சீரோ டிகிரி:எதிர்மரபும் மரபு எதிர்ப்பும்

சீரோ டிகிரியை மதிப்பிட மிகுந்த தடையைத் தருவது சாருநிவேதிதா மிகுந்த பிரக்ஞையுடன் பல்வேறு உத்திகள் மூலமாக உருவாக்கிக் கொள்ளும் சுய பிம்பம்தான். இப்பிம்பத்தைக்கூட சாருநிவேதிதாவால் இன்றுவரை திறம்பட உருவாக்கிக் கொள்ள முடியவில்லை என்பது என் கருத்து. இதைமுதலில் நான் அவதானித்தது பத்து வருடம் முன்பு, சென்னையில் ஒரு கூட்டத்தில் நான் பேசிய பிறகு கேள்வி கேட்க எழுந்த சாருநிவேதிதா ‘கேள்வியுரை’ நிகழ்த்தியபோதுதான்! நான் படித்திராத-அதன் மூலம் இலக்கியம் பேசும் தகுதியை இழந்துவிட நேர்ந்த-லத்தீன் அமெரிக்க நூல்களின் பட்டியல் ஒன்றை அங்கு அவர் முன்வைத்தார். ஆனால் அப்பட்டியலை எழுத்தாளர் பெயர்களுடன் ஒரு துண்டுத்தாளில் இருந்து வாசித்தார்!

திறமையான ‘அறிவுஜீவிகள்’ பலரை கேரளத்தில் சந்தித்ததுண்டு. அவர்கள் பெயர்களை இப்படி அடுக்கமாட்டார்கள். கண்டிப்பாக படித்துக் காட்டமாட்டார்கள். தங்கள் உதாசீனமான, ஏளனம் கலந்த பேச்சில் அப்பெயர்கள் அவ்வப்போது ‘உதிரும்படி’ பார்த்துக் கொள்வார்கள். சாருநிவேதிதா இலக்கியப் பேச்சுகளில் பொய் சொல்வதும், பொய்யையே சுய இயல்பாகக் கொண்டிருப்பதும்கூட பிரச்சினையல்ல. அந்தப் பொய்கள் எல்லாருக்கும் வெட்ட வெளிச்சமாகும்படி இருப்பதுதான் பெரிய பிரச்சினை.

சாரு இதை தெரிந்தே ஒரு விளையாட்டாகச் செய்கிறார் என நினைக்கிறேன். இது அவரை எவரும் எங்கும் பொருத்திக்கொள்ள முடியாதபடிச் செய்கிறது. முக்கியமான தருணங்களில் அதீத புத்திசாலித்தனத்துடன் தன்னை கோமாளியாக ஆக்கி தாண்டிச் சென்றுவிடும் மூத்த கரமஸோவ் போல் இருக்கிறார் சாரு. அவரது உக்கிரமான வசைகள் , சுயகிண்டல்கள், போலிபெருமிதங்கள், கூர்மையான நக்கல்கள் மூலம் அவர் தன்னை எப்போதுமே ஊடக கவனத்தில் வைத்திருக்கிறார். எப்போதும் தன் பிம்பத்தை உருவாக்கி தானே கலைத்துக்கொண்டிருக்கிறார்.

இந்த ஆளுமையை ஒட்டி சீரோ டிகிரி மீது ஒரு தரப்பில் இருந்து அருவருப்பு கலந்த புறக்கணிப்பும் மறுதரப்பில் விடலைத்தனமான ரசனை கொண்ட அவரது ஆதரவாளர்களிடமிருந்து ‘ஆகா’ரமும் எழுகிறது. இரண்டுமே மிகைப்படுத்தப் பட்டவை. இலக்கியப்பிரதியை சாராதவை. இத்தகைய சூழலில் முழுக்க முழுக்க இலக்கியப்பிரதியைச் சார்ந்தே தன் வாசிப்பை அமைத்துக்கொள்ளவேண்டிய கட்டாயம் வாசகனுக்கு உருவாகிறது.

