சமூகம் என்பது நாலுபேர்

[நகைச்சுவை!!! ]

இளைஞர்தான். ஆனால் கொஞ்சம் வேறுமாதிரி தெரிந்தார். எனக்குள் எழுந்த அந்த வினோத உணர்ச்சியை என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை. அதை பி.டி.சாமி அல்லது இந்திரா சௌந்தரராஜன் மொழியில்தான் சுமாராகவேனும் சொல்லமுடியும்.

அவர் வந்து வெளியே நின்று என்னை ‘சார்!’ என்று அழைத்தபோது நாலைந்துபேர் ஏதோ வசூல் விஷயமாக வந்திருப்பதாகத்தான் நினைத்தேன். வழக்கம்போல ‘வீட்டில வீட்டுக்காரம்மாதான் சார் சம்பாரிக்கிறாங்க. அவுங்க இப்ப இல்லை’ என்று சொல்வதற்காக எட்டிப்பார்த்தால் ஒரே ஒரு இளைஞர். குட்டி மீசை, கண்ணாடி.

அப்பால் பார்த்துவிட்டு ‘வாங்க’ என்றேன்.

அவர் திரும்பி மிச்சபேரை வரச்சொல்வார் என நினைத்தால் அவர் மட்டும் ஏறி உள்ளே வந்து ‘நாய் ஒண்ணு வந்து பாத்துட்டு ஓடிப்போச்சே சார்’ என்றார். ‘

“அவ கொஞ்சம் நாட்டுப்புறம். டோரான்னு பேரு. அன்னிய புருஷங்க முன்னாடி நிக்கமாட்டா” என்று சொல்லி அமரச்சொன்னேன். அமர்ந்தார். டீ கொடுக்கலாமா என்று எண்ணியகணமே வீட்டில் பால் இருக்க வாய்ப்பில்லை என்பதும் தோன்றியது.

‘நான் சென்னை சார். இங்க மதுரைக்கு ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்தேன்’ என்றார் ‘அப்டியே உங்களையும் பாத்துட்டுப்போலாம்னு வந்தேன். நல்லா இருக்கிகளா?’ .

நான் ‘உங்க சொந்த ஊர் எங்க?’ என்றேன்.

‘பூர்விகம் தென்காசிப்பக்கம். நல்லகுத்தாலம்பிள்ளைன்னு எங்கப்பா பேரு. எம்பேரு அருணாச்சலம். நான் உங்களுக்கு லெட்டர்லாம் போட்டிருக்கேன்’ ”

‘சரி’ என்றேன். கடிதத்துக்கு நான் ஒன்றும் தப்பாக ஏதும் எழுதவில்லையே என எண்ணிக்கொண்டேன்.

‘மதுரையில என்ன நிகழ்ச்சி?’

‘டிவிட்டு மச்சி டிவிட்டுன்னு ஒரு நிகழ்ச்சி சார். எழுத்தாளர் மாநாடு மாதிரி டிவிட்டர் ரைட்டர்ஸ்லாம் ஒண்ணா சேந்து ஒருநாள் சந்தோஷமா இருக்கிற மாதிரி ஒரு நிகழ்ச்சி’

‘சந்தோஷமான்னா?’ என்றேன்.

அவர் வெட்கி ‘அதேதான் சார். இப்பல்லாம் சந்தோஷம்னா வேற என்னங்க?’ என்றார்.

நான் ‘சரிதான்….’ என்றேன்.

‘நான்லாம் வழக்கமா பீர்தான். நிகழ்ச்சிக்காக கொஞ்சம்போல ரம்மு’ என்றார்.

‘பரவாயில்லை’ என்றேன்.

‘அப்றம்?’ என்றேன். ‘எத்தனைபேர் வந்திருந்தாங்க?’ .

‘இப்ப, வந்திருந்தாங்கன்னா, அதாவது உடலோட வந்தவங்க எம்பத்திமூணுபேர் சார்’ .

எனக்கு கொஞ்சம் குழப்பமாக இருந்தது. இது ஏதும் ஆவி அமுதா நிகழ்ச்சியோ? ‘புரியல்லை’

‘மொத்தம் எழுநூற்றி எம்பத்தெட்டு ஐடி வந்திருந்திச்சு சார். நாங்க அதைத்தான் கணக்கில வச்சுக்குவோம்’.

எனக்கு இன்னும் சரியாகப் புரியவில்லை. ‘அதெப்டிங்க? அப்ப ‘நேர்ல வராததெல்லாம் ஃபேக் ஐடியா?’ என்றேன்

‘அதெப்டிசார் சொல்லமுடியும்? நேரில வந்திருக்கிறது கூட ஃபேக் ஐடியா இருக்கலாம்லியா?’

என்னால் இதை அவ்வளவு துல்லியமாகப் புரிந்துகொள்ளமுடியாது என்பதை உணர்ந்தேன்.’சரி, அப்ப எம்பது பேரு உக்காந்து பேசிக்கிட்டிருந்தீங்க?’ என்றேன்

‘இல்லசார்…பாத்தீங்கன்னா அரங்கில எழுபதுபேருதான். ஆனா நாம அதையே இண்டர்நெட் வழியா பாத்தாக்க கிட்டத்தட்ட எண்ணூறு பேரு…’ .

