ஆனந்த விகடனில் நாஞ்சில்நாடன் போட்ட இளம் படைப்பாளிகளின் பட்டியலைப் பார்த்தேன். இணையத்தில் தேடி அதை எடுத்துக் கொடுத்திருக்கிறேன். அதில் யாரைச் சேர்க்கலாம் சேர்க்கக் கூடாதென்றெல்லாம் வழக்கம்போல விவாதங்கள். நான் இப்படத்தை இங்கே அளிப்பது தமிழில் எழுதவந்துள்ள புதிய தலைமுறை படைப்பாளிகளை இவ்வகையில் அறிமுகம் செய்வது உற்சாகமளிக்கிறது என்பதனாலேயே. அதன்மூலம் அவர்கள் மேலும் பரவலாக வாசகர்களைச் சென்றடைய வாழ்த்துக்கள்.
இதில் அடிமுதல் முடிவரை அசட்டுத்தனம் என்று சொல்லத்தக்க வினாக்கள் இரண்டு. எந்த இலக்கிய விவாதத்திலும் நாலைந்து கோயிந்துக்கள் கிளம்பி வந்து படு சீரியஸாக அவற்றைக் கேட்டு ‘கேட்டுப்புட்டம்ல?’ என்று முகத்தை வைத்துக்கொள்வார்கள். க.நா.சு காலம் முதல் அந்த மொக்கைக் கேள்விகளுக்குப் பதில் சொல்லப்பட்டு வருகிறது. அதெல்லாம் அவர்களுக்கு தெரிய நியாயமில்லை. வாசிக்கும் பழக்கம் இருந்தால் அவர்கள் ஏன் அப்படிக் கேட்கப்போகிறார்கள் பாவம்.
முதல்கேள்வி இப்படி பட்டியல்போடுவது சரியா என்பது. உலகமெங்கும் எங்கு இலக்கியம் உள்ளதோ அங்கெல்லாம் இப்படி பட்டியல் போடப்பட்டுக்கொண்டே இருக்கிறதென்பதையும், இலக்கியம் தோன்றியநாள் முதல் இப்படிப்பட்ட பட்டியல்கள் வழியாகவே அது தரம் காணப்பட்டு தொகுக்கப்பட்டு முன்வைக்கப்படுகிறது என்பதையும் கோயிந்துக்களுக்கு கொட்டை எழுத்தில்தான் சொல்லவேண்டியிருக்கிறது. சங்ககால நூல்களெல்லாம் அப்படிப்பட்ட பட்டியல்களே. ஐம்பெருங்காப்பியங்கள் ஐஞ்சிறு காப்ப்பியங்கள் பன்னிரு திருமுறைகள் என்பவை எல்லாம் பட்டியல்களே
பட்டியல் என்பது ஒரு ரசிகன் அல்லது திறனாய்வாளன் தன் ரசனையின் அல்லது ஆய்வின் அடிப்படையில் முன்வைக்கும் ஒரு தேர்வு.அதற்கான காரணங்களை அவன் சொல்லலாம். சொல்லாமல் விட்டாலும் அந்தப்பட்டியலே அந்த அடிப்படைகளைக் காட்டும். அந்த பட்டியல்காரரின் தனிப்பட்ட ரசனையும் நேர்மையும்தான் பட்டியலை முக்கியமானதாக்குகின்றன. எல்லாரும் பட்டியல்போடலாம். ஆனால் பட்டியல் போட்டவன் யார் என்பதே முதல்வினாவாக இருக்கும்.இப்பட்டியல் முக்கியமானதாக ஆவது நாஞ்சில்நாடன் என்ற ஆளுமையால்தான்.
நவீனத் தமிழிலக்கியத்தில் க.நா.சு போட்ட பட்டியல் வழியாகவே இலக்கிய விழுமியங்கள் உறுதியாக்கப்பட்டன. முக்கியமான படைப்புகள் முன்வைக்கப்பட்டன. இன்று நாம் நவீனத் தமிழிலக்கியம் என எதைச் சொல்கிறோமோ அது க.நா.சு போட்ட பட்டியல் வழியாக திரட்டப்பட்ட ஒன்றுதான்.அவருக்கு முன்னரே ரா.ஸ்ரீ.தேசிகன், ஏ.வி.சுப்ரமணிய அய்யர் போன்றவர்களின் இலக்கியநூல்பட்டியல் வந்துள்ளது.
இன்றுபோலவே அன்றும் அப்பட்டியல் விரிவான விவாதத்துக்கு உள்ளாயிற்று. பட்டியலில் பெயரில்லாதவர்களெல்லாம் பிலாக்காணம் வைத்தார்கள். அகிலன் லபோ திபோ என்று ஆர்ப்பாட்டம் பண்ணி அழுத கட்டுரை ஒன்றை வாசித்திருக்கிறேன். அந்த விவாதங்கள் வழியாகவே பட்டியல் மேலும் முக்கியமாக ஆனது. அதிலுள்ள இலக்கியவாதிகள் கவனிக்கப்பட்டனர். இலக்கிய அடிப்படைகள் விவாதிக்கப்பட்டன.
எந்தப்பட்டியலும் முழுமையானது அல்ல. மிகச்சிறப்பானது என்று சொல்லத்தக்க க.நா.சுவின் பட்டியலிலேயே சண்முக சுப்பையா போன்றவர்கள் காலத்தை தாண்டவில்லை. காலத்தைத் தாண்டிய ப.சிங்காரம் இல்லை.
