பகுதி ஐந்து : நெற்குவைநகர்
[ 1 ]
முற்காலத்தில் யமுனைநதிக்கரையில் இரண்டு குலங்கள் இருந்தன. ஆதிபிரஜாபதி பிருகுவின் மரபில் வந்த பிருகர் என்று பெயருள்ள மூதாதை ஒருவர் காலத்தின் முதற்சரிவில் என்றோ இந்திரன் மண்மீது சுழற்றிவீசிய வஜ்ராயுதத்தை தன் கைகளால் பற்றிக்கொண்டார். மின்னலைக் கைப்பற்றி விழிகளை இழந்த பிருகர் தன் மைந்தர்களுக்கு அதை பகிர்ந்தளித்தார். ஒளிமிக்க நெருப்பின் குழந்தையை அவர்கள் தங்கள் இல்லங்களில் பேணி வளர்த்தனர். அதன் பசியையும் துயிலையும் உவகையையும் சினத்தையும் எழுச்சியையும் அணைதலையும் நன்கு கற்றுப்பயின்றனர்.
காட்டுநெருப்பை கட்டும் கலை பயின்ற பிருகு குலம் பெருகியது. கட்டுக்கயிற்றில் கொம்புதாழ்த்திச் செல்லும் செந்நிறப்பசு போல அவர்கள் ஆணையை நெருப்பு கேட்டதென்றனர் சூதர். மலரிதழ் போலவும் விழிச்சுடர் போலவும் மண்பூதத்தின் நாக்குபோலவும் விண்பூதத்தின் சிறகுபோலவும் அவர்களிடமிருந்தது நெருப்பு. வெல்லுதற்கரிய படைவீரனாக அவர்களுக்குப் பணிசெய்தது அது. எரிந்த காடுகளின் பெருமரங்களில் இருந்து எழுந்து விண்ணில்தவித்த தெய்வங்களை குகைச்சித்திரங்களில் நிறுவி அவற்றுக்கு உணவும் நீரும் படைத்து அமைதிசெய்தனர் அவர்கள். எரிமைந்தர் என அவர்கள் அழைக்கப்பட்டனர்.
காட்டின் கீழே வசித்துவந்த பெருங்குலத்தை ஹேகயர் என்றனர் சூதர். யதுகுலத்திலிருந்து பிரிந்து வனம்புகுந்த அவர்கள் இந்திரவில்லை வழிபட்டு கன்றுமேய்த்து வாழ்ந்துவந்தவர்கள். குலம் வளர்ந்து கன்றுகள் பெருகியபோது புல்வெளிதேடி குன்றுகளேறி காடுகளில் நுழைந்து அலைந்து கொண்டிருந்தனர். பல்லாயிரம்கோடி பெருங்கைகளாக மரங்களை எழுப்பி கிளைவிரல்களை விரித்து அவர்களுடன் போரிட்டது மண். அவர்கள் கால்கள் கொடிகளிலும் பாம்புகளிலும் சிக்கிக் கொண்டன. உணவின்றி அவர்களின் கன்றுகள் அழுதுமடிந்தன. புலிகளும் சிம்மங்களும் பாம்புகளும் அவற்றை காட்டுத்தழைப்பின் பச்சை இருளுக்குள் ஊடுருவி வந்து கொன்றன. ஒவ்வொரு மழைக்காலம் முடியும்போதும் அவர்களின் ஆநிரைகள் பாதியாயின. அவர்களின் இளைத்த குழவிகள் அழுது மடிந்தன.
அந்நாட்களில் ஹேகயர் குலத்து மூதாதை ஒருவன் பெருமழை கொட்டும் மாலை ஒன்றில் தன் கன்றுகளுடன் திசைமாறி காட்டின் ஆழத்துக்குள் சென்றான். நீரின் இருளுக்குள் நெருப்பின் ஒளி தெரிவதைக்கண்டு அந்த மலைக்குகையைச் சென்றடைந்தான். அங்கே செந்நிறச் சடையும் தாடியும் நீட்டிய எட்டு பிருகு குலத்தவர் அமர்ந்து அனலோனுக்கு அவியிடுவதைக் கண்டான். அவர்களருகே சென்று நெருப்பின் வெம்மையை பகிர்ந்துகொள்ளலாமா என்றான். அவர்கள் அவனை அமரச்செய்து உணவும் நீருமளித்தனர். அவர்களின் அவியேற்று மகிழ்ந்து குகைச்சுவர்களில் கண்விழித்து அமர்ந்திருந்த தெய்வங்களை அவன் கண்டான். விண்நெருப்பைக் கைப்பற்றிய பிருகுவின் கதையை அவர்கள் அவனுக்குச் சொன்னார்கள். அவ்விரவில் தெய்வங்களைச் சான்றாக்கி ஹேகயர்களும் பார்கவர்களும் ஓர் உடன்பாட்டுக்கு வந்தனர்.
