உருவாக்கி இருந்தன.

நாஞ்சில்நாடு முற்கால சேரர்கள், சோழர்கள், பின்னர் பாண்டியர்கள் , பின்னர் திருவிதாங்கூர் மன்னர்கள் என பலரால் மாறி மாறி ஆளப்பட்டு வந்தது. அந்த ஆட்சி மக்களுக்கு அன்னியப்படையெடுப்பில் இருந்து பாதுகாப்பளிப்பது என்பதற்கு அப்பால் எந்தப்பொறுப்பையும் வகிக்கவில்லை. பிடாகைகள் அந்த அரசுகளுக்கு வரி அளித்தன என்பதற்கு அப்பால் எந்தவகையான தொடர்பும் கொண்டிருக்கவில்லை.

நாஞ்சில்நாட்டு அழகியபாண்டியபுரம் ஆவணங்களில் மன்னரே இந்தப்பிடாகைகளுக்குக் கட்டுப்பட்டவராக இருந்தார் என்பதைக் காணமுடிகிறது. மன்னரின் கொள்கைகள் பிடிக்காமல் ஆகும்போது இவர்கள் வரிகொடா இயக்கம் போன்றவற்றை நடத்துகிறார்கள். மன்னர் வந்து சமாதானம்செய்கிறார். மன்னர் இவர்களுக்கு ஆணைகள் போடுவதில்லை, இவர்களே மன்னர்களை வழிநடத்துகிறார்கள் என்பதை ஓலைகளின் மொழி காட்டுகிறது. கிட்டத்தட்ட சுதந்திரமான கிராம அரசாங்கங்கள் இவை.

வெற்றிகரமாக இயங்கிய இந்த அமைப்பு 1947க்குப் பின்னர் சுதந்திர இந்தியாவின் மைய நிர்வாக அரசால் முழுமையாக அழிக்கப்பட்டது. வெறும் ஐம்பதே வருடங்களில் நாஞ்சில்நாட்டின் விவசாயம் பெரும் சரிவைச் சந்தித்தது. இன்று விவசாயத்தை நம்பி எவரும் வாழமுடியாத நிலை உள்ளது. காரணம் நாஞ்சில்நாட்டின் குளங்கள் மற்றும் ஏரிகளில் நேர்ப்பாதி முழுமையாகவே அழிந்துவிட்டன. பாசனக்கால்வாய்களில் சில தவிர பிற கழிவுநீர் ஓடைகளாகவும் தேங்கி தூர்ந்த தடங்களாகவும் மாறி விட்டன. பழையாற்று வெள்ளத்தைத் தேக்கியிருந்த பெரும் ஏரிகள் கரையிடிந்து சாக்கடை தேங்கி முட்சதுப்புகளாக நாறிக்கிடக்கின்றன. நகரெல்லைக்குள் இருந்த எல்லா நீர்நிலைகளும் கட்டிடப்பகுதிகளாக ஆகிவிட்டிருக்கின்றன.

என்ன நடந்தது? பாசனநீரால் பயன்பெறும் விவசாயிகளே பாசனநிர்வாகத்தையும் கவனித்துக்கொண்டிருந்தபோது எல்லாம் சீராக இருந்தது. அவர்களின் வாழ்வாதாரமே நீர்தான் என்பதனால் அவர்கள் அதில் எந்தவிதமான உதாசீனத்தையும் காட்டவில்லை. ஒரு சிறுபொறுப்பின்மை அல்லது பாகுபாடுகூட உடனடியாக பாதிக்கப்படுபவர்களால் சுட்டிக்காட்டப்படும். மேலும்  அவர்களுக்கு பாசனம் சம்பந்தமான எல்லா நுட்பங்களும் தலைமுறை தலைமுறையாக கைமாறப்பட்டு தெரிந்திருந்தன.

சுதந்திர இந்திய அரசில் அந்த அமைப்பின் அதிகாரம் முழுக்கப் பறிக்கப்பட்டு அரசின் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் முறைப்படி கல்விகற்ற நிபுணர்கள் என்று சொல்லப்பட்டது. அவர்களிடம் அனைத்து அதிகாரங்களும் ஒப்படைக்கப்பட்டு தங்கள் சொந்த கிராமங்கள் மீதே விவசாயிகளுக்கு உரிமை இல்லாமலாக்கபப்ட்டது.

