அகமைய வாதம்

அன்பு ஜெயமோகன்,

Solipsism என்பதை “அகவாதம்” அல்லது “அகமையவாதம்” என்று நீங்கள் பெயர்த்திருப்பது பொருத்தம் என்றே படுகிறது. Oxford Dictionary முன்வைக்கும் சொற்பிறப்பியலின்படி, “தனியே” (alone) என்று பொருள்படும் solus என்னும் இலத்தீன் சொல்லும், “அகம்” (self) என்று பொருள்படும் ipse என்னும் இலத்தீன் சொல்லும் சேர்ந்து solipsism என்னும் ஆங்கிலச் சொல் பிறந்தது. “உள்ளதெல்லாம் அகமே, அல்லது அறியக்கூடியதெல்லாம் அகமே என்னும் கண்ணோட்டம்” (the view that the self is all that exists, or is all that can be known) என்னும் விளக்கமும் Oxford அகராதியில் காணப்படுகிறது. இந்த அகராதியை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்ட சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம்-தமிழ்ச் சொற்களஞ்சியம் இதை “ஆன்மைக நித்தியவாதம், ஆன்மா ஒன்றே அறியத்தக்கதும் நிலைபேறுடையதும் ஆகும் என்னுங் கோட்பாடு” என்று வரையறுக்கிறது. “கலைச்சொற்கோவை” (http://kalaichotkovai.blogspot.ca) இதை “அகவாதம்” என்று பெயர்த்துள்ளது. Sylvia Plath எழுதிய Soliloquy of the Solipsist இக்கண்ணோட்டத்தில் எழுந்த கவிதையாகவே தென்படுகிறது.

மணி வேலுப்பிள்ளை

அன்புள்ள மணி வேலுப்பிள்ளை அவர்களுக்கு,

இந்தக் கலைச்சொல்லாக்க முறைமையில் மைய என்னும் சொல்லைப்பற்றிய விவாதம் ஒன்று முன்னர் இங்கே நிகழ்ந்துள்ளது. க.பூரணசந்திரன் இதைச் சொல்லியிருக்கிறார். அதாவது ஒரு சிந்தனைமுறை ஏதேனும் ஒன்றை மையமாக வலியுறுத்தி அதனடிப்படையில் மேலும் செல்லும் என்றால் மைய என்னும் சொல்லைச் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்று. அமைப்புவாதம் [ஸ்டக்சுரலிசம்] என்பதை அமைப்புமையவாதம் என அவர் மொழியாக்கம் செய்தார். அகவாதம் என்பதைவிட அகமையவாதம் என்பது இன்னும் துல்லியமானது என நினைக்கிறேன்

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல்மூன்று – ‘வண்ணக்கடல்’
அடுத்த கட்டுரைகர்நாடக இசை – சுருக்கமான வரலாறு