பிருகுக்கள் ஹேகயர்களுக்காக நெருப்பை படையாக்க ஒப்புக்கொண்டனர். காட்டின் கரங்களை அழித்து வெய்யோனொளியை ஊடுபாவெனப்பரப்பி பசும்புல்வெளி நெய்வது அவர்கள் தொழில். மரங்களின் ஆன்மாக்களை குகைக்குள் குடிவைத்து நிறைவுசெய்வதற்குரிய செல்வத்தை அவர்களுக்கு கன்றுமேய்த்து நெய்யெடுத்து ஈட்டியளிப்பது ஹேகயர்களின் கடன். ஆயிரமாண்டுகாலம் அந்த உடன்படிக்கை நடைமுறையில் இருந்தது. நூறாண்டுகாலம் வருடத்திற்கு நான்கு முறை ஹேகயர் குலம் பிருகு குலத்துக்கு எட்டுபசுவுக்கு ஒரு பொன் என காணிக்கை கொடுத்தது.
பார்கவர்கள் எரியை ஏவி காடுகளை உண்ணச்செய்தனர். வெந்துதணிந்த சாம்பல்மீதிருந்து தெய்வங்களை வண்ணம் மாறிய கற்களில் ஏற்றிக்கொண்டுசென்று அவற்றைக்கொண்டு குகைகளுக்குள் அத்தெய்வங்களை வரையச்செய்தனர். அவற்றுக்கு நெய்யும் அன்னமும் சமித்துக்களும் அவியாக்கி வேள்விசெய்தனர்.
ஹேகயர் குலத்துக்கு பிருகுக்களே குலவைதிகர் என்று ஆயிற்று. புல்வெளி பெருக கன்றுநிரை பெருகியது. பெருகிய கன்றுகளெல்லாம் பிருகுக்களின் குகைகளுக்குள் பொன்னாகச்சென்று மண்ணுக்குள் புதைக்கப்பட்டன. குகைகளுக்குள் சினந்த விழிகளும் முனிந்த விழிகளும் கனிந்த விழிகளுமாக தெய்வங்கள் ஒன்றுடன் ஒன்று பின்னி ஊடுருவி நெய்த வண்ணவலை விரிந்து சென்று இருளுக்குள் மறைந்தது.
பிருகுவின் நூறாவது தலைமுறை மைந்தன் சியவனன் ஹேகயர்களின் நூறாவது மன்னன் கிருதவீரியனுக்கு குலவைதிகனாக இருந்தான். காடுகள் குறையும்தோறும் குகைக்குள் தெய்வங்கள் பெருகின. அவற்றுக்கு பிருகுகுலத்தோர் செய்யும் வேள்விகள் போதாமலாயின. புதியதெய்வங்கள் எழுந்தமையால் பழையதெய்வங்கள் குகையிருளுக்குள் மறக்கப்பட்டன. பசித்த தனித்த விழிகளுடன் அவை இருளுக்குள் காலடிகளுக்காகக் காத்திருந்தன. பார்கவர்களின் பன்னிரண்டாவது குகையின் ஏழாவது கிளையின் இறுதியில் காளகேது என்னும் பெண்தெய்வம் நூறாண்டுகாலமாக பலியின்றி அவியின்றி மலரும் மந்திரமும் இன்றி காத்திருந்தது.
ஆயிரமாண்டுகளுக்கு முன் அஸ்வபதம் என்னும் காட்டில் நின்றிருந்த மாபெரும் காஞ்சிரமரத்தின் அடிவேரில் குடியிருந்தவள் காளகேது. நீண்டு வளைந்த எருமைக்கொம்புகளும் பன்றிமுகமும் எரியும் தீக்கங்குக் கண்களும் சிலந்திபோன்ற எட்டுக் கைகளும் தவளையின் நீள்நாக்கும் கொண்டவள். அக்காஞ்சிரத்தை அணுகி அதன் பட்டையிலிருந்து குருதியென வழியும் கசப்புநீரை நக்கும் மிருகங்களை மட்டும் உண்டு அம்மரத்தின் வழிவழி விதைகளினூடாக பன்னிரண்டாயிரம் வருடம் அங்கே அவள் வாழ்ந்திருந்தாள். அம்மரம் எரிந்தணைந்தபோது அங்கே கிடந்த ஒரு சிறுகூழாங்கல்லில் நீலநிறச் சிலந்திவடிவமாகப் படிந்தாள். அதை எடுத்து அவ்வடிவைக் கண்ட இளம் பார்கவர் ஒருவர் அவளை அக்குகைக்குள் கொண்டுவந்தார். அவள் அங்கே தன்னைத்தானே கருநீலநிறத்தில் வரைந்துகொண்டு குடியேறினாள்.
மூன்று இளம் பார்கவர்கள் ஒருவரை ஒருவர் துரத்தி விளையாடியபோது ஒருவன் இன்னொருவனைப்பிடித்து சேற்றில் தள்ளிவிட்டு அக்குகைக்குள் ஓடினான். இருட்டில் பதுங்கிச்சென்ற அவன் விழிதிறந்து நோக்கிய தெய்வங்களைக் கண்டு வியந்து விழிமலர்ந்து சென்றபடியே இருந்தான். பின்னர் அவன் தன்னை உணர்ந்து திரும்ப முயன்றபோது வழிதவறினான். அன்னையை விளித்து அழுதபடி அவன் அக்குகையின் கிளைகளில் ஒன்றிலிருந்து ஒன்றுக்கு ஓடினான். பசித்து இளித்த செவ்வுதடுகளும், குருதிநாவுகளும், வளைந்த கொம்புகளும், ஒடுக்கப்பட்ட சிறகுகளும், கூரிய அலகுகளும், பதினாறுதிசைக்கும் விரிந்த எண்ணற்ற கால்களும் கைகளுமாக தெய்வங்கள் அவனை குனிந்து நோக்கி குளிர் மூச்சுவிட்டன.
