நிழல் நாடுவதில்லை நெடுமரம்

 தமிழினி ஜூன் 2008 இதழில் கண்மணி குணசேகரனின் நூல்வெளியீட்டுவிழாவைப்பற்றி ஓர் அறிக்கை இருக்கிறது. அன்பழகன் எழுதியது. கண்மணி குணசேகரனின் இரு நூல்களை தமிழினி வெளியிட்டிருக்கிறது. ‘நடுநாட்டுச் சொல்லகராதி’[வட்டார வழக்கு] என்ற நூலும் ‘காலடியில் குவியும் நிழல்வேளை’ என்ற முழுக்கவிதை தொகுதியும் வெளியிடப்பட்டிருக்கின்றன. இவற்றின் வெளியீட்டை பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை நிகழ்த்தியது. 28-6-08 அன்று. பாட்டாளி மக்கல் கட்சி தலைவர் மருத்துவர்.ராமதாஸ் அவர்கள் கலந்துகொண்டார். பழமலை தலைமைவகித்தார்.

சமீபத்தில் இலக்கியச் சூழலில் எவரும் வெளியே சொல்லாமல் ஆனால் உள்ளூர பேசிக்கொண்டிருக்கும் விஷயம் பாட்டாளி மக்கள் கட்சி வன்னிய எழுத்தாளர்களை ஒருங்கிணைத்து உருவாக்கியிருக்கும் படைப்பாளிகள் பேரவை என்ற அமைப்புதான். முன்னரே இந்த அமைப்புக்கான வேலைகள் நடந்துகொண்டிருக்க வேண்டும், வன்னிய எழுத்தாளர்கள் நடுவே ஒரு கூட்டுப்புரிதல் இருப்பதாக அவ்வப்போது பேசப்பட்டதுண்டு. இந்த அமைப்பின் தொடக்க மாநாட்டில் தமிழின் அங்கீகாரம்பெற்ற வன்னிய எழுத்தாளர் முதல் ஒருசில கவிதைகளே எழுதிய இளம் எழுத்தாளர் வரை அனேகமாக அனைவருமே பங்கு பெற்றிருக்கிறார்கள். பின் நவீனத்துவர்கள் அதி தீவிர இடதுசாரிகள் பெரியாரியர்கள்…. வேடிக்கை என்னவென்றால் இவர்களில் முக்கால்வசிப்பேரை அவர்கள் வன்னியர்கள் என்று அம்மாநாட்டுக்குப் பின்னரே பிறர் அறிந்தார்கள்.

இந்திய அளவில் எழுத்தாளர்கள் வெளிப்படையாக சாதி அடையாளத்துடன் ஒன்றுதிரள்வது இதுவே முதல்முறை எனலாம். ஏற்கனவே கேரளத்தில் ஈழவ எழுத்தாளர்களையும் கர்நாடகத்தில் வொக்கலிக எழுத்தாளர்களையும் திரட்டுவதற்கான முயற்சிகள் நிகழ்ந்திருக்கின்றன. அவை எழுத்தாளர்களின் புறக்கணிப்பால் தோல்வியை தழுவின. குறிப்பாக கேரளத்தில் செல்வாக்கான ஈழவ நாளிதழான கேரளகௌமுதி சார்பில் அம்முயற்சி நிகழ்ந்தும்கூட எழுத்தாளர்கள் அதில் கலந்துகொள்ள தய்ங்கினார்கள். இதெல்லாம் ஐம்பது அறுபதுகளில். இப்போது தமிழகம் இந்தியாவுக்கே வழிகாட்டியிருக்கிறது.