இரண்டாவது கோயிந்துக் கேள்வி இலக்கியத்தை தரம்பிரிக்கலாமா என்பது. இட்லியை தரம்பிரிக்காமல் இவர்கள் சாப்பிடுவார்களா என்ன? மனிதன் அறிபவை அனைத்தையும் தரம்பிரித்தபடித்தான் இருக்கிறான். அதன் பெயர்தான் ரசனை. மேல்கீழென்றும் நல்லது கெட்டதென்றும் பிரிக்காமல் ரசிப்பவர்கள் எவரும் இல்லை.
இருக்கலாம்.அருண்மொழியின் பாட்டி 98 வயதான சரஸ்வதி அம்மாள் எந்த புத்தகத்தையும் அப்படியே படித்துவிடுவார். ஒரு சொல்கூட அரைமணிநேரத்துக்குமேல் நினைவில் நிற்காது. மறுநாளும் அதே நூலை அப்படியே வாசிக்கமுடியும் அவரால்.அதெல்லாம் ஒருவகை கைவல்யநிலை.
நாஞ்சில்நாடனின் இப்பட்டியலில எல்லாவகை படைப்பாளிகளும் இடம்பெற்றுள்ளனர். ஒரு குறிப்பிட்ட நோக்கு மேலோங்கிவிடக்கூடாது என அவர் கவனம் எடுத்திருப்பது தெரிகிறது. ஆனால் எனக்கு இலக்கியத்தில் பந்திப்பாய் விரிப்பதில் நம்பிக்கை இல்லை. அது ஒருவகையில் தரமான படைப்பாளிகளை அவமதிப்பது என நினைக்கிறேன். நான் மிகச் சிறிய பட்டியலையே எப்போதும் போடுவேன்.
நாஞ்சில்நாடன் அவரது பட்டியலில் அதிகமாக அறியப்படாதவர்கள் என்ற விதியையும் அளவுகோலாகக் கொண்டரோ என்றும் படுகிறது. ஏனென்றால் ஜோ.டி.குரூஸ், சு.வேணுகோபால்,கண்மணி குணசேகரன் போன்ற அறியப்பட்ட இளம் சாதனையாளர்கள் அவரது பட்டியலில் இல்லை. சற்று வயது மூத்தவரான குமாரசெல்வா இருக்கிறார்.
இப்பட்டியலில் கவிஞர்களில் இசை, இளங்கோ கிருஷ்ணன், லிபி ஆரண்யா ஆகியோரை மிகமுக்கியமான கவிஞர்கள் என்றும் நாளைத்தமிழின் நட்சத்திரங்கள் என்றும் எண்ணுகிறேன். முகுந்த் நாகராஜன் ஸ்ரீநேசன் போன்றோர் முக்கியமான விடுபடல்கள்.
இளம் புனைகதையாளர்களில் எஸ்.செந்தில்குமார், வா.மு.கோமு லட்சுமி சரவணக்குமார், கே.என்.செந்தில் ஆகியோரை முதன்மையானவர்கள் என்று சொல்வேன. கீரனூர் ஜாகீர் ராஜா முக்கியமான விடுபடல்.
மேலும் இத்தகையபட்டியல்களை தமிழ்பேசும் உலகை முற்றிலும் கருத்தில்கொண்டே போடவேண்டும். அந்நிலையில் மலேசிய எழுத்தாளர்களான நவீன், பாலமுருகன், சு.யுவராஜன் ஆகியோரை நான் சேர்ப்பேன்.ஈழப்படைப்பாளிகளில் யோ.கர்ணன், புலம்பெயர்ந்த படைப்பாளிகளில் டி.செ.தமிழன் [இளங்கோ]
பெண்களில் உமா மகேஸ்வரி என் நோக்கில் முதன்மையான படைப்பாளி. அதன்பின் சந்திரா. விடுபட்ட பெண்படைப்பாளிகள் என்றால் நான் ஏழெட்டுபேரைச் சொல்லமுடியும். ஆழியாள், பகீமா ஜகான், அனார் போல.
பட்டியலில் உள்ள ஆண்படைப்பாளிகளில் அனைவரும சிறப்ப்பாக எழுதக்கூடியவர்கள்தான். இன்னும் அதிகமாக அவர்களிடம் எதிர்பார்க்கிறேன். ஆனால் பெண்களில் பலர் சொல்லும்படி எதுவுமே எழுதாமல் பலவகை உத்திகள் மூலம் ஊடகப்பிம்பங்களாக ஆனவர்கள்.பலரை ஏன் எழுத்தாளர்கள் அல்லது கவிஞர்கள் என்று சொல்கிறார் நாஞ்சில் என்றே புரியவில்லை.
இது ஒரு முக்கியமான அம்சம். இன்று ஆண்கள் எழுதித்தான் நிற்கவேண்டியிருக்கிறது. பெண்களுக்கு பெண்களாக தங்களை முன்வைத்தாலே இடம் கிடைத்துவிடுகிறது. கொஞ்சம் பெண்ணியமும் பீரிட்டால் பெரும்பாலானவர்கள் ‘எதுக்கு வம்பு, காலம்கெட்ட காலத்திலே?’ என்று ஜகாவாங்கிவிடுவார்கள்.
இவர்களைச் சேர்த்த அடிப்படையில் பாவம் தமிழச்சி தங்கபாண்டியனையும் கனிமொழியையும் சேர்த்திருக்கலாம். இப்போது தேர்தலில் தோற்றிருந்தாலும் அடுத்த ஐந்தாண்டில் தமிழ்ச்சிற்றிதழ்களில் அவர்கள் முக்கியமான கவிஞர்களாக இருப்பார்கள்தானே?