‘இருங்க நீங்க கொஞ்சம் தெளிவா பேசினா நல்லாயிருக்கும். நீங்க நேரில வந்திருக்கீங்க. அப்ப நேரிலதானே பேசுவீங்க?’ ‘

“நேரிலயும்பேசுவோம் சார். அதைப்பத்தி டிவிட்டர்லயும் பேசிக்குவோம். எல்லார் கையிலயும் செல் இருக்குல்ல?’

‘அதாவது எம்பதுபேர் உக்காந்து நேரில பேசிக்கிறப்பவே அதை டிவிட்டர்லயும் பேசுவீங்க?’ .

‘ஆமா சார்’

‘அங்க உக்காந்துட்டே?’

‘ஆமாசார்”

‘ஓக்கே, இப்ப புரிஞ்சுது’ என்றேன்.

‘அதில பாத்தீங்கன்னாக்க அந்த எண்ணூறுபேரும் அந்த அரங்கில ஒக்காந்திருக்கறவங்கதான்…’

நான் ‘குமாரகோயில் முருகா!’ என மனமுருகியபின் ‘கொஞ்சம் தெளிவாச் சொல்லமுடியுமா?’ என்றேன்

‘இப்ப தெளிவாச் சொல்லணுமானா எனக்கு நாலு ஐடி இருக்கு சார்”

‘எதுக்குங்க அது?’

“இப்ப நான் ஒரு விசயத்தைச் சொல்லிட்டேன்ன்னா அதைப்பத்தி நாலுபேர் நாலுவிதமா பேசுவாங்கன்னு ஒரு கியாரண்டி வந்திடுது பாத்தீங்களா? அதுக்குத்தான்’

அதை அப்படியே தாண்டிச்செல்வதே உசிதமென எண்ணினேன். ‘ஜாலியா இருந்திருக்குமே” என்றேன்.

‘கும்மாளம் சார்’ என்றார் முகம் மலர்ந்து.

‘குடிக்காதவங்களே இல்லியா?’

‘சிலபேரு இருந்தாங்க. அவுங்கள்லாம் ஃபேக் ஐடியில குடிச்சாங்க. வீட்டுல தெரிஞ்சா பிரச்சினையாயிடும்ல?’.

அதை என்னால் புரிந்துகொள்ள முடியாது என்று தெரிந்தது. ‘பெண்கள் நெறையபேர் உண்டோ?’ என்றேன்.

‘அதாவது சார், பெண்களோட நூத்தியாறு ஐடி வந்திருந்திச்சு’

நான் ‘இல்ல, அதோட சேர்ந்து அவங்க உருவமும் வந்திருக்குமே’ என்றேன்.

‘தெரியல்ல சார்…வந்திருப்பாங்கபோல. நான் பாக்கலை’

‘அவங்கள்லாம் ஃபேக் ஐடியோ ஒருவேள?’

‘சார் நாம எப்டி சொல்றது? வந்திருந்தவங்க ஃபேக் ஆம்புளைங்களாக்கூட இருந்திருக்கலாமே?’

நான் பெருமூச்சுவிட்டேன். ‘வாஸ்தவம்தான்” என்றேன்.

‘பொம்புளைங்கள வழக்கம்போல நெறையவே கலாய்ச்சோம். என்னோட ஃபேக் ஐடிய ஒருத்தி கடுமையா திட்டிட்டா சார். அவள நான் திட்டினேன். அவ என்னோட இன்னொரு ஃபேக் ஐடிகிட்ட ஐடியா கேட்டப்ப அது திட்டிவிட்டுது. அத வாசிச்சு நான் அப்டியே டெஸ்ப் அடிச்சு ஒக்காந்துட்டேன்’

‘ஏன்?’ என்றேன்

‘அவன் திட்டினதில தவறுதலா எம்பேரும் வந்திட்டுதே’

‘அடாடா’ என்றேன்

“பக்கத்தில பாத்தா ஒருத்தரோட ஃபேக் ஐடிய ஒருத்தன் ரேப் பண்ணவே டிரை பண்ணியிருக்கான். அது அந்த ஹாலிலேயே நடந்திருக்கு. என்ன கொடுமை பாத்தீங்களா?’

நானே கொஞ்சம் டெஸ்ப் அடித்து அமர்ந்துவிட்டேன். பின்பு கேட்டேன் ‘சாப்பாடெல்லாம் எப்டி? செலவு எகிறியிருக்குமே?’

‘எம்பது சாப்பாடுதானே? பெரிசா ஒண்ணும் ஆகல்லை. ஆனா சரக்குச் செலவுதான் எகிறிட்டுது”

‘ஏன்?’

‘சரக்குன்னா ஃபேக் ஐடிகளும் வந்து குடிச்சிரும் சார்…”

“சரிதான் அங்க என்ன பேசினீங்க?’

‘எங்க?’

‘மீட்டிங்ல?’

‘ஹாலிலயா டிவிட்டிலயா?’