ஆனால் உண்மையில் அந்நிபுணர்களுக்கு பொத்தாம்பொதுவான விஷயங்கள் மட்டுமே தெரிந்திருக்கும். உள்ளூர் நுட்பங்களும் நடைமுறைகளும் தெரிந்திருப்பதில்லை. பழகி கற்று தெரியுமளவுக்கு அவர்கள் பதவியில் நீடிப்பதும் இல்லை. பொதுவாக அவர்களின் பதவிஎல்லைக்கு அப்பால் அவர்களுக்கு எந்தவிதமான அக்கறைகளும் இருக்கும் வழக்கம் இல்லை. விவசாயி அல்லாத ஒருவரால் விவசாயத்தின் அவசரங்களைப் புரிந்துகொள்ள முடிவதில்லை என்பதே உண்மை. ஒரு மூத்த விவசாயி என்னிடம் ஒருமுறை சொன்னார் ”சர்க்காருலேருந்து எண்ணைக்கு பிராமணன் வந்து வெள்ளம் கணக்குவைக்க தொடங்கினானோ அண்ணையோட கிருஷி போச்சு மக்கா”

மேலும் இந்த அதிகாரிகளுக்கு நடைமுறை சார்ந்து எந்த முடிவும் எடுக்க அதிகாரம் இல்லை. தங்கள் சொந்த ஊரில் ஒரு குளத்தின் கரையை சரிசெய்ய விவசாயிகள் நாகர்கோயிலில் உள்ள அதிகாரியிடம் மனு செய்துகொள்ள வேண்டும். அவர் அந்த மனுவை நிராகரிப்பதற்கு முழு உரிமை உள்ளவர். அவர் அதை மேலிடத்துக்குப் பரிந்துரைத்தால்  வரைபடத்தில் மட்டுமே நாஞ்சில்நாட்டை கண்டிருக்கும் சென்னை உயரதிகாரிகளால் அது அனுமதிக்கப்பட்டு கீழே வரவேண்டும். நாகர்கோயில் அதிகாரிகளின் அனுமதியுடனும் மேற்பார்வையுடனும் வேலை நடக்க வேண்டும். இவ்வாறு ஒரு சின்ன விஷயம்கூட ஏராளமான நிர்வாகச்சிடுக்குகளுக்கு இடையே கசிந்து பிதுங்கித்தான் வெளியே வரமுடியும். இன்று இதைச் சாதாரணமாகக் காணலாம். வெள்ளநிவாரணம் அளிக்கப்படும்போது வெயில் காயும், வரட்சிநிவாரணத்துக்கு ஆணை வரும்போது வெள்ளத்தில் ஊரே மூழ்கிக்கிடக்கும்.

இத்தகைய மைய நிர்வாகத்தின் சிவப்புநாடாவின் விளைவாக நீர்நிலைகள் உதாசீனம் செய்யப்பட்டன. பேச்சிபபறை அணை உட்பட குமரிமாவட்டத்தின் உள்ள பல நீர்நிலைகள் சுதந்திரத்துக்குப் பின்னர் ஒருமுறைகூட தூர்வாரப்படவில்லை என்பது வரலாறு. பாசனமுறைகள் முழுக்கமுழுக்க சீரழிந்தன. இன்று பேச்சிப்பாறை நீர் அதன் தொடக்கப்பகுதிகளில் ரப்பர் எஸ்டேட்டுகளுக்குள் திறந்துவிடப்பட்டு வீணாகிறது.கடைமடைப்பகுதிகளில் மக்கள் நீருக்கு அலைமோதுகிறார்கள். குமரிமாவட்டப் பாசனநீரில் நாற்பதுசதவீதம் வரை தேவையில்லா இடங்களில் திறந்துவிடப்பட்டு வீணாகிறது என்று ஒரு கணக்கு.

அனைத்துக்கும் மேலாக பாசனநிர்வாகமும் என்பது முழுக்க முழுக்க ஊழல் மயமாகியது. இன்று குமரிமாவட்டத்தில் அணைக்கட்டில் எத்தனை அடிநீர் தேக்கப்படவேண்டும் என்று தீர்மானிப்பதற்குக் கூட  நீர்ப்பிடிப்பின் கரையோரநிலங்களை ஆக்ரமித்துள்ளவர்களால் லஞ்சம் கொடுக்கப்படுகிறது. நேர்மை குறைந்துவிட்டது என்று பொதுவாகச் சொல்லவரவில்லை. பாசனம் யாருடைய வாழ்க்கைப்பிரச்சினையோ அவர்களுக்கும் பாசனநிர்வாகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றுதான் இதற்குப்பொருள்.

ஒரு பிடாகைக்குள் ஏரிகுளங்களை காப்பவர்கள், ஆசாரிகள், கொல்லர்கள் என அவர்களுக்குத் தேவையான எல்லா தொழிலாளர்களும் இருந்தார்கள். அவர்கள் செய்யும் வேலைக்கு தனிக்கூலிக்கு வெளியே ஊர்ப்பொதுவிலும் கூலி வழங்கப்பட்டது. இதைத்தவிர திண்ணைப்பள்ளிக்கூட ஆசிரியர்கள், வானியலாளார்களான சோதிடர்கள், நாட்டு வைத்தியர்கள், ஆற்றில் வெள்ளம் வந்தால் ஓடம் விடுபவர்கள், கிராமப் பூசாரிகள் போன்றவர்கள் ஊரின் பொது நிதியால் புரக்கப்பட்டார்கள். அக்கிராமங்களுக்கு வெளியே இருந்து வந்தவை மிகக் குறைவே.

