பகுதி இரண்டு : பெருந்துறைப் புகார்
[ 6 ]
“ஆன்மாவுக்கு மிக அண்மையானது உடல். மிகச்சேய்மையானது சித்தம். நடுவே ஆடுவது மனம். மெய், வாய், கண், மூக்கு, நாக்கு, சித்தம், மனமெனும் ஏழுபுரவி ஏறிவரும் ஒளியனை வணங்குவோம். அவனே முடிவிலி. அவனே காலம். அவனே பிரம்மம். அவன் வாழ்க! ஓம், அவ்வாறே ஆகுக!” என்று சொல்லி முதுசூதர் சைலஜ மித்ரர் வணங்கி தன் குறுயாழை தோளிலிருந்து கழற்றி அருகே நின்றிருந்த இளம்மாணவனிடம் அளித்தார். அவன் அதுவரை வாசித்த குறுமுழவை தோளுக்குப்பின் தள்ளிவிட்டு யாழை வாங்கி அதன் நரம்புகளைத் தளர்த்தி அப்பால் நின்றுகொண்டிருந்த ஒற்றைமாட்டுவண்டிக்குள் கொண்டு வைத்தான்.
நிலவொளியில் காவிரியின் கைவிரலான குடமுருட்டி வளைந்து மின்னிக்கிடந்தது. கிளைபரப்பி கரைமணலில் நிழல் வீழ்த்தி நின்றிருந்த நீர்மருதமரத்தடியில் வடபுலத்துச் சூதர்குழுவினர் வளைந்து அமர்ந்திருக்க அப்பால் மூன்று கல்லடுப்புகளில் உலையில் சோறு கொதித்துக்கொண்டிருந்தது. நிலவொளி விழுந்த வெண்தாடியை நீவியபடி சைலஜ மித்ரர் புன்னகை புரிந்தார். “பெரும்பசி கொண்ட யானைகளைப் போன்றவர்கள் சூதர்கள். நல்லூழாக அவர்களை குன்றாப்பசுமை கொண்ட வாழ்வெனும் பெருங்கானகத்தில் விட்டிருக்கின்றனர் விண்ணகத்தெய்வங்கள்.”
சூழ்ந்திருந்த சூதர்கள் நகைக்கும் ஒலி எழுந்தது. “முடிவிலாது சிரிக்கவும் முடிவிலாது கலுழவும் ஒவ்வொரு கணமும் திகைக்கவும் முடிவில் வியந்த விழிகளுடனேயே சிதையேறவும் ஆசியளிக்கப்பட்டவர்கள் சூதர்கள். அவர்களின் மூதாதையர் வினாக்களை விட்டுச்செல்கிறார்கள். வழித்தோன்றல்கள் வினாக்களைப் பெருக்குகிறார்கள். அவர்களின் மதலைகள் வினாக்களில் பிறந்து தவழ்ந்தெழுந்து வினாக்களை உண்டு உயிர்த்து வினாக்களில் மூழ்கி மாய்கிறார்கள். அவர்கள் வாழ்க!”
“துரியோதனனும் பீமனும் அக்கணம் முதல் உளம்பகிர்ந்து ஓருடல் கொண்டவர்களானார்கள். மேற்குக்கோட்டை வாயிலில் நிலவு அலையடித்த நீரில் இருவரும் நீந்திவிளையாடினர். அரண்மனை அடுமடையில் எதிரெதிர் மணையிட்டு அமர்ந்து மலைமலையென உண்டு தீர்த்தனர். இளந்தென்றலாடிய முற்றத்திலமர்ந்து தாங்கள் கண்டதையும் கொண்டதையும் சொற்களாகப் பகிர்ந்துகொண்டனர். சூதர்களே, அன்பெனும் நெருப்பில் நெய்யெனப் பெய்பவை சொற்கள்” என்றார் முதுசூதர் சைலஜ மித்ரர்.
“ஒருவர் உடலை ஒருவர் தொடாமல் வாழமுடியாதென்றாயினர் அவர்கள். இரவில் உடல்தழுவி அவர்கள் துயின்றனர். கனவில் பிறன் உடலை தன்னுடல் என்று தொட்டுக்கொண்டனர். காலையிலெழுந்து பிறன் கையை தன் கையென எடுத்து கணிகண்டனர். படைக்கலப் பயிற்சியில் கதைகளைச் சுழற்றி களிப்போரிட்டனர். போர்க்களிறுகள் மீதேறி கடுவனம் புகுந்து வனக்களிறுகளை துரத்திச்சென்றனர். மரக்கிளைகள் மேலேறி மலைப்பாம்புகளை எடுத்து கழுத்தில் அணிந்துகொண்டனர். உவகை கொண்டவர்களுக்கு இவ்வுலகமே நகைப்புக்குரியவற்றாலானதாகத் தெரிகிறது” சைலஜர் சொன்னார்.