அவ்வாறு வாசிக்கும்போது சீரோ டிகிரி முக்கியமான ஒரு இலக்கியப் படைப்பு என்று எண்ணுகிறேன். அதற்கு நான் படிக்காத சில நாவல்களின் சாயல் இருப்பதாகச் சிலரால் சொல்லப்படுகிறது. நான் படித்த சில நாவல்களின் சாயல் கண்டிப்பாக இருக்கிறது. அதையும் கணக்கில் கொண்டால்கூட தமிழ்ச்சூழலுக்கு இது மிகவும் முக்கியமானது. சீரோ டிகிரியின் முக்கியமான சிறப்பம்சங்கள் என்ன?

முக்கியமாக இது நம்மை வாசிக்க வைக்கிறது. இதைமிக வலியுறுத்த விரும்புகிறேன். நவீன எழுத்து என்றாலே எழுவாய் பயனிலை இடம் மாறிய, காற்புள்ளிகள் போடப்படாத, தலைவலி தரும் சொற்றொடர் குவியல்கள் என்று பாமரத்தனமாக தமிழகத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் எண்ணத்தை இது உடைக்கிறது. இதன் ஆரம்பப்பகுதியில் உள்ள சரளமான நகைச்சுவையும் எக்களிப்பும் தமிழ்ச்சூழலுக்கு அவசியமான புதுவரவு என்றே கருதுகிறேன். சாருநிவேதிதாவின் தமிழ்நடையே சமகாலத் தமிழ் இலக்கியவாதிகளுள் முக்கியமான ஒருவராக அவரை ஆக்குகிறது. எந்த இலக்கிய விமரிசகனும் இதை உதாசீனம் செய்ய முடியும் என்று  நான் எண்ணவில்லை.

சாருவின் மொழிநடை சமகாலத்து வணிக இதழ்களில் உள்ள அரட்டையை ஒட்டி உருவாக்கிக் கொண்டது. நவீனத்தமிழ் இலக்கியமாக முன்வைக்கப்படும் சிற்றிதழ் சார்ந்த மரபுக்கும் அதற்கும் எந்தவகையான தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை.  சென்ற முக்கால் நூற்றாண்டாக நம்முடைய வணிக எழுத்து அதற்கே உரிய ஒரு மொழிப் பிராந்தியத்தை  உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இன்றுவரை சராசரித் தமிழர்களின் சிந்தனையை தீர்மானிக்கக்கூடியதாக அது உள்ளது. வடுவூர் துரைசாமி அய்யங்கார் முதல் சுஜாதா வரை அதன் முகங்கள் ஏராளமானவை.

விதவிதமான ஊற்றுகளில் இருந்து கிளம்பி வந்து தேங்கி  உருவான விசித்திரமான குளம் அது. தமிழின் கதாகாலட்சேபங்களில் இருந்து பெற்ற நீட்டிமுழக்கும் ஒரு மொழி அதில் உள்ளது. செய்தி சொல்வதற்காக உருவாக்கப்பட்ட மொழிபெயர்ப்பு நடை உள்ளது. ஆங்கில புனைகதைகளை மொழியாக்கம் செய்து உருவாக்கிக் கொண்ட நடை உள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டு விகடநிகழ்ச்சிகளில் இருந்து பெற்ற ஒரு மொழி உள்ளது. அன்றைய மதகண்டனத் துண்டுபிரசுரங்களில் இருந்து பெற்ற ஒரு நடை உள்ளது. அனைத்துக்கும் மேலாக தமிழில் அச்சு உருவான உடனேயே உருவாகி இன்றுவரை நீளும் கிசுகிசு மொழியாடலுக்கான நடை உள்ளது. எல்லாம் கலந்து தன்போக்கில் உருவான ஓர் உயிர் – ப்ளாப் போல தேவையான படி சப்பியும் உருண்டும் நீண்டும் ஒழுகியும் எங்கும் சென்றுவிடும் வல்லமை கொண்டது

சாரு இந்த மொழிக்குள் இருக்கிறார். விமரிசனப்பிரக்ஞையுடனும் அல்லாமலும் அதில் புழங்குகிறார். அந்த மொழியின் பாசாங்குகளை தானும் செய்கிறார், அப்பாசாங்குகளை கிழித்து விலக்கவும் செய்கிறார். அதன் ஒழுக்க விதிகளை தலைகீழாக்குகிறார். அந்த மொழியின் நாசூக்குகளை அப்பட்டமாக மீறிச்செல்கிறார். அதை வைத்துக்கொண்டு விளையாடுகிறார். பூனை எலியை வைத்துக்கொண்டு விளையாடுவதுபோல.ஆனால் அதற்குள்தான் எப்போதும் இருக்கிறார். அந்த மொழியின் ‘பாமரர்களுடன் பேசும் எளிமை’ என்ற அம்சத்தை மட்டும் எந்நிலையிலும்  விட்டுவிடுவதில்லை.