அவன் கால்தளர்ந்து மனம் ஓய்ந்து விசும்பியபடி குகைக்கிளையின் எல்லையை அடைந்து அங்கே ஒரு சிறுகல்லில் அமர்ந்தான். தரையில் பரவியிருந்த ஈரம் வழியாக எங்கிருந்தோ வந்த மெல்லிய ஒளியில் அவனை மேலிருந்து காளகேது நோக்கினாள். அவள்மேல் அடர்ந்து பரவியிருந்த சிலந்தி வலை காற்றிலாடியது. அதிலிருந்த சிறிய கருஞ்சிலந்தியில் கூடி அவள் மெல்ல மென்சரடில் ஊசலாடி இறங்கி அவனை அணுகி கால்கைகளை நீட்டி அவனை கவ்விக்கொண்டாள். அவன் தன் தோளில் கடித்த சிலந்தியை தட்டி விட்டுவிட்டு எழுந்து நின்று மேலே நோக்கியபோது காளகேதுவின் விழிகள் ஒளிகொண்டு திறந்து அவள் வாய் ஒரு புன்னகையிலென விரிவதைக் கண்டான்.
அஞ்சிய பார்கவன் கீழே விழுந்தும் எழுந்தும் குகைச்சுவர்களில் முட்டிச் சரிந்தும் ஓடினான். அவன் அகமறியாத வழியை கால்கள் அறிந்திருந்தமையால் அவன் வெளியே சென்று விழுந்தான். அவன் வாய் உடைபட்டு பற்கள் குருதியுடன் தெறித்திருந்தன. அவன் கைகால் இழுத்துக்கொண்டிருந்தன. மேலும் எழுந்து புதர்களுக்குள் ஓடிய பார்கவச்சிறுவன் கடும் விடாய்கொண்டு சிறுநீரோடை ஒன்றை அடைந்தான். குனிந்து நீரள்ளப் பார்த்தவன் நீலப்பச்சை பரவி வீங்கி வெடிக்கப்போவதுபோன்ற முகத்துடன் ஓர் உருவை அங்கே கண்டான். அலறியபடி தன் கைகளைத் தூக்கிப்பார்த்தான். அவையும் நீலம் கொண்டிருந்தன. அவன் ஓடமுயன்று புதரில் கால்தடுக்கி நீரோடையிலேயே விழுந்தான்.
ஏழுநாட்கள் அவனுக்காகத் தேடிய பிருகு குலத்தவர்கள் அவனுடைய பாதிமட்கிய உடலை கண்டடைந்தனர். காட்டுமிருகமேதும் அவனை தின்றிருக்கவில்லை. புழுக்களும் உண்டிருக்கவில்லை. அவன் ஒரு பழைய மரவுரி என மண்ணில் மட்கிக் கலந்திருந்தான். அங்கேயே அவனுடல்மீது விறகுகளையும் அரக்கையும் தேன்மெழுகையும் குங்கிலியத்தையும் போட்டு எரியூட்டினர். அவன் நீலச்சுவாலையாக மாறி காற்றில் அலைந்ததைக் கண்ட அவன் தந்தை நெஞ்சுடைய ஓலமிட்டு நினைவழிந்து விழுந்தார்.
பன்னிரண்டுநாட்களுக்குள் ஹேகய குலத்து பசுக்களின் நாக்குகள் நீலநிறம் கொண்டு வெளியே நீண்டு நீர்சொட்ட ஒலியெழுப்பவும் முடியாமல் நோவெடுத்த ஈரக்கண்களுடன் அவை குளம்புகளை அசைத்து வால்சுழல நெடுமூச்செறிந்து விழுந்து இறந்தன. முதல்பசுவின் இறப்பை நாகம் தீண்டியதென்று எண்ணி அதை அவ்விடத்திலேயே புதைத்தபின் நாகச்சினம் தீர்க்கும் நோன்பும் பூசையும் மேற்கொண்டனர் ஹேகயர். மறுநாள் மீண்டும் இரு பசுக்கள் இறந்தன. பின்னர் பசுக்கள் இறந்துகொண்டே இருந்தன.
கிருதவீரியன் சியவனனை அணுகி கானகத் தெய்வங்கள் முனிந்தனவா என்று கேட்டான். ஆம், காணிக்கை கொடு, அவற்றை நிறைவுசெய்கிறேன் என்றான் சியவனன். பன்னிருநாட்கள் முந்நெருப்பு மூட்டப்பட்ட எரிகுளங்களில் ஊனும் நெய்யும் அன்னமும் விறகுமிட்டு அவியளிக்கப்பட்டு நாகவிஷம் அகலச்செய்யும் சுபர்ணஸ்துவா என்னும் பூதவேள்வி நிகழ்த்தப்பட்டது. அதனால் தெய்வங்கள் நிறைவடையவில்லை என்பதனால் ஆயுளை நிறைவாக்கும் முஞ்சாவித்வமெனும் வேள்வி செய்யபபட்டது. இறுதியாக எதிரிகளை அழிக்கும் சபத்வஹன வேள்வி செய்யப்பட்டது. கிருதவீரியனின் கருவூலச்செல்வமெல்லாம் வேள்விக்காணிக்கையாகச் சென்று சேர்ந்தது. அவன் களஞ்சியங்களில் கூலமும் நெய்யும் ஒழிந்தன.