“அரண்மனை அடுமடையில் பீமன் தன் அகம் புறப்பொருள் வெளியாகி விரிந்திருப்பதைக் கண்டுகொண்டான். அடுப்பிலெரியும் நெருப்பில் அமர்ந்திருக்கும் பேருருளி இப்புடவி என்றறிந்தான். அது சமைத்துவெளித்தள்ளும் அன்னத்தை உண்ணும் அன்னமே உடலென்றறிந்தான். பசி என்பது அன்னத்துக்காக அன்னம் கொள்ளும் வேட்கை. சுவை என்பது அன்னத்தை அன்னம் கண்டுகொள்ளும் உவகை. நிறைவென்பது அன்னம் அன்னமாகும் தருணம். வளர்வதென்பது அன்னம் அன்னத்தில் படர்ந்தேறும் நீட்சி. இறப்பென்பது அன்னத்திடம் அன்னம் தோற்கும் கணம். அன்னமே பிரம்மம். அது வாழ்க!”
“யானைக்கொட்டிலில் துரியோதனன் தன் அகம் நிகழ்வதை கண்டடைந்தான். உயிர் நிறைந்து கருமை கொண்ட யானையுடல் ஒரு பெரும் கலம். அதன் அனைத்து மூடிகளையும் தள்ளித்தள்ளி உள்ளிருந்து ததும்புகிறது புடவியை ஆக்கி ஆளும் விசை. யானையருகே அமர்ந்து அதைப்பார்ப்பது புவிநிகழ்வை தரிசிப்பது. யானை தன் கட்டளையை ஏற்பதை அறியும் கணத்தில் பருவெளியுடன் உரையாடும் நிறைவை மானுடன் அறிகிறான். உயிரே பிரம்மம். அது வாழ்க!”
“யானைக்கொட்டிலில் பீமன் அவன் முன்னின்று சமைத்த மூலிகைச்சோற்றுக் கவளங்களை ஈச்சைப்பாயில் மலையெனக் குவித்து நின்றிருக்க அருகே அக்கவளங்களை எடுத்து கீழ்நோக்கிப் பிளந்த பெருவாயின் உள்ளே செலுத்தும் பாகர்களை நோக்கியபடி நின்றிருந்தான் துரியோதனன். தமையனின் உலகு தம்பியின் உலகை உண்டது. அன்னம் அன்னத்தை அறிந்தது. அன்னம் அன்னமாகியது. அன்னம் வழியாகவே ஒருவரை ஒருவர் அறிந்துகொண்ட இருவரின் கைகளும் இயல்பாக நீண்டு விரல்கோத்துக்கொண்டன” முதுசூதர் சொல்லிமுடித்தார்.
உணவு ஒருங்கிவிட்டது என்று இளையசூதன் வந்து சொன்னான். மண்ணில் குழியெடுத்து அதில் தீயில் வாட்டிய வாழையிலையை விரித்து குழித்து அவர்கள் அமர்ந்தனர். கொதிக்கும் பெருங்கலத்தில் இருந்து சிறுமண்சட்டியில் பனங்கொட்டை ஓட்டால் ஆன அகப்பையால் ஆவியெழுந்த கஞ்சியை அள்ளி விட்டு அருகே கொண்டுவந்து பரிமாறினான் இளையசூதன். செந்நிறச் சம்பா அரிசியுடன் பாசிப்பயறும் கீரையும் இட்டு காய்ச்சி உப்பிட்டு இறக்கப்பட்ட கஞ்சி நறுமணம் கொண்டிருந்தது. அதில் பசுநெய் துளிகளை விட்டு பலாயிலை கோட்டலால் அள்ளி ஊதிச் சூடாற்றி உண்ணத்தொடங்கினர்.
காவிரிமீனைப்பிடித்து சேற்றில் பொத்தி கனலில் இட்டுச் சுட்டு உரித்தெடுத்த வெள்ளை ஊனும், விளாங்காயுடன் உப்பும் இஞ்சியும் சேர்த்து சதைத்த துவையலும் இரு பூவரசம் இலைகளில் தொட்டுக்கொள்வதற்காக வைக்கப்பட்டிருந்தன. முதுசூதர் “அன்னத்தை அறிகையில் அன்னம் கொள்ளும் பேருவகையை சுவை என்கிறார்கள். காமம் என்கிறார்கள். இரண்டுக்கும் அப்பாலுள்ளது இரு மல்லர்களின் தோள்கள் அடையும் நட்பு” என்றார்.
இளநாகன் “ஆம், எந்தை என்னிடம் சொல்லியிருக்கிறார். உடல் தன் வழிகள் கொண்டது என. எத்தனை கொடும்பகைமை கொண்டிருந்தாலும் ஆணும்பெண்ணும் தழுவிகொள்ளலாகாது. உடல் பகைமையை மீறி காமத்தை அறியும்” என்றான். சைலஜ மித்ரர் தன் வெண்பற்கள் வெளிப்பட நகைத்து “ஆம், ஆனால் நான் இன்னுமொரு படி முன் செல்வேன். ஒருபோதும் இணைவல்லமை கொண்ட எதிரிகள் உடல்தழுவிக்கொள்ளலாகாது. உடல்கள் தங்கள் தனியுலகில் ஒன்றையொன்று அறியும்” என்றார்.