குப்பையில் இருந்து கிடைத்த பொருட்களை வைத்துச் செய்யப்பட்ட நவீனச் சிற்பங்கள் போன்றது இந்நாவலின் மொழி என்று சொல்லலாம். அவ்வகையில் மிக முக்கியமான பின்நவீனத்துவ முன்னுதாரணம் என்றே இந்நாவலின் நடையை நான் குறிப்பிடுவேன். இந்நடையில் உள்ள குதூகலமும் துள்ளலும் தமிழில் சம்பத்தின் இடைவெளி போன்ற சில நாவல்களிலேயே சாத்தியமாகியிருக்கின்றன. பாலியல் இல்லாமல் அந்த குதூகலம் சாத்தியமாகியுமிருக்காது.

இவ்விலக்கியப் படைப்பில் உள்ள புதுமையான, துணிச்சலான வடிவம் முக்கியமானது என்று படுகிறது, சீரான அடுக்குள்ள கூறல்முறைகளினால் நமது காலகட்டத்தின் சிக்கலான பன்முக யதார்த்தங்களைக் கூறமுடியாது என்று ஆகிவிட்டிருக்கிறது. மொழி இன்று ஓர் ஊடகம் என்ற நிலையில் இருந்து பல்வேறு ஊடகங்களில் ஊடுருவியுள்ள ஒரு பொது அம்சமாக வளர்ச்சி (உறுதியாகக் கூறிவிட முடியாதுதான்) அடைந்துள்ளது. காட்சி ஊடகத்தின் பின்னணியாக வரும் மொழிக்கும், தன் சொற்களால் மட்டுமே தொடர்புறுத்தியாக வேண்டிய நிலையில் உள்ள சட்டத்தின் மொழிக்கும் இடையே எத்தனை வித்தியாசம்!

நவீனப் புனைகதை இந்த மொழிச்சாத்தியங்களை எல்லாம் ஊடுருவியாக வேண்டியுள்ளது. அது இன்று மொழிபு அல்ல, மொழிபுகளின் பின்னல். ஒற்றை விவரிப்பு அல்ல, ஊடறுக்கும் விவரிப்புகளின் தொகுப்பு. ஆகவே அது இன்றியமையாத ஒரு தொகுப்பு வடிவை-கொலாஜ்-அடைகிறது. இந்தக் கலவை வடிவத்தின் சிறந்த உதாரணமாக உள்ள நாவல் இது. செய்தியறிக்கை முதல் தோற்றங்கள் வரை புலம்பல் முதல் வசை வரை மொழி நிறபேதம் கொண்ட இந்நாவலின் வடிவத்தை உருவாக்குகிறது.

இந்நாவலுக்கு முன்னோடியாக அவடிவம் கொண்ட நாவல்கள் தமிழில் எழுதப்பட்டுள்ளன. முக்கியமான இரு உதாரணாங்கள் நகுலனின் நினைவுப்பாதை, சுந்தர ராமசாமியின் ஜே.ஜே.சிலகுறிப்புகள். அவையும் சீரான ஓழுக்குள்ள வடிவம் இல்லாமல் துண்டுத்துண்டு கூற்றுகளின் குவியலாக அமைந்துள்ள நாவல்களே. இரு நாவல்களுமே ஒரே ஆளுமை காண்பதும் காணப்படுவதுமாக பிளந்துகொள்ளும் பிளவாளுமையை வெளிப்படுத்துபவை. அதிலும் நகுலனின் நாவல் தீவிரமான மனப்பிளவு நிலைக்கு சான்றாக  உள்ளது