பொதுவாக எழுத்தாளர்கள் தங்களை சாதி,மதம்,இனம் சார்ந்து பொது அடையாளத்தின்கீழ் காட்டிக்கொள்ள தயங்குவார்கள். எழுத்து என்பது எந்த அடையாளமும் இல்லாத தனிமனித அந்தரங்கத்தில் இருந்து கிளைப்பது என்ற ஆழமான நம்பிக்கை பெரும்பாலான எழுத்தாளர்களிடம் உண்டு. யாரென்றே தெரியாத, ஏதோ ஒரு காலத்தைச் சேர்ந்த வாசகனின் அந்தரங்கத்துடன் தன் எழுத்து பேசும் என்று அவன் நம்புவதன் அடிப்படையும் இதுவே. இலக்கியத்தின் செயல்முறையும் மிக அந்தரங்கமானது. நல்ல இலக்கிய வாசகன் ஒருபோதும் எழுதுபவன் தன் இனம்,மதம்,சாதியைச் சேர்ந்தவனாக இருக்கவேண்டுமென எதிர்பார்க்க மாட்டான். இலக்கியத்தின் தார்மீகமான, அழகியல்சார்ந்த அளவுகோல்களும் இத்தகைய அடையாளப்படுத்தல்களுக்கு அப்பாற்பட்டவை.

அனைத்துக்கும் மேலாக ஒன்று உண்டு. இத்தகைய அடையாளப்படுத்தல்கள்மூலம் மக்களை ஒன்றாக்கி  அதிகாரத்தைக் கைப்பற்ற முயலும் அரசியல்வாதிகளே இத்தகைய அமைப்புகளை உருவாக்குகிறார்கள். அவற்றில் இணைவதன்மூலம் எழுத்தாளர்கள் தங்களை வழிநடத்தும் பொறுப்பை அரசியல்வாதிகளுக்கு அளிக்கிறார்கள். தன்னகங்காரம் கொண்ட ஒரு சாதாரண எழுத்தாளன்கூட அதற்கு துணிய மாட்டான்.சென்ற காலங்களில் பிற மாநிலங்களில் தொடங்கிய முயற்சிகள் சரிவுற்றமைக்குக் காரணம் இதுதான்.

இந்த அமைப்பில் கடந்தகாலங்களில் ஒரு ‘பின்நவீன’ கவிஞராக முன்னிறுத்தப்பட்ட, உலக இலக்கியம் அறிந்த, பிரம்மராஜன் துணைத்தலைவராக பொறுப்பேற்றுப் பணிபுரிவது பரவலாக அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது. தலைவராக பொறுப்பேற்றுள்ள பழமலை தீவிர இடதுசாரி அமைப்புகளில் அ.மார்க்ஸ் போன்றவரக்ளுடன் இணைந்து பணியாற்றும்போதே சாதிப்பித்து கொண்டவர் என்று புகழ்பெற்றவர். ஆனால் பிரம்மராஜனும் நெடுங்காலமாக வன்னியர் சங்கம்,  பாட்டாளி மக்கள்கட்சியுடன் இணைந்து பணியாற்றியவர் என்பதே உண்மை. [எண்பதுகளில் அவரது கவிதைகளை அக்குவேறு ஆணிவேறாகக் கட்டுடைத்த நாகார்ஜுனன்கூட இதைபிரித்து எடுக்கவில்லை!!!]]

இலக்கியத் தளத்தில் எழும் கேள்விகள் மிக அடிப்படையானவை. இனிமேல் இந்த எழுத்தாளர்கள் ஒரு குழுவாகச் செயல்படுவார்களா? ஒருவர் எழுதியதை பிறர் பாராட்டிக் கொள்வார்களா? இலக்கிய மதிப்பீடுகளில் இனி வன்னியர் என்ற பரிசீலனையும் இடம்பெற வேண்டும் என்று கோருவார்களா? வருத்தம்தரும் விஷயம், நாடார் எழுத்தாளர்களை ஒருங்கிணைக்கவும் இப்படி ஒரு ரகசியச் சுற்றறிக்கை விடப்பட்டிருக்கிறது என்பது. தேவர் எழுத்தாளர்களுக்கு வேலை நடந்துகொண்டிருக்கலாம். கணிசமான எழுத்தாளர்களின் சாதி பற்றி இனிமேல்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். மொத்தத்தில் இனிமேல் இலக்கியத்தை சாதி அடிப்படையில் மட்டுமே வாசிக்க மதிப்பிட முடியும் என்ற நிலை உருவாகிறது. இப்படிப்போனால் தமிழகத்தில் எழுத்தாளர் என்று யாருமிருக்கமாட்டார்கள், சாதிக்கொரு பூசாரிக்குலம் இருப்பதுபோல சாதிக்கொரு எழுத்தாளர் குழு இருக்கும்.

