பெண்களின் எழுத்து…

அன்புள்ள ஜெ,

பெண்களின் சாதனைகளை நீங்கள் ஏற்க மறுக்கிறீர்கள் என்று இங்கே பலபேர் சொல்கிறார்கள். பெண்கள் வெற்றிபெறுவதெல்லாம் பாலியல் அடையாளம் மூலம் பெறும் வெற்றி மட்டும் என்று சொல்கிறீர்கள் என்று சொல்கிறார்கள். நீங்கள் உங்கள் கட்டுரையில் எழுதியிருந்தவற்றை எந்த அளவுக்கு புரிந்துகொண்டார்கள் என்று தெரியவில்லை. தங்களை பெண்ணிய ஆதரவாளர்கள் என்று காட்டிக்கொள்ள இது ஒரு சந்தர்ப்பம். அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். பெண்கள் எழுதவே வரக்கூடாது என்று சொல்கிறீர்கள் என்றுகூட சிலர் எழுதியதை வாசித்தேன். நீங்கள் சொன்னதென்ன என்பதை வழக்கம்போல நீங்கள்தான் விளக்கவேண்டும்.

சிவா

பிரேமா காரந்த்

அன்புள்ள சிவா,

வழக்கம்போல. எந்த ஒருவிஷயத்திலும் ஒரு பொதுவான ‘முற்போக்கு, மனிதாபிமான’ நிலைபாட்டை எடுத்துவிட்டு அதீத எம்பிக்குதித்தல்களை நிகழ்த்துவதுதான் நம்முடைய மரபாக மாறிவிட்டிருக்கிறது. புரிந்துகொள்ளும் முயற்சியோ அதற்கான கூரோ பெரும்பாலும் காணக்கிடைப்பதில்லை.

அந்தக்கட்டுரையிலேயே சாரமான படைப்புக்களை எழுதிய பெண்களைக் குறிப்பிட்டு பாராட்டியிருக்கிறேன். முக்கியமான படைப்புக்களை எழுதிய அனைத்துப்பெண்களின் ஆக்கங்களையும் அவை வெளிவந்த காலத்திலேயே சுட்டிக்காட்டி பிறருக்கு அறிமுகம் செய்திருக்கிறேன். சொல்லப்போனால் பலரது படைப்புக்களைப் பற்றி நான் மட்டுமே எழுதியிருக்கிறேன்.

கமலா தாஸ்

என்னுடைய கேள்வி இச்சூழலில் இருந்துகொண்டிருப்பது. நேற்று ஒருவர் கூப்பிட்டார். ‘பொம்புளைங்க ஒண்ணுமே எழுதலைன்னு எப்டி சார் சொல்லலாம்?’ என்றார். ‘பொம்புளைங்க எழுதலைன்னு எப்ப சொன்னேன்?’ என்றேன். ‘அப்டீங்களா?’ என்றார். ‘அந்தப்பட்டியலிலேயே நல்லா எழுதின பெண்களை தனியா எடுத்துச் சொல்லியிருக்கேன்ல?’ என்றேன். ‘ஓகோ’ என்றார்.

‘சரி, அந்தப்பட்டியலிலே இருக்கிற எத்தனை ஆண் எழுத்தாளர்களை உங்களுக்குத் தெரியும்?’ என்றேன் ஆழ்ந்த மௌனம். ‘சொல்லுங்க’ என்றேன். ‘யாரையுமே கேள்விப்பட்டதில்ல. சிலரோட பேர மட்டும் எங்கியோ படிச்சமாதிரி ஞாபகம்’ என்றார்.

‘பொம்புளைங்கள?’ என்றேன். ‘ஒண்ணுரெண்டுபேரத்தவிர மிச்சபேரெல்லாம் தெரிஞ்சவுங்க’ என்றார். ‘எப்படி?’ என்றேன். அவரால் பதில்சொல்லமுடியவில்லை. நான் சொன்னேன் ‘நம்ம வார இதழ்களிலே அவங்களோட பேட்டிகளும் படங்களும் பலதடவ வந்திருக்கு. திரும்பத்திரும்ப வந்திருக்கு. அவங்களப்பத்தின செய்திகள் வந்திட்டே இருக்கு. செய்திகள அவங்களேகூட திறமையா உருவாக்கிக்கிறாங்க. அதான்’ அவர் ‘ஆமாசார்’ என்றார்.

‘சரி, இந்த ஆண் எழுத்தாளர்களில ஒருத்தர்கூடவா முக்கியமில்ல? ஒருத்தரோட பேட்டியோ படமோ எங்கியாவது வந்திருக்கா? பலரோட முகமே இந்த ஸ்டாம்பு சைஸ் போஸ்டரிலதானே வந்திருக்கு. ஏன்?’ அவரால் பதில் சொல்லமுடியவில்லை.

