1936ஆம் வருடம் நவம்பர் மாதம் ஒருநாள் பகல் பனிரண்டு மணி
”உங்களுக்கு வயதென்ன?”
”இருபபுதாறு”
”ஜெயிலுக்கு போவீர்களா?”
”போவேன்”
”கல்யாணம் ஆகிவிட்டதா?”
”இல்லை”
”கல்யாணம் ஆனால்?”
”ஆனாலும் போவேன்”
இக்கேள்விகள் திருச்சிராப்பள்ளி சிறையில் இப்போது (1941) நம்பர் 1 கைதியாக இருக்கும் ஸ்ரீ ராஜகோபாலாச்சாரியாரால் என்னிடம் கேட்கப்பட்டன. இச்சம்பவத்தை ஒருநாள் சாயங்காலம் நான் பி. கோபால ரெட்டியிடம் சொன்னேன். அவர் சிரித்துக்கொண்டே
நாமெல்லாரும் இப்போது ஜெயிலுக்கு வரவேண்டும் என்று அவருக்கு எப்படி தெரிந்தது?’ என்று கேட்டார்.
‘எப்படியோ’ என்றேன் நான்.
இப்போது நடக்கும் சத்தியாக்கிரக இயக்கத்திற்கும் 1936 ஆம் வருஷம் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கும் நான் சம்பந்தம் கற்பிக்கவில்லை. ஆனால் சட்டசபைக்குச் செல்வதற்கு முன்பே ஜெயிலுக்குப் போவதற்கு அதுவே முதல் படி என்பதை எனக்குக் காட்டியவர் ஸ்ரீ ராஜகோபாலாச்சாரியார்தான்.”
என்று ஆரம்பிக்கிறது எல்.எஸ்.கரையாளர் எழுதிய ‘திருச்சி சிறை 1941’ என்ற சிறிய சுயசரிதைக் குறிப்புநூல். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் உச்சநாட்கள். வெள்ளையனே வெளியேறு இயக்கம் வீரியமடைந்து விட்டிருந்தது. அலையலையாக தேசபக்தர்கள் சிறை சென்றார்கள். அதில் ஒருவர் தென்காசியைச் சேர்ந்த சட்டநாதக் கரையாளர். பிற்பாடு தமிழகத்தில் காங்கிரஸின் முக்கியமான பொறுப்புகளில் இருந்திருக்கிறார். அவர் பெயரில் ஒரு கல்லூரி இன்று செயல்படுகிறது.
இந்த சுயசரிதைக் குறிப்பின் முக்கியபுதுவம் என்னவென்றால் இதில் ஏராளமான சுதந்திரப்போராட்ட வீரர்களின் கோட்டுச் சித்திரங்கள் உள்ளன என்பதே. அவர்களில் பலர் இப்போது தடயமே இல்லாமல் வரலாற்றில் மறைந்துபோய்விட்டார்கள். அப்பட்டமாகச் சொல்லப் போனால் பொதுவாக தேசவிடுதலைக்குப் போராடியவர்கள் மறக்கப்பட்டார்கள். தங்கள் சாதிகளுக்காக மட்டுமே குரல்கொடுத்தவர்கள் அந்தந்தச் சாதிகளால் கொண்டாடப்படுகிறார்கள். அவர்களில் சென்றகால வரலாற்றில் துரோகிகளாகவே சொல்லப்பட்டவர்களும் அடக்கம்.
முதலில் வேலூர் சிறைக்குத்தான் செல்கிறார் நுழைகிறார் சட்டநாதக் கரையாளர். ”நான் கண்ட காட்சி இதுதான். சுமார் நூறு பேர்களுக்கு மேல் மரங்களுக்கு அடியில் உட்கார்ந்திருந்தார்கள். ஒவ்வொருவரும் ஓர் அலுமினியபுதட்டில் சாதமும் இன்னொரு தட்டில் குழம்பும் கறியும் வைத்துக்கொண்டு சாப்பிடுவதற்கு தயாராகிக் கொண்டிருந்தார்கள். நானும் கலந்து கொண்டேன்….”
