மேரி மக்தலீன் கடிதம்

அன்புள்ள ஜெ, “இருவர்” பதிவின் கவித்துவம், ஒன்றிரண்டு முறை மீண்டும் வாசிக்க வைத்தது. மேரி மக்தலீன் ஓவியங்கள் – தேடியவற்றில் கிடைத்தது –
அன்புடன் குமார் முல்லைக்கல்

அன்புள்ள குமார்

மக்தலனா மறியம் என்பது கேரள சிரியன் கிறித்தவ வழக்கு.

கால்வரியிலே கல்பதபாவம் என்ற புகழ்ப்ற்ற நாடகம் கைனிக்கர குமாரபிள்ளையாலும் தம்பியாலும் 1940களில் திருவனந்தபுரத்தில் அரங்கேறி பெரும் பரபரப்பை உருவாக்கியது

அதன்பின்னர் மலையாலத்தில் மக்தலினா மேரியைப்பற்றி நிறைய எழுதப்பட்டுள்ளது

ஜெ

அன்பு ஜெ.எம்.,

குருவணக்கம்.நலம்தானே.

 

மகதலீனா மேரியை அன்னை மேரியுடன் இணைத்து இருவராக்கித் தாய்மை,காதல் ஆகிய இரண்டையும் ஒரு கோட்டில் இணைத்த உங்கள் பார்வை பரவசப்படுத்துகிறது.

அண்மையில் நான் மேற்கொண்ட ஐரோப்பியப் பயணத்தின்போது,

(அதுவும் நீங்கள் குறிப்பிடுவது போலக் குடும்பத்திலிருந்து விடுமுறைதான்! )

பிரான்ஸில் மகதலீனா மேரியின் பெயரால் ஒரு தேவாலயம் இருப்பதைக் கண்டேன்.

அதற்குள் செல்ல எங்களுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என்றபோதும் வெளியிலிருந்து அதைப் பல கோணங்களில் காண முடிந்தது.(புகைப்படங்கள் இணைத்துள்ளேன்- பார்க்க).

கிரேக்கக் கோயிலின் அமைப்பைச் சற்று மாற்றி ஆலயமாக்கியிருக்கிறார்கள்.

 

 

முகப்பின் மேற்கூரையில் இறுதித் தீர்ப்பு பற்றிய கலைநயத்தோடான சிற்பங்கள். ஆண்டின் 52 வாரங்களைக் குறிக்கும் வகையில்   52 தூண்கள். உள்ளே செல்லும் வாய்ப்பு கிடைக்காததால் மகதலீனா வழிபடப்படுகிறாளா இல்லையா என அறிய இயலவில்லை.ஆனாலும் அவள் பெயரில் அப்படி ஒரு ஆலயம் இருப்பதே கூட ஆச்சரியப்படுத்துவதாகத்தான் இருந்தது.

ஆண்டாள் பாடல்களில் சிலவற்றையும்,காரைக்கால் அம்மையின் சில பாடல்களையும் கோயில்களில் இசைக்கலாகாது என ஒதுக்கி வைத்த(ஆண்டாளை ஒரு ஆழ்வாராகச் சேர்க்கக் கூட அத்தனை தயக்கம் !) இதே வகையான மனப்போக்குத்தான் மகதலீனா விஷயத்திலும் செயல்பட்டிருக்க வேண்டும்.

 

காந்தியின் புதல்வர்கள் நால்வரைப் பற்றியும்  அனைத்துக் கோணங்களிலிருந்தும் ஆராய்ந்து நடுநிலையோடு எழுதியிருந்தீர்கள்.

’’மோசமானதந்தைகளால் உருவாக்கி நமக்களிக்கப்பட்ட இந்த நாடுமிகச்சிறந்ததந்தைகளால் இன்று சீரழிக்கப்படுகிறது என்பதல்லவா உண்மை?’’

என்ற தங்கள் வரிகள்தான் எத்தனை சத்திய வீரியம் கொண்டவை?

1969ஆம் ஆண்டில் நான் கல்லூரி மாணவியாக இருக்கையில் வார்தாவிலுள்ள சேவாசிரமத்தில் சில நாட்களைக் கழிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.அப்போது அங்கிருந்த ராம்தாஸ்  காந்தி மாணவக் குழுவினரான எங்களுடன் உரையாடுகையில் தன்னை ஒரு செல்லாத நோட்டு என்றே திரும்பத் திரும்பக் குறிப்பிட்டார். ஆனால் அவரிடமும் பொதிந்து கிடந்த  சில அரிய குணங்களைத் தரிசிக்க வைத்து விட்டது உங்கள் கட்டுரை.

 

சென்னை சென்று வந்த உங்கள் வாசகரும் என் நண்பருமான திரு சந்தோஷ் உங்கள் ’நிகழ்தல் – அனுபவக்குறிப்புகள்’ நூலை எனக்கு அன்பளிப்பாகத் தந்தார்.இணையத்தில் நான் மிகவும் ரசித்து அனுபவித்துப் படித்த உங்கள் கட்டுரைகள் அடங்கிய அந்த நூல் இப்போது என் கைவசத்திலேயே இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

 

இடியட் 3 பாகங்கள் முடித்திருக்கிறேன்.இன்னும் ஒரு பாகத்தை விரைவில் முடிக்கத் திட்டம்.

அருண்மொழி,மற்றும் குழந்தைகளுக்கு என் பிரியங்கள்

அன்புடன்,
எம்.ஏ.சுசீலா,புது தில்லி
(தமிழ்ப்பேராசிரியர்-ஓய்வு,பாத்திமாக்கல்லூரி,மதுரை)
D II 208 KIDWAI NAGAR WEST,NEW DELHI110023
http://www.masusila.blogspot.com

 

 

அன்புள்ள சுசீலா

 

மக்தலினா மேரிக்கு இருந்த தடை ஆண்டாளுக்கு உண்டா? இந்தியாவில் ஆழ்வார்கள் எவருக்குமே மூலக்கருவறை உள்ள ஆலயங்கள் இல்லை. ஆழ்வார்திருநகரியில் நம்மாழ்வார் பெருமாள் கோயிலின் பக்கவாட்டில் ஒரு கருவறையில் இருக்கிறார். ஆனால் ஆண்டாளுக்கு மாபெரும் கோயில் ச்ரிவில்லிபுத்தூரில் உள்ளது. தமிழகம் முழுக்க பல சன்னிதிகள் உள்ளன. ஆந்திரத்தில் பத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. ஆண்டாள் ஏன் ஆழ்வாராகவில்லை என்றாள் அவள் பெருமாளின் பக்தை அல்ல, தோழி என்பதனால்தான். அவள் மனிதவடிவமல்ல கடவுளாகிவிட்டாள் என்பதனால்தான்

 

காரைக்காலம்மையாரும் இங்கே கடவுளாகவே வழிபடப்பட்டார்

 

ஆண்டாள்பாடல்கள் சில பாடப்படக்கூடாது என்ற ஆசாரம் சில கோயில்களில் உண்டு. அது அந்த பெருமாள் எவ்வகைப்பட்டவர் [என்ன மூர்த்தம்]  என்பதைப்பொறுத்தது. மற்றபடி ஆண்டாளின் எப்பாடலும் விலக்கானவை அல்ல.

 

ஜெ

 

 

மேரி மக்தலீன் ஒரு கட்டுரை

http://neelabhumi.blogspot.com/

முந்தைய கட்டுரைஅகநாழிகை
அடுத்த கட்டுரை'புதியகாலம்' சில சமகால எழுத்தாளர்கள்