இடவப்பாதி

தென்மேற்குப் பருவமழை மலையாள கொல்லவருடம் இடவ மாதம் பாதியில் வரும். ஜூன் முதல்வாரத்தில். அதை இடவப்பாதி என்பார்கள். வாழைநடவுக்குரிய மழை. நாற்றங்கால் கட்டுவதற்கான மழை. ஜூன்மாதம் பள்ளிதிறக்கும்போது நனைந்துசொட்டி வழியெங்கும் பெருகியோடும் ஓடைகளில் இறங்கி ஆடி ஏறிச் செல்வோம். பள்ளிக்கு உள்ளேயும் மழை பெய்துகொண்டிருக்கும். சிலேட்டையோ சாப்பாட்டுத்தட்டையோ தலைக்கு வைத்தபடி பாடம் கற்போம்.

monsoon

இவ்வருடம் எட்டுநாள் தாமதம். நேற்று முன்தினம் கேரளத்தில் மழை கரைகடந்துவிட்டது என்றார்கள். நேற்று இப்பருவத்தில் எர்ணாகுளம் மரைன் டிரைவில் கடலை நோக்கி எழுந்த பன்னிருமாடிக் கட்டிடத்தின் எட்டாவது அடுக்கில் இருந்த தங்கும்விடுதியில் முழுச்சுவரையும் நிரப்பிய பெரிய கண்ணாடிச் சன்னலுக்கு அப்பால் வளைந்த கடலுக்குள் இருந்து இடவப்பாதி மழை திரண்டு பெருகி வருவதை எதிர்நின்று கண்டேன்.
kerala-rains-474x320

கரிய மேகம்போல மழை வந்தது. அசைவற்ற கடல் மேல் ஒரு நிறமாறுதல் நெருங்கிவந்தது. பின் ஒரு கணத்தில் மாபெரும் விசிறியால் ஓங்கி அறைந்தது போல கண்ணாடிச்சாளரத்தை மோதியது. கண்ணாடி விளிம்பிலிருந்த கைவிரல் நுழையும் இடைவெளிவழியாக வந்த காற்று ஒரு கண்ணுக்குத்தெரியாத குளிர்ந்த பட்டைபோல அறைக்குள் நின்றது. அதைத் தொடமுடிந்தது. அதை எதிர்த்தபோது தள்ளி மறுசுவரை நோக்கிச் செலுத்தியது. அறையெங்கும் நீர்த்துளிகள் தெறித்து சுவர்கள் வழியத்தொடங்கின


நேற்று இங்கே பருவமழையின் முதல் இருள் வந்து பரவியது. நாலைந்துநாட்களாகவே காற்றில் வெக்கை இருந்தது. வெயில் மங்கி வியர்வை கடித்தது. காலை ஒன்பதுமணிக்கும் விலகாத இருளில் ஒரு நடை சென்றபோது கணியாகுளம் ஏரிக்கு மேலே காற்று பெருகிச்சென்றுகொண்டிருப்பதை அறிந்தேன். சிந்தனைகளைக்கூட அடித்துப்பறக்கவிட்டு வெறுமையின் களி நிறைக்கும் குளிர்காற்று. வேளிமலை அடுக்குகள் மீது மேகங்கள் இறங்கி இருந்தன.

இரவெல்லாம் காற்றின் ஊளை. தென்னைகள் பேய்பிடித்து கூந்தல் சுழற்றி ஆடின. சன்னல்களில் ஒன்றை மட்டும் திறந்து வைத்துப் படுத்திருந்தேன். அணை மதகு என பீரிட்ட காற்றில் கொசுவலை கொந்தளித்தது. கனவுகளுக்குள் என் மேல் ஓர் அருவி பெய்துகொண்டிருந்தது. இதோ சற்றுமுன் பேரொலியுடன் வானம் உடைந்து விழுவதுபோல முதல் மழை. அறைபட்டுத் துடிக்கும் இலைகளுக்கு மேல் கண்ணாடிச்சரடுகள் போல மழை நிலைத்திருக்கிறது. இடவப்பாதி தொடங்கிவிட்டது.

பருவமழைப்பயணம் 2012

ஆனியாடி

முந்தைய கட்டுரைவலி
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 9