நான் படித்துமுடித்து -சரி முடிக்காமல்- வெளியே வரும்போது ஒரு வேலைகிடைக்கும் என்ற நம்பிக்கையே எவருக்கும் இருக்கவில்லை. கல்லூரிகளிலேயே ‘இந்தப்படிப்பெல்லாம் வேலைக்காகாது தம்பி’ என்று சொல்லிவிடுவார்கள். எங்கள் வகுப்பில் படித்தவர்களில் சிறுபகுதியினரே ஏதேனும் வேலையில் இருக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் கடை, தொழில் என்றுதான் மேலே சென்றார்கள்.நான் எஸ்.எஸ்.எல்.சி மதிப்பெண் அடிப்படையில் தேர்வானேன்.
அன்றைய வேலையில்லாத்திண்டாட்டம் பற்றி இன்று சொன்னால் புரியாது. பாலைவனச்சோலை வறுமையின் நிறம் சிவப்பு மாதிரி படங்கள் வந்த காலகட்டம் என்றால் கொஞ்சம் கற்பனைசெய்துகொள்ளலாம்.அரசுத்துறை அன்றி வேலையே கிடையாது. அரசுத்துறை 1980 வாக்கில் வேலைக்கு ஆளெடுப்பதை குறைத்துக்கொள்ளத் தொடங்கியது. அதேசமயம் இரண்டாம்தலைமுறையினர் கல்விக்கு வந்து படித்தவர்கள் பெருகவும் தொடங்கினார்கள்.விளைவு தாடிவளர்த்த வேலையற்ற இளைஞர்கள். எல்லா இடதுசாரிக் கட்சிகளும் கொழித்த காலம் அது. ம.க.இ.க பாணி புரட்சிக்குழுக்கள் நாளொன்றுக்கு ஒன்றாக உருவாகி வந்தன.
தொண்ணூறுகளில் நரசிம்மராவின் பொருளாதாரச் சீர்திருத்தம் நிலைமையை மாற்றியது. கூடவே கணிப்பொறித்தொழில் எழுச்சி. தனியார்த்துறை எழுச்சி. இரண்டாயிரத்தில் பி.எஸ்.என்.எல் வேலைக்கு தரமான பொறியாளர்கள் பணிக்குக் கிடைக்காத நிலை வந்தது. என் தரத்தில் இருந்தவர்களெல்லாம் பொறியாளார்கள் ஆனார்கள். ஆனால் இன்று நிலைமை மாறி மீண்டும் குமாஸ்தா வேலைக்கே பொறியாளர்கள் அடித்துப்புரண்டு வருகிறார்கள்
இன்றையசூழலை என்னால் சரியாகப் புரிந்துகொள்ளமுடியவில்லை. ஆனால் நண்பர்கள் சொல்லும் சித்திரம் அச்சமூட்டுவதாகவே உள்ளது. சமீபத்தில் அதைப்பற்றி பாவனைகள் இல்லாமல் எழுதப்பட்ட கட்டுரை வா. மணிகண்டன் எழுதிய இக்கட்டுரை