ஆனால் அந்நாவல்களில் சாராம்சமான ஒரு சரடு ஓடிக்கொண்டிருக்கும். அது அந்த ஆசிரியனின் இருப்பு மீதான விசாரணையோ அவனுடைய வாழ்க்கை நோக்கோ ஆக இருக்கும். சீரோ டிகிரியில் எல்லா வரிகளும் ஆசிரியனைச் சுட்டுகின்றன. ஆனால் அப்படிச் சுட்டப்படும் ஆசிரியன் ஓர் ஆளுமையாக இல்லாமல் வெறும் புனைவாக இருக்கிறான். முனியாண்டி என அவனுக்கு ஒரு பெயர் இருக்கிறது. அவன் இப்புனைவை எழுதும் ஆசிரியனின் அந்தரங்கமான பகற்கனவுகளில் இருந்து கிளைத்தவனாக இருக்கிறான். அதற்குமேல் அவனுக்கு ஆளுமையோ அடையாளமோ இல்லை. அவனுக்கு என ஒரு திடவடிவமே இல்லை, தெரிந்து தெரிந்து மறையும் நிழல் மட்டுமே. அவன் யாரென இந்நாவலில் இருந்து அறிய முடியவில்லை. சொல்லப்போனால் இந்நாவலின் பாவனைகளில் ஒன்றுதான் அது.

இந்த இயல்பால் முற்றிலும் மையமிழந்து போன ஆக்கமாக உள்ளது சாரு நிவேதிதாவின் சீரோ டிகிரி. தமிழில் உருவான மையமே அற்ற ஒரு புனைவுப்பரப்பு என இதைச் சொல்லலாம். மையம் என எதைச் சொல்ல வேண்டும் என்றால் வாசகன் இதன் சித்தரிப்பு வழியாக அவனே உருவகித்துக்கொண்டு சென்று கடைசியில் அவனே கைவிடும் ஒரு மையச்சரடைச் சொல்லலாம். சீரோ டிகிரி எதைப்பற்றிய நாவல் என்றால் சொல்ல ஏதுமில்லை என்பதைப்பற்றியது எனலாம்.

 

இந்நாவல் உருவாக்கும் கலாச்சார அதிர்ச்சி தமிழுக்கு மிகவும் முக்கியமான ஒன்று. காதல் இல்லாதுபோன ஒரு சமூகம் இது என்றே எனக்கு எப்போதும் தோன்றி வந்துள்ளது. சராசரித் தமிழ்ப் பெண் கறுப்பு. சராசரித் தமிழனின் கனவுக் கன்னி சிவப்புப்பிழம்பு. இந்தக் கலாச்சாரக் குலைவிலிருந்து உருவாகிறது தமிழனின் காமம் சார்ந்த பிறழ்வுகள், சிதறல்கள். எந்த நாள் தமிழில் அச்சு ஊடகம் தோன்றியதோ அன்று முதல் இன்றுவரை அதன் முக்கியமான விளம்பரப் பொருள் தாது விருத்தி மருந்துகள்தான். (மணிக்கொடியில் ஒரு பொருள் தென்படுகிறது. யுமின்சார ஔஷதம்.ரு சுத்தமான நீரில் மின்சாரத்தைப் பாயவிட்டு உருவாக்கப்பட்ட அதிவீரிய மருந்து. மின்சார வலிமை உறுப்புகளில் ஏறும்!)

ஆகவே இடக்கரடக்கல்களினாலானது இச்சமூகம். இதன் பாவனைகளை நேரடியாக மோதி உடைக்க முயல்கிறது இந்நாவலின் விவாதத்தளம். இதன் அப்பட்டமான கூறல் முறையே இதன் முக்கியமான பணியை ஆற்றுகிறது என்றுகூடக் கூறலாம். சீரோ டிகிரியின் பாலியல் சித்தரிப்புகளின் தனித்தன்மை என்னவென்றால் இவை மனமே இல்லாத உடலைப்பற்றியவை என்பதே. அத்துடன் சமூகமே இல்லாத வெறும் மனித உடலைப்பற்றியவை இவை. இந்த அம்சம் தமிழுக்கு மிகவும் புதிது.

கிட்டத்தட்ட சரோஜாதேவி கதைகளில் உள்ள வெற்றுக்காமம் போலிருக்கின்றன இவை. காமத்தின் மன எழுச்சியை இந்த விவரணை ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை.  காமம் அளிக்கும் உடல்சார்ந்த அகக்கிளர்ச்சியைக் கூட இது பொருட்படுத்தவில்லை. மீண்டும் மீண்டும் உடலையே இது முன்வைக்கிறது. இந்த மொழிநடையையும் சித்தரிப்பு முறையையும் கூட தமிழின் ‘குஜிலிப்பதிப்பு’ பாலியல் எழுத்தில் இருந்து எடுத்தாண்டிருக்கிறார் சாரு. இந்த அதிர்ச்சி நாம் உருவாக்கி வைத்திருக்கும் மூக்குரசல் காமத்தின் மீது மோதுகிறது. இந்நாவலின் குறிப்பிடத்தக்க பங்களிப்பு இது.

