அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
தங்களுடைய ”விதிசமைப்பவர்கள்” மற்றும் ”தேர்வு செய்யப்பட்டவர்கள்” கட்டுரைகளை வாசித்தேன்.. அது சம்பந்தப்பட்ட பகடிகளையும், விமர்சனங்களையும் சமூக வலைத்தளங்களில் காண நேர்ந்தது.. இதில் இருக்கும் கசப்பான உண்மையை ஏற்றுக்கொள்ள இயலாது தங்களைக் கர்வமானவராகச் சம்பந்தேமேயில்லாமல் சித்தரித்த சில பதிவுகளையும் பார்க்க நேர்ந்தது..
தாங்கள், சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை…
இந்த உலகத்தை இழுத்துச் செல்பவர்கள் அத்தனை பேரும் அல்ல.. ஒரு சிலரே…. (அந்தச் சிலர் பார்வைக்கு வராமல் கூட இருக்கலாம்)
விதி சமைப்பவர்கள் எல்லோரும் பிரபலமானவர்கள் அல்ல…
ஆனால், அவர்கள் தனித்தியங்குபவர்கள்… ஆட்டு மந்தைகளோடு, மந்தைகளாகக் கலந்து விடாதவர்கள்… எதையும் கேள்வி கேட்பவர்கள்.. பதில்களை உள்வாங்கி உண்மையின் தரிசனத்தைக் கண்டறிபவர்கள்…
கடந்த நூற்றாண்டு வரை தாசி வீட்டுக்குச் சென்றே காலத்தைக் கழித்த, காலஓட்டத்தில் தூசிகளாகப் பறந்து போனோரின் பங்களிப்பு என்ன? இந்த சமூகத்தில் மரபணுக்கடத்தலுக்கு உதவி செய்தது மட்டுமே.. ஆனால் அந்தக் காலத்திலும், கட்டடக் கலை, சிற்பக் கலை என இந்தச் சமூகத்திற்கு ஈந்தளித்தவர்கள் மட்டுமே விதி சமைத்தவர்கள்… (அதிகமான தன்முனைப்பு அவர்களை வித்தியாசப்படுத்தியிருக்கிறது.. உலகம் தோன்றிய காலத்திலிருந்து இதுதான் நியதி)
நம் தேசத்தில் அத்தனை பேரும் சுதந்திரப் போராட்டக் காலத்தில் உணர்வு கொண்டு மேலெழும்பியதில்லை.. அந்த உணர்வு விதி சமைக்க முற்பட்டவர்களுக்கே தோன்றியது…
“இந்தப் பொண்ணுங்களே இப்படித் தாண்டா” அப்படி என்று லுங்கியைக் கட்டிக் கொண்டு ஆடுவதைப் பார்த்துச் சிலிர்க்கும் குஞ்சாலாடுகள் மத்தியில், “The Patience Stone” மாதிரியான படங்களைப் பார்த்துச் சிலிர்த்துப் போகும் தன்முனைப்பு ஓர் உதாரணம்.. அங்கிருந்துதான் விதி சமைப்பின் விதை ஆரம்பமாகிறது…
மீண்டும் சொல்கிறேன்.. விதி சமைப்பவர்கள் அத்தனை பேரும் ஊர், உலகத்திற்கே தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை… அவர்களில் பெரும்பாலோனோர் மறைந்தியங்குகிறார்கள்… டெல்லியில் நான் கொடுத்த 40 ரூபாய்க்கு, மீதம் 5 ரூபாயை நான்கைந்து கடைகளில் ஏறி இறங்கி சில்லறை மாற்றிக் கொடுக்க முற்பட்ட ரிக்ஷாக்காரர் அவரைச் சுற்றியுள்ள சமூகத்திற்கும் அவர் நேர்மையை, உழைப்பை Broadcast செய்கிறார்…
அதன் மூலம் அவரும் விதி சமைப்பவர் ஆகிறார்…
பொதுப்புத்தியிலிருந்து விலகி நடக்கும்போது, கிண்டல், கேலி, அவமரியாதை, என அத்தனையும் அந்த விதிசமைப்போருக்கு எதிராக நிகழ்கிறது;…. ஆனால், அதையும் கடந்து இந்த மானுட உலகம் இயங்க, அந்தக் குறிப்பிடத் தகுந்த சில பேர் மட்டுமே எரிபொருளாகிறார்கள்…
All are common… But some persons know this truth become exceptional and contribute extraordinarily ..