‘ரெண்டிலயும்’

‘ஹாலில பெரிசா ஒண்ணும் பேசல…எல்லாரும் ஒக்காந்து டிவிட்டுதான் போட்டோம்’

‘சரி டிவிட்டுல?’

‘ஹாலில பேசினதைபத்தித்தான் சார்”

ஆசுவாசப்படுத்திக்கொண்டு ‘ஹாலில பெரிசா அடிதடீல்லாம் ஒண்ணும் இல்லல்ல?’என்றேன்

‘அதெல்லாம் இல்ல சார். சண்டைல்லாம் ஃபேக் ஐடி ஃபேக் ஐடி கிட்ட போட்டுக்கிடறதுதானே?’

‘ஆனா அதெல்லாம் அங்க வந்திருந்திச்சே?’

‘ஆமா சார். ஆனா ஹாலில அதெல்லாம் இல்லியே’

அதற்குமேல் என்னால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அவர் சொல்வதை விழித்து பார்த்துக்கொண்டிருதேன்.

‘இப்ப பொம்புளைங்க பொம்புளைங்களுக்காக டிவிட்டோன்னு தனியா ஒரு நிகழ்ச்சி வைக்கப்போறாங்க சார்’

‘அதில ஆம்புளைங்க போகமுடியாதுல்ல?’

‘எப்டிசார்? இது டெக்னாலஜி யுகம். ஃபேக் ஐடியில ஏகப்பட்டபேரு உள்ர இருப்பாங்க’

‘பொடவ கட்டிகிட்டு போகமுடியாதுல்ல?’

‘நெட்ல போலாமே’ என்றார் ‘ஆம்புளைங்க உள்ரபோயி பொம்புளைங்கள கலாய்ச்சு தள்ளீருவாங்கள்ல?’

‘எப்டி” என்றேன் அழமாட்டாக்குறையாக

‘இப்ப இங்க பொம்புளை ஐடிங்க வந்து ஆம்புளைங்கள கலாய்க்கிறாங்கள்ல? அதே மாதிரி’

நான் ‘நான் அவசரமா டாக்டரைப் பாக்கணும். எனக்கு உடம்புசரியில்ல முதுகில வலி’ என்றேன்

‘முதுகுவலி இல்லாத ஒரு ஃபேக் ஐடி கிரியேட் பண்ணவேண்டியதுதானே சார்?’ என்றார்

‘கிரியேட் பண்ணினா?’

‘முதுகுவலி போயிடுமே’

‘யாருக்கு?’

‘அந்த ஃபேக் ஐடிக்கு’

‘நான் அவசரமா போகணும்…என் மனைவி கூட வீட்டில இல்லை’ என்றேன் அழாக்குறையாக

‘சரிசார்’ என்று கிளம்பினார்

நான் பின்னால் சென்று ‘தப்பா நினைக்கப்பிடாது…இப்ப உங்க கூட அந்த நாலு ஃபேக் ஐடியும் வந்திருக்கா?’ என்றேன்

‘எப்டிசார் தெரியும்?’ என்றார் ‘இதோ இபகூட டிவிட்டர்ல செம சண்ட ஓடிட்டிருக்கு….உங்கள நான் இப்ப சந்திச்சிட்டிருக்கிறதப்பத்தி நாலுபேர் நாலுவிதமா நாக்கில நரம்பில்லாம பேசிட்டிருக்காங்க’

‘அப்டீங்களா?’

‘ஆமாங்க…இது கருத்துச்சுதந்திரத்தோட யுகம் இல்லீங்களா?’

நான் துயரத்துடன் ‘சரிங்க’ என்றேன்.

அவர் விடைபெற்று வாசலருகே சென்று தயங்கி ‘தப்பா நினைச்சுக்காதீங்க. கொஞ்சம் சொல்லி வைங்க’ என்றார்

‘யார்ட்ட?’

‘உங்க ஃபேக் ஐடி கிட்ட. நேத்து அங்க விளாவில ஒரே அழிச்சாட்டியம்.. குடிச்சுட்டு வாந்தி கீந்தி எடுத்து… நாறடிச்சிட்டுது’

‘அய்யய்யோ, எனக்கு ஒரிஜினல் ஐடியேகூட இல்லீங்க’ என்றேன்

‘அதுக்கு என்ன சார்? பேக் ஐடில்லாம் அதுவே உண்டாயிரும்…டெக்னாலஜி வளர்ந்திட்டுது பாத்தீங்களா?’

‘சார்’ என பின்னால் சென்றேன் ‘இப்ப அந்த ஃபேக் ஐடிய கண்டிக்க என்னங்க வழி?’

‘வேற வழியே இல்லசார். அவன் வாய அடைக்க இன்னொரு ஃபேக் ஐடிய உண்டுபண்ணவேண்டியதுதான்’ என்றார்

நான்குபேரின் எடையுடன் அவர் நடந்துசெல்வதுபோலத் தோன்றியதும் ஒரு பெரும் பீதி எழுந்தது. இப்போது உலகின் உண்மையான மக்கள்தொகை என்ன?

முந்தைய கட்டுரைமழைப்பாடலின் சமநிலை
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 81