அமிர்தா பிரீதம்

நான் விளக்கவிரும்புவது அதைத்தான் என்றேன். திரும்பத்திரும்ப ஊடகங்களில் பெண்படைப்பாளிகளாக இடம்பெற்று வரும் சிலர் உண்மையில் சொல்லும்படி எதையாவது எழுதியிருக்கிறார்களா என்பதே என் கேள்வி. அவர்கள் இன்று அனைத்து ஊடகங்களிலும் இருக்கிறார்கள். கருத்தரங்குகளுக்காக தேசமெங்கும் செல்கிறார்கள். நாடுநாடாகப் பறக்கிறார்கள். உலகமெங்கும் சென்று தமிழை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். எல்லா அங்கீகாரங்களையும் அடைகிறார்கள்.

ஆனால் அவர்கள் என்ன எழுதியிருக்கிறார்கள் என்று கேட்டால் தர்மசங்கடமான மௌனம். பெரும்பாலும் வெறும் புலம்பல்கவிதைகள். கடன்வாங்கிய படிமங்களை உருட்டி வைத்த போலிக்கவிதைகளாக ஓரிரண்டு. சில பக்கங்களுக்கு பிழையில்லாமல் தமிழ் எழுதக்கூட தெரியாதவர்கள் பலர். உட்கார்ந்து பத்துபக்கம் தொடர்ந்து எழுதக்கூட பொறுமையற்றவர்கள்.

குர்அதுல்ஐன் ஹைதர்

இவர்களுக்குக் கிடைக்கும் முக்கியத்துவம் காத்திரமான படைப்புகளுடன் வரும் ஆண்களுக்கு இன்றில்லை என்பதில், அவர்களுக்கு ஊடக அறிமுகமோ அமைப்புகளின் ஆதரவோ, வாசக கவனிப்போ இல்லை என்பதில் ஒரு பெரிய அநீதி உள்ளது. அதைமட்டும்தான் சுட்டிக்காட்டுகிறேன்.

எழுதாத எழுத்தாளர் என்ற ஒரு புதியவகையையே இந்தப் பெண்கள் உருவாக்கிக்கொண்டிருக்கிறார்களோ என்று ஐயப்படுகிறேன். எழுத்தாளர்கள் என்கிறீர்களே என்னதான் எழுதினீர்கள் என்று ஒரு வாசகன் கேட்டால் அது என்ன பெண்கள் மீதான தாக்குதலா? என்ன கொடுமை!

இந்தப் பெண்களில் பலர் எழுதும் அசட்டுப் பெண்ணியப்படைப்புக்களை பெண்ணியமென்பதற்காக அங்கீகரிக்கவேண்டுமென்றால் இதேபோல மார்க்ஸியம் சூழியல் என எதையாவது வைத்து எழுதப்படும் எல்லா பிரச்சாரக்குப்பைகளையும் அங்கீகரிக்க வேண்டியதுதானே? என்ன இலக்கிய அழகியல் வேண்டிக்கிடக்கிறது?

இத்தனை பெண்படைப்பாளிகள் ஊடகங்களில் நின்றருள்கிறார்கள். ஆனால் பாரததேவி போன்ற அறியப்படாத முதிய கிராமத்துப்பெண்மணிதான் ‘நிலாக்கள் தூரதூரமாய்’ போன்ற ஒரு அழுத்தமான ஆக்கத்தை அளிக்கமுடிகிறது. [அதைப்பற்றி ஒரு குறிப்பையாவது இந்த பெண் எழுத்தாளர்கள் எங்காவது எழுதியிருக்கிறார்களா? குறைந்தபட்சம் வாசித்தாவது பார்த்திருக்கிறார்களா?] இந்த முரண்பாட்டைத்தான் நாம் கவனிக்கவேண்டும். உண்மையான படைப்பாளிக்கும் ஊடகபிம்பங்களுக்கும் உள்ள வேறுபாடு அது.

படைப்பு என்பது அர்ப்பணிப்பின் விளைவு. அதற்குக் கொடுக்கவேண்டிய கண்ணீரையும் தவத்தையும் கொடுத்துத்தான் ஆகவேண்டும். அதை அளிக்காத ஊடகபிம்பங்கள் உண்மையில் சிறந்த படைப்பாளிகளை மறைக்கும் திரைகள்.

பெண்களோ ஆண்களோ நான் எதிர்பார்ப்பது படைப்புகளை. என்னுடைய கற்பனையை விரிவாக்கி என்னை நிகர்வாழ்க்கை வாழச்செய்பவற்றை. என் நீதியுணர்ச்சியுடன் உரையாடி என் அழகுணர்வைத் தீட்டி என் வாழ்க்கைநோக்கை முன்னெடுக்கும் எழுத்துக்களை. அவற்றை எழுதிய அனைவரையும் எப்போதும் அங்கீகரித்துக்கொள்ள, மகிழ்வுடன் என் படைப்பாளியாக எடுத்துக்கொள்ள எப்போதும் தயங்கியதில்லை.