பாலசுந்தரம்
அன்புள்ள பாலசுந்தரம் அவர்களுக்கு,
நான் எழுதியது ஒன்றும் அபூர்வமான அல்லது விவாதத்துக்குரிய கருத்து அல்ல. அனைவரும் அறிந்த ஒன்றே. அதை எதிர்கொள்வது சற்றுக் கடினமானது, அவ்வளவுதான்
எது மிக அதிகமாக நகையாடப்படுகிறதோ, வசைபாடப்படுகிறதோ அது எத்தனை முயன்றாலும் தவிர்க்கமுடியாத உண்மை. அந்த நகையாடலும் வசையாடலுமே அதற்கான ஆதாரங்கள். வரலாறெங்கும் அப்படித்தான்
நன்றி
ஜெ
மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம். காலை எழுந்தவுடன் நான் செய்யும் செயல்களில் முதன்மையானது வெண்முரசு வாசிப்பது, பின் உங்கள் வலைப்பூ வாசிப்பது.
இன்று எனக்கு பிறந்த நாள். பொதுவாக பிறந்த நாள் கொண்டாட்டங்களில் என்றுமே ஈடுபாடு கொண்டதில்லை அல்லது கொண்டாடுமளவுக்கு பெரிய ஆளும் இல்லை. ஆனால் நல்லவற்றை, நல்ல நிகழ்வுகளை மனம் விரும்பும். இன்று உங்கள் வலைப்பூவை திறக்கும் முன் ஒரு விநாடி யோசித்தேன். ஏதாவது வித்தியாசமாக இருக்குமா என மனத்தின் ஓரத்தில் ஒரு எதிர்பார்ப்பு
//ஒரு நூலை வாசிக்கத்தோன்றும் ஒருவர் இயற்கையால் கோடானுகோடிகளில் இருந்து தேர்வுசெய்யபப்ட்ட அபூர்வமான பிறவி. அவருக்கு ஒரு வரம் அளிக்கப்பட்டிருக்கிறது. அவர் தன்னை மாற்றிக்கொள்ள முடியும். தன் சூழலை மாற்றமுடியும்//
ஆஹா கிடைத்தது எனக்கான செய்தி. இந்த பிறந்த நாளை உங்கள் “தேர்வு செய்யப்பட்ட சிலர்” இனிதே தொடக்கி வைத்தது.
மிக்க நன்றி
டாக்டர் கே.ரமேஷ்
அன்புள்ள ரமேஷ்,
நான் இவ்விஷயத்தில் கவனிப்பது ஒன்றுதான். இப்படி ஒரு கருத்தைக் கண்டதுமே தங்களை சாமானியனாக, சாதிக்கவே வாய்ப்பற்றவனாக எண்ணிக்கொள்பவர்களே பெரும்பாலானவர்கள். அவர்களின் வழி ஒன்று வசைபாடுதல், திரித்தல். அல்லது ஏளனம். மிகச்சிறுபான்மையினரே தன்னை விதிசமைப்பவராக, சாதிக்கவிருப்பவராக எண்ணிக்கொள்கிறார்கள். உண்மையில் அவர்களே அப்படிப்பட்டவர்கள். சாதிப்பவனாக, ஆகவே வேறுபட்டவனாக, தன்னை அறிதலென்பதே சாதிப்பதன் முதல் படி.
ஜெ