“அக்கணத்தில் என்ன நிகழ்ந்தது என்று தெய்வங்களும் அறியமுடியாது” என்றார் சைலஜ மித்ரர். “திசைத்தேவர்களும் பாதாளநாகங்களும் தேவசேனாபதியும் யானைமுகனும் விண்ணில் திகைத்து நின்றனர். மண்ணில் அவர்கள் ஆடவிட்ட பாவைகள் கை மீறி சென்றுவிட்டிருப்பதை அவர்கள் அறிந்த தருணம் அது.”
“உடல் முற்றிருப்பை பேரருளாகப் பெற்றது. பருப்பொருளாகத் திகழ்வதன் மாற்றமுடியாமையை வரமென அடைந்தது. மனமோ, சித்தமோ, ஆன்மாவோ முற்றிருப்பு கொண்டவை அல்ல. அவையனைத்தும் சார்பிருப்பு கொண்டவை. உள எனில் உளவாகி இல எனில் இலவாகி மாயம் கொள்பவை. உடலோ முதல்பேரியற்கையின் துளியென தன்னை அறிவது. முதல்பேரியற்கையோ மூவா முதலா நிலைப்பேரிருப்பு” முதுசூதர் சொன்னார். “ஆகவே தொட்டும் கவ்வியும் மோதியும் உண்டும் பிறந்தும் இறந்தும் உடல் அறிவதே சார்பற்ற முதலுண்மை என்றனர் முனிவர்.”
உணவுண்டு குடமுருட்டியில் இறங்கி நீர் அருந்தியபின் வெண்மணல் வெளியில் தாடிநிழல்வலை மார்பில் விழ நின்று நிமிர்ந்து கீற்றுநிலா திகழ்ந்த வானை நோக்கி முதுசூதர் சொன்னார். “வானை மண்ணை கதிரை நிலவை காற்றை கனலை அறியும்போதெல்லாம் அகமுணரும் எழுச்சியை சொல்வதென்றால் ‘உள்ளது’ எனும் ஒற்றைச் சொல்லேயாகும். ஆம், உள்ளது! அஸ்தி! அஸ்தி! அஸ்தி!” சட்டென்று உரக்கச் சிரித்து “ஆகவேதான் யானைக்கு ஹஸ்தி என்று பெயர்வைத்தான் மானுடன். ஹ! அஸ்தி!” என்றார்.
“அஸ்தி என்பது மாமுனிவர் கபிலரின் முதற்சொல்” என்று முதுசூதர் தொடர்ந்தார். “இமயமலைச்சாரலில் கோதமர்கள் ஆளும் கபிலவாஸ்து என்னும் சிறுநகரில் அவர் பிறந்தார். புராணங்களின்படி பிரம்மனின் மைந்தனாகிய கர்த்தம பிரஜாபதிக்கு சுவாயம்புவமனுவின் மகளாகிய தேவாகுதியில் ஒன்பது பெண்களுக்குப்பின் பிறந்தவர் கபிலர். அவரை சக்ரதனுஸ் என்று பெயரிட்டு வளர்த்தனர். ஆயினும் அவரது ஆசிரியரான புலஹர் அவர் குழலின் நிறத்தால் அவரை கபிலர் என்று அழைத்தார். குருநாவால் சொல்லப்பட்டமையால் அப்பெயரே நிலைத்தது.”
புலஹரிடம் வேதங்களும் வசிட்டரிடம் வேதாந்தமும் விஸ்வாமித்திரரிடம் வேதாங்கங்களும் கற்றறிந்தார் கபிலர். கர்த்தமரிடம் அந்த அறிதல்களையெல்லாம் ஒன்றாக்கும் மந்திரத்தையும் கற்றார். அறிவிலேறி அறிவைக் கடந்து வெறுமையிலமர்ந்திருந்த அவரிடம் கணவனை இழந்து துயருற்றிருந்த அவரது அன்னை முதிய தேவாகுதி வந்து பணிந்தாள். அன்னைவயிற்றுக்கு உகக்கும் மெய்ஞானத்தை அருளும்படி வேண்டினாள். தன் அறிவில் தான் நிறைந்து திளைத்திருந்த கபிலர் திகைப்புடன் கண்டுகொண்டார். அன்னைக்குச் சொல்ல அவரிடம் சொற்களேதும் இருக்கவில்லை.
‘அன்னையே, அருகமர்க. மெய்மை என்னவென்று நீயும் நானும் சேர்ந்து தேடுவோம்’ என்றார் கபிலர். அவர் அமர்ந்திருந்த குகைக்குள் தேவாகுதியும் அவர் காலடியில் அமர்ந்துகொண்டாள். நெடுங்காலத் தவத்துக்குப்பின் விழித்து அன்னையின் அருகே அமர்ந்துகொண்டார் கபிலர். மீண்டும் நெடுங்காலம் தவம்செய்தபின் அவள் மடியில் அமர்ந்துகொண்டார். பின்னும் நெடுங்காலம் கடந்தபின் அவள் காலடியில் அமர்ந்துகொண்டார். பின்னும் நெடுங்காலம் கடந்தபின் அவள் காலடிகளை தன் சென்னியில் சூடிக்கொண்ட கணம் சாங்கிய மெய்த்தரிசனத்தை அடைந்தார்.