இப்படைப்பின் இறுதிப் பகுதியில் அசலான நேரடியான கவித்துவம் உருவாகி வந்துள்ளது முக்கியமானது. இக்கவித்துவம் நாவலின் முன்பகுதியுடன் ஒட்டவில்லை என்பதும், தமிழின் மரபுசார் மனதின் வெளிப்பாடாகவே இது உள்ளது என்பதும் முரண்பாடுதான். ஆனால் முரண்பாடு என்பது படைப்பின் குறை அல்ல. மாறாக படைப்பின் மர்மங்கள் பல அங்குதான் மறைந்துள்ளன.

சீரோ டிரிகிரியில் என்னென்ன உள்ளது என்று சொல்ல வருவது ஒரு குப்பை கொலாஜ் ஓவியத்தில் என்னென்ன வருகிறது என்று சொல்வதற்கு நிகர். சாருவுக்கு தெரிந்த எல்லாமே வருகின்றன. இலக்கியக் கிசுகிசுக்களும் சக எழுத்தாளர்கள் மீதான ஒளிந்தும் தெளிந்துமான கசப்புகளும் காழ்ப்புகளுமே பெரும்பகுதி. அவற்றை இனம்பிரித்தறிய முயலாமல் ஒருவகை மொழிபு மட்டுமே என அவற்றின் நக்கல்களை மட்டுமே வாசித்துச்செல்லமுடிகிறது.

சாருவின் தனிவாழ்க்கையாக அவர் பிற இடங்களில் முன்வைத்தவை இந்நாவலில் பெரும்பகுதியாக உள்ளன. அறிவுஜீவியும் புரட்சிக்காரியுமான மனைவுடனான கசப்பை பகிர்ந்துண்ண்டும் வாழ்க்கை அங்கதத்துடன் கூறப்பட்டுள்ளது. போர்வைதுவைக்கும் படலம் அவ்வுறவின் எல்லா அகங்கார மோதல்களையும் காட்டுகிறது.

அவந்திகாவின் உக்கிரமான துயரங்கள் கொண்ட வாழ்க்கையின் செய்தியறிக்கை போன்ற சித்தரிப்பு ஒரு முக்கியமான பகுதி. இதன் குறைந்தபட்சக் கூற்று காரணமாகவே இப்பகுதிக்கு அதிகமான நம்பகத்தன்மை இருக்கிறது. ஆண்கள் உருவாக்கி வைத்திருக்கும் உலகில் எளிமையாக ஓர் இடத்தை தேடும் தனித்த பெண்ணின் வலிகள் இப்பகுதியில் உள்ளன. பெண்ணுக்கு கருப்பை ஒரு சுமையாக, ஏன் ஒரு புற்றுநோய் கட்டியாக, ஆகும் குரூரத்தை இந்த தட்டைமொழி அற்புதமாக நம் முன் வைக்கிறது

இந்நாவல் முனியாண்டியின் பயணங்கள், பாலியல் சாகசங்களின் சித்திரங்களை காட்டுகிறது. ஆசிரியரின் விருப்பக் கற்பனை என்றே வகுத்துக்கொள்ளத்தக்க இந்தக் கதாபாத்திரம் ஈடுபடும் பாலியல் சாகசங்கள் நாம் தமிழின் சாணித்தாள் எழுத்துக்களில் வாசித்தவையே. ஒரு இலக்கிய ஆக்கத்தில் இவை அமைந்திருப்பதனால் ஓர் அழுத்தம் உருவாகிறது. அத்துடன் சாருவின் எளிய சரளமான நடை உரையாடல்களை சிறப்பாக அமைத்துக்காட்டுவதனால் இந்தப் பாலியல் சித்தரிப்புகள் நேர்த்தியாக உள்ளன.

