பகுதி மூன்று : கலைதிகழ் காஞ்சி
[ 4 ]
எட்டு ரதங்களிலும் பன்னிரு கூண்டுவண்டிகளிலுமாக அஸ்தினபுரியில் இருந்து கிளம்பி கங்கைப்படித்துறையில் நான்கு படகுகளில் ஏறிக்கொண்டு வடக்காகச் சென்ற கானாடல்குழுவினர் பெரிய ஆலமரமொன்று வேர்களையும் விழுதுகளையும் நீரில் இறக்கி நின்றிருந்த வடமூலஸ்தலி என்னும் காட்டுத்துறையில் படகணையச்செய்தனர். படகுகள் வேர்வளைவுகளைச் சென்று தொடுவதற்குள்ளேயே பீமன் நீர் வரைதொங்கி ஆடிய வேர்களைப்பற்றிக்கொண்டு மேலேறிவிட்டான். அவனைக்கண்டு இளம்கௌரவர்களும் வேர்களைப்பற்றிக்கொண்டு ஆடினர். தருமன் மேலே நோக்கி “மந்தா வேண்டாம் விளையாட்டு. உன்னைக்கண்டு தம்பியரும் வருகிறார்கள்” என்று கூவ துரியோதனன் சிரித்துக்கொண்டு பார்த்திருந்தான். அர்ஜுனன் புன்னகையுடன் பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்க நகுலனும் சகதேவனும் கைகளைக் கொட்டியபடி “நானும் நானும்” என்று குதித்தனர்.
காவலர்தலைவனான நிஷதன் மரத்தில் நின்று கைகாட்ட படகுகள் மரத்தடியை நெருங்கியதும் சேவகர்கள் விழுதுகளைப்பற்றிக்கொண்டு இறங்கி வேர்களில் முதல் மூன்று படகுகளைக் கட்டி மற்ற படகுகளை ஒன்றுடன் ஒன்று சேர்த்துக்கட்டினர். பலகைகளைப் போட்டு உருவாக்கப்பட்ட பாதைகள் வழியாக தருமனும் துரியோதனனும் துச்சாதனனும் இறங்கினர். இளைய கௌரவர்கள் அனைவருமே விழுதுகளில் கூச்சலிட்டபடி ஆடிக்கொண்டிருந்தனர். இருவர் பிடிநழுவி நீரில் விழுந்து கைகால்களை அடித்துக்கொண்டு கரைநோக்கி நீந்தி வேர்களிலும் விழுதுநுனிகளிலும் பற்றிக்கொள்ள மேலே ஆடியவர்கள் உரக்கக் கூவிச்சிரித்தனர்.
பெரிய சமையற்பாத்திரங்களையும் உணவுப்பொருட்கள் அடங்கிய மூட்டைகளையும் கூடாரத்தோல்களையும் துணிகளையும் சுமந்தபடி சேவர்கள் பலகைகள் வழியாகச் சென்று காட்டுக்குள் இறங்கினர். “நிற்கவேண்டியதில்லை. அப்படியே காட்டுக்குள் செல்லுங்கள்” என்றான் நிஷதன். சௌனகர் இறங்கி தன்னுடைய ஆடையைச் சரிசெய்துகொண்டார். திருதராஷ்டிரர் சஞ்சயன் கையைப்பற்றி மெல்ல இறங்கி காட்டுக்குள் வந்து தலையைச் சரித்து புருவத்தைச் சுளித்து மேலே ஓடிக்கொண்டிருந்த காற்றின் ஓசையையும் பறவைக்குரல்களையும் கூர்ந்து கேட்டார். பின்னர் “கிரௌஞ்சங்கள்!” என்றார்.
“அடர்ந்த காடு அரசே. இவ்விடம் வடவிருக்ஷபதம் என்று அழைக்கப்படுகிறது. இங்கிருந்து செல்லும் காட்டுப்பாதை இனிய ஊற்றுக்களால் ஆன தசதாரை என்னும் ஏரிக்கரைக்குச் சென்று சேரும். அங்குதான் கானாடுதலுக்கான இடத்தை கண்டிருக்கிறார்கள்” என்றான் சஞ்சயன். “ஆம், என் இளமையில் நான் ஒருமுறை அங்கே சென்றிருக்கிறேன். பாறைகளுக்குள் ஒளிந்து ஒளிந்து ஓடும் சிற்றோடைகளினாலானது அவ்விடம் என்றனர் அன்று. நான் நீரோடையில் என் கால்களை நனையவிட்டு நீரின் ஓசையைக் கேட்டுக்கொண்டு அமர்ந்திருந்தேன். அங்கே நீர் விரைவுநடை கொண்ட பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தது” என்றார் திருதராஷ்டிரர்.
பின்பு பெருமூச்சுடன் “அன்று என் தம்பியும் உடனிருந்தான். அந்த ஓடைகளை வரைந்துகொண்டிருப்பதாகச் சொன்னான். நீரை வரையமுடியாது மூத்தவரே, நீரின் சில வண்ணங்களை வரையலாம். அதைவிட நீரில்லாத இடங்களை வரைந்து நீரை கண்ணுக்குக் காட்டலாம்… மகத்தானவை அனைத்தும் மீண்டும் மீண்டும் வரையப்படுகின்றன. நீர் தீ மேகம் வானம் கடல்… அவை இன்றுவரை வரையப்பட்டதுமில்லை என்று சொன்னான். இனியவன், மிகமிக மெல்லியவன். குருவியிறகு போல. கேதாரத்தின் ஒரு மெல்லிய கீழிறங்கல் போல” என்றார். “செல்வோம் அரசே… நாம் நடுப்பகலுக்குள் அங்கே சென்று சேர்ந்துவிடவேண்டுமென்று சொன்னார்கள்” என்றார் சௌனகர்.