ஹேகயர்களின் கன்றுகளனைத்தும் முற்றழிந்தன. காடுகளெங்கும் சிதறிக்கிடந்த அவற்றின் சடலங்களிலிருந்து எழுந்த நுண்புழுக்கள் புல்நுனிகளிலெங்கும் நின்று துடித்தன. சியவனரும் பிருகுக்களும் கூடி நூலாய்ந்து காட்டை முழுதும் கொளுத்தியழிப்பதே உகந்ததென்றனர். கோடை எழுந்த முதல்நாளில் சியவனன் காற்றுத்திசை நோக்கி, காட்டுச்செடிகளின் இலைவாசம் நோக்கி, காட்டுமண்ணின் வண்ணம் நோக்கி, காட்டு ஓடைகளின் நீர்த்திசை நோக்கி நெருப்பிட்டான். தீயெழுந்து பரவிச்சென்று காட்டை வழித்துண்டு வெடித்துச் சிரித்துக் கூத்தாடியது.
வெந்த மரங்கள் புகைந்து நிற்க கருகியமண்ணுக்குள் புற்களின் வேர்கள் ஈரத்தை இறுகப்பற்றிக்கொள்ள சாம்பல்வெளியென கிடந்த காட்டுக்குள் சென்ற பார்கவர் அங்கே ஒரு கல்லின் மேல் சிலந்தி வடிவில் ஒட்டிக்கிடந்த காளகேதுவைக் கண்டார். அதை எடுத்துக்கொண்டுசென்று குகையில் மீண்டும் வரைந்து நிறுவி பலியளித்து தணிவித்து அமரச்செய்தார்.
மண்வெந்து எழுந்தபுகை விண்ணை எட்டி முலைகுடிக்கும் கன்றென மேகங்களை முட்டியபோது மழையெழுந்து மண்ணை நிறைத்தது. சாம்பல்கரைந்த மண்ணுக்கடியில் கவ்வி ஒளிந்திருந்த வேர்களிலிருந்து முளைகள் மண்கீறி எழுந்தன. மீண்டும் புத்தம்புதிய புல்வெளி எழுந்து வந்தது. ஆனால் ஹேகயர்களிடம் புதியபசுக்கன்றுகளேதும் இருக்கவில்லை. அவர்களின் கிளையான விருஷ்ணிகளிடம் சென்று கன்றுகளுக்காகக் கோரியபோது ஒரு பொன்னுக்கு பத்து கன்றுகள் வீதம் அளிப்பதாகச் சொன்னார்கள். ஹேகயர்களிடமோ பொன்னென்று ஏதுமிருக்கவில்லை.
கிருதவீரியன் தன் குலமூத்தாருடன் சென்று சியவனனைச் சந்தித்து ஆயிரம்பொன் அளிக்கும்படி கோரினான். கன்றுகள் பெருகும்போது அவற்றை திருப்பியளிப்பதாகச் சொன்னான். ஆனால் தங்களிடம் ஒரு பொன்கூட இல்லை என்று பிருகுக்கள் சொன்னார்கள். இறுதியாகச் செய்த எரிச்செயலுக்காக ஹேகயர்கள் அளிக்கவேண்டிய பொன்னே கடனாக நிற்பதாக சியவனன் சொன்னான். .மும்முறை நிலம்தொட்டு தண்டனிட்டபோதும்கூட பார்கவர்கள் தங்களிடம் பொன்னில்லையென்றே சொன்னார்கள். சினம்கொண்ட கிருதவீரியன் தன் வாளை உருவி அவர்களை கொல்லப்போவதாக மிரட்டினான். தங்கள் குருதியையும் நிணத்தையுமே அவனால் கொண்டுசெல்லமுடியும் என்று சியவனன் சொன்னான்.
கண்ணீருடன் மண்ணில் விழுந்து அவன் கால்களைப்பற்றிக்கொண்ட கிருதவீரியன் என் குலமே பசித்தழியும் வைதிகர்களே! நூறு பொன்னைக்கொடுங்கள் என்றான். சியவனன் நான் சொன்ன சொல்லே உண்மை, என்னிடம் பொன்னேயில்லை என்றான். கிருதவீரியன் பத்து பொன்னைக்கொடுங்கள் என்றான். சியவனன் இல்லாதவற்றிலிருந்து எப்படி பத்தை எடுக்கமுடியும் என்றான். விழிநீர் மார்பில் வழிய கிருதவீரியன் தன் இல்லத்துக்குத் திரும்பினான். கன்றுகளில்லா கொட்டிலில் குவிந்துகிடந்த கட்டுத்தறிகளையும் கயிறுகளையும் கழுத்துமணிகளையும் நெற்றிச்சங்குகளையும் கண்டு கண்ணீர் விட்டு அழுதபடி அவன் அங்கேயே விழுந்துகிடந்தான்.