இந்த பாலியல் சித்தரிப்புகளில் நுட்பங்கள் எதையும் உருவாக்க சாரு முயலவில்லை. மீண்டும் மீண்டும் உடலையே முன்வைக்கிறார். ஆனால் உரையாடல்கள் அந்த எல்லையைக் கடந்து செல்கின்றன. சுய இன்பம் செய்வதைப்பற்றிக்கூட அறியாத, அன்னிய ஆணுடன் ‘தெரியாமல்’ பாலியல் சரச உரையாடல்களில் ஈடுபடும் அந்தப்பெண்ணின் சாகசம் உரையாடல் வழியாகவே வெளிவருவது நுட்பமான இலக்கிய தன்மையுடன் அமைந்துள்ளது.

அன்றாடச்செய்திகளில் நம் மீது வந்து மோதும் அத்தனை குரூரங்களும் அபத்தங்களும் பகடியாகவும் நேரடியான கசப்புமிழ்ந்தலாகவும் இந்த நாவலில் பதிவாகியிருக்கின்றன. பன்றியின் [ஆசன] வாயை விரும்பும் நடிகையின் வரிகளுடன் ஊடுகலக்கும் புரட்சி செய்திகளும் காவல்நிலையத்தில் தேசபக்தி கலந்து அடிக்கும் இன்ஸ்பெக்டரும் சாருவின் அங்கதச் சித்தரிப்பின் சிறந்த மாதிரிகளாக அமைகின்றன.

இத்தனை தனித்தனித் துண்டுகளையும்  ஒருங்கிணைப்பது நாவலின் முடிவில் உள்ள அந்த உணர்ச்சிக்கொந்தளிப்பான கடிதங்கள். இந்நாவலின் உணர்ச்சி நிலை என்பது எந்தக்கூறையும் உள்ளே வைத்துக்கொள்வது.  அதன் மூலம் எதையும் சாரமற்றதாக ஆக்குவது. ஆகவே இந்த பாசப்புலம்பலும்கூட இந்த சிதில வெளியின் ஒரு கூறாகவே ஆகி விடுகிறது. நாவலை அது தொகுப்பதில்லை. மாறாக நாவல் உருவாக்கி வந்த அனைத்தையும் சற்றே தலைகீழாகத் திருப்புவதில் அது வெற்றி பெறுகிறது

சீரோ டிகிரி சாருவின் இதுவரை  வந்த எழுத்துக்களில் முக்கியமானது என்றே சொல்லவேண்டும். அவரது அதிர்ச்சிமதிப்பு மட்டுமே கொண்ட  தட்டையான சிறுகதைகள், எளிமையான இலக்கிய அரசியல்கட்டுரைகள் போன்றவற்றில் இருந்து இந்நாவல் இதன் விசித்திரமான சிதிலந்தன்மை காரணமாகவே தனித்து நிற்கிறது. உக்கிரமான மிகையுணர்ச்சியும்  பற்றற்ற அங்கதமும்,  உடல்சார் பாலியலின் கலியாட்டமும் பாலுறவின் உடல்வதைகளும் ஒரே இடத்தில் குவிந்திருப்பதனாலேயே  அழுத்தமான பொருளின்மை உணர்ச்சியை அளிக்கும் குறிப்பிடத்தக்க இலக்கிய ஆக்கமாக உள்ளது இது.

இப்படைப்பின் குறைபாடுகள் என்ன? முதன்மையாக இதன் அன்னியத் தன்மைதான். அவ்வகையில் இது ஜெ.ஜெ.சில குறிப்புகளின் அடுத்தபடி. இதன் வடிவத்துக்கு தமிழ்நாட்டில் இயல்பாக மலர்ந்ததன் சகஜத்தன்மை இல்லை. உத்திகள் புடைத்துத் தெரிவது கண்டிப்பாக படைப்பின் கலைக் குறைபாடேயாகும்.

இரண்டாவதாக இதன் சித்தரிப்புகள் பல-குறிப்பாக அவந்திகாவின் கதை முதலியன-நுட்பங்களும் ஊடுபாதைகளும் இல்லாதவையாக, தட்டையானவையாக உள்ளன. மிதமிஞ்சிய குரூரச் சித்தரிப்புகள் தரும் முதல் கட்ட அதிர்ச்சிக்குப் பிறகு அவை நமக்கு சட்டென்று பழகிப்போய்விடுகின்றன. இன்னொரு வாசிப்புக்கு அவை மிக வெளிறிப்போய்விடுகின்றன.

