வேதசகாயகுமார்தான் முனைவர் வறீதையா கான்ஸ்தன்டீனை அறிமுகம் செய்துவைத்தார். தூத்தூர் செயிண்ட் ஜூட்ஸ் கல்லூரியில் இணைப்பேராசிரியராக பணியாற்றுகிறார். கடற்கரைச் சூழியல் ஆய்வுகள் சார்ந்து 25 ஆய்வுக்கட்டுரைகளும் ஏழு நூல்களும் படைத்திருக்கிறார். தமிழில் அணியம் என்ற நூலின் ஆசிரியர் [தமிழினி வெளியீடு]
இரண்டுவருடங்களாக அவர் கடற்கரைப்பகுதி மக்களின் படைப்பாற்றலை வளர்த்துக்கொள்ள உதவும்பொருட்டு நாகர்கோயிலில் ஒரு சிறிய கூடுகையை நடத்திவருகிறார். இப்போது நாகர்கோயில் கார்மல் உயர்நிலைப்பள்ளியில் மாதத்தில் இரண்டாம் ஞாயிறன்று இக்கூடுகை நிகழ்ந்து வருகிறது. இருபதுக்குள் உறுப்பினர்கள் வந்து அதில் பங்கெடுத்து தங்கள் படைப்புகளை பரிமாறி விவாதித்துக் கொள்கிறார்கள். எழுத்தாளர்கள் அழைக்கப்பட்டு கருத்துப்பரிமாற்றம் நடைபெறுகிறது. வேதசகாய குமார், ஜோ.டி.குரூஸ்,பாமா,மாலதி மைத்ரி ஆகியோர் இதுவரை கலந்துகொண்டு பேசியிருக்கிறார்கள். 13-7-08 அன்று நான் கலந்துகொண்டேன்.
பத்துபேர் உரையாடலில் கலந்து கொண்டார்கள். நான் எழுத ஆரம்பித்த சூழல். இப்போது எழுதும் முறை ஆகியவற்றை விளக்கி இருபதுநிமிடங்கள் பேசினேன்.
*
ஐம்பது அறுபதுகளில் குமரிமாவட்டத்தின் தென்பகுதியில் கம்யூனிஸ்டுக் கட்சிகள் ஒரு கலாச்சார மறுமலர்ச்சிக்குக் காரணமாக அமைந்தார்கள். கிராமநூலகம் நிறுவுதலே அன்றெல்லாம் கட்சிப்பணியின் அடிப்படை வேலை. அதன் பின் கலைநிகழ்ச்சிகள். அவ்வாறு உருவான வாசிப்புப்பழக்கம் இன்றும் அப்பகுதியில் தீவிரமாக உள்ளது. தமிழகத்தில் மிக அதிகமாக வாசகர்கள் வாசிக்கும் கிராம நூலகங்கள் அப்பகுதியில் உள்ளவையே. அத்தகைய ஒரு வாசிப்புச்சூழலில் உருவானவர் என் அம்மா. அவரது சகோதரர்கள் கம்யூனிஸ்டுகள். அம்மாவிடமிருந்து எனக்கு வாசிப்புப் பழக்கம் வந்தது. இயல்பாகவே நான் எழுதலானேன்.நிறைய பிரசுரமாகவும் செய்தன.
முதலில் வேடிக்கைக்காக எழுதினேன். பின்னர் என் வாழ்க்கையில் தீவிரமான நிகழ்வுகள் ஏற்பட்டன. அவற்றிலிருந்து நான் தீவிரமான அக,புற அலைச்சல்களுக்கு ஆளானேன். அதன்பின் எண்பத்தாறில் மீண்டும் எழுத ஆரம்பித்தேன். அதையே என் இலக்கியப்படைப்பியக்கத்தின் தொடக்ககாலமாக கருதுகிறேன். அதன்பின் உள்ள கதைகளே பிரசுரமாகியிருக்கின்றன. என் எழுத்து என்பது என்னை அறிவதற்கான அகப்பயணம் மட்டுமே. அப்பயணம் வாழ்க்கையை வரலாற்றை அறிவதாக இயல்பாகவே விரிவடைகிறது.
