என் இணையதளம் வழியாக அறிமுகமானவர் டாக்டர் பி.கெ. சுகுமாரன்நாயர். என் சொந்த ஊரான திருவரம்புக்கு அருகேதான் அவரது ஊர். இட்டகவேலி. திருவரம்பிலும் ஏராளமான உறவினர்கள் அவருக்கு. திருவட்டாறு தனியார் மேல்நிலைப்பள்ளியில் படித்து திருவனந்தபுரத்தில் மருத்துவப்படிப்பை முடித்தபின் இப்போது லண்டனில் மருத்துவராக இருக்கிறார்.
சுகுமாரன்நாயர் என்னை சென்ற வருடம் தொடர்பு கொண்டார். அவர் சொந்த ஊருக்காக ஏதாவது செய்யவேண்டுமென விரும்பினார். அவரது திட்டம் ஒரு உச்சவலிநீக்கு மருத்துவமனை. நோய் முற்றி மருத்துவத்தால் கைவிடப்பட்ட நோயாளிகளின் உச்சகட்ட இறுதிவலியை குறைத்து அவர்களை வலியில்லா இறப்புக்குக் கொண்டுசெல்லும் மருத்துவம் இது. [Palliative care ]இந்த மருத்துவம் பற்றிய விழிப்புணர்வு இன்னும் இந்தியாவில் இல்லை. ஆகவே இத்தகைய நோயாளிகள் உச்சகட்ட வலியில் துடித்துதுடித்து இறந்துகொண்டிருக்கிறார்கள்.
பெரும்பாலும் புற்றுநோயாளிகள். கணிசமானவர்கள் படுக்கைப்புண் வந்த முதியவர்கள். அபூர்வமாக பிற நோய்கள். உடல் நலிந்து நோயை எதிர்கொள்ளும் ஆற்றலையே இழந்துவிடுகிறது. மருந்துகள் பயனளிப்பதில்லை. ஆனால் வலி உச்சத்தில் இருக்கிறது. சாமானியர் கற்பனையே செய்யமுடியாத பெருவலி. அவ்வலியை எதிர்கொள்வதற்கு எளிய வலிநீக்கிகள் உதவுவதில்லை. அதற்கான சிறப்பு மருந்துக்களை சாதாரண மருத்துவர்கள் பரிந்துரைக்கவோ, கடைகளில் வாங்கவோ முடியாது. அவை உச்ச ஆற்றல் கொணட போதைப்பொருட்கள். பெரும்பாலும் மார்ஃபின் வகையைச் சேர்ந்தவை. மத்திய அரசாங்கத்தின் உடல்நலத்துறை பரிந்துரைக்கவேண்டும். ஆகவே இத்தகைய சிறப்பு சிகிழ்ச்சை நிலையங்களே அவற்றை பரிந்துரைக்கவும் பெற்றுத்தரவும் முடியும்.
எந்நிலையிலும் மக்கள் மரணத்தை விரும்புவதில்லை என்பது இயற்கையின் விந்தைகளில் ஒன்று. முதுமையின் ஒரு கட்டத்தில் மரணத்துக்குத் தயாராகிவிடுவதென்பது, ஒருவகை விடுபட்ட முதிர்நிலை, நமக்கு மதத்தால் முன்பு அளிக்கப்பட்டது. உயிர் மிக மிக அரிதானது என்று தொடர்ந்து கற்பிக்கும் அலோபதி கடைசிவலி வரை உயிர்வாழவே மனிதனைத் தயார்ப்படுத்துகிறது. மரணத்தைமட்டுமல்ல, முதுமையைக்கூட ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. உச்சவலிநீக்கு மருத்துவம் ஓரளவு மரணத்தின் தவிர்க்கமுடியாமையை ஏற்றுக்கொண்டு அதற்கு நோயாளியை தயார்ப்படுத்த முயல்கிறது
குலசேகரம் பாலியம் சென்டர் என்னும் இந்த உச்சவலிநீக்கு மருத்துவநிலையம் சென்ற வருடம் டாக்டர் சுகுமாரன்நாயரால் அவரது சொந்தச் செலவிலும் பெருமுயற்சியிலும் தொடங்கப்பட்டது. அதற்கான இடம் இப்போது குலசேகரம் ஹோமியோபதி கல்லூரியில் இலவசமாக அளிக்கப்பட்டுள்ளது. சொந்த இடத்தை உருவாக்கும் முயற்சி நடக்கிறது.மாதம் இரண்டு நாள் இது திறந்திருக்கும். நோயாளிகளை தேடிக்கண்டுபிடித்து வீட்டுக்குச் சென்று சிகிழ்ச்சை அளிப்பார்கள். இது ஓர் இலவச சேவை. திருவனந்தபுரம் பாலியம் செண்டருடன் சேவை சார்ந்த ஒத்துழைப்பு உடையது இவ்வமைப்பு.
