உலகம் யாவையும், சோற்றுக்கணக்கு

அன்பு ஆசிரியருக்கு,

நான் சோற்றுக்கணக்கை முதன்முறையாக படித்தது இரண்டு வருடம் முன்பு. அடிக்கடி மீண்டும் படிக்கலாம் என்ற நினைப்பு வந்தாலும் தவிர்த்து விடுவேன். முடியாமல் படிக்க நேர்ந்தால், மனம் முழுவதும் கனத்து, கண்களில் நீர் நிறைந்து கொண்டே இருக்கும். அதன் பிறகு ஒரு வாரம் ஆகினும் சோற்றை பார்த்தால், ஒரு கணம் அதிர்ந்து, இறைவா என்று மனம் சொல்லிக்கொள்வதை தவிர்க்கவே முடியாது.

ஆழ்மனதை சென்று தைக்கும் வரிகளும், கதையின் கருவும், ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்து ஒவ்வொரு மணியாக மதித்து உண்ணும் எங்களுக்கு மேலும் உணவின் மேல் ஒரு மிக பெரிய பக்தியை உண்டு பண்ணிய உங்கள் எழுத்துக்கு எங்கள் வணக்கம். கெத்தேல் சாகிப் எப்படி இருந்திருப்பார் என்று ஒரு பிம்பமே எனது மனத்தில் உருவாகி விட்டிருந்தது முதன் முறை படித்த போது.

கோவை மாவட்டம், பெரிய நாயக்கன் பாளையத்தில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாவது வரை படித்த போது,பள்ளி வாசலில் இருந்த ஒரு பெட்டிக்கடைக்காரரின் உருவமே மனதில் எழும். அதே போல் ஆறடிக்கு மேல். பயங்கரமான முகம். ஆனால் அவர் குழந்தைகள் மேல் பேரன்பு கொண்டவர். சிறிது நேரம் கடை முன்பு நின்றால் போதும். காசு இல்லையா கண்ணு. இந்தா தின்னு என்று ரெண்டு தேன் மிட்டாய் தருவார்.

காசு இருந்தாலும், சனி ஞாயிறு ஐஸ் வாங்கி தின்பதற்காக அதை மிச்ச படுத்தி விட்டு, பாவமாக முஞ்சியை வைத்து நின்று அவரிடம் மிட்டாய் வாங்கி தின்போம். கருணை பொங்கும் மனங்களில் எல்லாம் அன்னையை வைத்திருக்கிறான் இறைவன். எனவேதான் அவர்களை பார்க்கும் பொழுது தாயின் நினைப்பு வருவதை தவிர்க்க முடிவதில்லை.

தாழ்மையுடன்,
சரவணகுமார்.

அன்புள்ள சரவணக்குமார்,

இக்கதை பற்றி எழுதிய அனைவருமே ஒரு கெத்தேல்சாகிபை தாங்களும் கண்டதாகச் சொல்லியிருக்கிறார்கள் மனிதர்கள் அனைவருக்குமே உண்மையான அன்பைத் தரிசிக்கும் யோகம் நிகழ்ந்திருக்கும். இத்தகைய கதைகள் வழியாக நாம் அதை நினைவுகூர்கிறோம். அந்த அறத்தை உள்வாங்கிக்கொள்கிறோம்.

ஜெ

அன்புள்ள ஜெ

தொடராக வெளிவந்தபோது என்னை அதிகமாகக் கவராத கதை என்பது உலகம் யாவையும்தான் . ஆனால் சமீபத்தில் ஆப்ரிக்கா சென்றிருந்தேன். சியரா லியோன். அங்கே ஒரு மலையடிவாரத்தில் அமர்ந்திருந்தபோது ஒரு எண்ணம் வந்தது. இந்த மலையும் காடும் என்னுடையவை அல்ல என்று எப்படிச் சொல்கிறேன் என்று நினைத்தேன். உடனே செல்பேசியில் உலகம் யாவையும் கதையை எடுத்து அங்கேயே வாசித்தேன். உண்மையாகவே ஜெ அங்கே வந்த அந்த மனஎழுச்சியை நான் எந்தக்கதையிலும் அடைந்ததில்லை. அந்தக்கதையின் உச்சமே தலைப்புதான் உலகம் யாவையும். அது கம்பராமாயணத்தின் முதல்வரி என நினைக்கிறேன். மந்திரம்போலச் சொல்லிக்கொண்டே இருந்தேன். காரிடேவிஸ் அடைந்த அந்த மன விரிவைச் சொல்ல ஒரு மலையுச்சியை நீங்கள் கண்டடைந்ததுதான் படைப்பின் மிகச்சிறந்த தருணம்

செல்வநாதன்

அன்புள்ள செல்வநாதன்

அறம் தொகுதியிலுள்ள மற்றக் கதைகள் முன்வைக்கும் வாழ்க்கைத்தருணங்களை அனைவருமே கண்டடைந்திருப்பார்கள். உலகம் யாவையும், பெருவலி போன்றவை அபூர்வமான சில தருணங்களைச் சொல்கின்றன. அந்த தொலைவுவரை வாழ்க்கையில் செல்லமுடிந்தவர்களுக்கானவை அவை

ஜெ

முந்தைய கட்டுரைகல்வியில் இந்திய மெய்யியல்-கடிதம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 16