அவர்கள் இருபக்கமும் பச்சைத்தழைகள் செறிந்த பாதை வழியாக வரிசையாகச் சென்றனர். முகப்பில் அம்பும் வில்லுமேந்திய இரு காவலர் செல்ல பின்னால் சுமை தூக்கிய சேவகர்கள் வந்தனர். பீமன் அவர்கள் அருகே கனத்த அடிமரங்களை ஊன்றி தலைக்குமேலெழுந்து பந்தலிட்டிருந்த மரங்களின் கிளைகள் வழியாகவே அவர்களுடன் வந்தான். கீழே சென்றவர்களின் மேலே வந்து கிளைகளை உலுக்கி மலர்களை உதிரச்செய்தபின் அந்தரத்தில் பாய்ந்து மறுகிளையை பற்றிக்கொண்டு முன்னால் சென்று மறைந்தான். தருமன் சிரித்து “அவன் இளமையில் வானரப்பால்குடித்தவன்” என்றான். “அவனுக்கு வால் உண்டா என்று தம்பி கேட்கிறான்” என்று இளையகௌரவனாகிய துச்சகன் சொன்னான்.
சித்ரனும் உபசித்ரனும் சித்ராக்ஷனும் பீமனைப்போலவே கிளைகள் தோறும் பற்றிக்கொண்டு சென்றார்கள். சோமகீர்த்தியும், அனூதரனும், திருதசந்தனும் கூச்சலிட்டபடி கீழே ஓடினார்கள். பிற கௌரவர்கள் சிரித்துக்கொண்டும் கூச்சலிட்டுக்கொண்டும் அவர்களைத் துரத்தினர். தருமன் “காட்டுவிலங்குகள் வரப்போகின்றன” என்றான். “இவர்களின் கூச்சலில் சிம்மங்களே ஓடிவிலகிவிடும்” என்றான் துச்சலன். அர்ஜுனன் கையைத் தூக்கி துச்சாதனனிடம் “அண்ணா என்னையும் கொண்டுசெல்… என்னையும் அங்கே கொண்டுசெல்” என்றான். துச்சாதனன் தன் தம்பி அரவிந்தனிடம் “தம்பி இளையவனைக் கொண்டுசெல்” என்றான். அரவிந்தன் அர்ஜுனனை தோளிலேற்றிக்கொண்டு அவர்களுக்குப்பின்னால் ஓட அர்ஜுனன் கைகளை வீசி “விரைக… குதிரையே விரைக… இன்னும் விரைக!” என்று கூவினான்.
“மைந்தரின் குரல்கள் பறவையொலி போல ஒலிக்கின்றன” என்றார் திருதராஷ்டிரர். “மூதன்னை சத்யவதி இருந்திருந்தால் இதைக்கேட்டு முலைகளும் வயிறும் சிலிர்த்திருப்பாள்.” அந்த உரையாடலை நீட்டிக்க சௌனகர் விரும்பவில்லை. ஆனால் திருதராஷ்டிரர் மீண்டும் “அன்னையரைப்பற்றிய செய்திகள் ஏதேனும் உள்ளனவா சௌனகரே?” என்றார். “அரசே, கான்மறையும் நோன்பை அவர்கள் மேற்கொண்டபின்னர் நாம் அவர்களை மறந்துவிடவேண்டுமென்பதே நெறி. அவர்களுக்குப்பின்னால் ஒற்றர்களை அனுப்பலாகாது” என்றார். “ஆம், அது ஓர் இறப்புதான்” என்றார் திருதராஷ்டிரர்.
மதியவெயில் மாபெரும் சிலந்திவலைச் சரடுகள் போல காட்டுக்குள் விரிந்து ஊன்றியிருந்தது. ஒளிபட்ட சருகுகள் பொன்னிறம் கொள்ள இலைகள் தளிரொளி கொண்டன. நெடுதொலைவுக்கு அப்பால் கௌரவர்கள் கூவிச்சிரிக்கும் ஒலி கேட்டது. “குரங்கை அவர்கள் பிடித்துவிட்டார்கள். சரடு கொண்டு கட்டிக்கொண்டிருக்கிறார்கள்” என்று கூவியபடி சித்ரகுண்டலனும், பிரமதனும் ஓடிவந்தனர். “என்ன ஆயிற்று?” என்றான் துச்சாதனன். “மேலே செல்லும்போது ஒரு மரக்கிளை முறிந்துவிட்டது. மூத்தவர் மண்ணில் விழுந்ததுமே முன்னால் ஓடிச்சென்ற அபயரும் திருதகர்மரும் அவர்மேல் பாய்ந்து அப்படியே பிடித்துக்கொண்டார்கள்” என்று மூச்சிரைக்க சித்ரகுண்டலன் சொன்னான். “குரங்கை கொற்றவைக்கு பலிகொடுக்கலாமா என்று சிந்திக்கிறார்கள்” என்றபின் திரும்பி ஓடினான்.
