சமீபத்தில் ஒரு விவாதத்தில் நண்பர் ஒருவர் சொன்னார். ”காந்தியின் எளிமை மிகவும் செலவேறியது என்று சரோஜினி நாயிடு சொன்னதாகப் படித்தேன்…” அவர் மூன்றாம் வகுப்பில்போகும் செலவில் ஐம்பதுபேர் முதல்வகுப்பில் போகலாமென்று சரோஜினி நாயிடு சொல்லியிருக்கிறார். அதற்கு ஒரு நாள் முன்புதான் அஜிதனிடம் அதைப்பற்றி பேசிக் கொண்டிருந்தேன் — காந்தியின் மூன்றாம் வகுப்புப் பயணம் பற்றிய சரோஜினி நாயுடுவின் கிண்டலை.
அதை வரலாற்றுரீதியாகப் பார்க்க வேண்டும். நமது ஆரம்பகால தேசத்தலைவர்களெல்லாம் அடிப்படையில் சாமானியர்கள். ஆனால் தொடர்ச்சியாக மகாராஜாக்களின், வைஸ்ராய்களின், வாழ்க்கையை பார்த்துக் கொண்டே இருந்திருக்கிறார்கள். ராஜரீகம் என்றால் அரசத்தோரணை என்பதை கண்டு கற்று வளர்ந்தவர்கள் தானே அவர்கள்? காந்தி அவர்களை கதர் துணியிலும் எளிமையிலும் கட்டிப்போட்டிருந்தார். உள்ளே அவர்களின் ஆத்மா ஏங்கிக் கொண்டிருந்தது. இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்ததுமே நமது காங்கிரஸ் தலைவர்கள் அனைவருமே வைஸ்ராய் ஆகும் கனவுகளை வளர்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.
அக்கால நம் தலைவர்களின் அந்தரங்கங்களைப் பற்றி எழுதிய அதிகார மட்டத்தினர் அனைவருமே சொல்லியிருக்கும் ஒரு விஷயம் உண்டு– நேரு பட்டேல் உட்பட எவருமே 1946 வரைகூட இந்தியாவுக்கு முழுச் சுதந்திரம் கிடைக்கும் என்றும் அதில் தாங்கள் உயர்பதவி வகிக்க முடியும் என்றும் கனவு கண்டதில்லை. அந்த வாய்ப்பு வந்ததுமே அவர்களின் உச்சகட்ட கனவுகள் கூட கண்ணெதிரே வந்து நின்றன. கையெட்டும் தூரத்தில் ஒளிவிட்டன. அவர்கள் தடையாகக் கண்டது காந்தியைத்தான். ஆகவே அந்த கணமே காந்தியை உதறியும் விட்டார்கள். வட்டமேஜை மாநாட்டை சாணிமெழுகிய தரையில் அமர்ந்துகூட நடத்தலாம் என்றும் வைஸ்ராய் மாளிகையை மியூசியம் ஆக்கலாம் என்றும் சொன்னவர் கிழவர்.
ஆட்சி மாறியதும் தங்கள் மாளிகையை மறுசீரமைப்பு செய்யவே காங்கிரஸ் ஆட்சியாளர்கள் லட்சங்களை அள்ளியிறைத்தார்கள் என்பது வரலாறு. முதல் குடியரசுத்தலைவரான ராஜேந்திர பிரசாத் தனக்குரிய வேலையாட்கள் மற்றும் அலங்காரங்களுடன் வைஸ்ராய் மாளிகையை மேலும் அழகுபடுத்தி மேலும் பலநூறு வேலையாட்களை கொண்டுவந்தார். மாளிகையை கங்கை நீரில் கழுவி மாபெரும் வேள்விகளை செய்தார். சரோஜினி என்ற ‘சூடோ போயட்’ அவரது மகள் பத்மஜா நாயிடு வழியாக நேருவுடன் இருந்த உறவை பயன்படுத்தி பெரும் பதவிகளை பெற்றார். நேரு குடும்பமே ஒரு சக்ரவர்த்தி குடும்பத்தின் சொகுசுகளையும் பகட்டுகளையும் அனுபவிக்க ஆரம்பித்தது. குறிப்பாக விஜயலட்சுமி பண்டிட் எப்போதுமே தன்னை இந்தியப் பேரரசியாக எண்ணி வந்தவர்.