நாள்தோறும் ஹேகயர்குடிகள் நலிந்தன. ஊணின்றி முதியோர் வற்றி ஒடுங்கினர். முலைப்பாலின்றி குழவிகள் சுருங்கி இறந்தன. ஒவ்வொரு நாளும் ஹேகயர் கிராமங்களிலிருந்து சிதைகள் செல்வதை கிருதவீரியன் கண்டான். முதலில் அழுகுரலெழச் சென்ற சிதைகள் பின்னர் அமைதியாக வெறித்த விழிகளுடன் சென்ற மெலிந்துவற்றிய உறவினர்களுடன் சென்றன. பின்னர் அவை தனித்து இருவர் தோளிலேற்றப்பட்ட ஒற்றை மூங்கிலில் தொங்கிச்சென்றன. பசியில் பழுத்த குழந்தைவிழிகளைக் கண்டபின் மீண்டுமொருமுறை மலையேறிச்சென்று பிருகு குலத்து சியவனனின் முன் நின்று “ஒரு பொன்னேனும் அளிக்காவிட்டால் இன்றே இங்கு கழுத்தறுத்துவிழுவேன்” என்றான் கிருதவீரியன். “இல்லாத பொன்னுக்காக இறந்தவனாவாய்” என்று அவன் பதில் சொன்னான்.
பிறிதொருநாள் முதல்குழந்தை பெற்ற விருஷ்ணி குலத்துப்பெண் ஒருத்தி அங்கே வந்தாள். தன் மகனுடன் மலையேறிச்சென்று பிருகுக்களை அணுகி அவள் எவருமறியாமல் மறைத்துவைத்திருந்த ஒற்றைத்துளி பொன்னை காணிக்கையாக அளித்து அவனுக்கு எரியால் தீங்கு நிகழாவண்ணம் அவர்கள் வாழ்த்தவேண்டுமென கோரினாள். எரித்துளியை மைந்தன் நெற்றியில் வைத்து பார்கவ குல வைதிகன் ஒருவன் அம்மைந்தனை வாழ்த்தினான். பொன் கொடுத்து மலர்பெற்று அவள் குழந்தையுடன் திரும்பி வந்தாள். மலைமீதேற வழிகாட்டும்பொருட்டு அவள் கூட்டிச்சென்ற அவள் தமக்கையின் மைந்தனாகிய சிறுவன் மீண்டு வரவில்லை.
சிறுவனைத்தேடி மலைக்குமேல் சென்ற ஹேகயர்கள் அவனை குகைகளுக்கு வெளியே மயங்கிக்கிடப்பவனாக கண்டுகொண்டனர். தடாகத்து நீரில் பட்டு எதிரொளித்த வெளிச்சத்தில் குகையொன்றுக்குள் விழிதிறந்த தெய்வத்தைக் காண உள்ளே சென்ற அவன் உள்ளேயே நினைவழிந்து நனவழிந்து சுற்றிக்கொண்டிருந்தபின் அஞ்சி வெளியே ஓடிவந்ததாகச் சொன்னான். அவனை அவன் அன்னை கூந்தலுக்கு நெய்யிட்டு குளிர்நீராட்டுகையில் அவன் அங்கே குகைக்குள் பார்கவ வைதிகன் அச்சிறுதுளிப்பொன்னைக் கொண்டுவந்து புதைத்ததைக் கண்டதாகச் சொன்னான்.
செய்தியறிந்ததும் சினந்தெழுந்த கிருதவீரியன் ‘எழுக ஹேகயர்படை!’ என ஆணையிட்டான். மின்னும் படைக்கலங்களுடன் கூச்சலிட்டபடி மலையேறிவந்த ஹேகயர்ளைக்கண்டு பார்கவர்கள் குகைக்குள் ஓடி ஒளிந்துகொண்டனர். அரக்கில் கொளுத்திய பந்தங்களுடன் குகைக்குள் புகுந்த ஹேகயர்கள் கைகூப்பி அழுது கூவிய பார்கவர்களனைவரையும் வெட்டிக்கொன்றனர். முதியவர்களும் மூத்தவர்களும் அன்னையரும் கன்னியரும் துண்டுகளாக்கப்பட்டனர். சிறுவர்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டனர். கருக்குழவிகளையும் எடுத்து வெட்டிவீசினர்.
குகைகளிலிருந்து தப்பியோடிய பார்கவர்கள் சிறுகுழுக்களாக காடுகளுக்குள் சென்று புதர்களுக்குள் ஒடுங்கிக்கொண்டனர். ஆனால் புள்தேரும் கலையறிந்த இடையர்களான ஹேகயர் அவர்களைத் தேடிக் கண்டடைந்து கொன்றுவீழ்த்தினர். வெந்நெருப்பும் கொடுவிஷமும் ஒருதுளியும் எஞ்சலாகாது என்று கிருதவீரியன் ஆணையிட்டான். பார்கவகுலத்தில் ஒருவரும் மிஞ்சாமல் தேடித்தேடிக் கொன்றனர் ஹேகயர். ஆனால் எரியும் விஷமும் எப்போதும் ஒருதுளி எஞ்சிவிடுமென அவர்கள் அறிந்திருக்கவில்லை. பார்கவகுலத்து சியவனனின் மனைவி ஆருஷி புதர்களுக்கு அடியில் பன்றி தோண்டியிட்ட குழிக்குள் புகுந்து ஒடுங்கி தப்பினாள்.