மூன்றாவதாக இதில் வரும் ‘கலகம்’ என்பது வெறும் பாவனையாக உள்ளது. முனியாண்டி என்ற கதாபாத்திரம் முதிர்ச்சியற்ற ஒரு மனத்தின் பகற்கனவுப்பிம்பம் போல உள்ளது. குறிப்பாக அதன் போக்கிரித்தனங்கள் எல்லாமே அக்ரஹாரத்து அம்பிகளின் கற்பனையில் உருவாகும் போக்கிரித்தனத்துக்கு நிகராக உள்ளன. காமம் குறித்த இந்நாவலின் சித்தரிப்புகளைக் கவனித்தால் இது புரியும். தமிழில் வெளிவரும் குஜிலிப்பதிப்பு  புத்தகங்களிலிருந்து பெற்ற அறிவின் வெளிப்பாடு போல அவை காணப்படுகின்றன. முதிர்ச்சியான காமச் சித்தரிப்பு என்பது எளிய விஷயமல்ல. மிக எளிய ஒரு தசை இயக்கத்தை மனித உறவின் மொத்தக் குறியீடாக மாற்றும் கற்பனை அதற்குத் தேவை.

ஆனால் இவ்வாசிரியருக்கு தசை இயக்கம் குறித்தே ஏதும் தெரியவில்லை என்ற எண்ணம் ஏற்படுகிறது. உதாரணமாக பரம போக்கிரியும், காமக் கலை நிபுணனுமான ஒருவன் ஒரு (கள்ளமற்ற!) பெண்ணுக்கு சுயபோகம் செய்வதெப்படி என்று ·போனிலேயே பாடம் எடுக்கிறான். விரலை நேரடியாக உள்ளே செலுத்தி வேகமாக அசைப்பது, அவ்வளவுதான் பாடம்! பெண்ணுறுப்பின் வெளி உதடுகளில் மட்டுமே காம உணர்ச்சி உள்ளது என்பதும், உட்பக்கத் தசைகளில் தொடுவுணர்ச்சி கூட மிகக்குறைவே என்பதும் ஆரம்பப் பாடங்கள். இந்தக் காமக் கலை நிபுணன் கற்றுத்தந்தபடி எந்தப் பெண்ணும் அதைச் செய்து விடமுடியாது.

அவனிடம் பேசும் எல்லாப் பெண்களும் ஒன்றுபோலவே எதிர்வினையாற்றுகிறார்கள். ஒரே சொற்றொடர்களை ஒரேவகை வியப்புகளை வெளிப்படுத்துகிறார்கள். உண்மையில் எப்படிப்பட்ட ஒரு கற்பனைச் சந்தி அது. பெண்களின் பாவனைகள் காமத்தில் வெளிப்படுவதன் முடிவற்ற சாத்தியக்கூறுகளை ஹென்றி மில்லர் எப்படி அற்புதமாக வெளிப்படுத்துகிறார்! உண்மையில் இந்நாவலில் காட்டப்படுவதுபோல இத்தனை நேரடியாக அது இருப்பது மிக அபூர்வம். தன்னை கைப்பற்றப்படவேண்டிய, அரண் சூழ்ந்த, மர்மப் பிராந்தியமாக உருவகித்துக் கொள்வதுதான் பெண்களின் இயல்பு.

இக்குறைகளுக்குக் காரணம் இந்நாவலில் உள்ள கற்பனையின்மையே. சாரு நிவேதிதாவின் படைப்புத்திறன் மூன்று தளங்களிலேயே வெளிப்படுகிறது. ஒன்று, நவீன கேளிக்கையூடக மொழியில் இருந்து தன் மொழியை உருவாக்கிக் கொண்டிருப்பது. இரண்டு, அங்கதம். மூன்று சிதிலங்களினாலான ஒரு கட்டமைப்பை உருவாக்கிக் கொண்டிருப்பது. இம்மூன்றும் அவரது இயல்பான ஆளுமையுடன் பெரிதும் ஒத்துப்போவதனால் தான் சீரோ டிகிரி அவரது சிறந்த ஆக்கமாகவும் தமிழின் முக்கியமான நாவல்களில் ஒன்றாகவும் உள்ளது.