ஏறத்தாழ இதே வரலாறுதான் தமிழகம் முழுக்க இருக்கும். தமிழகம் முழுக்க ஒரு கண்மாய்நீரை பயன்படுத்தும் பயனாளிகளின் கிராமங்கள் வலுவான ஜனநாயக அமைப்பாக ஆகி தெளிவான மரபுகளால் நிர்வாகம்செய்யப்பட்டன. கிராமங்களின் பொதுநிதியால் நீர்நிலைகள்பாதுகாக்கப்பட்டன. வருடம்தோறும் பயன்பெறும் கிராம மக்கள் அனைவரும் கூடி நீர்நிலைகளை தூர்வாரி பாசனவழிகளை செப்பனிட்டார்கள்.  குடிமராமத்து என்று இது சொல்லப்பட்டது.

தமிழ்நாட்டில் பிரிட்டிஷ் ஆட்சி நேரடியாக இல்லாமல் இருந்த எட்டையபுரம் போன்ற பகுதிகளில் 1947 வரைக்கூட குடிமராமத்து முறை திறம்பட இயங்கியிருக்கிறது. கழுகுமலை அருகே 1991ல் குடிமராமத்துமுறைப்படி ஓர் ஏரி தூர் வாரப்படுவதை நான் நேரில்சென்றுகண்டு அவர்களிடம் பேசியிருக்கிறேன். எத்தனை ஊரார் எத்தனை பேர் வீதம் வரவேண்டும் அல்லது பங்குப்பணம் தரவேண்டும் என்பதற்கான மரபுகள் அப்போதும்கூட இருந்தன.

இந்தியா முழுக்க இத்தகைய வட்டார நிர்வாக அமைப்புகள் இருந்தன. இந்திய கிராம தன்னாட்சி அமைப்புகளை விரிவாக ஆராய்ந்த காந்திய நிபுணர் என தரம்பால் அவர்களைச் சொல்லலாம். பிரிட்டிஷ் ஆவணங்களைக் கொண்டே பிரிட்டிஷ் நிர்வாகம் என்பது இந்தியாவின் பாரம்பரிய அமைப்புகளை அழிப்பதன் மூலம் எவ்வாறு பேரழிவுகளுக்குக் காரணமாக அமைந்தது என்பதை நிரூபித்தவர் தரம்பால். மையப்படுத்தப்பட்ட நிர்வாகத்தை ஒரே தீர்வுமாதிரியாக முன்வைத்த பிரிட்டிஷார்  நடைமுறையில் இந்தியாவின் மாபெரும் பன்மைத்தன்மையை அதன்மூலம் நிர்வகிக்க  இயலாமல் கிட்டத்தட்ட இந்தியாவை அந்தந்தப் பகுதி அதிகாரிகளின் பொறுப்புக்கே விட்டுவிட்டார்கள். அதுவே அழிவை உருவாக்கியது.

இந்தியாவின் பாரம்பரிய நிர்வாக முறையை அழித்த காலனியவாதிகள் அதற்கு நேர்மாறாக ஒரு வரலாற்றை கற்பிதம்செய்தார்கள். இந்தியா நிர்வகிக்கப்படாமல் சிதறிப்பரந்து அராஜத்தின் வெளியாக இருந்தது என்றும் பிரிட்டிஷ் ஆட்சி முறையே இந்தியாவில் நிர்வாக ஒழுங்கைக் கொண்டுவந்தது என்றும் அவர்கள் எழுதினார்கள். பிரிட்டிஷார் இந்தியாவுக்கு வந்தகாலகட்டம் பேரரசுகள் சிதைந்து அதன் உட்கூறுகள் ஒன்றுடன் ஒன்று போராடிய காலகட்டம். அரசியல் நிலையின்மையும் அராஜகமும் நிலவிய காலகட்டம். ஆனால் அப்போதும்கூட இந்தியாவின் கிராம நிர்வாக அமைப்புகள் சுதந்திரமாகவும் வெற்றிகரமாகவும்தான் இருந்தன.

தரம்பால் இந்திய கிராமசுயராஜ்ய அமைப்புகள் பதினெட்டாம் நூற்றாண்டு வரை எவ்விதம் தன்னிறைவுள்ள கிராமங்களை உருவாக்கின , சர்வதேசத்தளத்தில் அன்று உலகமெங்கும் இருந்த எந்த ஒரு தேசிய வாழ்க்கைத்தரத்தைவிட பலமடங்குமேலான வாழ்க்கையை அவை எப்படி பெருவாரியான மக்களுக்கு உருவாக்கி அளித்தன என்று விரிவாக கள ஆய்வுத்தகவல்கள் மூலம் நிரூபித்தார். இந்தியச்சூழலைக் குறித்து மேலைநாட்டு பயணிகள் திட்டமிட்டு உருவாக்கிய அவதூறுகளை வெளிப்படுத்தினார்.