சுகுமாரன் நாயர் என்னை பலமுறை அழைத்து அதில் ஒரு ஆலோசகராகச் சேர்த்துக்கொண்டார். ஆனால் நான் அதில் ஒரு பார்வையாளன் மட்டுமே. சென்ற மே 24 ஆம் தேதி குலசேகரத்தில் அதன் ஓராண்டுக்கால நிறைவு கூட்டம் நடந்தது. நானும் அதில் பங்கெடுத்தேன். மாவட்ட ஆட்சியர் நாகராஜன், தலைமை மருத்துவ அதிகாரி, திருவனந்தபுரம் பாலியம் செண்டரின் தலைமை மருத்துவர் எம்.ஆர்.ராஜகோபாலன் ஆகியோர் பேசினார்கள். கேரள அரசு இப்போது உச்சவலிநீக்கு மருத்துவத்தை ஓர் அவசிய மருத்துவமாக அறிவித்து மாவட்ட மருத்துவ மனைகள் அனைத்திலும் கிளைகள் அமைக்க ஆணையிட்டிருக்கிறது. தமிழகத்திலும் அப்படிப்பட்ட அரசாணை வரவேண்டும். ஆட்சியர் நாகராஜன் குலசேகரம் பாலியம் செண்டருக்கு அனைத்து உதவிகளையும் செய்துவருகிறார்
சிறப்பாக நிகழ்ந்த கூட்டம். ஒரு விதமான திகைத்த மனநிலையிலேயே நான் இருந்தேன். வாழ்க்கையை மரணத்தை முன்வைத்து மதிப்பிடுவதுதான் மிகமிக இயல்பானது. சுருக்கமான என் உரையிலும் அதையே சொன்னேன். பழனியில் நான் முப்பதாண்டுகளுக்கு முன் ஒரு கழுதை சாகக்கிடப்பதைக் கண்டேன். வண்டியில் அடிபட்ட அது பலநாட்கள் செத்துக்கொண்டே இருந்தது. அதன் பின்பக்கத்தை நாய்களும் காகங்களும் பாதி தின்றுவிட்டிருந்தன. ஆனாலும் சாகாமல் கழுத்தைத் தூக்கி ஓசையிட்டுக்கொண்டிருந்தது.அதைப்பற்றி ஒருவரிடம் கேட்டேன். ‘கழுதை மிகமிக வலிமையான மிருகம், எளிதில் உயிர் போகாது’ என்றார். பாலைநிலங்களில் ஒரு கழுதைமேல் ஒரு குடும்பமே செல்வதைக் கண்டிருக்கிறேன். அத்தனை ஆற்றல் கொண்ட உடலில் ஆற்றல் மிக்க உயிர் தான் வாழும். அது உடலை எளிதில் விட்டுவிடாது.
மனிதன் கழுதையைவிட வல்லமை மிக்க மிருகம். பேராற்றல் கொண்டவன். அவன் சாவது அதைவிடக் கடினமானது. அந்த இறுதி வலி உயிரிலும் உடலிலும் நிறைந்து அதிரும். அந்த பிரிவை முடிந்தவரை வலியற்றதாக ஆக்கும் மருத்துவம் ஒரு பெரிய வரம் என்றுதான் தோன்றுகிறது என்றேன். அந்த மருத்துவத்தைப்பற்றி டாக்டர் ராஜகோபாலன் பேசிக்கேட்கையில்தான் பீஷ்மர் அம்புப்படுக்கையில் கிடந்து இறந்தது என்பதன் பொருளே தெரிகிறது. பீஷ்மர் போன்ற பேராற்றல் மிக்க மனிதர் அப்படித்தான் சாகமுடியும். மரணம் ஆயுர்வேதத்தைப் பொறுத்தவரை ஒரு எதிரி அல்ல. மருத்துவத்தால் வழிபடப்படும் தேவன் அவன். அவனை இனிதாக வரவழைக்கும் கலை என்றுதான் அம்மருத்துவம் எனக்குப்ப்படுகிறது என்றேன். சாவதும் ஒரு கலை, வாழ்வதைப்போல என்று சொன்ன சில்வியா பிளாத்தை நினைவுகூர்ந்தேன்
விழாவில் சென்ற ஒரு வருடத்தில் சிறந்த சேவைசெய்த மருத்துவர்களுக்கும் செவிலியருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. பொதுவாக இலக்கியம் அல்லாத நிகழ்ச்சிகளை மிகச்சம்பிரதாயமானதாகவே நான் நினைப்பேன். அபூர்வமாகவே மனம் நிறையும் , கனக்கும் நிகழ்ச்சிகள் அமைகின்றன. அதில் ஒன்று இது. டாக்டர் சுகுமாரன் நாயர் போன்றவர்களிடம சாமானியனாக நாம் எந்தவகை சம்பிரதாய சொற்களையும் சொல்லமுடியாது. உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே.