கல்வியும் பதவியும்

அன்பின் ஜெ..

ராஜீவ் காந்தி காலத்தில், கல்வித் துறை – மனித வள மேம்பாடு என மாற்றம் செய்யப் பட்டது – அதன் சாத்தியக் கூறுகள் கருதி.

அப்போதைய மனித வள மேம்பாட்டு மந்திரி – நரசிம்ம ராவ். பின்னர் பா.ஜா.பா காலத்தில் முரளி மனோஹர் ஜோஷி. (ஒரு காலத்தில் டாக்டர்.v.k.r.v rao – போன்ற பெரிய பொருளாதார மேதைகளும் இருந்த துறை)

கல்வித்துறையில் இன்றிருக்கும் சவால், அடிப்படைக் கல்வி மட்டுமல்ல – தரமான உயர் கல்வியும் கூட. அதை ஒரு அறிவு சார் தேடலாக மாற்றியமைப்பது..

காமாராஜர் போன்ற கல்வியறிவில்லாத மேதைகள் கல்விக்குப் பெரும் சேவைகள் செய்திருக்கிறார்கள். ஆனால், அவை அடிப்படைக் கல்விக் கட்டமைப்பில்.

ஸ்மிருதி இரானி

இரானிக்கு என்ன தகுதி, என்ற கேள்விக்கு, சோனியா காந்திக்கு என்ன தகுதி என்பது நிச்சயமான பதில் அல்ல. அப்படி ஒரு பதிலின் மூலம், அக்கட்சி, கல்வி பற்றிய தங்களின் புரிதலையே வெளிப்படுத்தியிருக்கிறது. சோனியா காந்தி இந்தியாவின் கல்வியமைச்சராக இருக்க வில்லை.

இதன் மூலம், இந்தியாவின் வருங்காலத்துக்கு பா.ஜா.பா கொடுக்கும் முக்கியத்துவம் தெரிகிறது. இது ஒரு பனியா பார்ட்டிதான் என்னும் எங்கள் மனச்சாய்வை மேலும் உறுதிப்படுத்துகிறது. இந்தியாவில் இது வரை உருவாகிய தத்துவங்களும் அறிவியல் கண்டுபிடிப்புகளுமே போதும் என்னும் நிலைப்பாடெனில், வேறு கேள்விகள் இல்லை.

பாலா

அச்சுதானந்தன்

அன்புள்ள பாலா,

சில விஷயங்களுக்கு ‘சர்வதேச’ அளவுகோல்கள் ஏதுமில்லை. இந்தியாவுக்கான சிறப்பான சில ‘பண்பாட்டு’ப் பின்னணியைக்கொண்டே இவற்றை நோக்கவேண்டும் என்பது என் எண்ணம்.

சமீபத்தில் ஒரு முக்கியமான கேரள மருத்துவரிடம் பேசநேர்ந்தது. சமூகத்தில் மிகப்பெரிய சேவை செய்துவருபவர். காந்தியவாதி. அவர் இன்றைய அலோபதி மருத்துவர்களைப்பற்றிச் சொன்னார். அவர்கள் மருத்துவத்தைச் சேவையாகச் செய்ய விரும்பவில்லை. அதன்மூலம் பொருளியல் லாபம் மற்றும் தொழிலில் பெயரும் வருமென்றால்கூட ஏழைகளிடம் சேவை செய்வதை தவிர்க்கவே முயல்கிறார்கள். ஆய்வுக்காகக்கூட அடித்தள மக்களிடையே செல்ல மறுக்கிறார்கள்

ஏனென்றால் அவர்கள் ஏழை எளிய மக்களை மனமார வெறுக்கிறார்கள். அருவருக்கிறார்கள்.அவர்களைத் தொட்டு சிகிழ்ச்சை செய்ய விரும்புவதில்லை. தங்களிடம் உயர்நடுத்தர வர்க்கத்தினர் வந்தால் போதுமென்பதே அவர்களின் எண்ணமாக உள்ளது. மிகப்பெரும்பான்மையான இளம் மருத்துவர்களின் மனநிலை அது

இ.கெ.நாயனார்

காரணம், இன்று ஆங்கில மருத்துவம் ஒரு பெருந்தொழில். அதற்காக இளமையிலேயே கடும் பயிற்சி எடுத்துக்கொண்டும் பெரும்பணச்செலவிலும் அப்படிப்பில் சேர்பவர்கள் பெரும்பாலும் உயர்குடியினர், உயர்நடுத்தர வர்க்கத்தினர்.அவர்களின் மனநிலை என்பது ஏழைகளுக்கு எதிரானது. ஏழைகளை அருவருப்பது ஆகவே அவர் பிஎம்எஸ், நர்ஸிங் போன்றவற்றை பயிலும் மாணவர்களையே பயன்படுத்துகிறார். அவர்களில் பலர் ஏழைப்பின்னணி கொண்டவர்கள்.