சற்று நேரத்தில் கைகளைத் தூக்கியபடி தனுர்த்தரனும் வீரபாகுவும் ஓடிவந்தனர். “குரங்கு தப்பிவிட்டது. தன்னைப் பிடித்திருந்த எண்மரையும் தூக்கி வீசிவிட்டு சுவீரியவானையும் அப்ரமாதியையும் தூக்கிக்கொண்டு ஒரு கொடியைப் பிடித்துக்கொண்டு மேலே சென்றுவிட்டது. அப்ரமாதி அதன் தோளில் பற்றிக்கொண்டு அழுதுகொண்டிருக்கிறான்.” சற்று நேரத்தில் அபயன் ஓடிவந்து “அப்ரமாதி கீழே விழுந்துவிட்டான். அவனுடைய உடலில் சுள்ளி குத்தி குருதி வடிகிறது” என்றான். சஞ்சயன் “வனம் கற்றறிந்தவரை ஞானிகளாக்குகிறது, குழந்தைகளை குரங்குகளாக்குகிறது அரசே” என்றான். திருதராஷ்டிரர் உரக்க நகைத்து “முன்பொருமுறை அது குரங்குகளை ஞானிகளாக்கியது கிட்கிந்தையில்” என்றார்.
தசதாரைக்குச் செல்வதற்கு முன்னரே நீரோசை கேட்கத்தொடங்கியது. குழந்தைகளின் கூச்சலும் சிரிப்பும் காட்டுக்குள் கேட்டுக்கொண்டிருந்தன. சேவகர்கள் தங்கள் சுமைகளை அங்கே இறக்கிவைத்து இளைப்பாறினர். சிலர் ஓடைகளில் இறங்கி நீரள்ளிக் குடித்து உடலெங்கும் அள்ளிவிட்டுக்கொண்டனர். சஞ்சயன் கைபற்றி வந்து நின்ற திருதராஷ்டிரர் அண்ணாந்து தலையைச் சுழற்றி முகம் விரியப் புன்னகைத்து “ஆம், அதே இடம். அதே ஒலிகள்… வியப்புதான். இருபதாண்டுகாலமாக அதே ஒலியுடன் இருந்துகொண்டிருக்கிறது இவ்விடம்” என்றான். “அதேதெய்வங்கள்தான் இன்னும் இங்கே வாழ்கின்றன அரசே” என்றான் சஞ்சயன். சௌனகர் “அரசே தாங்கள் இளைப்பாறுங்கள். இரவுக்குள் மரமாடங்கள் ஒருங்கிவிடும்” என்றார்.
சேவகர்கள் மூங்கில்களையும் மரக்கிளைகளையும் வெட்டிவந்து உயர்ந்த மரங்களின் கிளைக்கவைகளை இணைத்து அவற்றைக் கட்டி மேலே கூரையெழுப்பி மாடங்களைக் கட்டினார்கள். மாடத்தரைகளில் மரப்பட்டைகளைப் பரப்பி மேலே பச்சைத்தழைகளை விரித்தனர். காட்டுக்கொடிகளை வெட்டி நூலேணிகள் அமைத்ததும் திருதராஷ்டிரரும் சஞ்சயனும் பிறரும் அதன் வழியாக மேலேறிச்சென்றனர். துரியோதனன் காட்டுக்கொடிகளையும் புதர்களையும் பிரித்து பசுமைக்குள் மூழ்கிச் சென்றான். துச்சாதனன் அவனுடன் சென்றான்.
சேவகர்கள் கற்களை அடுக்கி அடுப்புகூட்டி அதன்மேல் பெரிய செம்புக்கலங்களை தூக்கி வைத்தனர். காட்டுவிறகுகளை அள்ளி வந்து வெட்டிக் குவித்தனர் நால்வர். சிக்கிக்கற்களை உரசி நெருப்பைப்பற்றவைத்ததும் புகை எழுந்து மேலே பரவியிருந்த பசுமையில் பரவியது. அங்கிருந்த பறவைகள் ஓசையிட்டபடி எழுந்து பறந்தன. சற்று நேரத்தில் சிரிப்பும் கூச்சலுமாக கௌரவர்கள் கீழே ஓடிவர மரக்கிளைகள் வழியாக பீமன் வந்து அங்கே குதித்தான். “அனுமனைப் பிடித்துவிட்டோம்! அனுமன் பிடிபட்டான்” என்று கூவியபடி கௌரவர்கள் ஒவ்வொருவராக வந்து பீமன் மேல் பாய்ந்து விழுந்து பற்றிக்கொண்டனர். பீமன் உடலெங்கும் கௌரவர்கள் கவ்விப்பிடித்திருக்க அனைவரையும் தூக்கிக்கொண்டு எழுந்து நின்றான். அவர்களின் சிரிக்கும் முகங்கள் அவன் உடலை மூடியிருந்தன.
“அனுமன் மனிதனாகிவிட்டான். இனி அவன் சமையல் செய்யப்போகிறான்!” என்று பீமன் சொன்னான். “ஆம் சமையல்!” என்று கௌரவர்கள் கூச்சலிட்டனர். “இப்போது நீங்கள் சிறிய குழுக்களாக பிரிந்துசென்று காய்கறிகளை கொண்டுவரப்போகிறீர்கள்” என்று பீமன் அவர்களுக்கு ஆணையிட்டான். “‘ஆம், காய்கறிகள்! கிழங்குகள்!” என்று சித்ரவர்மனும் தனுர்த்தரனும் கூவினர். பீமன் அவர்களை குழுக்களாக்கினான். “ஒருசெடியின் காய்களில் மூன்றில் ஒன்றை மட்டும் பறியுங்கள். ஒரு வேர்க்கிழங்கில் பாதியை மட்டும் அகழ்ந்தெடுங்கள்” என்றான்.