ஜெயிலில் உள்ளே வரும் ஒருவர் மிகவும் உற்சாகமாக வரவேற்கப்படுவார். அவர் வெளியுலகின் ஒரு துண்டு அல்லவா? அங்கே என்ன நடக்கிறது, காந்தி என்ன செய்கிறார், ஜவகர்லால் எங்கே என்று பரபரப்பான கேள்விகள். சாப்பிட்டு முடிப்பதற்குள் ஏராளமான முகங்களை பார்த்துவிட்டார். பின்பு 12 அடிநீள அறைக்குள் கொண்டுசென்று அடைத்தார்கள். அதில் ஆறடி நீளமும் மூன்றடி உயரமும் உள்ள ஒரு திண்டு. அதுதான் கட்டில். அல்லது திண்ணை. தலையணை கிடையாது. பதிலுக்கு அதன் தலைப்பகுதி உயர்த்தி கட்டப்பட்டிருக்கும். அறையில் மிக உயரத்தில் காற்று வருவதற்கு ஒரு துவாரம். அதற்கு கம்பி வலை போடப்பட்டிருந்தது.
”உள்ளே கால் வைபுது நடந்தால் நீளத்தில் 5 அடி நடக்கலாம். குறுக்கே நடக்க முடியாது. இந்த அறையில் மாலை ஐந்தரை மணிக்கு அடைத்தால் மறுநாள் காலை ஐந்தரை மணிக்குத்தான் வார்டர்கள் வந்து திறப்பார்கள். . . அறைக்கு வெளியே ஒரு ஹரிக்கேன் விளக்கு இரவு ஒன்பதரை வரை எரிய அனுமதி கொடுப்பார்கள்” என்று அந்தச்சூழலை விவரிக்கிறார் கரையாளர். பனிரண்டு மணி நேரம் அந்த அறைக்குள் இருப்பதுதான் சிறை வாழ்க்கையின் மிகப் பெரிய துயரம்.
”முதல் நாள் லாக்-அப்பில் தூக்கமே வராது. நீங்கள் முதல்நாள் சிறையில் தூங்கினீர்களா என்று சிலரிடம் கேட்டேன். ஒருசிலர் தவிர ஏனையோர் அனைவருமே தூங்கவில்லை என்றே பதில் சொன்னார்கள்” என்று அந்த முதல் நாளை பதிவு செய்கிறார் கரையாளர். முதல்நாள் சிறையனுபவம் மனக்கொந்தளிப்பும் விசித்திரமான கற்பனைகளும் கலந்ததாக இருக்கும்.
சிறையில் இருந்த மனிதர்களை வேடிக்கை கலந்து அறிமுகம் செய்கிறார் கரையாளர். அவருக்கு சிறை என்பதே முகங்களாகத் தான் இருக்கிறது. அகில இந்திய கிஸான் இயக்கபு தலைவர் என்.ஜி. ரங்கா. முதலில் அவரை கரையாளர் அடையாளம் காணவில்லை. சிறையில் மெலிந்து ஒட்டிப் போயிருந்தார். ”மடமடவென்று பேசுவார். சார்லி சாப்ளின் மாதிரி முகம்” அவர் திருச்சி சிறையில் இருந்து வேலூர் சிறைக்குள் காவல் கைதியாக ‘விடுதலை’யானார். ரங்காவின் சிறைவாசமும் விடுதலையும் அத்தகையவை.
அறையில் இருந்த பழுத்த ஆத்திகவாதியும் சோதிடப் பிரியருமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தீவிர இடது சாரியாம். ஏழு தடவை சிறை சென்றவருமான ஸ்ரீனிவாசராவ், எப்போதும் படுத்தே இருக்கும் ஸ்ரீ நிவர்த்தி வெங்கடசுப்பையா, சாப்பிடவேண்டிய நேரத்தில் சாப்பிடுவதை கடுமையான விரதமாக கொண்ட ஸ்ரீ நாகராஜ அய்யங்கார் என்று போராட்டக் கைதிகளின் இயல்புகள் விதவிதமானவை.
