காலடிகள் பதிந்த பாதை

முன்சுவடுகள் வாங்க

உலகம் முழுக்க வாழ்க்கை வரலாறுகள் சமீபகாலமாக அதிகம் விற்கின்றன. காரணம் வாழ்க்கை புனைவின் சாத்தியங்களை எல்லாம் மீறியதென்பதே. இந்தியாவில் எழுதப்பட்ட எந்த ஒரு நாவலைவிடவும் காந்தியின் வாழ்க்கை உத்வேகமானது, தீராத மர்மங்கள் கொண்டது. கவித்துவமானது. மாபெரும் துயரக்காவியம் போன்றது.

ஒருகட்டத்தில் மனம் புனைவுகளை அவநம்பிக்கையுடன் பார்க்க ஆரம்பிக்கிறது. அந்த அவநம்பிக்கையை தன் புனைவுத்திறனால் வென்று உள்ளே வரக்கூடிய ஆக்கங்களை மட்டுமே நாம் ஏற்க முடிகிறது. அந்த அவநம்பிக்கையை உருவாக்காத, புனைவுக்கு நிகரான சாத்தியங்கள் கொண்ட நூல்கள் வாழ்க்கை வரலாறுகள்.

சென்றகாலங்களில் நான் வாசித்த வாழ்க்கை வரலாறுகளில் உள்ள சில அசாதாரணமான தருணங்களை தொட்டு எழுதிய கட்டுரைகள் இவை. நேரடியான வாழ்க்கைக்கே உரிய வசீகரமும் மர்மமும் கொண்டவை. சில வாழ்க்கை வரலாறுகளை புனைவாக எழுதியிருந்தால் எவருமே நம்பியிருக்க மாட்டார்கள் – உதாரணம் மலையாள எழுத்தாளர் சி.வி.ராமன்பிள்ளை அவர்களின் வாழ்க்கை வரலாறு.

வாசகர்கள் இந்த கட்டுரைகள் மூலம் முற்றிலும் வெவ்வேறு தளங்களில் வாழ்ந்து மறைந்த மனிதர்களின் முகங்களைப் பார்க்கலாம். முகங்கள் நினைவின் மணற்பரப்பில் அவர்கள் விட்டுச்சென்ற கால்தடங்கள் போன்றவை. காலக்கடல் வந்து அலையடித்துக்கொண்டே இருக்கிறது. அழியாதவை சிலவே. அவை அழியவேண்டாமென கடலை ஆளும் முடிவின்மையே தீர்மானிக்கிறது போலும்.

இந்நூலை என் இனிய நண்பரும் பிரியத்திற்குரிய படைப்பாளியுமான யுவன் சந்திரசேகருக்குச் சமர்ப்பணம் செய்கிறேன். என்னைப்போலவே அவனும் வாழ்க்கை வரலாறுகளில் பிரியமுள்ளவன். அவன் எழுதுவதே குட்டிக்குட்டி வாழ்க்கை வரலாறுகளைத்தான், இல்லாத மனிதர்களின்.

(விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வந்துள்ள முன்சுவடுகள் நூலுக்கான முன்னுரை)

முந்தைய கட்டுரைஅகரமுதல்வன்
அடுத்த கட்டுரைபின்நவீனத்துவம் பின்னகர்ந்த பின்… அஜிதன் உரை