ஆஷாபூர்ணா தேவி

இதில் ஆணியப்பெருந்தன்மையுடன் நூறுபூக்கள் மலரட்டுமே என பெண்களின் எழுத்துக்களைப்பற்றிச் சொல்லும் ஏட்டு கருத்தையாக்கள் எவரும் எந்தப்பெண்ணும் எழுதியதை வாசித்திருக்கமாட்டார்கள். ஆகவே ஓடும் செம்பொன்னும் ஒப்பவே நோக்கும் பெரும்போக்காளர்களாக திகழ்கிறார்கள்.

என்னைப்போன்ற சிலர்தான் ஒருவர் எழுத்தாளர் என்றதுமே பாய்ந்து அவர்கள் எழுதியதை வாங்கிப்படிக்கிறோம். அதனால்தான் இலக்கிய எழுத்தாளர் அலட்டிய எழுத்தாளர் என்ற வேறுபாடு தெரிகிறது. அதைச் சொன்னதுமே ‘அய்யய்யோ பெண்களுக்கிடையே பேதமா?’ என கொதிப்படைகிறார்கள் கருத்தையாக்கள்.

எந்த ஒரு படைப்பையும் நான் அழகியல் நோக்கிலேயே அணுகுகிறேன். அது என் இயல்பு, என் பணி. உடன்பாடான கருத்துக்களோ அல்லது சமகாலக் கருத்துக்களோ எனக்கு ஒரு பொருட்டே அல்ல. நல்ல படைப்பு அதன் கருத்தியல் எல்லைகளை தேச, இன, மொழி, பால் எல்லைகளை தாண்டிச்சென்று வாசகனை பாதிக்கும். அந்த விதியின் அடிப்படையிலேயே உலகமெங்கும் இலக்கியமென்னும் இயக்கம் செயல்படுகிறது. அப்படி என்னை வந்தடையும் படைப்புகளையே நான் எதிர்நோக்குகிறேன்.

கிருத்திகா

ஆகவே நான் பெண்களில் எதிர்பார்க்கும் படைப்பாளி என் ஆதர்ச நாயகியான குர்அதுலைன் ஹைதர் போன்ற ஒருவர். நான் வழிபடும் ஆஷாபூர்ணா தேவியைப்போன்ற ஒருவர். அடுத்தகட்டத்தில் கமலாதாஸ் போல் பிரேமா காரந்த் போல அமிர்தா பிரீதம் போல கிருத்திகா போல ஒரு படைப்பாளி. குறைந்தது இன்று மலையாளத்தில் எழுதிவரும் கெ.ஆர்.மீரா போல ஒருவர்.

உண்மையிலேயே இவ்விஷயத்தில் விவாதிக்க நினைப்பவர்கள் தமிழில் கிருத்திகாவுக்குப்பின் பெண்கள் எழுதிய எந்த இலக்கியப்படைப்பில் அவர்கள் முக்கியமான வாசக அனுபவத்தை அடைந்தனர் என்று எண்ணிப்பார்க்கட்டும். பெண்கள் எழுதிய எந்தப்படைப்பு சென்ற முப்பதாண்டுகாலத்தில் தமிழில் பேசப்பட்டது என்பதை கணக்கிடட்டும்.

நான் சொல்வது அந்த வெறுமையைத்தான். ‘ஐயோ பாவம் பெண்கள், அவுங்களால அம்புட்டுத்தானே முடியும்’ என்ற ஆணிய நோக்கல்ல என்னுடையது. பெரிதினும் பெரிது கோரும் வாசக நோக்கு. இந்த விமர்சனத்தால் அப்படி ஓர் வெறுமை இருப்பதை வாசகன் உணர்வானென்றால், அவனுடைய எதிர்பார்ப்பு சிலரை எழுதவைக்குமென்றால் அதுவே இக்குறிப்பின் இலக்கு.

பாரததேவி

மற்றபடி தன் கலைத்திறனின்மையை பாதுகாக்க பெண்ணியத்தால் அல்லது வேறு ஏதாவது இயத்தால் வேலிபோட முயலும் விடைப்புகள் முறைப்புகளை எல்லாம் கேலிக்குரியவை என்றே எண்ணுவேன். மார்க்ஸியர்களும் அதைத்தான் செய்தார்கள். உன் படைப்பு தட்டையானது என்றால் இது உழைக்கும் வர்க்க இலக்கியம் நீ பூர்ஷுவா என்பார்கள்.

ஆக, பெண்களை எழுதவேண்டாமென்று சொல்லவில்லை. நேர்மாறாக ‘எழுதுங்கள், தயவுசெய்து எழுதுங்கள்!’ என்றுதான் சொல்கிறேன். ‘மகத்தான ஆக்கங்களுடன் எழுந்து வாருங்கள்!’ என்கிறேன்.

ஜெ

அக்னிநதி குர்அதுல்ஐன் ஹைதர் ,

பெண்களின் காதல்

கிருத்திகா

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 11
அடுத்த கட்டுரைகண்ணதாசன் விருது