ஆருஷி அன்றிரவு தன் கணவனின் குருதி படிந்த உடலுடன் காட்டுக்குள் சென்று அங்கே புதருக்குள் விழுந்து ஒரு மைந்தனைப்பெற்றாள். ஆறுமாதமே வளர்ச்சியடைந்து அவள் உள்ளங்கையளவே இருந்த அந்த மைந்தனை அவளே மூங்கிலிலைநுனியின் அரத்தால் தொப்புள்கொடியறுத்து பச்சிலை பறித்து சலம் துடைத்து கையிலெடுத்துக்கொண்டாள். தேன்கூட்டை எறிந்து வீழ்த்தி அம்மெழுகைத் தேய்த்த மென்பாளையால் அக்குழவியை தன் இடத்தொடையுடன் வைத்து கட்டிக்கொண்டாள்.
தொடையில் ஒரு குருதிக்கட்டியென ஒட்டியிருந்த குழந்தையுடன் பன்னிரண்டு நாட்கள் அவள் காட்டுக்குள் நடந்து மலையடிவாரத்து வேடர்குடியொன்றை அடைந்தாள். அங்கே தன்னை ஒரு ஏதிலியெனச் சொல்லி அடைக்கலம்புகுந்து முதுவேட்டுவச்சி ஒருத்தியின் குடிலுக்குள் வாழ்ந்தாள். வேட்டுவச்சி மட்டுமே அவளிடம் மகனிருக்கும் செய்தியை அறிந்திருந்தாள். வெளியே செல்லும்போதெல்லாம் அவள் அவனை தொடையுடன் சேர்த்துக்கட்டியிருந்தாள். நான்கு மாதம் கழித்து அவன் தொடையிலிருந்து வெளிவந்தான். தொடையிலிருந்து பிறந்த அவனுக்கு ஊருவன் என்று அவள் பெயரிட்டாள்.
சியவனனின் கருவுற்றிருந்த மனைவி தப்பிவிட்டதை மூன்றுநாட்கள் கழித்து அறிந்த கிருதவீரியன் தன் ஒற்றர்களை காடெங்கும் அனுப்பி அவளை தேடச்சொன்னான். கருவுற்ற பெண்ணை எவரும் கண்டதாகச் சொல்லவில்லை என்றாலும் மலைக்காட்டுக்கு மூலிகை தேரவந்திருந்த பிராமணப்பெண் ஒருத்தி பெருந்தொடைகொண்ட பெண்ணொருத்தியை கண்டதாகச் சொன்னாள். அக்கணமே என்ன நடந்ததென அறிந்துகொண்ட கிருதவீரியன் தன் படைகளை விரித்தனுப்பி அம்மைந்தனைத் தேடச்சொன்னான்.
மேற்குமலை வேடர்குடியில் ஒரு பெண் தொடைபிளந்து மைந்தனைப்பெற்றாள் என்று அறிந்ததும் கிருதவீரியனும் அவன் படைகளும் சென்று அக்குடியிருந்த மலையைச் சூழ்ந்துகொண்டனர். மலைவேடர் மூங்கில்வில்லும் புல்லம்புமேந்தி வந்து மலைப்பாறைமேல் நின்றனர். பிருகுகுலத்து மைந்தனையும் அன்னையையும் எங்களிடம் அளிக்காவிட்டால் வேடர்குலத்தையும் வேரறுப்பேன் என்று கிருதவீரியன் கூவினான். அடைக்கலம் கோரியவர்களுக்காக இறப்பதே வேடர்குலத்து நெறி என்று அக்குலத்தலைவன் விடைகூவினான்.
அப்போது செந்தழல்கூந்தலும் செங்கனல் உடலும் கொண்ட சிறுவனொருவன் அவர்கள் நடுவே வந்து நின்றான். “தொடையிலிருந்து பிறந்த என் பெயர் ஊருவன்” என்று அவன் கூவியதும் அவனைக்கொல்ல ஆணையிட்டு கிருதவீரியன் கூச்சலிட்டான். ஆனால் ஊருவனின் கையிலிருந்து எழுந்த அனல் அலையென எழுந்து அங்கே சூழ்ந்திருந்த பசும்புல் மேல் படர்ந்து கணம்தோறும் பெருகி பேரலையாக எழுந்து வந்து அவர்களை அடைந்தது. வீரர்கள் உடை பற்றிக்கொள்ள, உடல் கருகிக் கூவியபடி விழுந்து துடித்தனர். நெருப்பலைக்குச் சிக்காமல் கிருதவீரியன் திரும்பி ஓடி மலைப்பாறைமேல் ஏறிக்கொண்டான். அவன் முகத்தை அறைந்து சென்ற எரியலையில் பார்வையை இழந்து இருளில் விழுந்தான்.