இத்தகையதோர் கூடுகையில் இலக்கியத்தின் அடிப்படைகளைப் பற்றி சில சொற்களைச் சொல்ல வேண்டியிருக்கிறது. பொதுவாக இரண்டாம்தர எழுத்தாளர்கள் இம்மாதிரி அரங்குகளில் வந்து எழுத்தாளர்கள் சமூக மாற்றத்துக்காக எழுத வேண்டும், முற்போக்குக் கருத்துக்களை எழுதவேண்டும் என்று சொல்லிவிட்டுச் செல்வது அவ்ழக்கம். எழுத ஆரம்பிக்கும் இளம் படைப்பாளிகளை அழிப்பதற்கு இதைவிடச் சிறந்த உபதேசம் வேறு தேவையில்லை. என் கைக்கு வரும் இளம் எழுத்தாளர் படைப்புகளில் பெரும்பாலானவை இத்தகைய தவறான திசை திருப்புதல்களால் படைப்பியக்கத்திற்கு நேர் எதிராக சென்றுவிட்ட ஆக்கங்களாகவே இருக்கின்றன.
இத்தகைய அறிவுரைகளை நம்பும் இளம் எழுத்தாளன் தன் காலகட்டத்தில் எங்கும் ஓங்கி ஒலிக்கும் கோஷங்களையும் அறைகூவல்களையும் தானும் எதிரொலிக்க ஆரம்பிக்கிறான். கருத்துக்களை அறைகூவல்களாகவோ புலம்பல்களாகவோ எழுதினால் அவை இலக்கியமாகும் என நம்புகிறான். உயர்ந்த கருத்து, தேவையான கருத்து உடைய ஒன்று நல்ல இலக்கியம் என்று நம்ப ஆரம்பிக்கிறான். அந்தக்கருத்துக்கள்தான் ஏற்கனவே சூழலில் ஒலிக்கின்றனவே, அதற்கு நீ எதற்கு என்ற கேள்வியை எவருமே அவனிடம் கேட்பதில்லை. அவன் அப்படியே நெடுநாள் திரிந்து தன் படைப்புமனத்தையும் மொழியையும் திரும்ப்பபெற முடியாதபடி இழந்துவிடுகிறான்.
ஆகவே உங்கள் சமூகத்தை முன்னேற்ற எழுதவேண்டாம். உங்கள் சமூகத்தைச் சீர்திருத்தவும் நீங்கள் எழுத வேண்டாம். அப்படியானால் என்ன எழுதுவது? சமூகத்தைப் பற்றி எழுதுங்கள். சமூகத்தை வெளியே நோக்கி எழுத வேண்டாம். சமூகத்தை உங்களுக்குள் நோக்கி எழுதுங்கள். உங்களைப்பற்றி எழுதுங்கள். உங்கள்மூலம் நீங்கள் அறியும் வாழ்க்கையை சித்தரித்துக் காட்டுங்கள். நேர்மையாக, சமரசமில்லாமல் எழுதுங்கள். உண்மையை எழுதினாலே அது புரட்சிகரமானதாக ஆகும் என்பதை அறிவீர்கள். எழுத்து சமூகத்தை சீர்திருத்தட்டும், எழுத்தாளன் வேலை எழுதுவதே.
அதாவது எழுதவேண்டியது கருத்துக்களை அல்ல, வாழ்க்கையை. இது ஏன் என்று நோக்க வேண்டும் இங்கே ·பாதர் ஜெயபதி அவர்கள் மது ஒழிப்புக் கூட்டங்கள் நடத்துகிறார். மது தீங்கனாது, குடிப்பழக்கம் ஒரு நோய்– இவைபோன்ற கருத்துக்களை மது அடிமைகளிடம் சொன்னாலே போதுமே. அவர்களுக்கு புரியுமே. ஆனால் என்ன செய்கிறார்கள்? அவர்களிடம் தங்கள் வாழ்க்கையை விவரித்துச் சொல்ல வைக்கிறார்கள். உள்ளது உள்ளபடி சித்தரிக்க வைக்கிறார்கள். வாழ்க்கையை நாம் மொழியில் சொல்ல ஆரம்பித்ததுமே அதை ஒரு கண்ணாடியில் பார்ப்பதுபோல பார்க்க ஆரம்பித்துவிடுகிறோம். அதன் குறைகள் தெளிவாக கண்முன் நிற்கின்றன. இதைப்போன்ற ஒரு சிகிழ்ச்சைமுறைதான் இலக்கியமும். கொள்கைக்காக திரிக்காமல், மிகைப்படுத்தாமல் உள்ளது உள்ளபடி சொல்ல ஆரம்பித்தாலே போதும். இலக்கியத்தின் முதல்படி அதுவே.