தரம்பால்  தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கிராமங்களை விரிவான கள ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கிறார். ராஜஸ்தான் கிராமங்களையும் தமிழ்நாட்டு கிராமங்களையும் ஒப்பிட்டு ஆராய்ந்திருக்கிறார். ‘அழகிய மரம், பதினெட்டாம் நூற்றாண்டு இந்திய தேசியக் கல்விமுறை’ [ The Beautiful Tree: Indigenous India Education in the Eighteenth Century ] என்ற நூலில் தரம்பால் இந்தியகிராமிய அமைப்பு எப்படி எல்லா மக்களுக்கும் அவர்களுக்கு தேவையான கல்வியை பரவலாக அளிக்கும் அமைப்புகளைக் கொண்டிருந்தது என்று நிறுவுகிறார்.

தரம்பால்

தமிழ்நாட்டில் தரம்பாலின் ஆய்வுகளை சிற்றிதழ்சூழலில் தொடர்ச்சியாக முன்வைத்து வந்தவர் என்று ஜி.எஸ்.ஆர் கிருஷ்ணனைச் சொல்லமாம். காலச்சுவடு முதல் காலகட்ட இதழ்களில் கிருஷ்ணன் தரம்பாலின் ஆய்வுகளை அறிமுகம் செய்து கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இன்று பி.பி.எஸ்.டி என்ற அமைப்பு தரம்பாலின் சிந்தனைகளை விரிவாக முன்னெடுத்து வருகிறது.  [Patriotic & People Oriented Science and Technology (PPST)] தரம்பாலை நான் 1985 ல் கோழிக்கோட்டில் சந்தித்து சில வரிகள் பேசி திருவிதாங்கூர் பிடாகை அமைப்பைப்பற்றிய தகவல்களை அளித்திருக்கிறேன்.ஓர் அரசியலமைப்பின் சேவைப்பிரிவுடன் இணைந்து தரம்பால் கோட்பாட்டாளர்களுடன் ஒத்துழைத்து சில ஆய்வுமுறைகளை சோதனைசெய்ததும் உண்டு

திருவிதாங்கூர் பகுதி மன்னராட்சிக்குக் கீழே இருந்தமையால் பிடாகை போன்ற அமைப்பு சுதந்திரம் வரை நீடித்தது. ஆனால் தமிழகத்தில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 1890 களிலேயே குடிமராமத்து நசிவடைய ஆரம்பித்தது.  மைய வரிவிதிப்பு முறையை அமல்படுத்திய ஆங்கில அரசு நீர்நிலைகள், பாசனவழிகள், பொதுச்சாலைகள் ,பொதுநிலங்கள் ஆகிய அனைத்தையும் கையகப்படுத்திக் கொண்டது. அவற்றை பராமரிப்பதற்கு என்று சொல்லி மக்களிடம் கடுமையான வரிகளை விதித்தது.

ஆனால் பராமரிக்கும்பொறுப்பை கிட்டத்தட்ட கைவிட்டுவிட்டது. சிவப்புநாடா நிர்வாக அமைப்பிடம் பொறுப்பு விடப்பட்டு வேலைகள் இழுத்தடிக்கப்பட்டன.சம்பந்தப்பட்ட ஒவ்வொரு பிரிட்டிஷ் அதிகாரியும் பொதுப்பணித்துறை வேலைகளில் ஊழல் செய்து பணம்பார்த்தார்கள். பிரிட்டிஷ் காலத்து நிர்வாக ஆவணங்களை ஆராய்ந்த டாக்டர் எம்.கங்காதரன் [கோழிக்கோடு பல்கலைகழகம்] அன்றிருந்த ஊழல்முறை என்பது இன்றுள்ள தணிக்கைகள் இதழ்களின் கண்காணிப்புகள் நீதிமன்ற வழிகாட்டுதல்கள் கூட இல்லாத கட்டற்ற சுரண்டலாக இருந்தது என ஆவணப்படுத்துகிறார். விளைவாக பிரிட்டிஷ் அரசு நேரடி அதிகாரத்தை ஏற்றுக்கொண்ட பகுதிகளில் பெரும்பாலான ஏரிகளும் பாசனவழிகளும் அழியவிடப்பட்டன.

பாரம்பரியமான இந்திய பாசனமுறைகள் மீது பிரிட்டிஷ் அரசு தொடுத்த இந்த தாக்குதலால்தான் அவை அழிந்து இந்திய வேளாண்மை முறை பேரழிவைச் சந்தித்தது. அதுவே இந்தியாவைத் தொடர்ச்சியான பெரும் பஞ்சங்களை நோக்கித் தள்ளியது. இந்திய நிலப்பகுதியில் பொதுவாக வரட்சியும் பஞ்சங்களும் எப்போதும் உண்டு, அவை வரட்சியும் பஞ்சங்களும் வழக்கமாக வரக்கூடிய கட்ச் போன்ற வடமேற்கு நிலங்களிலும், மத்தியதக்காண நிலங்களிலும் மட்டுமே உருவாகும். அம்மக்கள் பஞ்சங்களை இயல்பாகவே சமாளிக்கக் கற்றிருப்பார்கள். பஞ்சம் தாக்காத பிற இந்திய நிலப்பகுதிகளுக்கு தற்காலிகமாகக் குடியேறுவதே அவர்களின் வழி. ராமநாதபுரம் மக்கள் தஞ்சைக்குக் குடியேறுவதுபோல. பஞ்சம் முடிந்ததும் திருப்பிவருவார்கள்.

