அந்தக்காலத்தில ஆனையாக்கும்!

இடதுசாரி சம்பிரதாயக் கட்சித்தோழர்களின் அப்பாவித்தனம் அளவுக்கு தமிழ்அறிவுச்சூழலில் ரசிக்கத்தக்க இன்னொன்று இல்லை. நானறிந்தவரை மாதவராஜ் அப்பாவிகளில் அப்பாவி என்று சொல்வேன். [அப்பாவிகளில் காரியவாதிகள் என்றால் சு.வெங்கடேசன், திருவண்ணாமலை கருணா போன்றவர்கள்] மாதவராஜின் இணையதளம் நான் அடிக்கடி வாசிக்கக்கூடிய ஒன்று.

பொதுவாக கட்சி சொல்லக்கூடிய அத்தனை கடப்பாரைவாதங்களையும் கொஞ்சம் எண்ணைபூசிக்கொண்டு ‘மொள்ளமொள்ள’ விழுங்கிவிடுவதில் மாதவராஜ் அளவுக்கு இன்னொருவரைப் பார்த்ததில்லை. அவர் வாசித்துக் கண்கலங்கும் மனிதாபிமானக் கதைகள், அவரது தொன்மையான சமூகக்கோபங்கள், பூமிப்பந்தை புரட்டவிருக்கும் அந்த அற்புதமா…..ன நெம்புகோல்கள்!!!அடாடா அடாடா! அமெரிக்க அருங்காட்சியகம் ஒன்றில் புராதன மாம்மோத் வகை யானை ஒன்றை பார்த்தபோதுதான் இதற்கு நிகரான பரவசத்தை அடைந்தேன். அதன் வல்லமையும் பலவீனமும் அதன் வேகம்தானாம். மணிக்கு அரைக்கால் கிலோமீட்டர்.

தன் இணையதளத்தில் மாதவராஜ் அவரது கட்சி அம்மாவை பிரதமராக்கும் கோஷத்துடன் களமிறங்கியதைப்பற்றிய கட்சியின் நியாய வாதத்தை எழுதியிருக்கிறார். அதற்கு ‘என்னது காமராஜ் செத்துட்டாரா!!!!’ என்ற கோணத்தில் திடுக்கிட்டு கோயிந்ஸாமி ஒருவர் கண்ணீர்மல்க நியாயம் கேட்டிருக்கிறார்.

“வீடு தீப்பற்றி எரியும்போது பரிசுத்தமான நடு ஆற்றில் அள்ளிய தெள்ளிய நீர் கொண்டுதான் தீயை அணைப்பேன் எனக் கம்யூனிஸ்ட்டுகள் கைகட்டிக் காத்து நிற்க முடியாது. கிடைப்பது சாக்கடை நீரானாலும் அள்ளி அள்ளி ஊற்றித்தான் ஆகவேண்டும். தீயை அணைப்பதுதான் கம்யூனிஸ்ட்டுகளின் கண்களுக்கு முக்கியமெனப்படும். இதுதான் தேர்தல்கால உடன்பாடுகள் குறித்து கம்யூனிஸ்ட்டுகள் கொள்ளும் அணுகுமுறை”.வாஸ்தவம் தான். ஆனால் ஒவ்வொருமுறையும் அந்த தீயை பற்றவைத்தவர்களுடனல்லவா கை கோர்கிரீர்கள்வாழ் நாள் முழுவது சாக்கடை நீரெடுத்து தீ அணைப்பதுமட்டுமே உங்களது வேலை என முடிவு செய்துவிட்டீர்களா? கிளாஸ்! என்று சொல்லிச் சிரித்துக்கொண்டேன்.

மாதவராஜ்

அதைவிட சிரிப்பு அவர் கண்களை ஈரமாக்கிய ஓர் எஸ்.எம்.எஸ் உண்மைச்சம்பவம்.இதே கதையை 23 வருடங்களுக்கு முன்னர் கோட்டயத்தில் நடந்த உண்மைச்சம்பவமாக நான் வாசித்தது நினைவுள்ளது. அது 1950 வாக்கில் லண்டன் நாளிதழ் ஒன்றில் வாசகர்கடிதமாக வெளிவந்த சாஸ்வதமான உண்மைச்சம்பவம், உலகமெங்கும் நடந்தபடியே இருக்கிறது என்று பின்னர் அறிந்தேன்.

இதற்கிணையான இன்னொரு உண்மைச்சம்பவம் கங்கையில் படகில்செல்லும்போது சிறுமியை முதலை பிடிக்க, அவளை இழக்காவிட்டால் படகு கவிழ்ந்துவிடும் என்று படகோட்டி சொல்ல, குழந்தையின் அப்பா அவள் நகைகளை எல்லாம் கழற்றிவிட்டு கங்கையில் தள்ளிவிடும் கண்ணீர்க்கதை. முதல் கதையில் மனிதாபிமான உள்ளடக்கம் இருப்பதுபோல இதில் பெண்ணிய உள்ள்டக்கம் இருக்கிறதுதானே? அதை தோழர் 2030 வாக்கில் கேள்விப்பட்டு கண்ணீர் மல்குவார் என நினைக்கிறேன். பாவம், அவருக்கு அப்போது வயதும் ரொம்ப ஆகியிருக்கும்.