சிறை ஆஸ்பத்தரி ஒரு நரகம் என்று கரையாளர் கூறுகிறார். இரவு ஏழு மணிக்கு ஆஸ்பபுதிரியை பூட்டிவிட்டு டாக்டர்கள் போய்விடுவார்கள். கான்விக்ட் வார்டர்கள் என்று கூறப்படும் குற்றவாளியாக வந்து நன்னடத்தை காரணமாக காவலர் வேலை செய்யும் கைதிகள்தான். பிறகு நோயாளிகளுக்குப் பொறுப்பு. அவர்கள் எதுவுமே உதவமாட்டார்கள். ஒரு கைதி இரவெல்லாம் தண்ணீர் தண்ணீர் என்று கத்தியபிறகு சத்தம் இல்லாமல் ஆகிறான். தூங்கிவிட்டான் என்று நினைக்கிறார் கரையாளர். மறுநாள் பார்த்தால் கட்டிலில் இருந்து கீழே விழுந்து செத்துக் கிடந்தான்.
ஜெயில் உணவும் அப்படித்தான். பெரும் பாலும் சந்தையில் வாங்கப்படும் கழிவு காய்கறிகள்தான் சமையலுக்கு. சிறையிலேயே பயிரிடப்படும் முள்ளங்கி கீரை வகைகளை சமைத்து விட்டு காய்கறி வாங்கியதாக கணக்கு காட்டுவதும் உண்டு. காய்கறியுடன் சிறையில் உள்ள குரோட்டன்ஸ் இலைகளையும் கலந்துவிடுவார்கள். குரோட்டன்ஸ் சாம்பார் கொஞ்சம் பழகினால் சாப்பிட்டுவிடக்கூடியதுதான் என்று கரையாள்:ர் கூறுகிறார்.
சிறையில் குறைகளை கேட்க வெளியே இருந்து ஜுரிகள் வருவதுண்டு. பெரும்பாலும் இது அரசாங்கத்தால் அளிக்கப்படும் ஒரு கௌரவ பதவி. கௌரவ நீதிபதி பதவிக்குப் போவதற்கான ஒரு வாசல் இது. ”ஒவ்வொரு ஜெயிலிலும் அவர்களைப் பார்த்தால் அவர்கள் நிலைமைக்காக வருந்தாமல் இருக்க முடியாது. பரிதாபகரமான தோற்றம். உத்தியோகம் இருக்கிறது என்று ஒரு பெருமை. ‘ஒன்னும் செய்யபுதான் உங்களால் முடியாதே’ என்ற நோக்கத்துடன் நாம் அவர்களைப் பார்க்கும்போது முகத்தில் அசடு வழியும்’ என்று கூறும் கரையாளர் இவர்களகளின் பணி குறித்தும் கூறுகிறார்.
‘ஜில்லா கலெக்டரால் நியமிக்கப்படும் இந்த வகுப்பால் எந்தக் கைதியாவது செய்யும் புகாரைப்பற்றி ஜெயில் புத்தகபுதில் குறிப்பிடுவார்கள். அந்தப் புகார் காரணமில்லாமல் செய்யப்பட்டது என்று ஜெயில் சூபரின்டெண்டு ‘அபிப்பிராயப்பட்டால்’ அவரே அந்தக் கைதிக்கு என்ன தண்டனை விதிக்க உபுதேசித்திருக்கிறார் என்பதை விசிட்டர்களுக்கு எழுதி அனுப்புவார். எந்தக் கைதியாவது இந்த விசித்திர மனிதர்களிடம் சொல்லி எந்தவிதமான அநுகூலமாவது பெற முடியுமா?”
வேலூரில் இருந்து திருச்சி சிறைக்குச் செல்லும் கரையாளர் தன்னைப்பற்றிக் கூறுகிறார். ”நான் ஜெயிலுக்கு புதியவன். மகாத்மா காந்தி ராஜாஜி முதலியோரைப்போல நான் கறுப்புக் குல்லாய் அல்ல. கறுப்புக் குல்லாய் என்றால் பலமுறை சிறைபுதண்டனை அடைந்து சிறைக்கு வரும் ஆசாமிக்குப் பெயர்” சிறைப்பறவை.