கபிலர் இயற்றியது கபிலசாஸ்திரம் என்றழைக்கப்படுகிறது. சாங்கியசூத்திரம், தத்துவசமாஸம், வியாசப்பிரபாகரம், கபில பஞ்சராத்ரம் என்னும் நான்கு முதல்நூல்களும் நான்கு வழிநூல்களும் சாங்கியத்தின் அடித்தளங்கள். அவரது எட்டு முதல்மாணவர்களிடமிருந்து தோன்றிய குருமரபு மலையிறங்கி நிலம்பரவும் நதியென விரிந்து வளர்ந்து பாரதவர்ஷமெங்கும் செழித்துள்ளது.
அனைத்தும் உள்ளன என்ற முதற்சொல்லில் தொடங்குகிறது அது. அதை சர்வாஸ்திவாதம் என்கின்றனர் முனிவர். பருப்பொருளே உண்மை. ஞானம் தேடுபவன் தன் கையை நீட்டி தன் முன்னால் இருக்கும் முதல் பருப்பொருளைத் தொடுவானாக. ‘இது’ என்னும் சொல்லை அவன் அடைவான். அக்கணம் அவன் பருவெளியைத் தீண்டுகிறான். அவன் அகம் விரியுமென்றால் அப்போது ‘அது’ என்று அறிவான். இவையே அது என்றும் அதுவே இவை என்றும் அறிபவன் அறியக்கூடுவதை அறிந்துவிட்டான்.
குனிந்து கீழே கிடந்த ஒற்றைக்கூழாங்கல்லை எடுத்து இளநாகன் முன் காட்டி முதுசூதர் சொன்னார் “இச்சிறு கூழாங்கல் காவிரிப்படுகை. குடமுருட்டியை கசியவிட்ட மேற்குமலைச்சிகரம். அச்சிகரத்திலமர்ந்திருக்கும் பெருமேகக் குவை. நீல வானம். வானில் அலையும் கோள்கள். மின்னும் ஆதித்யர்கள். இது அவையனைத்திலும் இருந்துகொண்டிருக்கிறது. இதைத் தொடுபவன் அனைத்தையும் தொடுகிறான். அதை அறிவதை சாங்கியம் சத்காரியவாதம் என்கிறது. இதைத் தொட்டு அதை உணர்வதை சாங்கியம் யோகம் என்கிறது.”
பிற பிறப்பின்றி தானே அனைத்துமாகி நின்றிருக்கும் அதை முதற்பேரியற்கை என்கின்றன சாங்கிய நூல்கள். மூலப்பிரகிருதி என்னும் பேரன்னை வெளிநிறைந்து வீற்றிருப்பவள். தன் வாலைத் தான் விழுங்கி முடிவின்மையில் அமைதிகொண்டிருக்கும் பெருநாகம் அவள் என்கின்றனர் கவிஞர். என்றுமிருக்கும் அவளை அகாலை என்கின்றன நூல்கள். அனைத்துக்கும் முதல்புள்ளியான அவளை பிரதானை என்கின்றன. அறியமுடியாமையை தன் அணியாகச் சூடிய அவளை அவியக்தை என்கின்றன.
இங்குள்ள அனைத்தும் பிறிதொன்றிலிருந்து எழுந்தவை என்றறிக. கனி மரத்திலிருந்து. மரம் வேரிலிருந்து, வேர் விதையிலிருந்து. அந்த முதல் விதையே மூலப்பிரகிருதி. இங்கெலாம் சூழ்ந்திருக்கும் காரியம் அவளே. அதன் காரணமும் அவளே. எனவே அவளை அகாரணி என்கின்றனர். தன்னுள் தான் நிறைந்திருப்பதனால் அவளை பூரணி என்கின்றனர். என்றுமிருக்கும் அவளை நித்யை என்கின்றனர். அவள் வாழ்க!
முடிவிலியில் சுழலும் சக்கரமென முழுமைகொண்டிருந்த பெருநாகத்தின் உள்ளில் எழுந்த முதல் எண்ணம் திருஷ்ணை எனப்பட்டது. இங்கிருக்கிறேன் என்று. நான் என்று. இது என்று. இனி என்று. முதல் எண்ணம் சத்வன் என்னும் மைந்தனாக அவள் கருவில் எழுந்தான். இரண்டாம் எண்ணம் ராஜஸன் என்று அவளுள் முளைத்தான். மூன்றாமவன் தாமஸன் எனப்பட்டான். மூன்றுமைந்தரை சூலுற்றுப்பெற்ற அன்னை தன் முன் அவர்கள் மூவரும் பொருதியும் பிணைந்தும் ஆடும் லீலையைக் கண்டு மகிழ்ந்தும் அஞ்சியும் துவண்டும் தன்னை உணர்ந்தாள். தன் முடிவிலிச் சுருளவிழ்ந்து நீண்டாள்.
