ரமணர் :கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

ரமணர் பற்றி எழுதியிருந்தீர்கள். [ கென் வில்பர்,ரமணர்,முழுமையறிவு:ஓரு உரையாடல் ]ரமணரைப்புரிந்துகொள்ள இந்த இணையதள கட்டுரை உதவியாக இருக்கும்

http://happinessofbeing.blogspot.com/2008/06/cultivating-uninterrupted-self.html

மாதவன்

*********

அன்புள்ள ஜெயமோகன்
   வணக்கம். தாங்கள் கூறியிருந்ததைப்போல் இரமணரை பற்றி எழுதி இருந்தீர்கள். இரமணரை பற்றி பலர் தங்களின் பார்வையை பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் அவற்றை தாண்டி அவரை நான் அவருடைய நூல்களின் மூலமாகவும் உரையாடல்களின் வழியாகவும் அறிந்துகொள்வது எனக்கு எளிதாகவே இருந்தது. நான் ஒருவரை அறிந்துகொள்வதற்கு அவருடைய நூல்களை மட்டுமே நம்புகிறேன். எப்போதும் நான் பிறர் எழுதும் வரலாறுகளை அடிப்படையாக கொண்டு ஒருவரைப்பற்றிய உருவகத்தை ஏற்படுத்திக்கொள்தில்லை.
என்னுடய அறிதலிலிருந்து:
 இரமணர் தன்னை லௌகீக வாழ்க்கையிலிருந்து விலகி இருப்பதால் அதற்கான அறிவுரையையோ அல்லது தன்னுடைய கருத்தையோ கூறுவதை தவிர்த்தே வந்திருக்கிறார். தன்னுடைய நீண்ட தியான நிலையில் இருந்து திரும்பிய பின்னர் தன்னை நாடி வருபவர்களுக்கு ஆன்மீகத்தில் உதவுவதை மட்டுமே தன் பிற்கால வாழ்வின் குறிக்கோளாக வைத்திருந்தார். அதைத்தவிர வேறெதைப்பற்றியும் கருத்தளிக்க மறுத்தார். தேச விடுதலை, சாதி வேறுபாடுகளை களைதல் போன்றவை பற்றி எதுவும் கூறவில்லை. இல்லற வாசிகள் துறவரம் மேற்கொள்வதை அவ்ர் ஊக்கப்படுத்தியதில்லை. மாறாக சன்னியாசத்தை இன்னொரு வகையான இல்லறமாக  மக்கள் ஏற்றுக்கொள்வதாக ந்கையாடவே செய்கிறார்.
    இரமணாச்ரமம் இரமணரின் ஆசிரமம் அல்ல. அவர் தங்கி இருந்த இடம் மட்டுமே. அவர் எந்த வழிபாட்டுநெறியையும் ஏற்படுத்தவில்லை. சீட பரம்பரையையும் ஏற்படுத்தவில்லை. அவராக உபதேச உரைகளை உண்டாக்கவில்லை. அவருடைய செய்யுள் நூல்கள் கூட உரையாடலின் நீட்சியாகவே உள்ளன. எந்த ஆன்மீக நெறிமுறையயும் மறுத்ததில்லை. மாறாக பல்வேறு வகையான மனிதருக்கு வெவ்வேறு வழிமுறைகள் தேவைப்படலாம் எனக்கூறுகிறார். அனைத்தும் ஒருவன் தன்னை அறிந்துகொள்ள உதவ மட்டுமே.
  அவரின் நூல்கள் ‘நான் யார்’, ‘விசாரசங்கிகை’, ‘உபதேச உந்தியார்’ (அனைத்தும் மிகச்சிறிய நூல்கள்) எனக்கு ஆன்மீக குறிக்கோளை  அறிய பெரிதும் உதவின.
   அவர் பிராமணர் என்பது ஒருவேளை  பிராமணர்களை கவரலாம். அது அவரின் குற்றமல்ல. ஆனால் என்னப்போன்ற ஒரு பிராமணனல்லாதவனை ஈர்க்க அவரின் நேரடியான எளிய கருத்துக்களே போதுமானதாக உள்ளன.