பெருஞ்சினம் கொண்ட சிறுவனாகிய ஊருவன் தழலென குழல் பறக்க மலையிறங்கி வந்தான். அவன் பின்னால் செந்நிற நாயென நெருப்பும் வந்தது. அவன் கால்பட்ட இடங்களிலெல்லாம் நெருப்பின் ஊற்றுகள் வெடித்தெழுந்தன. அவன் கைதொட்ட மரங்களெல்லாம் பந்தங்களென நின்றெரிந்தன. ஹேகயர் கிராமங்கள் இரவில் தீப்பற்றி எரியெழ எரியும் குழந்தைகளை நோக்கி வயிற்றிலும் முகத்திலும் அறைந்தழுத அன்னையர் அக்கணமே பித்திகளாயினர். கொட்டிலில் எரியும் கன்றுகளை காக்கப்போன ஆயர்கள் அவற்றுடன் சேர்ந்தெரிந்து கரியாயினர்.
நூறு ஆயர்குடிகள் எரிந்தழிந்தன. ஒவ்வொரு செய்தியையும் அறிந்து விழியிழந்த கிருதவீரியன் தலையிலும் நெஞ்சிலும் ஓங்கி ஓங்கி அறைந்துகொண்டான். தன் மைந்தர்களை அழைத்துவரச்சொல்லி அவர்கள் முன் தரையில் ஓங்கி அறைந்து வஞ்சினமுரைத்தான். ஐம்படைத்தாலி அணிந்திருந்த தன் பெயரன் கிருதவீரியனிடம் “செல்… நீ ஆணென்றால் சென்று அவன் குலத்தின் ஆணிவேரை அகழ்ந்துகொண்டுவந்து என் சிதைக்குழியில் வை. அவன் குலத்தின் குருதியால் எனக்கு நீர்க்கடன் அளி….” என்று கூவினான். புண்களென விழித்த கண்களிலிருந்து நீர்வார “பிருகுகுலத்தில் ஒருவன் எஞ்சும் வரை விண்ணகத்தில் நான் அமைதிகொள்ள மாட்டேன். இது ஆணை!” என்றான்.
பிருகுகுலத்து ஊருவனுக்கு ஆயுஷ்மதியில் ருசீகன் பிறந்தான். ருசீகனை வசிஷ்ட குருகுலத்தில் கொண்டுசென்று சேர்த்தபின் தணியாச்சினத்துடன் மீண்டும் ஹேகயர்குலத்தை அழிக்கவந்தான் ஊருவன். நூறு ஊர்களை நெருப்புக்கிரையாக்கியபின் பன்னிரண்டாம்நாள் மைந்தனுக்கு நாமகரணம் செய்ய வசிட்டகுருகுலத்துக்கு மீண்டான். அன்று விடியற்காலையில் அஸ்வினிநதிக்கரையில் தன் மூதாதையருக்கு அவன் அள்ளிவிட்ட நீர் வெறுமனே திரும்பிவழிந்தது. நீருக்குமேல் ஒரு நிழலென மேகம் கடந்து சென்றது. மும்முறை விட்ட நீரும் ஏற்றுக்கொள்ளப்படாமையால் குனிந்து அவன் தன் முகமெனத் தெரிந்த மூதாதை முகம் நோக்கி “ஏன்?” என்றான்.
“நீ கொன்ற குழந்தைகளின் கண்ணீர் இங்கே அனல்துளிகளாக ஊறிச் சூழ்ந்திருக்கிறது” என்றனர் மூதாதையர். “அவர்களின் அன்னையரின் கண்ணீரோ அனல்மழையாகப் பெய்துகொண்டிருக்கிறது. நீ எரித்த தந்தையரின் சொற்கள் நாற்புறமும் வெம்மையெனச் சூழ்கின்றன. ஐங்கனல் நடுவே இங்கே நாங்கள் வாழ்கிறோம்.” ஊருவன் கண்ணீருடன் கேட்டான் “என் மூதாதையரே, நான் என்ன செய்யவேண்டும்?” குளிர்நீரில் அலையடித்த மூதாதைமுகம் சொன்னது “உன் அனல் அவியவேண்டும்.”
“எப்படி அது அவியும் மூதாதையரே? இது நீங்கள் மூட்டிய தீயல்லவா? என் அன்னையின் கருவிலிருக்கையில் நான் நீங்கள் எழுப்பிய அச்சக்குரல்களைக் கேட்டேன். நம் குலத்துக்குழந்தைகள் குருதியில் தசைத்துண்டங்களாகத் துடித்ததைக் கண்டு அன்னையர் நெஞ்சுடைந்து அலறியதைக் கேட்டேன். மூத்தார் கைதூக்கி விடுத்த தீச்சொல்லின் முழக்கத்தைக் கேட்டேன். என் அன்னையின் தொடையில் ஒட்டியிருக்கையில் அவள் கண்ணீரும் குருதியும் வழிந்து என்னை மூட அவ்வெம்மையில் நான் வளர்ந்தேன். அணையமுடியாத எரிகல் நான்… என்னைப் பொறுத்தருளுங்கள்.”
“அணையாத் தீயென ஆன்மாவில் ஏதும் இருக்கவியலாது மைந்தா. ஏனென்றால் ஆன்மா பிரம்மம். ஆகவே அது ஆனந்தத்தையன்றி எதையும் தன்மேல் சூடிக்கொள்ள விரும்பாது. அந்நெருப்பின் வெம்மையைச் சற்றே விலக்கு. அடியில் தனித்திருக்கும் குளிர்ச்சுனையை நீ காண்பாய்!” தலையை அசைத்து ஊருவன் கண்ணீர்விட்டான். “என்னால் இயலாது. என்னால் இயலாது தந்தையரே. என்னை விட்டுவிடுங்கள். என்னுள் எழும் நெருப்பால் இன்னும் ஏழு ஊழிக்காலம் எரிவதே என் விதி.”