ஆனால் அவர் தன் தோழரும் விருதுநகர் வேட்பாளருமான சாமுவேல்ராஜ் பற்றி எழுதியிருந்ததை வாசித்தபோது வருத்தமாக இருந்தது. இந்தத் தேர்தலில் போட்டியிடுபவர்களில் தரமான வேட்பாளர்கள் என்றால் பெரும்பாலும் இடதுசாரிகள் என்பதில் ஐயமில்லை. குமரி தொகுதி வேட்பாளரான பெல்லார்மின் ஒரு எம்பி என்ன செய்யவேண்டும், என்னென்ன செய்யமுடியும் என்பதற்கான முன்னுதாரணமாகவே இருந்தார். சாமுவேல் ராஜின் பேச்சும் சிறப்பாக இருக்கிறது. ஆனால் அவர்கள் வெல்லப்போவதில்லை.

ஏன்? நாகர்கோயிலில் பெல்லார்மின் பிரச்சாரம் செய்துகொண்டு சென்றார். கூடச்சென்ற எல்லாரும் என் முன்னாள் தோழர்கள். ஆகவே கொஞ்சதூரம் நானும் போய் பிறகு கழன்றுகொண்டேன். அவர்களில் சிலர் தீவிரமான கொள்கைப்பற்றும் நேர்மையும் கொண்ட தொழிற்சங்கப் பணியாளர்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் அரசூழியர்கள். பத்துமணிக்கு வேலைக்கு வந்து பத்தே முக்காலுக்கு டீ சாப்பிடக்கிளம்புகிறவர்கள். [நான்னும் அவர்களில் தோராயமாக ஒருவன்தான்]

சற்று இப்பால் வந்து ஒரு வெற்றிலைபாக்குக் கடையில் ஒதுங்கி அங்கு நின்றவர்கள் பேசக்கேட்டபோது எப்போதுமே நானறிந்த உண்மை மீண்டும் நெற்றியில் வந்து முட்டிக்கொண்டது. ‘மக்களுக்காக நிக்கானாம்வே. கூடப்போறானுவ பாரு, கொடியும் கம்புமாட்டு. இவன் ஆபீஸில போனா கை நீட்டாம ஒரு சர்ட்டிபிகெட்டு குடுப்பானா வே? தாயளி அந்நா போறானே செவப்பு துணிய கெட்டிக்கிட்டு. அவனாக்கும் வெவசாய ஆப்பீஸ்ல மருந்து விக்கப்பட்டவன். சர்க்காரு குடுக்குத ஓசி மருந்த பைசா வேங்கிட்டு விக்கிற நாயி…’

அதுதான் உண்மை. தோழர்களின் தியாகம் என்னவாக இருந்தாலும் அவர்கள் யாருக்காகப் போராடுகிறார்களோ அந்த அரசூழியர்களில் தொண்ணூறுசதவீதம் பேரும் இந்த தேசத்தை அரித்துத் தின்னும் கரையான்கள் என மக்களுக்குத் தெரியும். ஆசிரியர்கள், மருத்துவப்பணியாளர்கள் என அனைவர் மீதும் மக்களுக்கு இருக்கும் ஆழ்ந்த கசப்பு அதிர்ச்சியூட்டுவது. கோடானுகோடி ஊழல்களெல்லாம் அவர்களுக்கு மிகத் தொலைவிலுள்ளவை. ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்கு மருந்துவாங்கப்போனால் இருபது ரூபாய் வாங்காமல் சீட்டு கொடுக்க மறுக்கும் ஊழியர்தான் அவர்கள் அறிந்த ஊழல்மன்னர். அவரைப் பாதுகாக்கக்கூடிய, அவரது குரலாக ஒலிக்கக்கூடிய ஒன்றுதான் மக்கள் பார்வையில் செங்கொடி.

இந்த அப்பட்டமான உண்மை தோழர்களுக்குத் தெரியும். அவ்வப்போது ஓரிரு நேர்மையாளர்கள் மனம் கசந்து வெளியேறுவதும் உண்டு. ஆனால் அரசூழியர்கள் இல்லாமல் கட்சி இல்லை. அவர்களின் நிதியே கட்சியின் அடிப்படை. அவர்களின் ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்புகளே கட்சியின் ஆணிவேர். அவர்களின் ஊழலைக் கண்டித்தால் கட்சியே கலைக்கப்படவேண்டியதுதான்.

ஆயினும் இந்தத்தேர்தலில் வங்கத்திலும் கேரளத்திலும் எத்தனை இடதுசாரிகள் எம்பிக்களாக டெல்லி செல்கிறார்களோ அத்தனை தூரம் நாட்டுக்கு நல்லது என்று நினைக்கிறேன். வரும் ஆட்சியில் நிகழப்போகும் முக்கியமான கொள்கை முடிவுகளில் இந்திய எரிபொருள் வளங்களை எடுக்கும் உரிமைகள் தனியாருக்கு அளிக்கப்படுவதுதான் முதன்மையானதாக இருக்கும். ஆம் ஆத்மியும் இடதுசாரிகளும் எழுப்பும் குரல் பாராளுமன்றத்தில் இல்லை என்றால் வெறும் சட்டிதான் எஞ்சும்.

முந்தைய கட்டுரைதிருவிழா – கடிதம்
அடுத்த கட்டுரையானைகளும் சீமைக்கருவேலமும்