இதைப்பற்றி நம் சூழலில் நிலவும் ஆழமான மௌனமும் வியப்புக்குரியது. இந்த மாநாடு நடந்து இரண்டுமாதம் தாண்டியிருக்கிறது. உயிர்மை,காலச்சுவடு, உயிர் எழுத்து, தீராநதி, வார்த்தை,தமிழினி என எந்த இதழும் இதில் ஏதேனும் பிரச்சினை இருப்பதாக காணவில்லை. இந்தியாவின் எந்த மூலையில் எது நடந்தாலும் குரல்கொடுக்கும் இச்சிற்றிதழ்களுக்கு இந்த விஷயம் பற்றி சொல்ல ஒன்றுமில்லை, அதாவது அவை இதை மௌனமாக அங்கீகரிக்கின்றன. இணையத்தில் எல்லா விஷயங்களுக்கும் இருபதுமடங்கு குமுறல்கள் எழுவது வழக்கம். இன்றுவரை ஒரு சிறு குறிப்பைக் கூட நான் வாசிக்க நேரவில்லை. இணையத்தில் பினாமிபேரில் தலித்துகளுக்காக அனல்கக்குபவர்கள் கூட வாய்திறக்கவில்லை. காரணம் நமது சூழலில் உண்மையான அதிகாரம் பிற்படுத்தப்பட்டோர் அரசியலில் மையம் கொண்டிருப்பதுதான். சாதிய எதிர்ப்பு என்பதெல்லாம் மேல்பூச்சுச் சொற்கள் மட்டுமே.

நானறிந்து தலித் எழுத்தாளர்கள் சிலர் மட்டுமே தங்கள் அச்சத்தைப் பதிவுசெய்திருக்கிறார்கள். இத்தகைய கூட்டமைப்புகள் மேல்பேச்சுக்கு எப்படியிருந்தாலும் அடிப்படையில் சாதிக்கட்டுமானத்தை இறுக்கவும் அதன் மூலம் தலித்துக்களுக்கு எதிரானதாக சூழலை மாற்றவுமே உதவும் என்று அவர்கள் எண்ணுவது சரியானதே. இவ்வாறு கருத்துச் சொல்ல முன்வந்த தலித் படைப்பாளிகள் தலித் எழுத்தாளர்கள் தலித் அடையாளத்துடன் அமைப்புகளாக திரண்டபோது அதில் கலந்துகொள்ளாது விலகி நின்ற படைப்பாளிகள் என்பதும் கவனத்திற்குரியது. உதாரணமாக அமிர்தம் சூர்யா போன்ற இளம்படைப்பாளிகளின் குரலை சுட்டிக்காட்டலாம்.