உத்தரபிரதேச கவர்னராக இருந்த சரோஜினி நாயிடு வைஸ்ராய்க்கு உரிய புகழ்பெற்ற ராஜரீக தனி ரயிலில் சிம்லா சென்றார். முழுக்க பொன்னாலும் பட்டாலும் ஆன அரண்மனை அது. அதைப்பற்றி கேரள இதழாளர் ஒருவரின் கேள்வி எழுந்தது, காந்தி மூன்றாம் வகுப்பில்தானே சென்றார் என்று. அதற்கு அம்மையார் சொன்ன பதில்தான் காந்தியைப்பற்றிய விமரிசனம். அது காந்திய அறக்கோட்பாடுகளை உதறத்துடித்த காங்கிரஸின் குரல். காங்கிரஸில் எவருமே காந்திக்காக வாதிடவில்லை– அவர்கள் சிம்லா ரயில்களை நியாயப்படுத்தியாகவேண்டிய நிலையில் இருந்தார்கள்.
காங்கிரசுக்கு காந்தி காலத்தில் கிட்டத்தட்ட நாலரை லட்சம் முழுநேர ஊழியர்கள் இருந்தார்கள். சம்பளம் பெறும் ஊழியர்கள். அவர்களுக்கு மாதம் எட்டணா ஊதியம் அளிக்கப்பட்டது. படுகேவலமான வறுமையில்தான் அவர்கள் வாழ்ந்தாக வேண்டும். வக்கீல்கள், ஜமீந்தார் பிள்ளைகள், பட்டதாரிகள் அந்த ‘வருமானத்துக்குள்’ வாழ்ந்து ஊர் ஊராகச் சென்று பணியாற்றினார்கள். வெறுந்தரையில் படுத்து இரந்து உண்டு கால்நடையாக அலைந்தார்கள். நவீன இந்தியாவின் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், புரட்சியாளர்கள் பெரும்பாலானவர்கள் இந்த நாலரைலட்சம் பேரிலிருந்துதான் வந்திருக்கிறார்கள். பிரேம்சந்த்,பஷீர்,பன்னலால் பட்டேல்,தாராசங்கர் பானர்ஜி, சிவராமக் காரந்த், விபூதிபூஷன் முதல் சி.சு.செல்லப்பா வரை முதல் தலைமுறை இலக்கியவாதிகள் அனைவருமே அந்த பராரிகளில் இருந்து எழுந்தவர்களே. அந்த எளிமையில் உள்ள அவர்களின் தியாகமே எளிய மக்களை காங்கிரஸை நோக்கி இழுத்தது.
எண்ணிப்பாருங்கள், காந்திவரும்வரை காங்கிரஸில் அந்தப் பண்பாடு இருந்ததா? சட்டமேதைகளும் பேராசிரியர்களும் முதல்வகுப்பில் சென்று கட்சிகட்டிய காலம் அது. வருடம்தோறும் மாநாடு போடுவதற்கு அல்லாமல் எதற்கும் காங்கிரஸ் கூடாமலிருந்த காலம். [உண்மையில் காங்கிரஸ் என்ற பேரே மாநாடு என்ற பொருளில் போடப்பட்டது. வெறுமெ கூட்டங்கள் நடத்துவதற்கு மேலாக காங்கிரஸை ஒருவெகுஜன இயக்கமாக ஆக்கும் நோக்கமேதும் முன்னோடிகளுக்கு இருந்ததில்லை.] எளிய மக்களுக்கும் அவர்களுக்கும் தொடர்பும் இல்லை. காந்தி எப்படி பலலட்சம் ஊழியர்களை கவர்ந்தார்? கோகலேயிடமும் திலகரிடமும் இல்லாத எது அவரிடம் இருந்தது? எளிமை. முன்னுதாரணமான எளிமை.
