வண்ணக்கடல் கவிதை

ஜெ,

ஒவ்வொரு சொல்லுக்குள்ளும் இத்தனை வண்ணங்களா? அதுவும் அதி ‘துல்லி’யமாக, மிகக் கூர்மையாக. இதனை எழுதியவரின் பித்து எத்தகையதாக இருக்கக் கூடும்? பிரமிப்பாய் அதே நேரம் சிறிது பதற்றமாகவும் இருக்கிறது.

எழுதித் தீராத பக்கங்களில், சொல் விழுந்து, காட்சிகள் முளைக்கும் காடு.

நன்றி,
சுந்தர வடிவேலன்

ஜெ,

வண்ணக்கடல் 4 ஒரு 200 வரிக்கவிதை. ஒவ்வொரு வரியையும் பலமுறை மீண்டும் மீண்டும் வாசித்தேன். ஒருவரியை உணர்வதற்குள் அடுத்தவரி. அபூர்வமான கவித்துவம் உடைய ஒரு வர்ணனை. குழந்தைத்தனமான ஒரு வர்ணனை. ஒரு மிகப்பெரிய வாழ்க்கைத்தரிசனம் என்று மாறிமாறி செறிவாக போனது. எத்தனைபேர் அந்த அளவுக்கு கவனமாக வாசித்திருப்பார்கள் என்று தெரியவில்லை. அதையெல்லாம் கவலைப்படாமல் எழுதிக்கொண்டே போகிறீர்கள். யானையின்காலடியில் உள்ள சிரிப்பு. வண்ணத்துப்பூச்சியில் உள்ள கணநேரச் சிறுத்தை. தாவும்போது வண்ணத்துப்பூச்சி குதிரையாக ஆகும் மாயம். பூவுக்குள் ஒளி திரவமாக தேங்கியிருக்கும் விளிம்பு. எதைச்சொல்ல் அந்தச்சின்னப்பிள்ளைகளில் கண்கள் வழியாக நீங்கள் செல்லும் நுட்பம் நினைக்கநினைக்க பிரமிப்பை அளிக்கிறது. வாழ்க!

அன்புடன்

கருணா பிரபாகர்

அன்புள்ள ஜெ,

துடிப்பின் துளியான தெள்ளுக்கள். ஒளிரும் கருவிழி மட்டுமேயான வண்டுகள். கண்ணீரை நூலாக்கி அதிலாடும் சிறு வெண்சிலந்திகள்

காற்றிலமைந்து திரும்பியது கணநேரச் சிறுத்தை. தோகை விரித்து மீண்டது மாயமயில்.

இளநீல விழியொன்று இரு இமை தவிக்க ஏனென்று வினவியது. செங்கனல் கீற்றுகளிரண்டு காற்றை அறிந்தன.

விண்பனித்து திரண்ட முதல்துளியென சிற்றுடலில் விழித்த பிரக்ஞை உணர்வு குடியேறா வண்ணங்களில் உவமை நிகழா வடிவங்களில் தன்னைக் கண்டு நீ பிரம்மம் என்றது

— சொல்லிச்சொல்லி எல்லா வரிகளையும் எடுத்துக்கொடுத்துவிடுவேன் போலிருக்கிறது. ஏதோ ஒரு பித்துநிலையில் எழுதிக்கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்

பறந்து களிக்கும் சின்னஞ்சிறு பூச்சிகளைப்பார்க்கும் குழந்தையிடம் ‘அதோ பாறையைப்பார் எவ்வளவு பெரியது எவ்வளவு அசைவற்றது’ என்று சொல்லும் சேடியைத்தான் நினைத்துக்கொண்டேன். அந்த முற்றியமனநிலையில் தான் காலையில் கண்விழிக்கிறேன். இந்தவரிகள் வழியாக குழந்தையாக ஆனேன். கொஞ்சநேரம்

நன்றி. சண்முகவேலும் அற்புதமாக ஈடுகொடுக்கிறார்

மகாதேவன்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 6
அடுத்த கட்டுரைநேரு