மருத்துவர் ராமதாஸ் அவர்களின் தமிழ்ப்பற்று, மக்கள்த் தொலைக்காட்சியின் செயல்பாடு இரண்டியிலும் மரியாதை கொண்டவன் என்பதை இங்கே சொல்லிக் கொள்கிறேன். ஆனால் எழுத்தாளன் என்பவன் தன் குழு அடையாளத்தால் இயக்கப்படுபவனாக இருக்கக் கூடாது என்பதே என் எண்ணம். ஆழ்ந்த நீதியுணர்வு ஒன்றே அவனை இயக்க வேண்டும்.  அந்த நேர்மையே இலக்கியத்தின் ஆதார விசை. அதன் பொருட்டு தன் குழுவுக்கும் தன் சமூகத்துக்கும் கூட எதிரானனவாக ஆக அவன் தயங்கலாகாது. அவ்வாறு நாளை ஒரு வன்னிய எழுத்தாளன் வன்னியசாதியை கட்டவிழ்த்து ஒரு நாவலை எழுதினால் இந்த அமைப்பு அவனை வேட்டையாடுமா? இன்றுவரை தமிழகத்தில் எந்த பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த எழுத்தாளரும் தன் சாதியை விமரிசித்து ஒரு இலக்கியப்படைப்பை எழுதியதில்லை. துதிபாடல்களை மட்டுமே எழுதியிருக்கிறார்கள். பிறர் எழுதுவதை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. அந்த இறுக்கம் இனி பலமடங்கு அதிகரிக்குமா ?

பகடைகளைப்பற்றி பூமணி எழுதிய ‘பிறகு’, ‘வெக்கை’ போல, பரதவர்களைப்பற்றி ஜோ டி க்ரூஸ் எழுதிய ‘ஆழிசூழ் உலகு’ போல, வொக்கலிகர் பற்றி சு.வேணுகோபால் எழுதிய ‘நுண்வெளிகிரணங்கள்’ போல, வன்னியர் பற்றி இனிமேல்கூட ஒரு நல்ல இலக்கிய ஆக்கத்தை எதிர்பார்க்க முடியாதா? கட்சியும் சாதிச்சங்கமும் போட்டுக்கொடுக்கும் முன்வரைவை ஒட்டித்தான் இனி இவர்கள் ‘நவ்£ன’ இலக்கியம் படைப்பார்களா? ஒரு வன்னியருக்கும் பிறருக்கும் ஒரு மோதல் வந்தால் இந்த எழுத்தாளர்கள் நியாயத்துக்காக பேசுவார்களா, இல்லை வன்னியர்களுக்காகப் பேசுவார்களா? வடதமிழ்நாட்டில் தலித் வன்னியர் முரண்பாடுகள் முனைகொண்டுள்ள சூழலில் இந்த வினாவைக் குறிப்பாகக் கேட்டாகவேண்டியுள்ளது.

கல்வியறிவும் நவீன உலகுடன் அறிமுகமும் நவீன இலக்கிய வாசிப்பும் கொண்ட இளையதலைமுறைப் படைப்பாளிகளின் வரிசை ஒன்று இப்படி சாதியமைப்பில் சென்று அமர்ந்து கோஷமிடுவதைக் காணும்போது துயரமே மிகுகிறது. சாதிப்பித்து என்பது முற்போக்கானது என்று தமிழ்நாட்டில் மெல்லமெல்ல நிறுவப்பட்டு விட்டிருக்கிறது — பொதுமேடையில் ஒப்புக்கு ஒரு பார்ப்பனிய எதிர்ப்புக் குரலை மட்டும் எழுப்பிக் கொண்டால் போதும்!

கண்மணி குணசேகரன் நான் மதிக்கும் ஒரு படைப்பாளி. சென்ற காலங்களில் அவரைப்பற்றி தொடர்ந்து எழுதியும் வந்திருக்கிறேன். வறிய நிலையில் இருந்து தன் உழைப்பால் எழுத்தாளராக அறிய வந்தவர். இந்தக் கூட்டத்தில் நாஞ்சில்நாடன் கண்மணியின் வாழ்க்கையைப்பற்றிச் சொல்கிறார். மிகக்குறைவான வருமானம் உள்ள வாழ்க்கை. மனைவி பெற்றோரின் மரணங்கள். அந்த சோதனைகள் நடுவே சலிக்காமல் நின்று பேராசிரியர்கள் செய்யக்கூடிய பணியை தனியாகச் செய்திருக்கிறார். பல்கலை மானியக்குழு இத்தகைய ஆய்வுகளுக்காக  ஆணுதோறும் பலலட்சம் ரூபாய்களை நிதியுதவிகளாக பல பேராசிரியர்களுக்கு அளித்துள்ளது.எவருமே இன்றுவரை எதையும் எழுதியதில்லை. பணம் மட்டும் மறைந்துவிட்டிருக்கிறது.