இளம் எழுத்தாளர்களின் முக்கியமான இன்னொரு சிக்கலையும் சொல்லிச் செல்கிறேன். கருத்துக்களைச் சார்ந்து எழுதும்போது கருத்துக்களை காட்டக்கூடிய நிகழ்ச்சிகள் மற்றும் தகவல்களை மட்டுமே அவர்கள் முக்கியமாக கருதுகிறார்கள். அந்த முக்கியமான விஷயங்களை மட்டுமே எழுதுகிறார்கள். அவை எல்லார் கண்ணுக்கும் படும் பொதுவான விஷயங்களாகவும் இருக்கும். இலக்கியம் என்பது நுண்தகவல்களால் ஆனது என்பதை உணருங்கள். கண்டு கேட்டு அறிந்து, உங்களை அறியாமல் கொஞ்சம் கொஞ்சமாக சிறுவயது முதலே ஆழ்மனதில் ஊறித்தேங்கியிருக்கும் தகவல்கள் இலக்கியப்படைப்பில் இடம்பெறும்போதே அதற்கு இலக்கிய மதிப்பு கிடைக்கிறது.
காரணம் சின்னவிஷயங்கள் இலக்கியத்தில் பெரிய விஷயங்கள். அவற்றுக்கு இலக்கியத்தில் அசாதாரணமான ஆழம் கைவந்துவிடும். ஜோ டி க்ரூஸின் ஆழிசூழ் உலகு நாவலில் கடலுக்குள் இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் தகவல் ஒன்று வருகிறது. சாதாரணமாக அதைச் சொல்லிச் செல்கிறார் அவர். ஆனால் எனக்கு மனிதன் கடலை தன்வயப்படுத்தும் ஒரு முயற்சியாகவே அது படுகிறது.
எழுத ஆரம்பிக்கும்போது எழுத்தில் கவனம் கொள்ளவேண்டிய மூன்று தொழில்நுட்ப விஷயங்களை மட்டும் சொல்லி முடிக்கிறேன்.
1. ”சொல்லாதீர்கள், காட்டுங்கள்.” எழுத ஆரம்பிப்பவர்கள் கதைகளை சுருக்கமாகச் சொல்ல முயல்வார்கள். காரணம் அது நாம் சாதாரணமாக வாழ்க்கையில் செய்வது. நடந்ததை சுருக்கமாக சொல்வது. ஆனால் இலக்கியத்தின் நோக்கம் அனுபவத்தைத் தெரிவிப்பது அல்ல. அது கற்பனை மூலம் வாசகனை அந்த அனுபவத்தை தானும் அடைய வைக்கவே முயலவேண்டும். ஆகவே அந்த கதை கண்முன் உண்மையில் நிகழ்ந்தால் எப்படி இருக்குமோ அந்த காட்சியனுபவத்தை வாசகனுக்கு அளியுங்கள். நுண்ணிய தகவல்கள் மூலம் கதையை கண்ணிலே காட்டுங்கள். கடற்கரை வாழ்க்கையை எநக்குச் சொல்லாதீர்கள், நானே அங்குவந்து வாழும் அனுபவத்தை எனக்கு அளியுங்கள்.