இளைஞனே, அன்றுமுதல் பேரன்னை பிரகிருதி தன் வாலை தான் தேடி தவித்தலைகிறாள். அவள் லீலையே இப்புடவியாகியது. காலமாக, ஆதித்யர்களாக, கோள்களாக, இயற்கையாக, உயிர்க்குலங்களாக, காமகுரோதமோகங்களாக, கனிந்தெழும் ஞானமாக, முக்தியாக ஆகியது. சுருளவிழ்ந்த பேரன்னையை மாமாயை என்றனர் கவிஞர். மைந்தருடன் ஆட அவளுடலில் ஆயிரம் பல்லாயிரம் பலகோடிக் கரங்கள் எழுந்தன. அக்கரங்கள் ஆற்றும் அலகிலாச் செயலால் ஆகிவந்தது காலம்.
“மாயாவடிவம் கொண்ட பேரன்னையை வாழ்த்துவோம். எல்லா அழகுகளும் அவளழகே. எல்லா இருள்களும் அவளே. எல்லா நன்மைகளும் தீமைகளும் அவளிலிருந்து எழுபவையே. இன்மையும் இருப்பும் அவளே. அவளுடைய கருணையும் குரூரமும் ஆடும் பெருநடனமே இப்புடவி என்றறிக. அதுவே சாங்கிய மெய்ஞானமாகும்” என்று சைலஜ மித்ரர் சொல்லி வணங்கினார்.
கரைமேட்டின் வழியாகச் சென்றுகொண்டிருந்த செம்மண்ணாலான வண்டிச்சாலையின் வலப்பக்கம் எட்டு நீர்ச்சரடுகளாக பிரிந்தும் பின்னியும் நீர் அலைத்தோடும் குடமுருட்டி வந்தது. வலப்பக்கம் சீறியிறங்கிய மடைநீர் ஒளிரும் வகிடாக வளைந்தோடிச்செல்லும் விரிந்த வயல்வெளிகள் காற்று அலையடிக்க அரையிருளில் விரிந்து கிடந்தன. மணலில் ஓடும் வண்டியின் சக்கர ஒலி மட்டும் இருளுக்குள் கேட்டுக்கொண்டிருந்தது. முதுசூதர் ஒருகணம் நின்று செவிகளில் கைவைத்து “அந்த ஒலி!” என்றார். இளநாகனும் அதைக்கேட்டு “ஆம், பெரும்பூசல் அலைவாய் புகார்” என்றான். சூதர் புன்னகை செய்தார்.
விடியும்போது அவர்கள் மையக்காவிரி நீர்ப்பெருக்கைச் சென்றடைந்தனர். ஆற்றின்கரைமேட்டினூடாக கருமுத்துமாலை நெளிவதுபோல அணிவகுத்துச்சென்றுகொண்டிருந்த சுமைவண்டிக் கூண்டுகளின் தேன்மெழுகுபூசப்பட்ட பாய்வளைவுகளை காலையொளி மெருகேற்றியது. அவர்கள் சென்ற செம்மண்சாலை சிற்றோடை நதியடைவதுபோல வண்டிப்பாதையின் சரளைக்கல் பாதையை அடைந்தது. இரு பெரும்பொதிவண்டிகளுக்கு நடுவே நுழைந்துகொண்ட சூதர்களின் ஒற்றைமாட்டுவண்டி யானைநிரையில் புகுந்த கன்று போலிருந்தது.
காளைகளின் கழுத்துமணிகள் ஒலித்த முழக்கத்துக்கு அப்பால் கரைதழுவிச்சென்ற காவிரியின் மீது நெல்மூட்டைகள் அடுக்கப்பட்ட நீண்ட அம்பிகள் முதலைகள் போல நீரைக்கலைக்காமல் மெல்ல மிதந்துசென்றன. அமரமுகப்பில் வெற்றுக் கரிய உடலுடன் நின்றிருந்த தோணியோட்டி நீண்ட மூங்கிலை நீருக்குள் செலுத்திக் குத்தி உடலால் உந்தி பின் தள்ளி படகை நீரில் செலுத்தினான்.
சைலஜ மித்ரர் திரும்பி இளநாகனிடம் “படகை கழிகொண்டு செலுத்துவதை இப்போதுதான் காண்கிறேன்” என்றார். இளநாகன் வியப்புடன் “வேறெப்படி நதியில் படகைச் செலுத்துவது?” என்றான். “கடலில்தான் துடுப்புகளாலும் பாய்களாலும் படகுகளைச் செலுத்துவார்கள்” முதுசூதர் சிரித்து “கங்கையிலும் யமுனையிலும் நர்மதையிலும் கிருஷ்ணையிலும் கோதையிலும் கடலுக்கு நிகராக நீரிருக்கும். நூறுபாய்விரித்துச்செல்லும் பெருநாவாய்களையே மகாநதியின் நீர்வெளியில் கண்டேன்” என்றார். இளநாகன் திகைத்து அவரையே ஏறிட்டு நோக்கினான்.