இன்றுவரை கண்மணி எந்த உதவியையும் எவரிடமிருந்தும் பெற்றதில்லை. நான் அறிந்து கண்மணியை தொடர்ந்து முன்னிறுத்தி வருவது தமிழினி வசந்தகுமார்தான். அவரோ நாஞ்சில்நாடனோ அல்லது கண்மணியின் தீவிர வாசகர்களோ வன்னியரல்ல என்பது கண்மணிக்கு தெரியுமென நினைக்கிறேன். கண்மணி இன்று சாதி அடையாளத்தில் புகலிடம் தேடுவது அவருக்கு உடனடி லாபம் அளிக்கலாம், அது அவரது படைப்புமனத்துக்கு ஒரு இழப்பே.

மேடை நிகழ்ச்சியை பற்றி அன்பழகன் எழுதுகிறார், ”பேராசிரியர் பழமலை எங்கெங்கோ சுற்றியலைந்துவிட்டு கண்மணி பற்றி குறிப்பிட நேர்ந்தபோது பள்ளி மாணவனுக்கு கற்பிக்கும் தொனியுடன் எப்படி எழுதக்கூடாது இனி எப்படி எழுத வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்’ . மிக இயல்பான விஷயம். பழமலை இப்போது கண்மணியின் இயக்கத்தலைவர்.

அன்பழகன் எழுதுகிறார். நன்றிகூற வந்த கண்மணி பழமலை பெயரைக் குறிப்பிட்டு ”விட்டுட்டும்போகமுடியாது,இட்டுட்டும்போகமுடியாதுங்கிற ஆளு அய்யா” என்றார். ”எனக்கு நல்லாத்தெரியும்.நான் எழுதுனதை எங்க வட்டாரத்துக்காரங்க யாருமே படிச்சதில்லை. படிச்சாத்தானே தெரியும் நான் என்ன எழுதியிருக்கேன்னு. பதினேழு வயசிலேருந்து இருபது வருஷமா எழுதறேன். 3 கவிதைத்தொகுப்பு, 3 சிறுகதைத் தொகுப்பு, 2 நாவல் வந்தாச்சு. இப்ப இந்த அகராதி. படிச்சுப்பாருங்க. என்ன ஏதுன்னு புரியாம யோசனை சொல்ற வேலை எங்கிட்ட வேணாம். தமிழ்ல நான் ஒரு சிறந்த எழுத்தாளன். இதுல எனக்கு சந்தேகமே இல்ல. யாருக்காவது இருந்தா படிச்சுப் பாருங்க…” என்றார்.

ஆம், சான்றோர் அமர்ந்துள்ள மேடையிலேறி நின்று நான் சிறந்த எழுத்தாளன் என்று அறிவிக்கும் அந்த ஆண்மையே நல்ல எழுத்தாளனின் அடையாளம்.  அது அணையாமலிருக்கும்வரை மட்டுமே அவரால் எழுதவும் முடியும்.  கண்மனி தமிழின் சிறந்த படைபபளி. ஒரு விமரிசகனாக எனக்கு அதில் ஐயமும் இல்லை. ஆனால் நல்ல எழுத்தாளர்கள் ஒருபோதும் நிழல்களில் நிற்பதில்லை என்பதை மட்டும் கண்மணிக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். 

 அழிவிலாத கண்ணீர் – கண்மணி குணசேகரனின் ‘அஞ்சலை’

நான் எழுதலாமா?’ ஒரு கடிதம்

கேள்வி பதில் – 56

கேள்வி பதில் – 09, 10, 11

முந்தைய கட்டுரைஎழுதப்போகிறவர்கள்
அடுத்த கட்டுரைசில கடிதங்கள்