அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, தமிழ் இணைய உலகில் புதிதாக “கூடு” என்கிற இணைய இதழை தொடங்கியுள்ளோம். நேரம் கிடைத்தால் பார்த்துவிட்டு, உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளளவும். இணைப்பு: www.koodu.in or http://koodu.thamizhstudio.com/index.php உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கிறோம்.
—
அருண் & குணா
தமிழ் ஸ்டுடியோ.காம்
www.thamizhstudio.com
9840698236, 9894422268
அன்புள்ள கூடு நண்பர்களுக்கு
உங்கள் இணையதளத்திற்கு வந்தேன். ஆனால் உள்ளே சென்று படிக்கமுடியவில்லை. நான் பதிவுசெய்து வாசிக்கும் இணையதளங்களுக்குச் சென்று வாசிப்பதில்லை. என் ஆதர்ச எழுத்தாளர்களில் ஒருவரான ஞாநியின் தளத்திற்குக் கூட. வேறு ஒன்றுமில்லை. கடவு எண்கலை நினைவில் வைத்திருப்பதெல்லாம் எனக்கு பெரிய சள்ளையான விஷயங்கள். ஏதோ தொழில்நுட்பச் சிக்கலுடன் இருப்பதாக ஒரு பிரமிப்பு. மேலும் உங்கள் இணையதளம் தொலைபேசி எண்ணைக்கூட கோருகிறது
அன்புள்ள ஜெயமோகன் சார் அவர்களுக்கு, ஜெ
எனது இணையதளங்களை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்
ரவி
www.kavimalar.com
www.tamilauthors.com
http://tamilbookmarket.com/archives/category/6
அன்புள்ள ரவி
உங்கள் இணையதளத்தைப் பார்த்தேன். பொதுவாக சிறிய சிற்றிதழ்களில் காணப்படும் பெயர்களுடன் கவனத்திற்குரிய இதழாக இருந்தது. ஹை க்கூவின் சாத்தியங்களைப்பற்றி எனக்கு ஆழமான ஐயம் உண்டு. ஹை க்கூவின் சிக்கல் என்னவென்றால் கவிதை ஆற்றவேண்டிய ‘முன் வைத்தலை’ அதனால் எளிதில் செய்யமுடியாதென்பதே.
அதாவது அன்றாட வாழ்க்கையில் காணும் ஒரு விஷயத்தையே நவீன கவிதையும் சொல்கிறது. அதில் அர்த்தம் ஏற்றி அதை பிறவற்றில் இருந்து கொஞ்சம் முன்னகர்த்தி வைக்கிறது. ஆகவே நாம் அதைப்பற்றி யோசிக்க ஆரம்பிக்கிறோம். உதாரணமாக ஒரு ஜோடி செருப்பைப்பற்றி கவிதை எழுதபப்டுமென்றால் தினமும் நூறுசெருப்பை பார்க்கும் நாம் அந்த செருப்பை மட்டும் தனியாகக் கவனிக்கிறோம் இல்லையா? இந்த முன்னிறுத்துதலுக்கு கவிதை சில விவரணைகள் அளிக்க வேண்டியிருக்கிறது. சில தகவல்கள் சில காட்சிகள் அளிக்கவேண்டியிருக்கிறது. அதற்கு கவிதைக்கு மேலதிக வரிகள் அவசியம்.
ஆனால் ஹை க்கூ அந்த இடத்தை அளிப்பதில்லை. எனவே கவிதையில் வாசகன் மனம் திறக்க முடியாதபடி ஆகிறது. ஜப்பானிய ஹை க்கூ இதை எப்படி சமாளிக்கிறது என்றால் கைக்கூவுக்கென்றே உள்ள சீல காட்சிப்படிமங்களை அவர்கள் திரும்பத்திரும்ப பயன்படுத்துகிறார்கள். வண்ணத்துப்பூச்சி, நிலா, வசந்தகாலம், மலைகள் , இரவு, தடாகம்… இவை ஏற்கனவே ஜப்பானிய மனதில் ஆழமான படிமங்களாக உள்ளன. அவற்றைச் சொன்னாலே கவித்துவ கற்பனை உருவாகிவிடும்.
நமது சங்கப்பாடல்களிலும் திணைகள் சார்ந்து இபப்டிப்பட்ட நிரந்தரமான படிமங்கள் உள்ளன. அது செவ்வியல்கவிதையின் வழி.
நவீன கவிதைகளில் வரும் ஹை க்கூக்கள் பெரும்பாலும் நினைவில் நிற்காமல் போய்விடுகின்றன. காரணம் இதுவே.
ஜெ