இரண்டு பெண் எழுத்தாளர்கள்

திலீப்குமாரிடம் இன்று பேசிக்கொண்டிருந்தேன். திலீப் தமிழின் முக்கியமான 85 கதைகளைத் திரட்டி ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒரு தொகுப்பு கொண்டுவரும் முயற்சியில் இருக்கிறார். அதற்கான ஆய்வுகளில் ஈடுபட்டிருக்கும்போது இரு முக்கியமான படைப்பாளிகளை கண்டெடுத்ததாகச் சொன்னார். இருவரும் தமிழ் இலக்கியத்தின் மிகத்தொடக்க காலத்தில் எழுதியவர்கள். முன்னோடிகள். ஆனால் எந்த இலக்கியநூலிலும் அவர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை.

அம்மணி அம்மாள் 1913-இல் அக்காலத்து மாதஇதழ் ஒன்றில் சில சிறுகதைகளை எழுதியிருக்கிறார். வடிவம் மொழி ஆகியவற்றைக்கொண்டு பார்த்தால் அவர்தான் தமிழின் முதல் சிறுகதையாசிரியர் என்று சொல்லவேண்டும் என்பது திலீபின் கருத்து. இதுவரை 1917-இல் வ.வெ.சு.அய்யர் புதுச்சேரியில் இருந்து அவரது கம்பநிலையம் என்னும் பதிப்பகம் வாயிலாக வெளியிட்ட மங்கையர்க்கரசியின் காதல் என்னும் தொகுதியில் உள்ள குளத்தங்கரை அரசமரம் என்னும் கதையே முதல் தமிழ்ச்சிறுகதை என்ற வரலாறே நம்மிடம் உள்ளது.

அதேபோல 1920-இல் விசாலாட்சி அம்மாள் என்ற படைப்பாளி எழுதிய சிறுகதை ‘மூன்றில் எது?’ வடிவ அளவில் முக்கியமான ஒரு முன்னுதாரணம் என திலீப் கருதுகிறார். சிறுகதைக்குரிய அன்றாடத்தன்மை, நேரடிச்சித்தரிப்பு முதலியவைகொண்ட நல்ல கதை என்றார்.

இரு கதைகளையும் நான் வாசித்ததில்லை. அப்படைப்பாளிகளின் பெயர்களையும் இப்போதுதான் கேள்விப்படுகிறேன். திலீப் அப்படைப்பாளிகளைப்பற்றிய தகவல்களுக்காக தமிழகத்தின் முக்கியமான அனைத்து நூலகங்களிலும் தேடியிருக்கிறார். எங்கும் சிறியகுறிப்புகூட இதுவரை கிடைக்கவில்லை என்றார். தனிப்பட்ட முறையில் இதைப்பற்றி ஆய்வுசெய்பவர்கள், இதழ்சேகரிப்பாளர்கள் உதவினால்தான் உண்டு.

இவ்விரு படைப்பாளிகளைப்பற்றியும் தகவல் தெரிந்தவர்கள் தனக்குத்தெரிவிக்கவேண்டும் என்று ஒரு கோரிக்கையை திலீப் முன்வைத்தார். அவரது தொடர்பு மின்னஞ்சல் [email protected].

முந்தைய கட்டுரைவண்ணக்கடல் – குமரியும் புகாரும்
அடுத்த கட்டுரைஅவி