சிறைக்குப் போகும் மனிதர்களின் முதல் மாற்றம் அவர்கள் பெயர்களை இழந்து நம்பர் ஆகிவிடுவதுதான். அதன்பிறகு அதுதான் அவர்களின் அடையாளம். கரையாளர் 154 ஆகிவிட்டார். ராஜாஜி எண் 1. முன்னாள் சிறை அமைச்சர் டாக்டர் சுப்பராயன் எண் 6. தினமணி ஆசிரியர் டி.எஸ். சொக்கலிங்கம் எண் 27.
சிறையில் இருவகை உண்டு.கேம்ப் ஜெயில் என்று கூறப்படும் பகுதி சுற்றிலும் கம்பிவேலி போடப்பட்டது. சிறைக்கு தானாகவே வந்த, தப்ப முயலாத, அரசியல் கைதிகளை இங்கே தங்க வைப்பார்கள். இரவில் அறைகளில் அடைப்பார்கள். இதை சிறையில் ஒரு சொர்க்கம் என்று கூறலாம். தினமும் வெளியே மாடுகள் செல்வதையும் குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்வதையும் பார்க்கலாம். ஆறுமாதம் சிறையில் இருந்தால்தான் இந்தகாட்சி எத்தனை பேரின்பம் அளிப்பது என்று புரியும். மனித இயற்கைக்கே மாறான ஒன்று சிறை. சிறைக்குள் ஒரு கைக்குழந்தையை கொண்டுவந்தால் அல்லது ஒரு நாய்க்குட்டி வந்து விட்டால் கொடூடுரமான குற்றவாளிகள் கூட அதைத் தூக்கி மணிக்கணக்காக கொஞ்சுவார்கள். மனிதர்கள் அன்புசெலுத்தாமல் வாழ முடியாது.
ஜெயிலில் சுத்தப்படுபுதுதல் என்பதே கிடையாது. உணவு சமைக்கும் பாத்திரங்கள் குளியல் தொட்டிகள் குடிநீர் தெட்டிகள் எதையுமே வருடக்கணக்காக கழுவுவதில்லை. சத்தியாக்கிரகிகள் வந்தபிறகு முறைவைத்து அதைச் செய்ய ஆரம்பித்தார்கள். கடுமையான வெயில்தான் சிறையில் இன்னொரு பிரச்சினை. திருச்சி சிறையின் பெரிதாக்கப்பட்ட பகுதியில் அக்கால கட்டத்தில் எந்தவிதமான மரங்களும் செடிகளும் கிடையாது. வெயில் நேரடியாகவே கொளுத்தும். சிலசமயம் மண்ணும் புழுதியுமாக பெருங்காற்று வீசும். மற்றநேரங்களில் காற்றோட்டமே இருக்காது.
சிறைவார்டர்கள் சட்டப்படி கைதிகள் அல்ல, அவ்வளவுதான். மற்றபடி அவர்களும் அதே இடத்தில் அதே வாழ்வை வாழ்பவர்களே. அறிவுத்திறனும் குறைவு. காந்தியின் கதரியக்கம் உச்சியில் இருந்த நாட்களில் சிறை வார்டர் சிறைக்குள் நூல் நூற்கும் மூத்த தலைவரிடம் ‘ஏன் சாமி இதில் என்ன அப்பிடி சம்பாரிச்சிரப் போறீங்க?’ என்று கேட்கிறான்.
வார்டரின் தொப்பியில் இரண்டு கட்டு வெற்றிலை வைக்கலாம், அவ்வளவு பெரிது. ‘வார்டரின் தொப்பிதான் கைதிகளின் கடை’ என்று சாதாரண கைதிகள் சொல்லுவது வழக்கம். இவர்கள் கொஞ்சபேர். மிச்சபேர் ‘காணிக்’ வார்டர்கள். அதாவது கான்விக்ட் வார்டர்கள். தொழில் முறை குற்றவாளிகள் இவர்கள். இவர்கள்தான் கைதிகளை அடிப்பதும் வதைப்பதும் எல்லாம்.
