ரசனை இதழ்

நாஞ்சில்நாடன் மூலதான் மரபின் மைந்தன் முத்தையா எனக்கு அறிமுகம். கோவையில் ஒருமுறை சாதாரணமாகச் சந்தித்தபின் நாஞ்சில்நாடன் தன் நண்பர்களுடன் குற்றாலம் வந்த ஒரு பயணத்தில் நானும் சென்று சேர்ந்துகொண்டபோது முத்தையா நெருக்கமானார். அப்போது எழுத்தாளர் சுதேசமித்திரன், ரவீந்திரன் போன்ற நண்பர்கள் உடனிருந்தார்கள். ரசிகமணி டி.கெ.சிதம்பரநாத முதலியாரின் பிறந்தநாள் விழாவை ஒட்டி அவர்கள் வந்திருந்தார்கள். குற்றாலத்தில் தெரிந்த ஒருவரின் பங்களாவில் தங்கி இரவுபகலாக பேசினோம். அருவியில் குளித்தோம். முத்தையாவின் தமிழறிவு என்னை உடனே கவர்ந்தது. அந்தந்த தருணத்துக்கு ஏற்ப சைவ பக்தியிலக்கியங்கலில் இருந்தும் கம்பராமாயணத்தில் இருந்து உதாரணங்களைச் சொல்லி சிரிக்கவோ வியக்கவோ வைப்பார். சற்று பேச்சு சலிக்கும்போது ‘சொல்க தமிழ்’ என்று நான் கேட்க உடனே ஆரம்பித்துவிடுவார். அன்று தென்காசி கோயிலுக்கும், ரசிகமணியின் இல்லத்துக்கும் சென்றிருந்தோம். இரண்டாம் நாள் ரசிகமணியின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினோம்.

முத்தையா ஒரு பன்முக ஆளுமை. வைரமுத்து வாசகர்பேரவையான வெற்றித்தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் அவர்தான். இன்று தமிழ்நாட்டில் மிக சீராக ஒழுங்கமைக்கப்பட்ட இலக்கிய அமைப்பு என்பது இதுதான். ஜக்கி வாசுதேவ் குருகுல அமைப்புடன் பலவ¨கையிலும் நெருக்கமானவர் முத்தையா. ஜக்கி பற்றி குறிப்பிடத்தக்க நூல்களை எழுதியிருக்கிறார். தமிழகத்தின் இளையதலைமுறை மேடைப்பேச்சாளர்களில் முதன்மையானவர். குறிப்பாக சைவ இலக்கியங்களைப்பற்றி சிறப்பாக பேசக்கூடியவர். கோவையில் விளம்பரத்துறையில் ஈடுபட்டிருக்கிறார்.’நமது நம்பிக்கை’ என்ற இளைஞர் இதழை நடத்தி வருகிறார்.பல தன்னம்பிக்கை நூல்களின் ஆசிரியர். அவரது முதன்மையான ஈடுபாடு சைவமும் மரபுக்கவிதையும்.

பொதுவாக மேடைப்பேச்சாளர்கள் வாசிப்பது குறைவு. நவீன இலக்கியம் வாசிக்கும் மேடைப்பேச்சாளர்கள் அதிலும் குறைவு. முத்தையா நான் கண்ட அசாதாரணமான வாசகர்களில் ஒருவர். தமிழில் வெளியாகும் முக்கியமான இலக்கியப்படைப்புகளை வெளியான சிலநாட்களிலேயே வாங்கிப்படித்து கருத்தும் சொல்லிவிடுவார். மிக நுண்மையான,ஆழமான விமரிசனக்கருத்துக்கள் அவருடையவை. எதிர்மறைக் கருத்து என்றால் பெரும்பாலும் மௌனம்,அல்லது அபூர்வமாக வலிக்காத ஒரு கிண்டலுடன் நிறுத்திக் கொள்வார். அவரது நகைச்சுவை மீது எனக்கு எப்போதும் ஈடுபாடு உண்டு. உண்மையில் அவரது குரல் மேடைப்பேச்சாளர்களுக்குரிய கணீர் குரல் அல்ல. தன் வாசிப்பு மற்றும் நகைச்சுவை பலத்தால் நிற்பவர் அவர்.

அனைத்துக்கும் மேலான முத்தையாவிடம் எனக்குப் பிடித்த இயல்பு கருத்து வேறுபாடுகளை அவர் நட்புமீறாமல் எடுத்துக்கொள்ளும் விதம். வைரமுத்துவிடம் அவருக்குள்ள ஈடுபாடு ஆழமானது. ஆனால் நானோ நாஞ்சில்நாடனோ அவரது பல எழுத்தாள நண்பர்களோ அத்தகைய மதிப்பு உடையவர்கள் அல்ல. ஜக்கி வாசுதேவை கிழிகிழி என்று கிழிக்கும் நண்பர்களும் அவருக்கு உண்டு. சைவத்தை உண்டு இல்லை என்று ஆக்கும் நாத்திக நண்பர்களும் பலர். தன் கருத்தை மிக உறுதியாக முன்வைத்து அதன் பின் ஒரு புன்னகையுடன் மாற்றுக்கருத்தை தாண்டிச்செல்வது முத்தையாவின் பாணி.