பீமன் காய்கறிகளை வெட்டிக்கொண்டிருந்தபோது காட்டுக்குள் இருந்து உரத்தகுரல்கள் கேட்டன. விசாலாட்ச கௌரவன் பறவைக்குரலில் கூவியபடி ஓடிவந்தான். “மூத்தவர்! மூத்தவர் ஒரு கரடிக்குட்டியை பிடித்திருக்கிறார்! நான் பார்த்தேன்… நானேதான் முதலில் பார்த்தேன்!” மூச்சிரைக்க ஓடிவந்த அவன் பதற்றமடைந்த எலிபோல எத்திசை செல்வதென்று தெரியாமல் தடுமாறினான். சௌனகர் “எங்கே?” என்றதும் திக்கித்திக்கி கைகளைத் தூக்கி “அங்கே” என்றான். “நான் பார்த்தேன்… கரிய கரிய கரிய கரடிக்குட்டி!” அதற்குள் அவன் பீமனைப்பார்த்து ஓடிப்போய் அப்படியே எம்பி அவன் தோளைத்தழுவி “பீமன் அண்ணா, நான் கரடிக்குட்டி! மூத்தவர்! பெரிய கரடி!” என்றான்.
திருதஹஸ்தனும் வாயுவேகனும் ஓடிவந்து “கரடிக்குட்டி! நாங்களே பார்த்தோம்! மூத்தவர் கொண்டுவருகிறார்!” என்று சொல்லி வெவ்வேறு திசையை கைகாட்டி எம்பி எம்பி குதிக்க விசாலாட்சன் ஓடிப்போய் அவர்களிடம் கைநீட்டி “போடா, நான்தான் முதலில் பார்த்தேன்” என்றான். திருதஹஸ்தன் திகைத்து “போடா போடா போடா” என்று கூச்சலிட்டபடி பாய்ந்து விசாலாட்சனை அடிக்க ஆரம்பிக்க இருவரும் மல்லாந்து நிலத்தில் விழுந்து உருண்டனர். அதற்குள்,சித்ராட்சனும் வாதவேகனும் சித்ரனும் சுவர்ச்சனும் உபசித்ரனும் கூட்டமாக ஓடிவந்து “கரடிக்குட்டி வருகிறது! கரிய கரடி!” என்று கூவினார்கள்.
ஓடிவந்த வேகத்தில் வேர்தடுக்கி விழுந்த சாருசித்ரன் கதறி அழ எவரும் அவனை கவனிக்கவில்லை. அவன் பிடிவாதமாக அங்கேயே நின்று அழுதுகொண்டிருக்க மற்றவர்கள் அடுப்பைச்சுற்றி வந்து கூச்சலிட்டனர். “பீமன் அண்ணா அவ்வளவுபெரிய கரடிக்குட்டி!” என்றான் திருதஹஸ்தன். “கரிய குட்டி! நீளமான நகங்கள் கொண்ட குட்டி!” பீமன் எழுந்து கரடிக்குட்டியை தோளில் ஏந்தி துரியோதனன் வருவதைப்பார்த்தான். அவனுடைய தோளில் ஒரு கரிய மயிர்ச்சுருளாக அது அமர்ந்திருந்தது. அருகே வந்தபின்னர்தான் அதன் திறந்தவாயின் வெண்பற்களும் ஈரமான கரிய மூக்குக்குமேல் வெண்ணிறமான பட்டையும் தெரிந்தன. பீமன் அருகே சென்று அதை வாங்கிக்கொண்டான்.
துரியோதனனுக்குப் பின்னால் பாளைகளையும் ஈச்சையோலையையும் கொண்டு கட்டிய கூடைப்பின்னலில் மிகப்பெரிய ஈரத்தேனடைகளை அடுக்கிக் கட்டி தலைமேல் கொண்டுவந்த துச்சாதனன் உடலெங்கும் தேன் சொட்ட அதை இறக்கிவைத்தான். அவனைச் சூழ்ந்து வந்து கொண்டிருந்த தேனீக்கள் ரீங்கரித்தன. அவன் உடலெங்கும் ஈக்களும் சிறுபூச்சிகளும் ஒட்டியிருந்தன. அவன் அங்கே கிடந்த பெரிய பித்தளைச் சருவம் ஒன்றை எடுத்து வைத்தான்.
“கீழே விடுங்கள்… கீழே விடுங்கள் மூத்தவரே” என்று இளம்கௌரவர்கள் கூவினர். பீமன் அதை முற்றத்தில் விட்டபோது என்ன செய்வது என்று அறியாமல் அது பின்னங்கால்களில் குந்தி அமர்ந்து நகம் நீண்ட கைகளை கூப்புவதுபோல வைத்துக்கொண்டு கண்களை சிமிட்டுவதுபோல இமைத்து தலையை மெல்லத் திருப்பி அவர்களை மாறி மாறிப்பார்த்தது. விசாலாஷன் “பார்க்கிறது! நம்மை நம்மை நம்மை நம்மை பார்க்கிறது! என்று கைசுட்டி கூவி எம்பி எம்பி குதித்தான்.
துரியோதனன் திரும்பி அழுதுகொண்டிருந்த சாருசித்ரனை நோக்கி “அவன் ஏன் அழுகிறான்?” என்றான். அவனை அதுவரை திரும்பியே பார்க்காத சித்ராட்சன் துரியோதனன் அருகே வந்து “கீழே விழுந்துவிட்டான். ஓடும்போது கால்தடுக்கி…” என்றான். சுவர்ச்சன் இடைமறித்து “வேர் காலில் பட்டு… நான் பார்த்தேன். ரத்தம் வருகிறது” என்றான். உபசித்ரன் “மிகவும் வலிக்கிறதாம்… அழுதுகொண்டே இருக்கிறான்” என்றான். துரியோதனன் சாருசித்ரனிடம் “வாடா” என்றதும் அவன் அழுகையை நிறுத்திவிட்டு அருகே வந்தான். துரியோதனன் அவன் கன்னங்களைத் துடைத்து தன் கச்சையில் இருந்து ஒரு அத்திப்பழத்தை எடுத்து அவனுக்குக் கொடுத்து “அழாதே” என்றான்.