காந்தி உடுத்த எளிய உடை,சாப்பிட்ட அலுமினியத்தட்டு, தூங்கிய கோரைப்பாய், உடல் தேய்த்துக் குளித்த வெள்ளைக்கல் இவற்றுடன் அவர் வேறு எந்த பெட்டியில் பயணம் செய்ய முடியும்?தன் எளிமையை காந்தி ரகசியமாக வைத்திருக்கவில்லை. அது அவரது பிரகடனம். எளிமையாக இருப்பதை பிரகடனப்படுத்தியது வழியாக அவர் முன்வைக்கும் அறைகூவல்கள் ஏராளமானவை. மன்னர்களுக்கும் பிரபுக்களுக்கும் அது தெளிவாகவே ஒரு சொல்லைச் சொன்னது, அவர்களின் காலம் முடிந்துவிட்டது, எளியவர்களின் காலம் வந்துவிட்டது என்று. விக்டோரியா ராணிக்கே காந்தி தன் உடைமூலம் அந்தச் சேதியை தெள்ளத்தெளிவாகச் சொன்னார். எளிய கோமண உடையுடன் சக்ரவர்த்தினிக்குச் சமானமாகச் சென்று பேச்சு வார்த்தை மேஜைமுன் அமர்ந்தபடி!
இன்றுவரை நம்மைச்சூழ உள்ள நாடுகளில் ஜனநாயகம் இல்லை. ஏன்? சாமானியர்களை ஆட்சியாலர்களாக ஏற்க அங்குள்ள மக்களின் மனம் ஒப்பவில்லை. ஆர்.வெங்கட் ராமன் ஆப்ரிக்க நாடொன்றுக்கு சென்றபோது நடந்ததாக ஒரு வேடிக்கையைச் சொல்வார்கள். கம்பீரமான பாதுகாவலர் பின்னால் வர வெங்கட் ராமன் ஊர்வலமாகப் போனதைக் கண்டு ஆப்ரிக்க பெண்ணொருத்தி கேட்டாளாம் ‘ஜனாதிபதி கம்பீர மாக இருக்கிறார். முன்னால் யாரது ஒரு குடுகுடு கிழவன்?’என்று. பல்லாயிரம் வருடத்து இந்து மரபு திருவுடை மன்னரை திருமாலாகவே கண்டது. திருமாலையே ராமன் ,கண்ணன் என மன்னர்களாக வணங்கியது. ஒரு மர்மமான வரலாற்றுக் கணத்தில் அது எளிய கோமணதாரியை மன்னர்களுக்கு மேலான அதிகாரத்துடன் அமர்த்தியது. அந்த நுண்ணிய புரிதலில் இருந்துதான் நமது அழியாத ஜனநாயகம் பிறந்தது. காந்தியின் உடையை புரிந்துகொண்ட சாமானிய விவசாயியில் , சமையற்கட்டுப் பெண்டிரில் உள்ளது இந்திய ஜனநாயகத்தின் அஸ்திவாரம்.
தென் திருவிதாங்கூரில் காந்தி வந்தபோது ராஜபக்தியில் ஊறிய என் பாட்டி சென்று பார்த்திருக்கிறார். ” ஒரு ஸாது சன்யாசி ! மகாராஜாவின் சர்க்கார் போயி. இனி சன்யாசியுடே சர்க்காராணு” என்று புரிந்துகொண்டார். அந்தப்புரிதல்தான் சாதிய மன அமைப்பு கொண்ட அவரை ‘இனி நாடாருடெ சர்க்காராணு…..அவனாக்கும் நம்முடே ராஜா…ஆளு பரம யோக்யன்…’ என்று உள்வாங்கச் செய்து கடைசிவரை காமராஜின் தீவிர ஆதரவாளராக ஆக்கியது. ஜீப்பில் இருந்து காமராஜ் மலையாளத்தில் ‘லெட்சுமிக்குட்டியம்மே ஓட்டு போட்டிருங்க’ என்று உரிமையுடன் ஆணையிட்டுவிட்டுச் செல்வார்.”பெண்ணுகெட்டு நாடாரே”என்று பாட்டி இங்கிருந்து கூவுவாள். பாட்டிக்கு காமராஜ் மேல் தீரா மனக்குறை அவ்விஷயத்தில்
காந்திக்கு அன்று அரசாங்கத் தொண்டர்களான ஜமீன்தார்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு இருந்தது. காந்தி அவர்களின் அதிகாரத்துக்குத்தான் வேட்டு வைக்கிறார் என்பதை அவர்கள் அறிவார்கள். இந்தியாவின்பெரும்பகுதி அவர்களின் ரவுடிக்கூட்டங்களால் ஆளபப்ட்ட காலம் அது. ஆகவே காங்கிரஸ் தொண்டர்களை காந்தி அறியாமல் காந்தியின் மூன்றாம் வகுப்பு பெட்டி முழுக்க ஏறி காவல் அளிக்க பட்டேல் ஏற்பாடு செய்தார். சரோஜினியின் அற்ப மனம் குறிப்பிடுவது இதையே. ‘காந்தி மூன்றாம் வகுப்பில் சென்றதனால்தான் காங்கிரஸ் நடந்துசென்றது’ அவ்வளவுதான் அவருக்கு ஒரு சிந்திக்கும் இந்தியன் அளிக்கும் பதிலாக இருக்க முடியும். அதைச் சொன்னவர் இ.எம்.எஸ் நம்பூதிரிப்பாடு. … சரோஜினிகளும் நேருக்களும் காங்கிரஸை வழிநடத்தியிருந்தால் அதன் தொண்டர்கள் ரயில் இல்லாத ஊர்களுக்குச் சென்றிருக்க மாட்டார்கள். கொள்கைகளும் கோட்பாடுகளுமல்ல, தியாகமே இயக்கங்களை உருவாக்கும் ஆதா சக்தி.