ஆனால் வளமான வேளாண்நிலங்களில் பெரும்பஞ்சம் வந்தது பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில்தான். காரணம் கிராமத்து நிதிக்கையிருப்புகள் வரி என்றபேரில் சுரண்டப்பட்டன. அரசு நீர்நிர்வாகத்தை சீரழித்தது. இந்தியாவில் பஞ்சம் வந்த வருடங்களில் சராசரி மழையும் பெய்திருக்கிறது என்பது பதிவாகியிருக்கிறது. இந்த உண்மைகளை மறைப்பதற்காக இன்று இந்தியாவில் பஞ்சங்கள் உருவாவது வழக்கமான விஷயம்தான் என்றும் கட்ச் பகுதியிலும் தக்காணத்திலும் ஏராளமானவர்கள் இறந்த பஞ்சங்கள் நிகழ்ந்தன என்றும் சில வரலாற்றாசிரியர்கள் எழுத வைக்கப்படுகிறார்கள்.

ஆனால் இந்நிலங்களில் பயணம்செய்யும் எவரும் உணரக்கூடிய உண்மை ஒன்றுண்டு, இப்பகுதிகளில் மக்கள் பரவலாக்கம் இன்றும்கூட மிகமிகக் குறைவு. பெரும்பாலானவர்கள் இடம்பெயரும் தன்மை கொண்ட மக்கள். பஞ்சங்களின் போது மொத்தபிராந்தியங்களே இடம்பெயரும். முகலாயர் காலகட்டத்து ஆவணங்களில் ஊர்களில் மக்கள் இல்லை என்று சொல்லபப்ட்ட குறிப்புகளை வைத்து பல்லாயிரம் பேர் இறந்தார்கள் என்ற கதையை ஆய்வாளார் சிலர் இன்று உருவாக்குகிறார்கள். இந்தியாவில்  மக்கள் செறிந்துவாழும் கங்கை சமவெளியில் பஞ்சம் வந்தபோதுதான் லட்சக்கணக்கில் மக்கள் இறந்தார்கள்.

சுதந்திரத்துக்குப் பின்னர் பசுமைப்புரட்சி வந்தது. பெரும்பாசனத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டு இந்திய விளைநிலத்தின் அளவு பெருமளவு அதிகரிக்கப்பட்டது. ஆனால் வேளாண்மையை ஆதாரமாகக் கொண்ட இந்திய கிராமியப்பொருளியல் தொடர்ச்சியாக சரிவைச் சந்தித்து இன்று அழிவின் விளிம்பில் உள்ளது. நல்ல நோக்கங்கள் இருந்தாலும்கூட பிரிட்டிஷார் காலம் முதல் கொண்டுவரப்பட்ட மையநிர்வாக அமைப்புதான் இந்த அழிவுக்குக் காரணம். இன்று இந்திய வேளாண்மையைப் பற்றி ஆராய்ச்சிசெய்யும் அறிஞர்களில் பெரும்பாலானவர்கள் இதைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.

ஆக, நம் கண்முன் தெரிவது இரு வகையான சமூகக் கட்டமைப்புகள் ஒன்று இந்தியாவில் நெடுங்காலமாக இருந்து வந்த ஒன்று. வெற்றிகரமானதென வரலாற்றால் நிரூபிக்கப்பட்டது. தன்னாட்சி கொண்ட சிறிய அடிப்படை நிர்வாக அலகுகளால் ஆனது அது. இதற்கு மாற்றான அமைப்பு பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரிட்டிஷாரால் கொண்டுவரப்பட்டது. மையத்தால் முழுக்க முழுக்க கட்டுப்படுத்தப்படும் நிர்வாக அமைப்பு அது. சென்ற நூற்றியிருபது வருடங்களில் இந்திய யதார்த்ததுக்கு முற்றிலும் பொருந்தாதது,பேரழிவுகளை உருவாக்கக்கூடியது என ஐயம்திரிபற நிரூபிக்கப்பட்டது.

முதல்முறையை ஒட்டியதாக இருக்கிறது காந்தியின் கிராமசுயராஜ்யம் என்ற திட்டம். இரண்டாம் முறையை ஒட்டியதாக உள்ளது நேரு-அம்பேத்கார்-மகாலானோபிஸ் உருவாக்கிய இன்றைய ஆட்சிமுறை. இதில் எதை நாம் சரி என ஏற்றுக்கொள்வது? இந்த எளிமையான கேள்விக்கு எவருமே முதல்முறை என்றே பதில் சொல்ல வேண்டும். ஆனால் பெரும்பாலானவர்கள் சொல்வதில்லை. ஏனென்றால் முதல் முறை நமக்கு பழமையானதாக தெரிகிறது. நிலப்பிரபுத்துவம் சார்ந்ததாக விளக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது முறை நவீனமானதாகவும் முதலாளித்துவ -சோஷலிச அமைப்புக்கு உகந்ததாகவும் கூறப்பட்டிருக்கிறது. முதல் முறையில் இல்லாத ‘அறிவியல்தன்மை’ இரண்டாவது முறையில் உள்ளது என்று நம் மனதுக்குத் தோன்றுகிறது.