நான்குவருடங்களுக்கு முன்பு முத்தையா ஆரம்பித்த இதழான ‘ரசனை’ என்னுடைய நோக்கில் மிக முக்கியமான ஓரு தமிழ் பிரசுரம். தமிழின் சிற்றிதழ்ச் சூழலும் சரி,வணிக இதழ்களும் சரி மரபிலக்கியங்களைப் பொருட்படுத்துவதில்லை. ‘ரசனை’ அடிப்படையில் மரபை ரசிப்பவர்களுக்கான இதழ். விரிந்த நோக்கில் கலையிலக்கிய ரசனைக்கான இதழ். நாம் பொதுவாக மறந்துவிட்ட தமிழறிஞர்களையும் படைப்புகளையும் விரிவாக முன்வைக்கும் இதழ் ‘ரசனை’. ஆனால் ஆய்விதழ் அல்ல. அதன் நோக்கம் ரசனையே. ஆகவே எல்லா பக்கங்களும் உற்சாகமாகப் படிக்கும்படி அமைவதே அதன் சிறப்பு.

ரசனையின் இதுவரையிலான இதழ்களில் இரெ..சண்முகவடிவேல் பல்வேறு மூத்த தமிழறிஞர்களை அறிமுகம் செய்து எழுதிய ஆளுமைச் சித்திரங்கள் மிக முக்கியமானவை என்று எண்ணுகிறேன். தேர்ந்த புனைவெழுத்தாளனின் நுட்பத்துடன் நுண்ணிய தகவல்களை சொல்லி அந்த நினைவுச்சித்திரங்களை உருவாக்கியிருந்தார். இவ்விதழில் தெ. ஞானசுந்தரம் பற்றிய நல்ல கட்டுரை உள்ளது. அறிஞர் ம.ரா.பொ.குருசாமி அவர்கள் மு.வரதராசனார் பற்றியும் திரு.வி.க பற்றியும் ம.பொ.சி பற்றியும் எழுதிய நினைவுக்குறிப்புகளும் அவர்களை மிக அணுக்கமாக உணரவைக்கும் நுட்பமும் உணர்ச்சிகரமும் கொண்டவை.

மூத்த எழுத்தாளரான காதம்பரி தொடர்ச்சியாக மேலை இலக்கியம் பற்றியும் இசை மற்றும் ஓவியங்களைப்பற்றியும் தன் சுய அனுபவங்கள் சார்ந்து வாசிப்பார்வமூட்டும் கட்டுரைகளை எழுதிவருகிறார்.இவ்விதழில் வங்க இயக்குநர் புத்ததேவ்தாஸ்குப்தா மற்றும் அயன் ராண்ட் பற்றிய சுவாரசியமான கட்டுரை உள்ளது.

ரசனை இதழின் தொடர்கட்டுரைகளில் முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியம் தமிழக சிற்பங்களைப் பற்றி எழுதிவரும் தொடரும் ஓவியர் ஜீவானந்தம் திரைபடங்களைப் பற்றி எழுதிவரும் தொடரும் அந்தந்தத் துறைகளில் தமிழில் வெளிவரும் முதன்மையான கட்டுரைகள் என்று எண்ணுகிறேன். திரைப்படம் பற்றிய கட்டுரைகள் தமிழில் இப்போது மிக அதிகமாக வெளிவருகின்றன. பெரும்பாலானவை எந்தவித சுயரசனையும் இல்லாமல் வாசித்தவற்றையும் கண்டவற்றையும் அப்படியே அள்ளி வைத்து நீட்டி நீட்டி எழுதி சலிப்பூட்டுபவை. ஜீவானந்தத்தின் கட்டுரையில் சரளமான மொழியில் சுய அனுபவமும் தெளிவான மதிப்பீடும் உள்ளது. இந்த இதழில் சந்தோஷ் சிவனின் நவரசா என்ற படம் பற்றி எழுதியிருக்கிறார்.

குடவாயில்பாலசுப்ரமணியம் தொடர்ச்சியாக தமிழ் சிற்பவியலில் ஈடுபட்டுவருபவர்களுக்கே ஆர்வமூட்டும் புதிய செய்திகளைச் சொல்கிறார். ஆனால் பண்டிதத்தனமில்லாத சரளமான நடையில் கட்டுரைகள் அமைந்துள்ளன. அவரது கட்டுரைகளில் இவ்விதழில் வெளியான ‘கொறவை’ என்ற அட்டைப்படக் கட்டுரையும் இணைந்த புகைப்படங்களும் தலைசிறந்தவை

தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருக்கும் ரசனை மேலும் பெரிய வாசகர் வட்டத்தை பெறுவதற்குரிய தகுதி கொண்டது

தொடர்புக்கு

92 C first floor
B.K.Rangkanathan Street
Puthu Sithapur
COIMBATORE 641044
MAIL: [email protected]

 ஜக்கி வாசுதேவ்

உங்கள் நூலகம்

தமிழினி ஐந்தாமிதழ்

உயிர்மை இந்த இதழில்…

வார்த்தை

ஜூவியின் பதினாறாம் பக்கம்.

சொல்புதிது பற்றி…

காலச்சுவடு நூறாவது இதழ்

தமிழினி இரண்டாமிதழ்

உயிர் எழுத்து மாத இதழ்

இதழ்களும் மதிப்பீடுகளும்- ஒரு கடிதம்

தமிழினி மாத இதழ்

முந்தைய கட்டுரைதஸ்தயேவ்ஸ்கி:கடிதங்கள்
அடுத்த கட்டுரைதமிழ் படைப்பாளிகள் பேரியக்கம்:ஒரு கடிதம்