இதைப்புரிந்துகொண்டவர்கள் கம்யூனிஸ்டுகள் மட்டுமே. இ.எம்.எஸ் நம்பூதிரிப்பாடு அவரது வீட்டில் ஒரே ஒரு படம்தான் வைத்திருந்தார்– காந்தியின் படம். அவர்தான் இ.எம்.எஸ்ஸ¤க்கு தனிவாழ்க்கையில் ஆதர்சம். கடைசிவரை தன் சட்டையை தானே துவைத்துப்போட்டு வாழ்ந்த காந்தியவாதி அவர். தலைவன் அபப்டி இருந்ததனால்தான் தொண்டர்கள் சிங்கிள் டீ குடித்து கட்சி வேலை செய்தார்கள். காந்தி இறந்த மறுகணமே காங்கிரஸில் அந்த தொண்டர்பண்பாடு இல்லாமல் ஆயிற்று. காசு கொடுத்தால்தான் காங்கிரஸ் தொண்டன் கொடிபிடிக்க வருவான். தலைவர் வைஸ்ராய் ரயிலில் போகும்போது நடந்துபோக அவன் என்ன முட்டாளா?
நேற்று பார்வதிபுரம் சுவரெங்கும் சிபிஎம் ·புல் என்று எழுதிக்கொண்டிருப்பவர்களைப் பார்த்தேன். எல்லாரும் காலையில் ஊரைக்கூட்டும் காட்டுநாயக்கர்கள். தன்னார்வத் தொண்டர்கள். அருகிலேயே விஜய்காந்த் கட்சி , திமுக கட்சிகளின் மாபெரும் சுவரெழுத்துக்கள். அவை டெண்டர் போட்டு கட்டணம் அளித்து ஒரே பெருவிளம்பர நிறுவனத்தால் உயர்தர ஏஷியன் பெயிண்டால் வரையப்பட்டவை. அவற்றுக்கான பணம் பெருமுதலாளிகளால் கொடுக்கப்பட்டிருக்கும். கம்யூனிஸ்டுக் கட்சிக்கு காட்டுநாயக்கர்கள் ஏன் வரைகிறார்கள் என்றால் சற்று அப்பால் அவர்களின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வக்கில் பெல்லார்மினும் அதேபோல தார்குடுவையுடன் வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு நிற்பார் என்பதனால்தான். பால் வாங்கப்போகும்போது அதிகாலையில் சுவரெழுத்து வரையும் தொண்டர்கள் அருகே பீடி பிடித்தபடி ஜெ.ஹேமச்சந்திரன் என்ற பெரும்தலைவர் நிற்பதை சென்றவருடம் நானே கண்டிருக்கிறேன்.
மூன்றாம் வகுப்பில் செல்லும் கோமணாண்டியான காந்தி ஒரு உயிருள்ள பதாகை. அதன் பெயரே ஜனநாயகம் என்று புரிந்துகொள்ள மனசாட்சியோ வரலாற்றுப் பிரக்ஞையோ சற்றே திறந்திருந்தால் மட்டும் போதுமானது.
காந்தியும் சுந்தர ராமசாமியும் (சு.ரா. நினைவின் நதியில் புத்தகத்திலிருந்து)