“இந்த நெல் எங்கிருந்து வருகிறது?” என்றார் முதுசூதர். “காவிரி நடக்கும் வழியெங்கும் கூழாங்கல்லும் முளைத்துக் கதிர் விடும் என்பார்கள் பாணர்கள்” என்று இளநாகன் சொன்னான். “இங்கிருந்து வடமேற்கே திருவிடத்தின் எல்லை வரை அலையலையாக விரிந்துகிடப்பது நெல்வயல்வெளியே. அங்கே விளைபவை எல்லாம் ஓடங்களில் காவிரிக்கரை நகர்களுக்கு வருகின்றன. தஞ்சையும் உறையூரும் நெல் வந்து சேரும் களஞ்சியங்களாலானவை. அங்கிருந்து அம்பிகளில் ஏற்றப்பட்டு பெருந்துறைப் புகாரை அடைகின்றன. புகாரோ நெல்மூட்டைகளாலேயே கோட்டைகட்டப்பட்ட பெருநகர் என்கின்றனர் பாணர்கள்” என்றான் இளநாகன்.
மெல்ல மிதந்துசென்ற நூற்றுக்கணக்கான அம்பிகளின் கழிகளின் அசைவுகளால் ஆனதாக இருந்தது காவிரி. கரையோரமாக சென்ற வண்டிகளைத் தொடர்ந்துசென்றுகொண்டிருந்த வணிகர்களெல்லோரும் அதிகாலையிலேயே குளித்து காலைநிறைவுசெய்துவிட்டிருந்தனர். அவரவர் தெய்வங்களைப் பாடியபடி இளவெயிலில் நடந்தனர். கடற்பூசல் ஒலி ஓங்கியபடியே வந்தது. ஒருகணத்தில் வண்டிகளில் முன்னால்சென்ற வணிகர்கள் அனைவரும் தங்கள் கைகளில் மணிகளை எடுத்து அடித்துக்கொண்டு உரக்க வாழ்த்தொலி எழுப்பினர். சங்குகளும் முழவுகளும் சேர்ந்து ஒலித்தன.
நெடுந்தொலைவில் புகாரின் கோட்டைமுகப்பின் உயர்ந்த கொடிமரமும் அதன்மேல் படபடத்த புலிக்கொடியும் தெரிவதை இளநாகன் கண்டான். “புகார்! கொன்னூர் கோழியன் பெருநகர். கடல்மணல் வற்றினும் செஞ்சோறு வற்றா அறநிலம்!” என்று அவன் கைசுட்டி கூவினான். சைலஜ மித்ரர் தன் இரு கைகளையும் தலைக்குமேல் கூப்பி “பாரதமே, ஆயிரம் மணிநகை அணிந்த மாமங்கலையே, உன் அடிகளை வணங்குகிறேன்!” என்றார்.
புகாரின் கோட்டையை அணுகியபோதுதான் அது மரத்தாலான கோட்டை என்பதை இளநாகன் உணர்ந்தான். காவிரியின் சேற்றுப்படுகை இடப்புறமும் பெருமணல் குன்றுகள் வலப்புறமும் பின்புறம் அலைக்கும் கீழைக்கடலுமாக கரைநோக்கி முகப்பு கொண்டு நின்றது அது. சதுப்புக்குள் அடிமரத்தூண்களை நட்டு அதன்மேல் பெருமரங்களை அடுக்கி எழுப்பி கனத்த மரப்பலகைகளைக் கொண்டு கட்டப்பட்ட உயர்ந்த கோட்டைக்குமேல் நூற்றுக்கணக்கான காவல்மாடங்களில் ஒளிவிடும் இரும்புக் கவசங்களை அணிந்த யவனவீரர்கள் யவன ஈட்டிகளுடன் நின்றிருப்பதை தொலைவிலேயே காணமுடிந்தது.
சுண்ணமும் களிமண்ணும் கலந்து பூசப்பட்ட மரச்சுவர் கடல்துமிகள் வீசிப்படியவைத்த நீர் பட்டு கருமைகொண்டிருந்தது. “கரை வந்து படிந்த யானைஓங்கில் போலிருக்கிறது இக்கோட்டை” என்றான் இளநாகன். “ஆழியெனும் கொற்றவையின் கரிய பெருங்கழல்” என்றார் சைலஜ மித்ரர். “எறும்புகள் நெல்கொண்டு சேர்க்கும் வளை என்பர் வணிகர்” என்று சொல்லி ஒரு வணிகர் புன்னகை செய்து அவர்களைக் கடந்துசென்றார்.
வண்டிகள் அணுகியபோது கோட்டைக்கும் சாலைக்கும் நடுவே இருந்த ஆழ்ந்த அகழி தெரிந்தது. அம்புநுனி போன்ற நீள்மூக்குள்ள முதலைகள் அங்கே கரைச்சேற்றில் அடுக்கப்பட்டவை போல திறந்து அசைவிழந்த வாயுடன் நீரில் இறங்கிய மரப்பட்டை வால்களுடன் கிடந்தன. அகழியில் கால்நாட்டி கட்டப்பட்டிருந்த மரப்பாலத்தில் ஏறிய பொதிவண்டிகளின் சகட ஒலி உரத்து தாளம் மாறுபட்டது. அவை மறுபக்கம் திறந்திருந்த கோட்டை வாயிலுக்குள் புகுந்து மறைந்தன.