சிறையில் இச்சூழலிலும் கைதிகள் மகிழ்ச்சியாக இருந்தார்கள். ஜனாப் அகமது தம்பி மொகம்மது மொஹைதீன் மரைக்காயர் பாடவும் ஆடவும் செய்தார். சித்தூர் ஸ்ரீ கே.. வரதாச்சாரியை சங்கீத வரதாச்சாரி என்று அழைத்தார்கள். 202 பவுண்ட் எடை இருந்த இவர் மெலிந்து 185 பவுண்ட் எடை ஆக மாறினார். இரவும் பகலும் பாடிக்கொண்டே இருப்பவர். நேர் மாறானவர் எம்.வெங்கடாசலம். கம்யூனிஸ்டு ஊழியர். மெலிந்து குச்சிபோல இருக்கும் வெங்கடாச்சரிக்கு காச நோய் உண்டு. சிறையில் சிகிழ்ச்சை ஏதும் இல்லை. 18 வயது முதலே அரசியல் போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றவர் இவர்.
‘மனிதனுடைய எடையைப் பற்றி பேசும்போது ஒருவர் எத்தனை பவுண்ட் இருக்கவேண்டுமென்று ஒரு கணக்கு இருக்கிறது. உயரத்தைக் கணக்கு பார்புது இத்தனை உயரத்திற்கு இத்தனை கனம் என்கிறார்கள். ஸ்ரீ எம்.வெங்கடாச்சாரியன் எடையையும் கூட்டி இரண்டாக வகுத்தால் சராசரி இருக்க வேண்டிய எடை தெரிந்து விடும்’ என்று கிண்டல் செய்கிறார் கரையாளர்.
கைதிகளில் ஒருவரான அம்மாப்பேட்டை வெங்கடராமய்யர் ஸ்ரீனிவாச ராவ் இருவரும் சமையல் பொறுப்பை தாங்கள் ஏற்றுக்கொண்டு ஜெயிலதிகாரிகள் தரும் குரோட்டன்ஸ் இலைகளில் இருந்தே சுவையான உணவை உருவாக்குகிறார்கள். ஆனால் அதிலும் சிக்கல். சாப்பிடுவதற்கு என்று இடமேதும் இல்லை. வெட்டவெளியில் சாப்பிடவேண்டும். திருச்சியில் அடிக்கடி வீசும் புழுதிப்புயல் சாப்பாட்டில் மண்ணை அள்ளிக் கொட்டிவிடும். மண் விழுந்தாலும் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும். இல்லையேல் பட்டினி கிடக்கவேண்டும். ஆனால் சிறையில் எப்போதுமே சாப்பாடு பற்றாக்குறையாகவே அளிக்கப்படும் என்பதனால் அதற்கு எவரும் துணிவதில்லை.
திருச்சி சிறை விவரணையில் சாதாரணமாக சொல்லும் பெயர்கள் நடுவே சில பெயர்கள் தெரிந்தவையாக இருப்பது ஆச்சரியமானது. உதாரணம் சர்தார் வேத ரத்தினம் பிள்ளை. நான்கு தடவை சிறைக்கு வந்தவர் அவர். ஹிந்தி வங்காளி தமிழ் மலையாளம் ஆங்கிலம் குஜராத்தி மொழிகளில் சரளமாக எழுதுவார்-படிப்பார். ஜெயிலில் சிறைக்கைதிகளுக்கு இந்தி கற்றுக் கொடுத்து வந்தார். சிறந்த சங்கீத வித்வான். காங்கிரஸில் சேர்வதற்கு முன் நல்ல சங்கீதக் கச்சேரிக்காக பதினைந்து இருபது மைல்கூட நடந்து செல்லக்கூடியவர் என்கிறார் கரையாளர்.
சிறையில் உள்ள பிற கைதிகளைப் பற்றிய குறிப்புகளும் அவ்வப்போது வருகின்றன.
