இன்று பெற்றவை : எழுத்தாளனின் டைரி

எப்போதும் காவலாக…

சீராக நாட்குறிப்பு எழுதும் வழக்கம் உள்ளவன் நான். தியானம் பயின்ற காலகட்டங்களில் தனியாக தியான அனுபவம் சார்ந்த பதிவுகளை எழுதியிருக்கிறேன். அவை இப்போது வாசிக்கையில் ஆர்வமூட்டும் விஷயங்களாக உள்ளன. ஏதோ ஒரு தருணத்தில், அவன் என்னிடமுள்ள தொடர்பை போதுமான அளவுக்கு இழந்து காம்பு கனிந்து உதிரும்போது, நூலாகலாம். இந்தக் குறிப்புகள் நானே வெவ்வேறு தருணங்களில் எழுதியவை. இதழ்களிலும் இணையத்திலும்.

தொடர்ச்சியாக எதிர்வினைகள் ஆற்றுபவன் நான். என்னுடைய கருத்துக்களை பதிவுசெய்ய எப்போதுமே தயங்கியவனல்ல. பலசமயம் எழுத்தாளர்கள் தயங்கும் விஷயங்களில் கூட கருத்துசொல்லியிருக்கிறேன். அதனால் பலவகையான முத்திரைகளுக்கு ஆளாகியிருக்கிறேன். நான் இடதுசாரி அல்ல. இங்குள்ள கருத்தியல் சரிநிலைகள் இடதுபக்கம் சாய்ந்தவை என்பதனால் இடதுசாரி அல்லாத எவருமே இங்கே வலதுசாரிகளாக சேர்க்கப் குத்தப்படுவார்கள்.நான் வலதுசாரியும் அல்ல. நான் எழுத்தாளனின் சாரி. அந்நிலைபாடில் நின்றபடி என்னுடைய எண்ணங்களை எப்போதும் தெரிவித்து வந்திருக்கிறேன்.

இக்குறிப்புகள் அக்காலகட்டத்து நிகழ்ச்சிகளை விவாதங்களை பிரதிபலிக்கின்றன. நம்முடைய கலாச்சார அரசியல் சூழலில் எப்போதும்  முன்வைக்கப்படும் பிரச்சினைகள் இரண்டுதான். எல்லா சிக்கல்களையும் ஒரு ‘முற்போக்கு’ நோக்கில் மிக எளிமைப்படுத்திக்கொண்டு அதிமுரட்டு தீர்வுகளை முன்வைப்பது. முன்வைப்பவருக்கு ஒரு புரட்சி படிமம் கிடைக்கும். மற்றபடி அதனால் எந்த பயனும் இருக்காது. ஆனாலும் பிம்ப உற்பத்தியே அன்றாடச் செயல்பாடாக உள்ள நம் சூழலில் இது எப்போதும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. எழுத்தாளனின் குரல் அந்த எளிமைப்படுத்தலுக்கு எதிராக ஒலிக்க வேண்டியிருக்கிறது.

இரண்டு, ஒருசூழலில் பண்பாட்டுச் செயல்பாடுகள் விவாதம் மூலமே அடையாளம் காணப்படும் என்றால் முக்கியமானவர்கள் விடுபட்டுபோவார்கள், முக்கியமானவை விடுபட்டு போகும். விளம்பர வெறியர்களும் சண்டைக்கோழிகளுமே முன்னிற்பார்கள். கடந்த பல வருடங்களில் விடுபட்டவற்றை சுட்டிக்காட்டும் முகமாகவே நான் நிறைய எழுதியிருக்கிறேன்.