கோட்டையின் வலதுபெருங்கதவில் பொன்னென ஒளிவிட்ட வெண்கலத்தால் ஆன புலிச்சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. இடது பெருங்கதவில் சோழனின் தார்ச்சின்னமான அத்திமரம். பொதிவண்டிகள் வலப்பக்கமாக திரும்பிய சாலையில் வளைந்து நகரின் கடலோரத்து மறுபக்கமாக விளங்கிய மருவூர்பாக்கத்தை நோக்கிச் சென்றன. அலையாத்திக்காடுகள் நீருக்குள் இறங்கி நின்ற மருவூர்ப்பாக்கம் அக்காடுகளுக்குள்ளேயே உப்புசதுப்பிலும் மணல்மேட்டிலும் கால் நிறுத்தி எழுந்த மரவீடுகளாலும் களஞ்சியங்களாலும் ஆனதாக இருந்தது. அதற்கப்பால் அலைகள் வந்தறைந்த துறைமுகத்தின் முகப்பு கடலுக்குள் நீண்டிருக்க, நீலத்தின் நெடுந்தொலைவில் பாய்சுருக்கிய யவனப்பெருநாவாய்கள் அலையிலாடி நின்றன.
சூதர்களின் வண்டி நேராகச் சென்றபோது அதை எதிர்கொண்ட வேலேந்திய மறவன் “சோழநகர் புகாருக்கு வருக, வடபுலப்பாணர்களே. தாங்கள் எங்கு தங்கவிருக்கிறீர்கள்?” என்றான். “கொடைநாடி வந்தவர்கள். புகார் எங்களை அறியாது. நாங்கள் அதை அறிவோம்” என்றார் சைலஜ மித்ரர். மறவன் நகைத்து “பாரதவர்ஷத்தின் அனைத்துப்புலவர்களையும் சோழனின் செங்கோல் அறியும் பாணர்களே” என்றான். “கோழியன் குடையை கங்கையும் இமயமும் அறியும்” என்றார் சைலஜ மித்ரர்.
“இவ்வழி செல்லுங்கள். இது பட்டினப்பாக்கத்தை சென்றடையும். மன்னரின் அரண்மனைகளும் தளபதிகளின் இல்லங்களும் பெருங்குடிவணிகர் மாளிகைகளும் அமைந்த கிழக்குவீதியின் எல்லையில் தேனிருஞ்சோலை, கார்விழுஞ்சோலை, மால்மயல்சோலை என மூன்று சோலைகள் உள்ளன. அங்கே பாணர்களும் புலவர்களும் தங்கும் குடில்கள் உள்ளன. தாங்கள் அங்கே தங்கி இளைப்பாற அனைத்தும் செய்யப்படும். நலம் திகழ்க” என்றான் மறவன்.
புகாரின் அனைத்து மாடமாளிகைகளும் மரத்தாலானவை என்பதை இளநாகன் கண்டான். கனத்த வேங்கைத்தடிக்கால்களின் மேல் அவை அமைந்திருந்தன. மரப்பலகைச்சுவர்களின்மேல் சுண்ணப்பசையும் கூரையில் அரக்கும் பூசப்பட்டிருந்தன. மாளிகையின் பெருந்தூண்கள் செவ்வரக்காலும் நீலத்தாலும் சித்திரமெழுதப்பட்டு அணிசெய்யப்பட்டிருக்க செம்பட்டும் பொன்பட்டும் திரைகளாகத் தொங்கின. அகன்ற மென்மணல் முற்றங்களில் திரைகள் நெளியும் சிவிகைகள் அமர்ந்திருக்க கரிய உடற்தசைகளுடன் ஏந்திகள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். ஒளிரும் வேலேந்திய யவனர்கள் மாளிகை உப்பரிகைகளில் நின்று காவல் காத்தனர்.
கரும்பாறைகளை அடுக்கி போடப்பட்ட நகர்ச்சாலைகளில் சகடங்கள் ஒலிக்க சிறுரதங்கள் ஓடின. குளம்புத்தாளத்துடன் புரவியேறிய காவல் வீரர்கள் முன்னும்பின்னும் கடந்துசென்றனர். மையத் தெருவிலிருந்து பிரிந்துசென்ற வணிகர்த்தெருக்களில் காலையிலேயே கடைகள் திரைதூக்கி கொடிகள் பறக்க ஒருங்கிவிட்டிருந்தன. புலரியின் முதல்பறவை ஒலியுடன் விழித்தெழுவது புகாரின் நாளங்காடி என்று பாணர் சொல்லை இளநாகன் கேட்டிருந்தான்.
நாற்றங்காடியில் அகிலும் சந்தனமும் செம்பஞ்சும் குங்கிலியமும் மிளகும் நறுஞ்சுண்ணமும் மஞ்சளும் களபமும் குங்குமமும் கலந்த மணமெழுந்து மூச்சடைக்கச்செய்தது. அணியங்காடியில் பொன்னாலும் முத்தாலும் சங்காலும் சிப்பியாலும் செய்யப்பட்ட நகைகள் பரப்பப்பட்டிருந்தன. நவமணி விற்கும் நகரத்தாரின் கடைகளுக்கு முன்னால் அவர்களின் குலதெய்வம் கொற்றவையின் கழல் பொறிக்கப்பட்ட பொன்னிறக்கொடிகள் காற்றில் துவண்டசைந்தன. துகிலங்காடியில் கலிங்கப்பட்டும் துளுவப்பட்டும் பாண்டிக் கூறையும் ஏழ்நிறத்து அறுவைகளும் குவிக்கப்பட்டிருந்தன. அவற்றின் கோடிமணமும் கஞ்சிமணமும் வழியெங்கும் தொடர்ந்தன.