சாருசித்ரன் முகம் பெருமிதத்தில் மலர்ந்தது. துரியோதனன் கைகள் அவன் தலைமேல் இருந்தமையால் மெல்லிய தோள்களை வளைத்து அவன் அந்தக் கனியை வாங்கினான். பிற கௌரவர்கள் அவனை பொறாமையுடன் பார்க்க அவன் கண்கள் சற்று தயங்கி அனைவரையும் தொட்டுச்சென்றன. “நான் எல்லோருக்கும் தருவேன்” என்றான் அவன். சொன்னதுமே உபசித்ரனும் சித்ராட்சனும் அந்தக்கனியை வாங்கி பங்குபோட்டார்கள். வேறு இரு கௌரவர்களும் கரடிக்குட்டியை விட்டு திரும்பி அதை வாங்கினர். சாருசித்ரன் “எனக்குத்தான் மூத்தவர் தந்தார்” என்று திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தான்.
பீமன் கரடிக்குட்டியைத் தூக்கி அதன் மயிரை முகர்ந்து “தேனடை!” என்றான். “இதற்கு ஒரு உடன்பிறந்தான் இருக்கிறான்.” கரடிக்குட்டி அவனுடைய கையை நகத்தால் பிராண்டுவதற்காக வீசியது. இடைவளைத்து திமிறி மீண்டும் மண்ணில் இறங்கி எழுந்து நின்று விழுந்து கையூன்றியபின் துரியோதனனை நோக்கிச் சென்று அவன் கால்களைப்பற்றிக்கொண்டு மேலேற முயன்றது. “மூத்தவரிடம் வருகிறது! மூத்தவரிடம் வருகிறது!” என்று கௌரவர்கள் கூச்சலிட்டு குதித்தனர்.
“குகையில் தேனடைகளைப் பார்க்கலாமென்று சென்றேன்… அங்கே ஒரு ஆழமான குழிக்குள் தனியாக விழுந்துகிடந்தது” என்றான் துரியோதனன். “அதன் அன்னையைத் தேடினேன். எங்கும் காணவில்லை.” “நெடுந்தொலைவில் இருந்து அது வந்திருக்கலாம்…” என்ற பீமன் அதைத் தூக்கி மீண்டும் முகர்ந்து “அதன் உடலில் இலுப்பை மணம் அடிக்கிறது. பெரிய இலுப்பைமரத்தின் குகைக்குள் வாழ்கிறது” என்றான். “அன்னை இதற்கு தேன்கூட்டை ஊட்டியிருக்கிறது. அந்த மணத்தைத் தேடி அதுவே காட்டில் பயணம் செய்து வந்திருக்கிறது.”
நிலத்தில் விடப்பட்ட கரடிக்குட்டி மல்லாந்து அடிவயிற்றின் சாம்பல்நிறமயிர் தெரிய புரண்டு எழுந்து மீண்டும் ஓடிச்சென்று துரியோதனன் கால்களைப்பற்றிக்கொண்டது. “அது உங்களை தான் இருந்த மரமாக எண்ணிக்கொள்கிறது மூத்தவரே” என்றான் பீமன். “மண்ணிலிருக்கையில் அது அஞ்சுகிறது. உங்கள் மேலிருக்கையில் மரத்தில் ஏறிவிட்ட நிறைவை அடைகிறது.” கரடிக்குட்டி சட்டென்று உடலை உலுக்கி சிறுநீர் கழிக்க கடுமையான நெடி எழுந்தது. கௌரவர்கள் மூக்கைப்பொத்தியபடி கூச்சலிட்டுச் சிரித்தனர்.
துரியோதனன் அந்தக் கரடிக்குட்டியை அவனுக்கான மாடக்குடில்மேல் கொண்டுசென்றான். அதை மரத்தில் விட்டபோது அது கிளைகளைப் பற்றிக்கொண்டு கண்களைச் சிமிட்டியபடி மெல்ல அவனை நோக்கி வந்தது. “அது உங்களை நம்பிவிட்டது மூத்தவரே, இனி நீங்களில்லாமல் இருக்காது” என்றான் பீமன். துரியோதனன் சிரித்தபடி அதைத் தூக்கி தன் மேல் வைத்துக்கொண்டான். “அதற்கு என்ன கொடுப்பது?” என்றான் துரியோதனன். “பாலும் தேனும் கொடுக்கலாம். கிழங்குகள் உண்ணும் வயதாகிவிட்டது என்று தோன்றுகிறது.”
துச்சாதனன் “தேன் அருந்த வாருங்கள்” என்றதும் கௌரவர்கள் கூச்சலிட்டபடி சென்று சூழ்ந்து அமர்ந்துகொண்டார்கள். “நான்கு தட்டுகள் முழுக்க புழுவந்துவிட்டது” என்றான் துச்சாதனன். “நல்லது, புழு வந்த தட்டுக்களை இதற்குக் கொடுங்கள்… கரடி இனத்தில் உதித்த கௌரவன் அல்லவா?” என்றான் பீமன். கௌரவர்கள் கூச்சலிட்டுச் சிரித்தனர். மூத்தவனாகிய துச்சலன் “தம்பி ஃபால்லுக கௌரவா, கௌரவர் படைக்கு நல்வரவு” என்றான். துச்சகன் “இவனுக்கு என்னபெயர் மூத்தவரே?” என்றான். பீமன் சிரித்துக்கொண்டு “துஷ்கரன்… பிடித்தபிடியை விடாதவன்” என்றான்.