‘ஏண்டா ஜெயிலுக்கு வந்தாய்?”
”பொம்பிளை கேஸ் ஐயா”
”அதென்னடாது அது?”
உண்மையில அந்த களங்கமற்ற முகம் கொண்ட உற்சாகமான விசுவகர்ம சமூகத்துப் பையனின் வழக்கு பெட்டியை திருடிக்கொண்டு போனதாக. ஆனால் அது கேவலம் என்று அவன் நினைக்கிறான். ஒரு பெண்ணுடன் சினேகம், அவள் புருஷன் கள்ள கேஸில் மாட்டிவிட்டுவிட்டான் என்று கூறுகிறான்.
சைக்கிள் கடிகாரம் பூட்ஸ் மூன்றும் தன்னிடம் உண்டு என்று அடிக்கடி கூறுகிறான். அவனை சத்தியாக்கிரகிகள் பொன்னுக்குட்டி என்று கூப்படுகிறார்கள். கல்வேலை செய்வது தொழில்.
”என்னடா உனக்கு நன்றக வேலை செய்யபு தெரியுமா?”
”என்ன சாமி காலையிலே தலையை சீவிக் கொண்டு கையிலே வாட்ச் கட்டி சைக்கிளிலே ஏறிபபோனால் சாயங்காலம் ஒரு ரூபாயுடன்தானே திரும்பி வருவேன்?”
”கல்லிலே என்ன செய்வாய்?”
”நாய் குதிரை எது வேண்டுமானாலும் அடிப்பேன்”
”நன்னாயிருக்குமா. அந்த நாய் வேட்டையாடுமா?”
”அடிச்சு தூக்கிவிடும்போதே பாதி உசிரு வந்திடுமே சாமி. வேட்டைதானே பேஷா ஆடும்.. . .”
இன்னொரு வகையினர் தலித்துக்கள். கல்வி இல்லை. உலகப் பிரக்ஞை இல்லை. எதற்காக ஜெயிலுக்கு வந்தோம் எப்போது விடுதலை எதுவுமே தெரியாது. வேதாரண்யத்திலிருந்து வந்திருந்தான் குஞ்சன் சாம்பான்.
”உனக்கு எப்போ விடுதலை?”
”என் கட்டைய பாருங்க சாமி”’
”உனக்கு ஏப்ரல் மாதம் விடுதலை”
”அதென்ன சாமி நாலாம் மாசமா அஞ்சா?”
”நாலாம் மாசம்”
கழுத்தில் மாட்டியிருக்கும் துத்தநாகத் தகட்டில்தான் எல்லா தகவலுமே. அந்தக் கட்டை தொலைந்துவிட்டால்? அவ்வளவுதான். எஞ்சிய வாழ்நாள் முழுக்க சிறைதான்.
சிறையில் இருந்த இரு முக்கிய மனிதர்கள் ஒருவர் டாக்டர் சுப்பராயன். இவரது மகள்தான் பின்னர் கிருஷ்ணனை மணந்த கம்யூனிஸ்டு தலைவரான பார்வதி. இன்னொரு மகள் மோகன் குமாரமங்கலம். சுப்பராயன் பெரும் செல்வந்தர். மாகாண சபையில் அமைச்சராக இருந்தவர். ஏன், சென்னையில் சிறை அமைச்சராகவே இருந்திருக்கிறார். எப்போதும் கதர் பனியனும் கால் சட்டையும் அணிந்து கொண்டு உற்சாகமாக இருக்கும் சுப்பராயன் வெயில் தாங்காமல் தனக்கு பனிக்கட்டி தேவை என்கிறார். அது ஆடம்பரம், கொடுக்கமுடியாது என்கிறார் சூபரின்டன்ட். ஆடம்பரம் அவசியம் என்பதெல்லாம் ஆளைப்பொறுத்தது. நான் கோடையில் எப்போதுமே லண்டனில்தான் வாழ்ந்திருக்கிறேன். கொஞ்சம் வெயிலடிபுதாலே ஊட்டிக்குச சென்று விடுபவன். எனக்கு பனிக்கட்டி தேவை என்று வாதாடி வாங்குகிறார்.