நாளங்காடி நால்வழி மையத்தில் எழுந்த பீடத்தின்மேல் தென்னை ஓலைக்கூரையிட்ட உயர்ந்த கொட்டகைக்குள் ஐந்தாள் உயரத்தில் ஒரு கையில் பாசச்சுருளும் மறுகையில் உழலைத்தடியுமாக எழுந்து நின்றது விழியில்லாத சதுக்கப்பூதம். களிமண் குழைத்துச் செய்த அதன் பேருடலில் விதைக்கப்பட்ட அருகின் இளம்புல் முளைத்து பச்சை மயிரடர்வாக காற்றிலாடியது. திறந்த வாய்க்குள் வெண்சங்குகள் பல்நிரையாக அமைந்திருந்தன. பெரிய பாதங்களின் நகங்களாக முத்துச்சிப்பிகள்.
பூதத்தின் காலடியில் பெரிய மரமேடையில் வெண்செந்நிறமென வடித்த சோற்றை பெரிய கவளங்களாக ஆக்கி அடுக்கிக் குவித்திருந்தனர். அப்பால் இரு தாலங்களில் மாங்கனித்துண்டுகளும் பலாச்சுளைகளும் வாழைக்கனிகளும் இருந்தன. ஆவியெழுந்த சோற்றுமலைக்கருகே பூசகர்கள் மூவர் நின்று பூதத்தின் கால்களுக்கு மலரணிவித்தனர். பூசகர் எழுவர் பூதத்தின் காலடித்தரையில் கமுகுப்பாளைகளை நீள்பாயென அடுக்கிப்பரப்பி அதன்மேல் சோற்றுருளைகளை அள்ளி நிரைநிரையாக நீட்டி வைத்தனர்.
கைகூப்பி நின்றிருந்த வணிகர்களுடன் சூதர்களும் நின்றனர். சோற்றுருளைகள் இணைந்து கைகால்களாக மார்பும் விலாவுமாக தலையாக முகமாக ஒரு மானுட உடல் எழுவதை இளநாகன் கண்டான். சோற்றாலான உதடுகளும் மூக்கும் வந்தன. மாவின் செங்கனித்துண்டுகளால் ஆன வாய்க்குள் தேங்காய்க் கீறல்களாலான பற்கள் அமைந்தன. வாழைக்கனிகளாலான விரல்கள் நீண்டமைந்தன. பலாச்சுளைகளாலான பொன்னாராம் திகழ்ந்த மார்பு வந்தது. இறுதியில் வாழைப்பூக்களாலான இமைகள் திறந்து நெய்க்கிண்ணங்களாலான விழிகள் ஒளிகொண்டன.
பூசகர்கள் எழுந்து பூதத்தை வணங்கினர். வலப்பக்கத்தின் கண்டாமணி ஓசையிடத்தொடங்கியதும் மேலும் வணிகர்களும் ஏவலரும் வினைவலரும் வந்து சூழ்ந்து கொண்டு வணங்கினர். இருவர் முழவிசைக்க மூவர் குழலூத ஒருவர் மணியோசை எழுப்பினார். பூசகர்கள் பூதத்தின் பாதங்களுக்கு தூபமும் தீபமும் காட்டினர். மூத்தபூசகர் ஒளிவிடும் வாளால் அன்னபுருஷனின் கழுத்தை வெட்டினார். பின் அவனுடலை ஏழு பிரிவுகளாக ஆக்கினார்.
“அன்னவடிவானவனே. உன் ஊன் இனியது. உன் குருதி இனியது. உன் உயிர் இனியது. அவை எங்களை வளர்க்கட்டும். எங்கள் உடலை அவை ஓம்பட்டும். எங்கள் வழித்தோன்றல்களை அவை வளர்க்கட்டும். எங்கள் எண்ணங்களை அவை ஒளிபெறச்செய்யட்டும்” என்று முதுபூசகர் சொன்னார். அவரது சொற்களை வடமொழியில் சொல்லும்பொருட்டு இளநாகன் திரும்பினான். புன்னகையுடன் முதுசூதர் தொடர்ந்து பூசகர் சொன்ன வரிகளை வடமொழியில் தானும் சொன்னார்.
“ஓம், அன்னமயமானவனே. முதல்பேரியற்கையின் மைந்தனே, நீ வாழ்க! எங்களுக்கு வாழ்வையும் வலிமையையும் கொண்டு வந்தாய். எங்கள் அன்னத்துடன் அன்னமாக இணைவாயாக. அன்னம் அன்னத்தை அறியும் பேருவகையை எங்களுக்கு அளிப்பாயாக. ஆம், அவ்வாறே ஆகுக!’ இளநாகன் நிமிர்ந்து நோக்கினான். “சாங்கியத்தின் அன்னமந்திரம்” என்றார் சைலஜ மித்ரர்.