அனைத்தையும் விட மேலாக ஒன்று உண்டு. தமிழில் எப்போதுமே இலக்கியமும் இலக்கிய எழுத்தாளனும் மதிக்கப்பட்டதில்லை, கௌரவிக்கப்பட்டதில்லை. சந்தேகமிருந்தால் அசோகமித்திரன் முதல் எஸ்.ராமகிருஷ்ணன் வரையிலான எழுத்தாளர்களின் பெயர்களை கூகிள் தேடுபொறியில் தட்டச்சிட்டு தேடிப்பாருங்கள், பத்துக்கு ஏழு வசைகளே அகப்படும். ஏதாவது ஒரு காரணம் கிடைத்தால் சமூகப்பொது எதிரியை சாடும் தார்மீக ஆவேசத்துடன் எழுத்தாளர்கள் மேல் பாய்ந்து குதறும் ஒரு பெரும் கும்பலே நம் பண்பாட்டுச் சூழலில் உள்ளது.

ஏன் சிற்றிதழ்களும் அப்படித்தான். சென்ற பத்து வருடத்து காலச்சுவடு,செம்மலர், தாமரை இதழ்களில் எத்தனை எழுத்தாளர்கள் தாக்கப்பட்டுள்ளார்கள் எத்தனைபேர் பாராட்டப்பட்டிருக்கிறார்கள், என்ன விகிதாச்சாரம் என்று பாருங்கள், புரியும். எழுத்தாளன் மரணமடையும்போது நான்கு அஞ்சலிக்கட்டுரைகள் வந்தாலே செம்மலர் போன்ற இதழ்கள் கசப்படைந்து கட்டுரைகள் போடுகின்றன, சர்வசாதாரணமான தொழிற்சங்கவாதிகளுக்கெல்லாம் நினைவுமலர்கள் போடுகின்ற அதே இதழ்கள்! அரசியல்வாதிகளுக்கு போஸ்டர் போடுபவர்கள் ஓர் எழுத்தாளனின் படம் இலக்கிய இதழொன்றின் அட்டையில் வந்தால் அதிர்ச்சி அடைகிறார்கள்!

இதுவே படைப்புமனநிலை குறித்தும் சொல்லத்தக்கது. உலகின் எந்த மூலையிலாவது படைப்பூக்கத்தை குறைத்து மதிப்பிடக்கூடிய ஒரு கோட்பாடு உருவானால் அது சில மணிநேரங்களிலேயே இங்கே வந்துவிடும். அவ்வளவுதான் இலக்கியமெல்லாம் இனி அம்பேல் என்று கூப்பாடுகள் ஒலிக்கும். எத்தனை கோட்பாடுகளின் அடிபப்டையில் எத்தனை முறை அக்குரல் ஒலித்திருக்கிறது என்று பார்த்தால் ஆச்சரியே எழுகிறது. அந்த மட்டையடிகளைத் தாண்டித்தான் இங்கே இன்னமும் இலக்கியம் எழுதப்படுகிறது.

என்னுடைய குறிப்புகள் படைப்புக்கு, படைப்பாளிக்கு, படைப்புமனநிலைக்கு எதிரான இழிவுபடுத்தல்களை எப்போதும் எதிர்கொள்பவனாகவே இருந்திருக்கின்றன. இந்த வரிகள் வழியாக செல்லும்போது அந்த சமரசமில்லாத விழிப்பான நிலைபாடு எனக்கு உவகை அளிக்கிறது.

என் நண்பரும் வாசகரும் பயணத்தோழருமான வழக்கறிஞர் செந்திலுக்கு இந்நூல் .

உயிர்மை வெளியீடாக ஜெயமோகனின் 10 நூல்கள்

‘நலம்’ சிலவிவாதங்கள்

‘சிலுவையின் பெயரால்’ கிறித்தவம் குறித்து..

‘புதியகாலம்’ சில சமகால எழுத்தாளர்கள்

‘பண்படுதல்’ பண்பாட்டு விவாதங்கள்

‘முன்சுவடுகள்’ சில வாழ்க்கைவரலாறுகள்

முந்தைய கட்டுரைசர்வசித்தன்
அடுத்த கட்டுரைசீரோ டிகிரி:எதிர்மரபும் மரபு எதிர்ப்பும்