1929இல் சுப்பராயன் மாகாண சபையில் அமைச்சராக இருந்தபோது பிரிட்டிஷ் அரசு அவருக்கு சர் பட்டம் அளிக்க முன்வந்தது. அதை உறுதியாக மறுபுத்விட்டார். அவர் மறுத்துவிட்டதனால் பிற இந்திய அமைச்சர்களுக்கு சர் பட்டம் கிடைப்பதும் தளளிப் போயிற்று. அதை பின்னர் லார்டு கோஷன் சுப்பராயனின் மனைவி ராதாபாயிடம் அதைச் சொல்கிறார். அந்த தகவல் அவருக்கு தெரிந்திருக்கவில்லை. ‘அது முற்றிலும் சரிதானே. அரசியலில் இருந்து விலகும் ஒருவருக்குத்தானே பட்டம் வேண்டும். என் கணவர் தேச சேவை செய்ய எத்தனையோ வருஷங்கள் இருக்கின்றனவே. . .” என்றார் அவர்.
இனனொரு முக்கியப்புள்ளி ராஜாஜி. அவர்தான் சிறையில் காங்கிரஸ்காரர்களுக்கு தலைவர். 62 வயது அவருக்கு. ஆனால் அதிகாலையில் எழுகிறார். காபி சாப்பிட்டதுமே வான்மீகி ராமாயணம் வகுப்பு எடுக்கிறார். பிறகு ஒரு கோரைப்பாய் கோப்பையுடன் காலை உணவுக்குச் செல்கிறார். மிகமிகக் குறைவாகவே உண்கிறார் ராஜாஜி. பகல் 12 முதல் இரண்டுமணி நேரம் ஷேக்ஸ்பியர் வகுப்புகள். வெயில் அதிகரிக்கும்போது நீலநிற கைக்குட்டையை நீரில் நனைபுது தலையில் கட்டிக் கொள்வார். மாலை மூன்றுமுதல் பூகோளம் ரசாயனம் போன்ற அறிவியல் துறைகளை சரியான தமிழ்ச் சொற்களைக் கண்டுபிடித்து தமிழிலேயே புரிந்து கொள்ளும் முயற்சி. இரவு முழுக்க பழந்தமிழிலக்கிய வகுப்புகள். கம்பராமாயணமும் குறளும் ராஜாஜிக்குப் பிடித்தமானவை. ராஜாஜியைப் பொறுத்தவரை அவர் விழிபுதிருக்கும் நேரம் முழுக்க கல்வி கற்பித்துக் கொண்டும் கற்றுக் கொண்டும் இருக்கிறார்.
இவைதவிர தன் சொந்த வேலைகள் அனைபுதையும் தானே செய்யவேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார் ராஜாஜி. துணி துவைப்பது முதல் கூட்டிப் பெருக்கி வைப்பது வரை எதையும் பிறர் செய்ய விடுவதில்லை. என்ன விசித்திரம் என்றால் ராஜாஜி முதலில் கைதானபோது அவர் எழுதப் படிக்கத்தெரியாது என்று பதிவாகி அவர் சி.வகுப்பில் சேர்க்கப்பட்டார். அது மாற்றப்படவே இல்லை. ஜெயிலுக்குள் ராஜாஜி வெளியே உள்ள அரசியல் நிலைமைகளைப் பற்றி பேசுவதே இல்லை. ‘நமக்கு ஒன்றுமே தெரியாது. தெரியாமல் பேசுவது வீண் பதற்றத்தையே உருவாக்கும்’ என்கிறார்.
திருச்சி சிறை ஒரு விசித்திரமான நூல். வதைகளைப் பற்றியது. ஆனால் உல்லாசமாக எழுதப்பட்டிருக்கிறது. மனமொத்த மனிதர்கள் கூடிவாழும் எந்த இடமும் இனியதே என்று கூறுகிறது இது.
(1941 திருச்சி சிறை. எல்.எஸ். கரையாளர். தமிழினி பதிப்பகம், சென்னை)