“தேன்… தம்பி துர்ஷகரனுக்கு தேன்” என்று ஜலகந்தன் கூச்சலிட்டான். ஏராளமான குரல்கள் “தேன் தேன்” என்றன. துஷ்கரன் தேனடைகளைக் கண்டதுமே மேலும் அமைதி அடைந்து மிகமெல்ல கைநீட்டி பெற்றுக்கொண்டு சுவைத்து உண்டது. கடைவாயில் ஒதுக்கியபடி துச்சலனை நோக்கி ‘ர்ர்ர்’ என்றபடி அமர்ந்து நகர்ந்து தேனடைக்கு அருகே சென்று நீண்ட நகம் கொண்ட கைகளை நீட்டியது. துச்சலன் “கேட்டு வாங்குகிறது… அதற்குத் தெரிந்துவிட்டது அதுவும் கௌரவன் என்று” என்று சிரித்தான்.
அவர்கள் மூங்கில்குழாய்களில் தேனருந்தினர். தேனருந்திய மிதப்பில் மண்ணிலேயே விழுந்து கிடந்தனர். கரடிக்குட்டி கிடந்தவர்கள் மேல் ஏறி அவர்களின் வயிறுகள் வழியாகச் சென்று கைநீட்டிக்கொண்டு படுத்திருந்த துச்சாதனனை அணுகியது. அவன் சிரித்துக்கொண்டு எழுந்து சென்று அதை அடுப்புகளுக்கு அப்பால் விட்டுவிட்டு வந்தான். கௌரவர்கள் சிரித்துக்கொண்டே அதைப்பார்த்தனர். அங்கிருந்து அது கைநீட்டியபடி துச்சாதனனை அணுகியது. அதைத் தூக்கிச் சுழற்றி திசைமாற்றி விட்டாலும் மீண்டும் நீண்ட கரங்களுடன் நகர்ந்து வந்தது.
மாலை உணவுண்டு நீர் அருந்தி அவர்கள் மாடக்குடில்களுக்குள் சென்று படுத்துக்கொண்டார்கள். மிக இளையவனாகிய சுஜாதன் மெல்ல நடந்து துரியோதனன் அருகே சென்று நின்றான். துரியோதனன் அவனிடம் “என்னடா?” என்றான். அவன் ஒன்றுமில்லை என்று திரும்பப்போனான். “சொல் தம்பி” என்றான் துரியோதனன். “அண்ணா, எனக்கு இன்னொரு கரடிக்குட்டி வேண்டும்” என்றான் சுஜாதன். “எதற்கு?” என்றான் துரியோதனன் சிரித்தபடி. “நானே வைத்து விளையாடுவதற்கு” என்றான் சுஜாதன். அப்பால் படுத்திருந்த பீமன் “இன்னும் பதினேழு வருடம் போனால் உனக்கே உனக்காக ஒரு நல்ல கரடிக்குட்டியை பீஷ்மபிதாமகரே கொண்டுவந்து தருவார். நீயே வைத்து விளையாடலாம்” என்றான். வெடித்துச் சிரித்தபடி துரியோதனன் எழுந்து அமர்ந்துவிட்டான். சிரிப்பில் அவனுக்கு புரைக்கேறியது.
இரவு மிக விரைவிலேயே கனத்து குளிர்ந்து ஓசைகளுடன் வந்து சூழ்ந்துகொண்டது. மாடங்களுக்குக் கீழே பூச்சிகளும் நாகங்களும் விலங்குகளும் அணுகாமலிருக்க தைலப்புல் அடுக்கி புகைபோட்டிருந்தனர். குடிலுக்கு வெளியே மரத்தில் விடப்பட்டிருந்த துஷ்கரன் ஒவ்வொருவர் மீதாக ஏறி துரியோதனன் அருகே படுக்க வந்தது. “இதை என்ன செய்வது?” என்றான் துரியோதனன். பீமன் “அதன் அன்னை நீங்கள்தான் என முடிவெடுத்துவிட்டது. இனி அதை அதன் அன்னை வந்தால்தான் மாற்றமுடியும்” என்றான். துச்சாதனன் “கிளையுடன் சேர்த்து கட்டினால் என்ன?” என்றான். “கட்டவேண்டாம்… அது காட்டுக்குழந்தை… இங்கேயே படுத்துக்கொள்ளட்டும்” என்றான் துரியோதனன்.
குடில்களின் உள்ளிருந்து புகையால் மூச்சுத்திணறும் ஒலிகளும் இருமல் ஓசைகளும் எழுந்தன. கௌரவர்கள் மனக்கிளர்ச்சி தாளாமல் சிரித்துப்பேசிக்கொண்டே இருந்தனர். துச்சாதனன் எழுந்து இருட்டுக்குள் நின்றபடி “என்ன அங்கே பேச்சு? உறங்குங்கள்… நாளைக்காலை வேட்டைக்குச் செல்கிறோம்” என்றான். இருட்டுக்குள் அடக்கப்பட்ட சிரிப்பொலிகள் கேட்டன. துச்சாதனன் “சித்ராக்ஷா நீதானா அது? வந்தேன் என்றால் உதைப்பேன்” என்றான். சித்ராக்ஷன் “இவன் என்னை சிரிப்பு மூட்டுகிறான்… போடா” என்றான்.
