அன்புள்ள ஜெயமோகன்,
வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் எழுதுகிறேன்.
ஏற்கனவே இரு முறை ‘பின் தொடரும் நிழலின் குரல்’ படித்திருக்கிறேன்.2009 க்கு பிறகு சென்ற வாரம் மீண்டும் படிக்க ஆரம்பித்திருக்கிறேன்.முன்பு படித்த பொழுது கதையின் வெறும் பகுதியாக தாண்டிச் சென்ற பல பக்கங்கள் இம்முறை பல புதிய வாசல்களை திறந்து காட்டின. ஓர் இலக்கியம் மாபெரும் இலக்கியமாக அடையாளப்படுதப்படுவது இந்த அம்சத்தால் தானே? விஷ்ணுபுரமும் காடும் என்றென்றும் என்னுடன் தொடர்ந்து பயணித்துக்கொண்டே இருக்கின்றன.
அறம், மதிப்பீடுகள், ஒழுக்கவியல் சார்ந்த கேள்விகள் பல்வேறு வடிவங்களில் என்னை தினமும் தொடர்ந்து சலனப்படுதிகொண்டே இருக்கின்றன.தனி மனித அறம் எப்படி அமைப்பு, தத்துவம், அரசியல் கோட்பாடு தளங்களில் இயல்பாக மீறப்படுகிறது? அந்த மீறுதல் எப்படி எவ்வாறெல்லாம் நியாயப்படுத்தபடுகிறது? அந்த நியாயப்படுத்தலின் தேவையை மனம் ஏங்குவதற்கான காரணம் என்ன என்று பல நூறு தொடர் கேள்விகள் . இந்த பல நூறு கேள்விகளையும் விவாதிக்கிற மாபெரும் படைப்பு ‘பின் தொடரும் நிழலின் குரல்’. இந்த விவாதங்கள் மூலம் நான் மேலும் கூர்மையாகியுள்ளேன்.
இக்கடிதத்தில், கெ.கெ.எம் பற்றியே பேச விரும்புகிறேன். குறிப்பாக மூன்று இடங்கள்.அருணாசலம் எசலியை சந்தித்துப் பேசும் பகுதியும், கெ.கெ.எம் அருணாசலத்திற்கு எழுதிய கடிதப் பகுதியும், நாகமையுடனான ஓரு உரையாடலும்.
இந்த மூன்று பகுதியையும் கண்ணீருடன் தான் தாண்டிச்செல்ல முடிந்தது.
இந்த படைப்பில் கெ.கெ.எம் இறந்த காலத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார். மாபெரும் கனவு. அந்த கனவிற்காக மாபெரும் தியாகம். திரும்பிப் போகமுடியாத நீண்ட பயணத்தின் ஒரு தருணத்தில் உள்ளுணர்வின் ஆழத்தில் ‘அவ்வளவுதான். எல்லாம் கனவாகவே முடிந்து விட்டது’ என்று தோன்றும்போது ஏற்படும் தனிமை மற்றும் வெறுமை அச்சம் தரக்கூடியதாக இருக்கிறது.கெ.கெ.எம் அந்த தருணத்தில் எப்படி இருந்திருப்பார் என்று நினைத்துப் பார்க்கையில் மனம் விம்மியது. வெடித்துவிடும் போன்றதோர் உணர்வு. மரணம் மட்டும் தான் அந்த தருணத்திலிருந்து விடுதலை தர வல்லது. அந்த உள்ளுணர்வு அறிந்த இடத்திலுருந்து மரணம் வரையிலான வாழ்வு பற்றி யோசிக்கையில், ‘அம்மா’ என்ற ஒற்றைச்சொல் தான் என் ஆதி ஆழ் மனதிலிருந்து எழுந்தது.
ஆனால் கெ.கெ.எம். மீண்டும் வாழத் தொடங்குகிறார். கெ.கெ.மாதவன் நாயராக. எசலி அவரை வீட்டுற்கு உள் கூப்பிடும் இடமும், தன மகனிடம் அவன் தந்தையை அறிமுகம் படுத்தும் இடமும் நெகிழ்வூட்டியது .