நம்முடைய கல்விமுறை அப்படி எண்ண நம்மைப் பயிற்றுவித்திருக்கிறது. ஆகவே காந்தியின் கிராமசுயராஜ்யம் குறித்த நம்முடைய ஐயங்கள் நடைமுறை யதார்த்தத்தை நாம் புரிந்துகொண்டிருப்பதனால் உருவாகின்றவை அல்ல. மாறாக நமது கல்விமுறை காரணமாக நாம் சிலவற்றை ஏற்கவும் சிலவற்றை நிராகரிக்கவும் பழகிவிட்டிருப்பதனால் ஏற்படுகின்றவை மட்டுமே. இந்த மாயையை மீறித்தான் நாம் காந்தியின் கிராமசுயராஜ்யம் குறித்த சிந்தனைகளுக்குள் செல்ல முடியும்.

காந்தியின் கிராமசுயராஜ்ய திட்டம் என்பது ஒரு தனிநபரின் பகற்கனவில் இருந்து உதித்தது அல்ல. காந்தி அப்படி நடைமுறைச்சாத்தியமில்லாமல் சிந்திப்பவரும் அல்ல. காந்தி இந்தியாவில் நேரடியாக பிரிட்டிஷ் ஆட்சிக்குக் கீழே வராத கத்தியவார் சம்ஸ்தானத்தில் பிறந்து வளர்ந்தவர் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். அங்கே அவர் காலகட்டத்திலும் அழியாமல் இருந்த கிராமநிர்வாக அமைப்பில் இருந்தே அவர் தன் முன்மாதிரிகளை எடுத்துக்கொண்டிருக்க வேண்டும். இதற்கு நேர் மாறாக யாரெல்லாம் அவரை எதிர்த்தார்களோ அவர்களனைவருமே பெருநகரங்களில் பிறந்து வளர்ந்தவர்கள். நேரு [அலஹாபாத்]  அம்பேத்கர் [மும்பை], மகாலானோபிஸ் [கல்கத்தா].

காந்தியின் கிராம சுயராஜ்யமுறை இன்று இந்தியாவில் ஏதோ ஒருவகையில் நீடிக்கிறது. அதன் கட்டமைப்பு முற்றாகவே சிதைந்துவிட்டது. ஆனால் மனநிலைகள் வாழ்கின்றன. இக்கட்டுரையின் தொடக்கத்தில் சொல்லப்பட்டது போல இன்றும் இந்தியாவின் நீதிநிர்வாகத்தில் தொண்ணூற்றொன்பது சதவீதம் இந்த கிராமப்பஞ்சாயத்து முறையால்தான் பேசித்தீர்க்கப்படுகிறது. ஊழலையே நீதியாகக் கொண்ட இந்திய நீதிமன்றங்களை நம்பி இருக்காமல் அன்றாடதளத்திலெயே தங்கள் சிக்கல்களைத் தீர்த்துக்கொள்ள இந்தப் பஞ்சாயத்துமுறை உதவுகிறது. குறிப்பாக வறிய நிலையில் இருக்கும் தலித் ,பழங்குடிச் சாதிகளில் அவர்களின் சாதிப்பஞ்சாயத்துக்கள் பெரும்பணியாற்றுகின்றன.

இந்தியாவின் பலபகுதிகளில் அரசிடம் விண்ணப்பம் செய்துசெய்து சோர்ந்துபோன மக்கள் தாங்களே குடிமராமத்துக்களில் ஈடுபடும் செய்திகள் வெளியாகின்றன. சென்ற ஐந்து வருடங்களில் தி இந்து நாளிதழ் அதைப்பற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட செய்திகளை அளித்துள்ளது.  ஆனால் குடிமராமத்து தொடர்ச்சியாகவும் வெற்றிகரமாகவும் நடப்பதில்லை. காரணம் அவற்றுக்கான கட்டமைப்பும் ஊர்க்கட்டுப்பாடும் இன்று இல்லை. அவை ஓர் எதிர்ப்பு வடிவமாகவே நிகழ்த்தப்படுகின்றன. ஆனால் அவை மட்டுமே உண்மையான வழி என்ற எண்ணம் இன்றும் மக்களிடம் இருக்கிறது. காரணம் அடித்தளத்தில் இன்றும் அவை பயனுள்ளவையாக, பிரச்சினைகளைத் தீர்ப்பவையாக உள்ளன.

உதாரணமாக, பிடாகை என்ற அமைப்பு இன்றும்  ஒரு குறைந்தபட்ச வடிவில் குமரிமாவட்டத்தில்  உள்ளது. அதன் நிர்வாக அதிகாரமும் நிதியாதாரமும் அரசால் பறிக்கப்பட்டுவிட்டது. ஆனால் அது ஒரு சமூகக் குழுமமாக வரப்புத்தகராறு, நீர்ப்பங்கீட்டுப் பூசல்கள் போன்றவற்றைப் பேசித்தீர்க்கிறது. திருமணங்கள் மரணங்கள் போன்றவற்றில் கிராமப்பங்கேற்பை உருவாக்குகிறது. கோயில் விழாக்களை ஊர்கூடிச்செய்வதற்கு தளம் அமைக்கிறது. சுருங்கச் சொன்னால் ஊர்கூடிச் செய்யும் எல்லா விஷயங்களும் இன்றும் இங்கே பிடாகை அமைப்பால்தான் செய்யப்படுகின்றன.

உலகில் மிக அதிகமாக செயற்கைநீர்நிலைகள் கொண்ட நாடுகளில் ஒன்று இந்தியா. அத்தனைநீர்நிலைகளையும் உருவாக்கியது நம்மிடமிருந்த கிராமசுயராஜ்ய அமைப்பே. அந்த அமைப்பு அழிந்தபின் அவற்றை பராமரிக்கவே முடியாமல் நம் நாடு திணறுகிறது. ஏனென்றால் சுதந்திரத்தை ஒட்டி கிராமநிர்வாக அமைப்பின் பொருளியல் அதிகாரம் பறிக்கப்பட்டு அது செயலிழக்கவைக்கப்பட்டது. இன்றைய கிராமநிர்வாகம் என்பது அரசு இயந்திரத்தின் கீழ்நிலை அலகாக உள்ளது. ஒரு அடிமட்ட அரசதிகாரியின் அலுவலகமே இன்றைய கிராமநிர்வாக மையமாகும். அதில் பொதுமக்கள் பங்கேற்பே இல்லை. அவர் அந்த மக்களிடம் லஞ்சம் வாங்கும், அவர்களை அடக்கியாளும் ஓர் அதிகாரிதான்.

ஆகவே ஊர்கூடி ஒன்றைச்செய்வதற்கே நம் மக்களுக்கு பழக்கமில்லை.  அதற்கான மனநிலைகளும் தார்மீகக் கடமைகளும் கட்டுப்பாடுகளும் அழிந்துவிட்ட. ஆனால் எங்கெல்லாம் ஒரு தார்மீக சக்தி உள்ளே புகுந்து அந்த அமைப்பை வெற்றிகரமாக மீண்டும் உருவாக்குகிறதோ அங்கெல்லாம் மகத்தான வெற்றிக்கதைகள் சாத்தியமாகியிருக்கின்றன. சமகால இந்தியாவிலேயே சிறந்த உதாரணங்கள் பல உள்ளன. பாபுராம் ஹஸாரே [அண்ணா] மகாராஷ்டிரத்தில்  ராலேகான் சித்தி என்ற ஊரில் செய்த புரட்சியைக் குறிப்பிடலாம்

ராலேக்ஜான் சித்தி ஊருக்கு வரும்போது அந்த ஊரின் சமூகமையமாக இருந்த ஆலயத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டுகொண்டிருந்தது.  ஊர் எப்படி இருந்தது என்பதற்கு இதைவிட சிறந்த ஆதாரம் தேவையில்லை. பொருளியல் ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் அந்தக் கிராமம் பெரும் சரிவில் இருந்தது

மெல்ல மெல்ல அந்தக்கிராமத்தை மீட்டெடுத்தார். முதலில் ஊருக்கு ஒரு சுயநிர்வாக அமைப்பை அவர் உருவாக்கினார். அதை அரசாங்கத்துக்குச் சம்பந்தமில்லாத ஒன்றாக கட்டமைத்தார். அதைக்கொண்டு கிராமத்திற்குத் தேவையான விஷயங்களை அந்த மக்களே செய்துகொள்ள வழியமைத்தார்.

. அண்ணா ஹஸாரே

அண்ணா ஹஸாரே ராலேகான் சித்தியில் செய்த நீர் நிர்வாகம் மிக விரிவாக ஆவணப்படுத்தப்பட்டு ஆராயப்பட்டிருக்கிறது. அவர் புதிய தொழில்நுட்பம் எதையும் கொண்டு வரவில்லை. அந்த நிலப்பகுதிகளில் பலகாலமாக இருந்துவந்த முறைதான் அது. நூறுவருடம் முன்பு வெள்ளைய ஆட்சி பாசனத்தையும் பொதுநிலத்தையும் கையிலெடுத்தபோது அந்தமுறை கைவிடப்பட்டு இந்தியாவெங்கும்  அவர்கள் அமலாக்கிய ஒரேவகையான நீர்நிர்வாக முறை கொண்டுவரப்பட்டது. அது அந்தக்கிராமத்தை அரைப்பாலைநிலமாக ஆக்கியது.