2 ”கதையின் கருத்தை கதைக்குள் சொல்லாதீர்கள்”. கதை என்பது வாசகனுக்கு அனுபவத்தை அளிப்பது. கருத்தை அவனே உருவாக்கிக் கொள்ளட்டும். வாசகனுக்கு நீங்கள் ஒரு கருத்தைச் சொன்னால் அது உங்கள் கருத்து. அவனே அதை கதையில் கண்டடைந்தால் அது வாசகனின் கருத்து. கதைக்குள் என்ன சொல்லப்படுகிறது என்பது அல்ல முக்கியம். என்ன உணர்த்தப்படுகிறது என்பதுதான் முக்கியம்.
3 ”கதைவடிவங்களை கற்றுக்கொள்ளுங்கள்” .கதையின் வடிவம் பற்றிய ஒரு பிரக்ஞை எழுத்தாளனுக்கு தேவை. இன்றுவரை கதையிலக்கியம் அடைந்துள்ள சிறந்த வடிவத்தை முயன்று கற்று அதை நாமும் அடைவதற்கான முயற்சி தேவை.
*
பேச்சுக்குப் பின் நீண்ட விவாதம் நடைபெற்றது. எழுத்தாளன் ஒருபோதும் தன் இன,மத,சாதி,மொழி அடையாளங்களை தன் அடையாளமாகக் கொள்ளலாகாது என்று நான் சொன்னேன். அவை அவனது பேசு பொருட்கள் மட்டுமே. அவன் அதற்கு வெளியே இருப்பவனாகவே தன்னை உருவகித்துக் கொள்ள வேண்டும்.நமது மரபு நமக்கு முக்கியம்.நாம் அதைக் கற்று உணர்ந்து அதன் சிறந்த அம்சங்களை சுயப்படுத்திக் கொள்ள வேண்டும். அதுவே நமது பண்பாடு என்பது.
ஆனால் விமரிசனமில்லாமல் மரபை அணுகுவதென்பது மிகமிக அபாயகரமானதாகும். மரபின் மீது பக்தியோ நெகிழ்ச்சியோ கொள்வதில் பொருளில்லை. மரபின் எந்தவிஷயமும் கருமையும் வெண்மையுமாக இருமுகத்துடனேயே நம்மிடம் வந்துசேர்கின்றன. நாம் தவிர்த்தாகவேண்டிய பல விஷயங்கள் அவற்றில் உள்ளன என்றேன்.
நம் சாதி அல்லது இன அடையாளம் நம் பண்பாட்டின் அடிப்படையாக அல்லவா இருக்கிறது? அவற்றை உதறினால் நாம் ஒன்றுமில்லாதவர்களாக ஆகிவிடுவோமே என்றார் வறீதையா. வேதசகாயகுமார் ‘இன்றுவரை மீனவர்களில் ஒரு வழக்கம் உள்ளது, கைப்பிள்ளைக்காரிக்கு பாலுக்கு பால்சுறா போன்ற மீன்கள் தேவை என்றால் அதற்கு பணம் வாங்கமாட்டார்கள். அத்தகைய பண்பாட்டுக்கூறுகளை கைவிட்டுவிட முடியாதே’ என்றார்.
நான் என் நோக்கில் அதை விளக்கினேன். ஒருகாலத்தில் நிலம் விலையில்லாததாக இருந்தது. நூறுவருடம் முன்புகூட நம் நாட்டில் காட்டுநிலத்துக்கு விலை இல்லை. பின்னர் நிலம் ஒரு உடைமையாக ஆயிற்று. அப்போது பல விளைபொருட்கள் விலைகொண்டவையாக கருதப்படவில்லை. நான் சிறுவனாக இருந்தபோது எந்த பனையேறியிடமும் பதநீர் கேட்டு குடிக்கலாம். இல்லை என்று சொல்லமாட்டார்கள், பணமும் பெற மாட்டார்கள். அது நிலமானியகால மனநிலை. இன்று அந்நிலை இல்லை. இது முதலாளித்துவ காலம். நேற்றைய பனையேறியல்ல இன்றுள்ளவர். இன்று பதநீர் விற்று அவர் ஒரு மகனை எஞ்சீனியரிங் படிக்க வைக்கக் கூடும். அன்று நிலத்தில் நடந்தவர்கள் இன்று ஏணியில் ஏறிக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் காலகட்டத்துக்கு இதற்கே உரிய சில விதிகள் உள்ளன. அனைத்தும் விலையுள்ளதே என்பது அதில் ஒன்று.