கெ.கெ.எம். திரும்பி சென்ற பாதை பல வாசல்களை திறக்கின்றன. ஏன் இந்த பாதை? எதனால் இந்தத் தேர்வு?அசை போட்டுக்கொண்டே இருக்கிறேன்.
அடுத்து, அருணாசலம் மற்றும் நாகம்மையுடனான ஓர் உரையாடல்.’ஒரு முரடன் குழந்தை ஒன்றை அடித்துக் கொல்லப் பார்த்தால் நீ என்ன செய்வாய்?’ என்ற வினாவிற்கு ‘ அவன் குரல்வளையை கடிப்பேன்’ என்ற நாகம்மையின் பதில் பிரமாதம். ‘அறம் என்றால் என்ன?’ என்ற அடிப்படை கேள்விக்கு தர்க்கம் மூலமாக ஒரு தத்துவாசிரியர் பல நூறு பக்க ஆய்வுக்கட்டுரை எழுதலாம். புனைவின் வழியாக ஒரு இலக்கியவாதி ஓரே ஒரு வரியில் அதற்கான பதிலை நாகம்மையின் மூலம் அளித்திருக்கிறார் இங்கு.
நன்றி ஜெயமோகன்.
அன்புடன்
பழநிவேல்
அன்புள்ள பழனிவேல்,
பதினாறாண்டுகளுக்கு முன் பின் தொடரும் நிழலின் குரல் நாவல் வெளிவந்தபோது நான் ஒரு கட்டுரையில் சொன்னேன், சொவியத் ருஷ்யா பழங்கதையாக ஆனபின்னர், கம்யூனிசத்தின் பிரச்சினைகள் கூட பழைய விவகாரங்களாக ஆனபிறகுதான் இந்நாவல் முழுமையாக வாசிக்கப்படும் என.அப்போது சோவியத் ருஷ்யாவின் வீழ்ச்சி பற்றி உணர்ச்சிகரமாக விவாதிக்கபப்ட்டுவந்தது. அதையொட்டித்தான் இந்நாவல் பேசப்பட்டது. நான் எண்ணியதுபோல சென்ற ஐந்தாண்டுகளில் இந்நாவலின் வாசகர்களும் விற்பனையும் அதிகரித்துள்ளது. இன்றுதான் சரியான வாசிப்புகளும் வருகின்றன.
இலட்சியவாதம் அதை முன்வைக்க்கும் கருத்தியல் அக்கருத்தியலின் விளைவான நிறுவனங்கள் ஆகியவற்றுடன் தனிமனிதன் கொள்ளும் உறவே நாவலின் கரு. என்னைப்பொறுத்தவரை ஓர் அதிகாலையில் கம்யூனிஸ்டுக்கட்சி அலுவலகத்துக்கு முதல்முறையாகச் செல்லும் வீரபத்ரபிள்ளையின் நினைவுக்குறிப்புதான் இந்நாவலின் தொடக்கப்புள்ளி. அங்கிருந்து கெ.கெ.எம் விலகும் இடம் வரை ஒரு நீண்ட பயணம் உள்ளது.
இலட்சியவாதத்தால் கைவிடப்பட்டவர்கள் பலவகை. அதன்பின் ஒரு கணமும் வாழமுடியாதவர்கள் உண்டு- வீரபத்ரபிள்ளை அப்படிப்பட்டவர். அதன்பின்னரும் கோட்பாட்டில் நம்பிக்கைகொண்டு நீடிபப்வர்கள் உண்டு- கெ.கெ.எம் போல. அதன்பின்னரும் அமைப்பிலேயே நீடிப்பவர்கள் உண்டு – ராமசுந்தரம் போல. இது எல்லா அமைப்புகளுக்கும் பொருந்தும். எல்லா காலத்திலும் நடந்துகொண்டும் இருக்கிறது
அத்தனைக்குப்பின்னரும் இலட்சியவாதம் மகத்தானதே என்றும், என்றும் அதுவாழவேண்டும் என்றும்தான் கிறிஸ்து வந்து சொல்கிறார்
ஜெ