நீங்கள் அவரைப்பற்றி ஒரு கருத்தை ஏற்படுத்திக்கொள்ள அவரின் நூல்களையே நோக்கத்தில் கொள்ளவேண்டும் என கருதுகிறேன்.

ஒருவன் ஒரு நல்ல விஷயத்திற்காகக்கூட சங்கல்பம் கொள்வது அவனுக்கு ஒரு தளையே. தளையில் கட்டுண்டவன்  எப்படி முக்தி அடைய முடியும். இதில் எனக்கு இரமணரின் கருத்து ஏற்புடையதாகவே உள்ளது.

மற்றபடி தங்களின் தத்துவ கட்டுரைகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

அன்புடன்
த.துரைவேல்

******

அன்புள்ல ஜெயமோகன்,

ரமணரைப்பற்றி நீங்கள் எழுதியிருந்ததை ரமணரைப்பற்றிய ஒரு ஆராய்ச்சிமுடிவாக இல்லாமல் அவரை அணுகுவதற்கான உங்கள் இடர்பாடாக மட்டுமே எடுத்துக்கொள்கிறேன். உங்கள் குரு நித்ய சைதன்ய யதி ரமணாசிரமத்தில் இருந்ததையும் ரமணரிடம் ஆசிபெற்றபின் அவர் தேசாடனம் சென்றதையும் ரமணரின் இறப்பை அவர் கண்டதைப்பற்றியும்  அவரது கட்டுரைகளில் எழுதியிருப்பதை நீங்கள் நடத்திய சொல் புதிது இதழ்களில் மொழிபெயர்ப்பு மூலம் வாசித்திருக்கிறேன். ரமணர் போன்ற ஞானிகளை சாமானிய அறிவை வைத்து புரிந்து கொள்வது கடினம். நீங்கள் நேர்மையாக உங்கள் இடர்பாட்டை சொல்லியிருக்கிறீர்கள். பெரும்பாலானவரக்ள் சாதகமாகவோ பாதகமாகவோ தங்கள் கருத்தை சொல்லிவிடுவார்கள். அது பெரும்பாலும் சொல்பவரின் நிலையை காட்டுவதாக மட்டுமே இருக்கும். ஒரு ஞானியை மத தத்துவங்களை வைத்தோ லௌகீக தத்துவங்களை வைத்தோ அளவிட முடியாது. நீங்கள் ரமணரைப்பற்றி இரு கதைகளை எழுதியிருக்கிறீர்கள். ஒரு கதை விஞ்ஞானக்கதை. திண்ணையில் படித்ததாக நினைவு. இன்னொரு கதை ஜெயகாந்தனும் இளையராஜாவும் ரமணாசிரமம் போவதைப்பற்றியது. அதுவும் திண்ணையில்தான் படித்தேன். இருகதைகளிலும் ரமணரை ஒரு இயற்கையான மர்மமாகவே காட்டியிருக்கிறீர்கள். அதாவது இயற்கையில் உள்ள வசீகரமான ஏராளமான மர்மங்களில் ஒன்று என்று சொல்லியிருக்கிறீர்கள். அதுவே நல்ல பார்வை என்பது என் எண்ணமாகும்

அன்புடன்

மதனகோபால்
திருச்சி   

கென் வில்பர்,ரமணர்,முழுமையறிவு:ஓரு உரையாடல்

இரு கலைஞர்கள்

அறிவியல் சிறுகதை வரிசை 4 – பூர்ணம்

முந்தைய கட்டுரைவிளிம்புக்கும் கீழே சில குரல்கள்
அடுத்த கட்டுரை”என்ன சேறது மாமி, அது அப்டித்தான்!”