ஆனால் ஒரு நல்ல புனைவெழுத்தாளன் அவனுடைய புனைவுத்திறனால் வளர்த்து எடுத்துக்கொள்ளும் ஏராளமான நிகழ்ச்சிகள், நுண்ணிய தருணங்கள் இந்நாவலில் வெறும் குறிப்புகளாகவே விடப்பட்டுள்ளன. ஆர்த்தி மற்றும் அவந்திகாவின் ஆளுமைகள் மிக தட்டையாக ஒரேபோலச் சொல்லப்பட்டிருக்கின்றன. பாலியல் உறவின் சந்தர்ப்பங்கள் ஒரேவகையாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. ஆகவேதான் வாசிக்கையில் ஆரம்பத்தில் சில பத்திகள் ஆர்வத்தை ஊட்டி உடனே சலிப்பு நோக்கிக் கொண்டுசெல்கின்றன அவை.

உலகில் எழுதப்பட்ட பின் நவீனத்துவ ஆக்கங்கள் கற்பனையைக் கட்டவிழ்த்து விடுபவை. கற்பனையை எதுவும் கட்டுப்படுத்தக்கூடாது என்பதனாலேயே அவை நேர்கோடற்ற கூறுமுறையை தேர்வு செய்தன. யதார்த்தத்தின் விதிகளை மீறின. எதையும்  உள்ளே கொண்டிருக்கும் கொலாஜ் வடிவை உருவாக்கிக் கொண்டன. கற்பநை என்பது இப்பிரபஞ்சத்தை உருவாக்கியிருக்கும் யதார்த்தம் அளவுக்கே மகத்தானது என்றே பின்நவீனத்துவ நாவல்கள் காட்டுகின்றன. பின் நவீனத்துவ வடிவ இயல்புகளையும் மன இயல்புகளையும் கொண்டிருக்கும் சீரோ டிகிரி கற்பனையின்மையால் அந்த வரிசையில் சேர முடியாத ஒன்றாக உள்ளது.

இந்நாவலின் முக்கியமான, இறுதியான எதிர்மறை அம்சம், இது உருவாக்கும் அமைப்புக்கு எதிரான கலகம் என்பது மிக மேலோட்டமான ஒன்று என்பதுதான். நமது அமைப்பின் கருத்தியல் இம்மாதிரி எதிர்ப்புகளையெல்லாம் தனக்குள் அனுமதித்துக்கொண்டே இயங்கும் தன்மை உடையது. சரீஜாதேவி நூல்களை அனுமதிக்கும் சமூகம் இந்த எழுத்தையும் அதன் இன்னொரு வகையாகக் கொண்டாடி அமரச்செய்துவிடும். பாலியலெழுத்து ஒரு வகையிலும் கலகம் அல்ல. அது மீறல்கூழ அல்ல.

உண்மையில் ஓர் அமைப்பின் பாவனைகளுக்கும், வெளிப்பாடுகளுக்கும் எதிரான கலகம் என்பது மிக மேலோட்டமான ஒன்று. சாருநிவேதிதா செய்திருப்பது அதுதான். கலகம் என்பது எது அச்சமூகத்தின் ஆதாரமாக அதனால் பொத்திப் பாதுகாக்கப்படுகிறதோ எதைச் சொன்னால் அச்சமூகமே கொந்தளித்தெழுமோ அதைச் சொல்வது. நம் சமூகத்தின் அடித்தளங்களைக்  கட்டி எழுப்பியிருக்கும் நுண்ணிய நரம்புகளைப்போய்த் தீண்டுவது என்பது எளிய விஷயமல்ல.

அதற்கு அறுவை சிகிச்சைக் கத்திபோல ஊடுருவிச் செல்லும் ஆய்வுப் பார்வை தேவை. ஒவ்வொன்றையும் அதன் மிகச் சிக்கலான வடிவிலேயே எதிர்கொள்ளும் மனவிரிவும் தேவை. சாருநிவேதிதா அமைப்பை எளிமைப்படுத்துகிறார். எனவே அவரது எதிர்ப்பும் எளிமையானதாக உள்ளது.

[சொல்புதிதில் வெளிவந்த கட்டுரை]

முந்தைய கட்டுரைஇன்று பெற்றவை : எழுத்தாளனின் டைரி
அடுத்த கட்டுரைமேற்குச்சாளரம் -சில இலக்கியநூல்கள்