“நீ அணையாமல் நாங்கள் குளிரமுடியாது குழந்தை” என்றனர் மூதாதையர். “மண்ணிலுள்ள அனைத்து இன்பங்களும் பனித்துளிச் சூரியன்களே. எனவே மண்ணிலுள்ள துயர்நிறைந்த இரவுகளனைத்தும் கூழாங்கல்நிழல்களே. விண்ணிலிருந்து பார்க்கையில் அவையனைத்தும் விளக்கவொண்ணா வீண்செயல்கள்.” ஊருவன் தன் தலையைப்பற்றியபடி படிகளாக அமைந்த பாறையில் அமர்ந்தான். “என்னால் காணமுடிகிறது தந்தையரே. ஆனால் நான் இதை உதறமுடியாது… எரியும் மரம் எப்படி தீயை உதறமுடியும்?”
“அது அனலல்ல. அனலின் பிரதிபலிப்புதான். ஆம், மைந்தா! ஆன்மா தன்னில் எதையும் படியவிடாத வைரம். விலகு. விட்டுவிடு. ஒருகணம்தான். அடைவதற்கே ஆயிரம் தருணங்கள். உதறுவதற்கு ஒரு எண்ணம் போதும். இக்கணமே குனிந்து நீரை அள்ளு. என் நெருப்பை இதோ விடுகிறேன் என்று சொல்லி இந்நதியில் விடு!” மறுசிந்தனை இன்றி ஊருவன் குனிந்து நீரை அள்ளி “விட்டேன்” என்றான். அவனுடைய நிழலென செந்நெருப்பொன்று நீரில் விழுந்து அக்கணமே குளிர்நீல நதிவெள்ளம் தீப்பற்றி எரியத்தொடங்கியது.
தன் உடல் குளிர்ந்து நடுங்க ஊருவன் அந்நெருப்பை பார்த்து நின்றான். அந்தத் தழல் செம்பிடரி பறக்கும் கபிலநிறக் குதிரைத்தலையென ஆகி நீரிலமிழ்ந்து மறைவதைக் கண்டான். அதன் மூக்குத்துளைகளிலும் செவிகளிலுமிருந்து நீலத்தழல்கள் சீறின. “என்றுமணையாத அந்நெருப்பு தென்கடலுக்குள் வாழும் மைந்தனே. வடவைத்தீ என அதை முனிவர் வழிபடுவர். ஊழிமுடிவில் முக்கண்ணன் கைந்நெருப்பு ஏழுவானங்களையும் மூடும்போது அதுவும் எழுந்துவரும்” என்றனர் மூதாதையர். “ஆம், தங்கள் அருள்” என்றான் ஊருவன்.
திரும்பி நடந்தபோது தன் உடல் எடையற்றிருப்பதை ஊருவன் உணர்ந்தான். அவன் விரல்நுனி தொட்டால் எரியும் அக்னிப்புற்கள் தளிர்வாசத்துடன் கசங்கின. அவன் உடல்நெருங்கினால் வாடும் மலரிதழ்கள் பனியுதிர்த்தன. அவன் காலடியில் பதறிப்பறந்தெழும் காட்டுப்பறவைகள் இன்னிசை முழக்கின. விரிந்த புன்னகையுடன் வசிட்ட குருகுலம் சென்று தன் மைந்தனை மடியிலமர்த்தி முன்னோருக்குப் பிடித்த பெயரை அவனுக்கிட்டான். ‘ருசீகன் ருசீகன் ருசீகன்’ என்று மும்முறை அவன் காதில் சொன்னான். “என்றும் அழியா மெய்மையை நீ அறிக” என வாழ்த்தி தான் கொய்து வந்திருந்த சிறிய வெண்மலரை அவன் கையில் கொடுத்தான்.
குழந்தை தன் வலக்கையை முறுக்கி முட்டிபிடித்திருந்தது. அச்சிறுவிரல்களைப் பிரிக்க ஊருவன் முயன்றான். வசிட்டமாணவரான ஊர்ணாயு புன்னகைத்து “இடக்கையிலேயே வையுங்கள் வைதிகரே. எந்தக்கை என்பதை குழந்தை முடிவெடுத்துவிட்டது” என்றார். “இவனை இங்கே வளர்த்தெடுங்கள் முனிவர்களே. நான் என் மூதாதையருக்குச் செய்யவேண்டிய தவம் எஞ்சியிருக்கிறது” என்றபின் மைந்தனின் இடக்கையில் அம்மலரை வைத்து அதன் மென்மயிர் உச்சியை முகர்ந்து திரும்பக்கொடுத்துவிட்டு எழுந்து திரும்பிப்பாராமல் நடந்து ஊருவன் கானகம் புகுந்தான்.
மைந்தனின் அன்னை அவனை அள்ளி எடுத்து தன் குடிலுக்குக் கொண்டுசெல்லும்போது குழந்தை தன் வலக்கையை விரித்தது. அவள் அம்மலரை அக்கையில் வைத்ததும் அது பொசுங்கி எரியத்தொடங்குவது கண்டு திகைத்தெழுந்தாள்.