வண்ணக்கடல் – பகடி

ஜெ,

வண்ணக்கடல் அத்தியாயங்கள் முற்றிலும் வேறு திசையிலே மகாபாரதம் திறந்துகொள்வதை காட்டுகின்றன. நாலைந்துமுறை வாசித்துவிட்டேன். ஒவ்வொரு முறை வாசித்தபின்னரும் புதிய திறப்புகள் எழுந்து வருகின்றன. புதியவரிகளைக் கண்டுபிடித்து சிரித்துக்கொண்டிருக்கிறேன். இப்போதுதான் பீமனைப்பற்றி விஷமில்லாத பாம்புக்குத்தான் தசைவல்லமை அளிக்கப்பட்டிருக்கிறது என்று வாசித்து சிரித்தேன்.

பகடி, அங்கதம், நகைச்சுவை என்பதில் உச்சகட்ட இலக்கியத்தரம் வெளிப்படும் இடங்கள் இம்மூன்று அத்தியாயங்களிலும் உள்ளன. புலி போகிய அளை என்ற புறநாநூற்றின் பெருமிதம் மிகுந்த வரியை கிழவரின் வாய்க்கு [பல் இல்லாத வாய்] உவமை சொல்லிய இடத்தில் ஆரம்பிக்கிறது அந்த பகடி. வரிக்கு வரி. அதன் உச்சம் என எதைச் சொல்வது? ‘கால்கோள்’ என்றால் என்ன என்று வணிகர் புரிந்து வைத்திருப்பதையும் அஸ்வத்தின் மேழியையும் நாலைந்து வாசிப்புக்குபின்னர்தான் புரிந்துகொண்டு வெடித்துச் சிரித்தேன்.

வைஷ்ணவ தரிசனமே நகைச்சுவையாக வந்திருப்பதை அற்புதம் என்றுதான் சொல்வேன். பிரம்மம் தன்னை தானே எழுப்பிக்கொண்டது என்பதை எச்சில் விழுந்து குழந்தை விழித்துக்கொள்வதுபோல என்று சொல்வதும் சரி [அது கிருஷ்ணன் பிறப்பை நினைவூட்டுகிறது] பிரம்மனுக்கும் சிவனுக்கும் நடுவே உள்ள ஒரு செகண்ட் time lag தான் பிரபஞ்சம் என்பதும் சரி அற்புதமான தத்துவங்களும் கூட. மூவாயிரம் வருடங்களுக்கு முன்பே மதுரையில் மறவர்களின் உட்குழுச்சண்டை ஆரம்பித்துவிட்டது என்ற வரியை நினைக்க சும்மா இருக்கும்போதே புன்னகை வருகிறது

குந்தியின் தாய்மையையும் தருமனின் மிதப்பையும் பகடிசெய்வதும் சரி அற்புதம். நாளை கடிதம் எழுதினால் இன்னும் பத்து வரிகளை கண்டுபிடித்துவிடுவேன்.

குமரவேல்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 4
அடுத்த கட்டுரைபெருஞ்சுவர் சூழ்ந்த பெண்