இந்திய உயர்வர்க்கமும் அதை நகல்செய்யும் நடுத்தர வர்க்கமும் தன்னை முற்றிலுமாக ஏழைகளிடமிருந்து விலக்கிக்கொள்கிறது. அவர்களைப் பார்க்காமலேயே வாழப்பழகிக்கொள்கிறது. நம் நடுத்தர -உயர்குடிக் குழந்தைகளுக்கு ஏழைகளின் வாழ்க்கையைப்பற்றி உண்மையிலேயே ஏதும் தெரியாது. விலங்குகள் அளவுக்குக்கூட அந்த மனிதர்கள் மேல் ஆர்வம் அவர்களுக்கில்லை. [சினிமாவில் பின்னூட்டத்தை அவதானித்து இதை கூர்ந்து புரிந்து வைத்திருக்கிறார்கள். அடித்தள மக்களின் வறுமை போன்றவற்றை சினிமாவில் காட்டக்கூடாது. டிக்கெட் எடுத்துப்பார்க்கும் நடுத்தரவர்க்கம் அதை விரும்பாது]

வாழப்பாடி ராமமூர்த்தி

இது ஓர் இந்திய மனநிலை என்றார் டாக்டர். இதற்கு நம் காலனியாதிக்கப்பின்னணியில் வேர்கள் உள்ளன. நம்மில் இரு வர்க்கத்தை வெள்ளையன் உருவாக்கினான். இங்கே எளிமையாக வாழக்கூடியவர்கள் ஒரு வர்க்கம். மானசீகமாக வெள்ளையர்களாக வாழக்கூடியவர்கள் இன்னொரு வர்க்கம். வீட்டிலும் பிள்ளைகளிடமும் ஆங்கிலம் பேசக்கூடியவர்கள். வெள்ளையனின் பண்பாட்டை, மனநிலைகளை, நம்பிக்கைகளை கடைப்பிடிப்பவர்கள். அவர்கள்தான் படித்தவர்கள். நாம் இங்கே படிப்பு என்பதே ஐரோப்பாவை படிப்பதைத்தான்.

முந்நூறாண்டுகளுக்கும் மேலாக இந்த மேல்தட்டு வர்க்கம் தன்னை இந்தையாவின் பெரும்பான்மையினரிடமிருந்து பிரித்துக்கொள்வதை, முற்றிலும் வேறு அடையாளத்தை உருவாக்கிக்கொள்வதை தன் இலக்காகக்கொண்டிருக்கிறது. அதற்கான பலவகையான மனநிலைகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. அடித்தளவர்க்கத்தை ‘அறியாமலேயே’ இருப்பதும் வெறுப்பதும் அருவருப்பதுதான் தான் பொதுவான வழக்கம். இங்கே பள்ளி கல்லூரிகளில் இருந்து கிராமங்களுக்கு கிராமத்தொடர்பு சேவை அல்லது கல்விக்காக மாணவர்களை அழைத்துச்செல்லும் பல ஆசிரியர்கள் இந்த மனநிலையை பெரும்பாலான மாணவர்க்ள் கொண்டிருப்பதைச் சொல்லியிருக்கிறார்கள்.

இந்த வர்க்கத்துக்குள் அறிவுஜீவிகளாக தங்களை உணர்பவர்கள் அந்த அடித்தள மக்களிடம் கருணையுடன் இருப்பதாகப் பாவனைசெய்வார்கள். அவர்களுக்காக ஆவேசமாகப் பேசுவார்கள். திட்டங்களை முன்வைப்பார்கள். சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் பாவனைசெய்வார்கள். ஆனால் நடைமுறையில் ஏதும்செய்யமாட்டார்கள், ஏனென்றால் அந்த மக்களுடன் ஐந்துநிமிடம் பேச அவர்களால் முடியாது.அவர்கள் சொல்வதை காதுகொடுக்க மனமிருக்காது. அவர்கள் ஏதாவது செய்தாலும் அது அபத்தமாகவே இருக்கும், ஏனென்றால் அந்த மக்களைப்பற்றி அவர்களுக்கு ஏதும் தெரியாது. ஒருபோதும் அவர்கள் தாங்கள் மேல் என்ற மனநிலையை விட்டுக்கொடுப்பதில்லை. தேரிலிருந்து இறங்குவதில்லை.

மூப்பனார்

இந்தியாவின் அதிகாரிவர்க்கம் பெரும்பாலும் இந்த ‘சாகிப்’களால் ஆனது.டெல்லியில் ஒரு பத்துநாள் இண்டியா இண்டர்நாஷனல் செண்டரில் தங்கினாலேபோதும் இவர்கள் யாரென்று புரிந்துகொள்ளலாம். உயர்கலைகள்,நாட்டார்கலைகள், இலக்கியங்கள், வரலாறு, பண்பாடு, ஆன்மீகம்,சூழியல், மானுட உரிமைகள், சர்வதேச உறவுகள் எல்லாமே பேசப்படும்.அனைத்துச் சமகால பிரச்சினைகளையும் மிகத்திறமையாகப்பேச ஆளிருக்கும் — தங்கத் தேரில் இருந்தபடி. ஆம், ‘உயர்ந்த’ உச்சரிப்புள்ள ஆங்கிலத்தில்தான். [நான் சந்தித்த சாகிப்களும் மேம்சாப்களும் நினைவிலெழுந்து பீதி கிளப்புகிறார்கள். ஒருவர் நாவல் எழுதுவதைப்பற்றி என்னிடம் மூன்றுமணிநேரம் பேசினார்.தாக்கரேயின் நான்கு நாவல்களை அவர் வாசித்திருந்தார் என்றார்]

இவர்கள் ஒரே தரப்புதான், ஒரே கட்சிதான். ஜஸ்வந்த் சிங்குக்கும், திக்விஜய் சிங்குக்கும், சீதாராம் யெச்சூரிக்கும்,ஜெய்ராம் ரமேஷும் ஒரே பண்பாடுதான். பழைய பிரிஜேஷ் மிஸ்ராவில் இருந்து இன்றைய மாண்டக் சிங் அலுவாலியா வரை அவர்களுக்குள்தான் அடக்கம். ராஜ்தீப் சர்தேசாயும் பர்கா தத்தும் அவர்களின் வர்க்கம். நீரா ராடியாவும் அவர்கள் வர்க்கம்தான்.ஒரே முகம். ஒரே உடைகள். ஒரே ஆங்கில உச்சரிப்பு. ஒரே பண்ணைவீட்டுப்பார்ட்டிகளில் இவர்களை ஒரே மது நிறைந்த கோப்பைகளுடன் பார்க்கலாம், நான் பார்த்திருக்கிறேன்.

சுப்ரமணியம் சுவாமி

இந்த வர்க்கம்தான் ஆங்கிலத்தில் அனைத்துப்பிரச்சினைகளையும் அலசி ஆலோசனைகள் சொல்லி கட்டுரைகளை எழுதுகிறது. அதிகாரி வர்க்கமாக அமைந்து அரசை உண்மையில் நடத்துகிறது.கொள்கைகளை வகுக்கிறது.நிதிகளைக் கையாள்கிறது. இங்கே பெரும்பாலும் எல்லாமே இவர்கள்தான். முந்நூறாண்டுக்காலம் ஊழலாலும் ஒழுக்கமீறலாலும் ஆன்மா அழுகிய இவ்வர்க்கத்துக்கு நாம் கப்பம் கட்டிக்கொண்டிருக்கிறோம்.வெள்ளையனால் உருவாக்கப்பட்டு இந்தியாமேல் சுமத்தப்பட்ட இவ்வர்க்கத்தை சுதந்திரம் வந்தபின் அகற்றவேண்டுமென காந்தி விரும்பினார். மீண்டும் மீண்டும் அதை எழுதினார். ஆனால் நேரு அவ்வர்க்கத்திடம் சரணடைந்தார். ஏனென்றால் உள்ளூர அவர் அந்த வர்க்கத்தைச் சேர்ந்தவர்.

இந்த வர்க்கத்தைச்சேர்ந்த ‘படித்த’ ஒருவரை விட எந்தப்படிப்பும் இல்லாமல் நேரடி அரசியலில் இருந்து வரும் ஒருவர் எவ்வளவோ மேலானவர் என்பதே என் எண்ணம். மேலும் மேலும் உறுதிப்பட்டுக்கொண்டே வரும் எண்ணம் இது. இந்தியாவில் இதுவரை வந்த எந்த அமைச்சரும் மெத்தப்படித்த மேதாவிகளான மணிசங்கர் அய்யரையும் சசி தரூரையும் விட மேலானவர்களே. அறவுணர்விலும் உண்மையான நோக்கங்களிலும் செயல்பாடுகளிலும்.

சசி தரூர்

இந்திய வணிகச் சூழலில் வெற்றிகளை அடைபவர்கள் கீழிருந்து நடைமுறைத்திறன்கள் வழியாக மேலேறி வந்தவர்கள். அவர்களுக்கு டை கட்டி சேவைசெய்யவே படித்தவர்கள் இங்கே தேவையாகிறார்கள். ஏறத்தாழ அதையே அரசியலிலும் சொல்லலாம். நடைமுறை அரசியல் வழியாக, மக்களிடமிருந்து வரும் அரசியல்வாதிகளே எதையாவது உண்மையில் செய்யமுடியும். படித்தவர்களுக்கு அடிப்படைகளையெ புரியவைக்க முடியாது. நடைமுறையில் இருந்து எழுந்து வந்த அரசியல்வாதிகள் இன்னும் பெரிய அளவில் உருவாகி வந்தாலொழிய , இந்த அதிகாரவர்க்கத்தை அவர்கள் சற்றேனும் வென்றால் ஒழிய நமக்கு மீட்பில்லை.