தேவையான அளவுக்கு மழைபெய்யக்கூடிய நிலம் அது. ஆனால் மழை ஒரேசமயம் கொட்டித்தீர்த்துவிடும். அந்த நீரைச் சேர்த்து வைக்க ஆழமில்லாத நூற்றுக்கணக்கான குட்டைகளை உருவாக்கி வைப்பது பழங்கால முறை. தமிழ்நாட்டில் திருப்பத்தூர் தருமபுரி வேலூர் செங்கற்பட்டு பகுதிகளில் இருந்து இன்று அழிக்கப்பட்டுவிட்ட அதே முறை. வெள்ளையர் ஆட்சியில் இந்தக்குட்டைகள் பராமரிப்பில்லாமல் விடப்பட்டன. அண்ணா ஹஸாரே அக்குட்டைகளை மீட்டெடுத்தார். புதிதாக நிறைய குட்டைகளை உருவாக்கினார். சில வருடங்களில் நிலத்தடி நீர்மட்டம் பெருகியது. திட்டமிட்டு அளவோடு நிலத்தடி நீரைப் பயன்படுத்தி வேளாண்மைசெய்ய ஆரம்பித்தார்கள். கிராமத்தின் பசுமை மீண்டு வந்தது

விவசாயத்துடன் இணைத்தே பசு வளார்ப்பு கோழி வளர்ப்பு போன்றவற்றை செய்தார் அண்ணா ஹஸாரே. மெல்ல மெல்ல அக்கிராமம் அதன் முக அடையாளமாக விளங்கிய வறுமையில் இருந்து மேலே வந்தது. அங்கே நிலவிய கடுமையான குடிப்பழக்கத்தையும் தீண்டாமையையும் ஊர்ப்பஞ்சாயத்துக்கள் மூலம் இல்லாமலாக்கினார். ராலேகான் சித்தி ஒரு கிராமத்தில் என்ன சாத்தியம் என்பதற்கான உதாரணமாக இன்று சுட்டிக்காட்டப்படுகிறது. 1997ல் நான் ராலேகான் சித்திக்குச் சென்று அந்த ஊர் வரண்ட சூழலில் ஒரு பசுமைத்தீவாக இருப்பதைக் கண்டிருக்கிறேன்.

அண்ணா ஹசாரே செய்தது மிக எளிமையான விஷயம்தான். ஒரு கிராமத்தின் பிரச்சினைகள் அந்தக்கிராமத்திற்கே உரியவை. அவற்றுக்கான தீர்வுகளையும் அந்தக் கிராம இயல்பிலேயே உருவாக்கிக் கொள்ள முடியும். அந்தந்தக் கிராமங்களில் அதற்கான முடிவெடுக்கும் அமைப்பும் செயல்படுத்தும் வசதியும் இருந்தால் மட்டுமே அப்பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். அவர் கிராமப் பஞ்சாயத்தை உயிர்ப்பிப்பதன் மூலம் அதைச் செய்தார். அதன்மூலம் அந்தமக்கள் மறந்துவிட்டிருந்த ஒரு முறையை திருப்பிக்கொண்டுவந்தார்.

ஆனால் அங்கே இருந்த கிராமப் பஞ்சாயத்தை முழுக்கவே அழித்துவிட்டு அங்கே அரசாங்கத்தின் ஓர் அலகை நிறுவிய நம் இந்திய மைய அரசு அக்கிராமத்தின் எல்லா தனிச்செயல்பாடுகளையும் தடைசெய்கிறது என்பதை நாம் நினைவுகொள்ளவேண்டும். அந்த அதிகார அமைப்பின் ஊழல், பொறுப்பின்மை, தாமதம் அனைத்துடனும் போராடியே அண்ணா ஹஸாரே தன் சாதனையைச் செய்யவேண்டியிருந்தது. ராலேகான் சித்தி தன் தேவைகள் அனைத்தையும் செய்துகொள்வதற்கான முழுச்செலவையும் வரியாக ஏற்கனவே அரசுக்குக் கொடுத்திவிட்டு மேலதிக நிதியாதாரத்தை உருவாக்கி தன் தேவைகளைச் செய்யவேண்டியிருந்தது!

இந்தியா முழுக்க அண்ணா ஹசாரே போன்று நூற்றுக்கணக்கான காந்தியவாதிகளையும் சேவை அமைப்புகளையும் சுட்டிக்காட்ட முடியும். அவர்கள் செய்து காட்டிய கிராமியச் சாதனைகள் நம் கண்ணெதிரே கிராமசுயராஜ்யம் எந்த அளவுக்குச் சாத்தியம் என்பதற்கான உதாரணங்களாக இருந்துகொண்டிருக்கின்றன.

[மேலும்]

http://www.kalachuvadu.com/issue-103/page60.asp

முந்தைய கட்டுரைமலேசியா ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம்,காடு,ரப்பர்,பரிணாமம்,பத்மவியூகம்:கடிதங்கள்