துரியோதனன் சிரித்துக்கொண்டு “பேசிக்கொள்ளட்டும்… புதிய இடத்தின் கிளர்ச்சி இருக்குமல்லவா?” என்றான். “நாளைக் காலை எழுப்புவது பெரும்பாடு… வேட்டைநடுவிலும் தூங்கிவழிவார்கள்” என்றான் துச்சாதனன். “குழந்தைகள் அல்லவா?” என்றான் துரியோதனன். “அவர்கள் அதிக நேரம் விழித்திருக்க மாட்டார்கள். பகலெல்லாம் ஓடியிருக்கிறார்கள்.” பீமனின் குரட்டை ஒலி கேட்டது. “போகப்போக கூடிவரும் ஒலி… இது இல்லாமல் என்னால் துயிலமுடியவில்லை இப்போதெல்லாம்” என்றான் துரியோதனன் சிரித்தபடி. “அந்தக்கரடியின் வாசனை குடில் முழுக்க இருக்கிறது” என்றபடி துச்சாதனன் விரிக்கப்பட்ட மான்தோல்மேல் படுத்துக்கொண்டான்.
மிகவிரைவிலேயே அனைவரும் தூங்கிவிட்டார்கள். நீள்குடிலின் ஓரத்தில் படுத்து சௌனகர் மட்டும் காட்டில் எழும் ஒலிகளை கேட்டுக்கொண்டிருந்தார். காடு பகலைவிட இரவில் அதிக ஒலியெழுப்புவதாகத் தோன்றியது. தொலைதூரத்து ஓடைகளின் ஒலிகள்கூட அருகே கேட்டன. சருகுகளையும் சுள்ளிகளையும் மிதித்து ஒடித்துச்செல்வது யானைக்கூட்டமா? பன்றிக்கூட்டத்தின் உறுமல் கேட்டது. யாரோ ஒருவர் தூக்கத்தில் ‘அம்மா அம்மா அம்மா’ என்றார்கள். அது மிக இளையவனாகிய குண்டாசி பக்கத்துக் குடிலில் எழுப்பும் ஒலி. தூக்கத்திலேயே துரியோதனன் புரண்டுபடுத்து “டேய் தூங்கு” என்றான். குண்டாசி “ம்ம்” என்றபின் வாயை சப்புக்கொட்டி மீண்டும் தூங்கினான்.
துரியோதனன் ஏதோ சொல்லி கூச்சலிடுவதைக் கேட்டு சௌனகர் திடுக்கிட்டு எழுந்தார். துரியோதனன் மேல் கரியநிழல் ஒன்று நிற்பதுபோலத் தோன்றியது. அதற்குள் துரியோதனனும் அதுவும் இணைந்து உருண்டு மாடத்தில் இருந்து கீழே விழுந்தனர். கீழே காவலுக்கு நின்றிருந்த வீரர்கள் கூச்சலிட்டபோது அனைவரும் எழுந்துகொண்டனர். சௌனகர் ஓடிப்போய் கீழே பார்த்தபோது மிகப்பெரிய கரடி ஒன்று துரியோதனனை கட்டியணைத்திருக்க இருவரும் மண்ணில்புரள்வது தெரிந்தது. சௌனகர் சென்று துயின்றுகொண்டிருந்த பீமனை உலுக்கினார்.
கரடியின் பிடியை விடுவிக்க முடியாமல் துரியோதனன் மண்ணில் புரண்டான். அவனுடைய வல்லமைமிக்க தோள்களை கரடி ஒட்டுமொத்தமாகப் பிடித்திருந்தமையால் அவை பயனற்றவையாக இருந்தன. பீமன் எழுந்து வாயைத் துடைத்து “என்ன” என்றான். அதன்பின் ஓசைகளைக் கேட்டு எழுந்து நூலேணி வழியாக இறங்குவதற்குள் மரக்குடிலில் இருந்து குதித்த துச்சாதனன் “மூத்தவரே” என்று கூவியபடி ஓடிச்சென்று அந்தக்கரடியைப்பிடித்தான். அது தன் காலால் அவனை எட்டி உதைக்க உடலில் அதன் நகங்கள் கிழித்த மூன்று உதிரப்பட்டைகளுடன் அவன் பின்னால் சரிந்தான். வெறியுடன் அருகே நின்றிருந்த வீரனின் வேலைப்பிடுங்கி அதை குத்தப்போனான். சஞ்சயன் கீழே நடப்பதைச் சொல்லிக்கொண்டே இருக்க குடில் முகப்பிற்கு ஓடிவந்த திருதராஷ்டிரர் உரக்க “மூடா, அது அன்னைக்கரடி. அதைக்கொன்று என் குலத்துக்கு பழிசேர்க்கிறாயா?” என்று கூவினார்.
துச்சாதனன் கையிலிருந்த வேல் விலகியது. விற்களில் நாணேற்றிய வீரர்களும் கை தாழ்த்தினர். திருதராஷ்டிரர் திரும்பி “விருகோதரா, அதைப்பிடித்து விலக்கு” என்றார். பீமன் “இதோ தந்தையே” என்றபடி கரடியுடன் புரளும் துரியோதனனை அருகே வந்து பார்த்தான். அவன் துயிலில் இருந்து அப்போதுதான் முற்றிலும் மீண்டான் என்று தோன்றியது. அவன் நாலைந்துமுறை பதுங்கியபின் கரடியின் தலைப்பக்கமாகப் பாய்ந்து அதன் கழுத்தைப்பிடித்துக்கொண்டான். வேறு எப்படி அதைநோக்கிப் பாய்ந்திருந்தாலும் கரடி தன் கால்களை வளைத்துத் தூக்கி கூர்நகங்களால் கிழித்துவிட்டிருக்கும் என சௌனகர் உணர்ந்தார்.