ஒரு சாமானியன் இந்திய அரசியல்வாதிகளில், நிர்வாகத்தில் இங்குள்ள மெத்தப்படித்தவர்கள் என்னதான் செய்தார்கள் என்று கேட்டால் அவர்கள் தலைகுனியத்தான் வேண்டும். பெரும்படிப்புப் பின்புலத்துடன் வந்த மிகப்பெரும்பாலானவர்கள் அடிப்படை அறம்கூட இல்லா அயோக்கியர்கள். இந்த நாட்டின் கோடானுகோடி ஏழைகள் மேல் இளக்காரமும் வெறுப்பும் கொண்டவர்கள். இந்த சிக்கலான தேசத்தின் உண்மையை நடைமுறையில் இருந்து புரிந்துகொள்ளாத வெறும் ஏட்டுச்சுரைக்காய்கள்.அதேசமயம் உயர்குடி ஆணவமும் எல்லாமறிந்த மேட்டிமைத்தனமும் கொண்டவர்கள்.

மணிசங்கர் அய்யர்

தொடர்ந்து இத்தகைய படித்த அயோக்கியர்களை , மடையர்களை உயரதிகாரிகளாகக் கண்டுகொண்டே இருந்த ஒரு பின்புலம் எனக்குண்டு.ஆகவே, படித்தவர்கள் வரவேண்டும் என்ற அந்த பிலாக்காணத்தை தன்னை படித்தவன் என நம்பிக்கொள்ளும் உயர்குடியினனின் மேட்டிமைத்தனம் என்றோ அந்த உயர்குடியினனை நகல்செய்து வாழும் நடுத்தரவர்க்க படித்தவனின் தா்ழ்வுணர்ச்சி என்றோ மட்டும்தான் புரிந்துகொள்வேன்.

அதாவது ஸ்மிருதி இரானிக்குப் பதில் அந்த பதவியை சசி தரூர் வகித்தால் என்ன லட்சணத்தில் இருக்கும் என்ற கோணத்திலேயே நான் யோசிப்பேன். கேரளமுதல்வராக பிரகாஷ் காரத்தும், தமிழக முதல்வராக சுப்ரமணியம் சுவாமியும் பதவிவகிக்கும் அளவுக்கு விதிக்கு நம் மீது காழ்ப்பிருந்தால் நாம் என்ன ஆவோம்?

பிரகாஷ் காரத்

நான் குறைவாகவே அரசியல்வாதிகளுடன் பழகியிருக்கிறேன். திறமையானவர்கள், உண்மையான நல்ல நோக்கம் கொண்டவர்கள் என நான் அறிந்த அனைவருமே பெரிய படிப்பு படிக்காதவர்கள். மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி, ஜே.ஹேமச்சந்திரன் மூவரையும் தமிழகத்தில் உதாரணமாகச் சொல்வேன். அவர்கள் அறிந்த தமிழக யதார்த்தம் எந்த படித்த ஆசாமிக்கும் தெரிந்திருக்காது. ‘சும்மா கெட, சொல்றத செய்’ என்று அளவுக்கே அவர்களால் நமது படித்தமேதாவிகளான அதிகாரிகளிடம் பேசமுடியும். இ.கே.நாயனார், அச்சுதானந்தன், உம்மன் சாண்டி மூவரையுமே அப்படித்தான் சொல்வேன்.

ஸ்மிருதி இரானி வல்லவர் , தகுதியானவர் என நான் நினைக்கவில்லை.அவர் இன்னும் எதையும் நிரூபிக்கவில்லை. தகுதிகளை நம்முடைய கல்லூரிகள் அளிக்கும் பட்டங்களை வைத்து மதிப்பிடும் நம்முடைய அசட்டுத்தனத்தை அல்லது அயோக்கியத்தனத்தை மட்டுமே சுட்டிக்காட்டினேன்.

மற்றபடி அமைச்சர்பதவிகள் அளிக்கப்படுவதில் உண்மையில் செயல்படுவது நாம் சரியாக்ப் புரிந்துகொள்ளமுடியாத பலவகையான உள்ளரசியல்கள். முக்கியமான ஒரு துறையை வலுவற்ற ஒருவருக்கு அளிப்பது அதில் முக்கியமானது, அது பெரும்பாலும் பிரதமர் அல்லது முதல்வர் கையிலேயே இருக்கும் என்பது பொருள்.

ஜெ

முந்தைய கட்டுரைஅனல் காற்று எழும் காமம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 19