எனக்கு இன்றைய காலமே மேலானது என்று படுகிறது. இன்றுள்ள அற உணர்வு அன்று இல்லை. இன்றுள்ள சமத்துவ வாய்ப்புகள் அன்று இல்லை. வாழ்க்கை இன்று மேம்பட்ட நிலையிலேயே உள்ளது.ஆகவே பின்னால் திரும்பிப்பார்த்து அந்த விழுமியங்களை நோக்கி ஏங்குவதில் பொருளில்லை. சென்றகாலத்தை நாம் வாழும் காலத்தில் நின்றபடி அணுகி அதிலிருந்து கொள்ள வேண்டியதை மட்டுமே கொள்ளும் நோக்கையே நான் ஒப்புக் கொள்வேன்.
நம்முடைய மரபில் இன்றும் பழங்குடித்தன்மை சார்ந்த சில மனநிலைகள் உள்ளன. பிரித்துப் பிரித்து தன்னை வேறுபடுத்தி தன் சுயத்தை காணும் மனநிலை அது. நான் இன்னசாதி, சாதிக்குள் இன்ன உபசாதி, உபசாதிக்குள் இன்ன குலம், குலத்துக்குள் இன்ன குடும்பம்– இவ்வாறு செல்லும் அந்த போக்கு. நீங்கள் உங்களை ஒரு சாதி என்று அடையாளப்படுத்திக் கொண்டால் உடனே அடுத்த அடையாளங்கள் வரிசையாக தேவைப்படும். இந்தியச் சூழலில் பொதுவாக நமது அந்தரங்கம் இந்த வகையான பிரித்துக்கொள்ளல் வழியாகவே செயல்படுகிறது.
நவீனமனிதன் நேர் எதிராகவே செயல்படும் மனம் கொண்டிருப்பான் என்று நான் நினைக்கிறேன். தன்னை மேலும் மேலும் பெரிய ஒட்டுமொத்த அடையாளங்களுடன் மட்டுமே அவன் பொருத்திக் கொள்வான். பண்பாடு சார்ந்து, தேசம் சார்ந்து, மானுடம் சார்ந்து… நவீனமயமாதல் என்றால் இதுதான். ஐரோப்பிய மறுமலர்ச்சி உலகுக்கு அளித்த கொடை அது. பலநூறு எழுத்தாளர்கள் சிந்தனையாளர்கள் கலைஞர்கள் வழியாக இரு நூற்றாண்டுகளில் மெல்லமெல்ல உருத்திரண்டு வந்தது. இந்த பொது அடையாளத்துக்குக் கொண்டுசெல்லத்தக்கவற்றை, மானுடப்பண்பாட்டுக்கு இன்றியமையாத கூறுகளாக ஆகக்கூடியவற்றை மட்டும் நாம் மரபிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். அவற்றை மானுடப்பொதுவானவையாக மறு ஆக்கம் செய்து முன்வைக்கலாம். நம்மை குறுக்கும் அடையாளங்கள் பண்பாட்டுக்கூறுகள் அல்ல. அவை சுமைகளே.
நமது பின்புலத்தின் நீட்சிகள் அல்ல நாம், அவற்றை பரிசீலனைசெய்பவர்கள் என்ற எண்ணம் நமக்கு வேண்டும். என் நோக்கில் எழுத்தாளன் ஒருபோதும் ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவின் குரலாக ஒலிக்க மாட்டான். அவை அவனுக்கு தற்செயலாக அமைந்தவை மட்டுமே. அவன் ஒரு பொதுமானுடக்குரலையே முன்வைப்பான்.
மாலை ஆறுமணிவரை விவாதித்துவிட்டு பிரிந்தோம். அடுத்த அமர்வில் பாளையங்கோட்டை ஆ.சிவசுப்ரமணியம் அவர்கள் பேசுவதாக அறிவிக்கப்பட்டது.