கரடியின் கழுத்தை ஒருகையால் பற்றியபடி அதன் கையிடுக்கில் தன் மறுகையைக் கொடுத்து அழுத்திப்பிடித்தபடி பீமனும் சேர்ந்து மண்ணில்புரண்டான். கரடி உறுமியபடி திரும்ப முயன்றதருணத்தில் அதன்பிடியை விலக்கி அதை தான்பற்றிக்கொண்டு மண்ணில் புரண்டு பீமன் விலக அரையாடையிழந்து உள்ளே அணிந்த தோலால் ஆன விருக்ஷணக்கச்சுடன் உடம்பெங்கும் மண் படிந்திருக்க துரியோதனன் விலகி விழுந்தான். மூச்சிரைக்க எழுந்து இருகைகளையும் மண்ணில் ஊன்றி அமர்ந்து நோக்கினான். அதற்குள் கரடியை பீமன் தன் தலைக்குமேல் தூக்கி மண்ணில் அறைந்தான்.
நிலையழிந்த கரடி உறுமியபடி இரு கைகளின் நகங்களை முன்னால் நீட்டி மயிரடர்ந்த கால்களை பின்னால் தூக்கிவைத்து சென்று குந்தி அமர்ந்தது. பின்னர் பதுங்கி அமர்ந்துகொண்டு வாய் திறந்து வெண்ணிறப் பற்களைக் காட்டி உறுமியது. எடையிலும் உயரத்திலும் பீமன் அளவுக்கே இருந்த அத்தனை பெரிய கரடியை சௌனகர் பார்த்ததில்லை. அவர் திரும்பி குடிலுக்குள் சென்று துரியோதனன் படுத்திருந்த மான்தோல் மேல் நன்றாக ஒண்டிச்சுருண்டு துயின்றுகொண்டிருந்த கரடிக்குட்டியைத் தூக்கி கீழே அன்னையை நோக்கி வீசினார். உடலை வளைத்து நான்கு கால்களில் விழுந்த துஷ்கரன் திரும்பி கூட்டத்தைப்பார்த்தபின் குழம்பி மீண்டும் குடிலை நோக்கி செல்லத் தொடங்கியது.
அன்னைக்கரடி முன்னால் சென்று அதை ஒரு கையால் தூக்கியபின் உறுமியபடி பின்வாங்கி, பின்னர் திரும்பி மூன்றுகால்களில் பாய்ந்து காட்டின் இருளுக்குள் சென்று மறைந்தது. பீமன் கைகளின் மண்ணைத் துடைத்துக்கொண்டு “கரடிப்பாலின் நெடி என்று சொன்னபடி திரும்புவதற்குள் துரியோதனன் அருகே நின்ற வீரனின் வேலைப்பிடுங்கி அவனை ஓங்கிக் குத்தினான். கூட்டமே திகைத்து கூச்சலிட்டது. வேலின் நிழலைக் கண்டு அனிச்சையாகத் திரும்பிய பீமன் அதிலிருந்து தப்பி திரும்புவதற்குள் துரியோதனன் பலமுறை குத்திவிட்டான். அத்தனைக் குத்துக்களுக்கும் உடல் நெளித்து தப்பிய பீமன் “மூத்தவரே என்ன இது… மூத்தவரே” என்று கூவியபடி மண்ணில் விழுந்து புரண்டான்.
மண்ணில் ஆழக்குத்தி நின்று நடுங்கிய வேலை விட்டுவிட்டு அவன் மேல் பாய்ந்த துரியோதனன் அவனை ஓங்கி அறைந்தான். அந்த ஓசை சௌனகர் உடலை விதிர்க்கச்செய்தது. தொடைகள் நடுங்க அவர் மாடக்குடிலிலேயே அமர்ந்துவிட்டார். துரியோதனன் வெறிகொண்டவனாக பீமனை மாறி மாறி அறைந்தான். பீமன்மேல் விழுந்து அவன் வயிற்றில் ஏறிக்கொண்டு அவன் கழுத்தை தன் கரங்களால் பற்றிக்கொண்டு கால்களால் அவன் கைகளைப் பற்றி இறுக்கினான். பீமன் கழுத்து நெரிய கைகள் செயலிழக்க அப்பிடிக்குள் அடங்கி திணறியபடி கால்களை உதைத்துக்கொண்டான்.
நூலேணிவழியாக இறங்கி ஓடிவந்த திருதராஷ்டிரர் தன் வலக்கையால் துரியோதனனைப் பிடித்துத் தூக்கி அப்பால் வீசினார். அதே விரைவுடன் இடக்கையால் பீமனைத் தூக்கி தன் தோளுடன் அணைத்துக்கொண்டார். பீமன் வாய் திறந்து மூச்சிழுத்து இருமினான். கழுத்தைப் பற்றிக்கொண்டு தலையைச் சுழற்றி சுளுக்கு நீக்க முயன்றான். கீழே மண்ணில் விழுந்து எழுந்து திரும்பி கையூன்றி அமர்ந்திருந்த துரியோதனனின் மூச்சொலி கேட்டு அவனை நோக்கித் திரும்பி தன் பெரும்புயத்தை மடித்துக்காட்டி யானை போல மெல்ல உறுமினார் திருதராஷ்டிரர். பந்த ஒளி மின்னும் கண்களுடன் துரியோதனன் அப்படியே அமர்ந்திருந்தான்.
திருதராஷ்டிரர் பீமனை விட்டுவிட்டு சௌனகரிடம் பீமனை தள்ளி “இவனை இளைப்பாறச் சொல்லுங்கள்” என்றார். பின்னர் திரும்பி துரியோதனன் கிடந்த இடத்தை மூக்கால் நோக்கினார். நீண்ட பெருமூச்சில் அவரது அகன்ற நெஞ்சு எழுந்தமைந்தது. “சஞ்சயா என்னை என் குடிலுக்குக் கொண்டுசெல்… நாளைக்காலையே நாம் அஸ்தினபுரிக்குக் கிளம்புகிறோம். கானாடல் நிகழ்வு முடிந்துவிட்டது” என்றார்.