மதிப்பிற்குரிய ஜெயமோகன்,
அஜிதன் பத்தாம் வகுப்புத் தேரிய கட்டுரையைத் ‘தமிழினி’யில் வாசித்துவிட்டு உங்களைத் தொலைபேசித் தொடர்பு கொண்ட நாளில், ‘இணையதளத்தில் வாசித்தீர்களா?’ என்று நீங்கள் வினவிய பிறகுதான் உங்கள் இணையதளத்தைக் கண்டுபிடித்தேன்.
உங்கள் ‘காய்கறியும் அரசியலும் ‘ கட்டுரை பற்றி எனக்குப் பட்டதை சொல்கிறேன்: அதில் நீங்கள் சொல்லி இருப்பது போல, வேளாண் மக்ககளை வட்டார வணிகக் கூட்டமைப்புகள் கொள்ளையடிப்பதும் ‘ரிலையன்ஸ்’ ஆனால் கூடுதல் கொள்முதல் விலை கொடுத்து வாழவிடுவதும் உண்மையாம் வாய்ப்பு இருக்கிறது. (நீங்கள் சொல்லாமல் விட்டது, துய்ப்பார்க்கு ‘ரிலையன்ஸ்’ என்ன விலை வைக்கிறது என்கிற கணக்கை). பிறகும், ‘ரிலையன்ஸ்’ அனைய பெரு வணிகர்கள் வட்டாரச் சிறு வணிகர்களைக் காணாமல் அடிப்பதுவரை வேளாண் மக்களுக்கு விலை கொடுக்கலாம், அப்புறமாய் வேட்டை ஆடத் தொடங்கலாம். துய்ப்போர் தொண்டைக்குழிக்கும் அவர்கள் பல் நீளும்.
எனக்கு நினைவிருக்கிறது, சென்னை மெரினா காந்தி சிலை அருகில், ‘டொரினோ’ ஐந்து ரூபாய் விற்க, அப்போது மூன்றரை ரூபாய்க்குக் கிடைத்த ‘கோகோ கோலா’வை வாங்கிக் குடித்தேன். இன்றைக்கு ‘டொரினோ’ நிறுவனமும் ‘கோகோ கோலா’ கைக்குள் போய்விட்டது என்று நினைக்கிறேன். மட்டும் அல்ல, பெருவழிகளில் இளநீர் விற்க விடாத படிக்கு மென்பருகுநீர்கள் விற்கும் நிலைக்கு வணிகர்கள் படிகொடுக்கப் பட்டும் கிடக்கிறார்கள்.
வேளாண் மக்கள் நலிவுக்குத் தீர்வு ‘உழவர் சந்தைக’ளை வணிகர் கூட்டமைப்புகள் கைப்பற்றாமல் காப்பாற்றுவதாகலாம். மற்றபடி, ‘ரிலையன்ஸ்’ திக்கம் சாய்கிற உங்கள் எழுத்துக்கு மதிப்புச் சேர்க்கிற அழுக்கின்மை ‘ரிலையன்ஸ்’க்கே கூடுமா தெரியவில்லை. அவர்கள் முதல் முதலில் அறிமுகப்படுத்திய சில்லுப்பேசிக் கருவியை குழந்தைகளுக்கு விளையாடக் கொடுத்துவிட்டோம். பிறகும் அவர்கள் சடுதிப்பணம் பார்ப்பவர்கள் ஆகையால் நிகர ஊதியம் குறைகிற நிமித்தமே வேறு வணிகத் துறைக்குத் தாவிவிடும் அறவாழிகள். துணி வாணிபத்தில் இப்போது அவர்கள் இல்லை என்று தெரிகிறது. கோக்கோ பயிரிட்டுக் கிறுக்குப் பிடித்த உங்கள் ஊர் வேளாளரும் நினைவுக்கு வருகிறார். அவ்வளவு தொலைவுக்கு அஞ்சவேண்டியதில்லதான், ஆனால் வணிக வளமதியோர் உழவர்களை மட்டுமல்ல சொல்லேர் உழவர்களையும் விலைவெல்லவே வெல்வார்கள். நேசமணி கைக்கு இன்னும் கூடுதல் பணம் போக வேண்டுமா, அல்லது நூறு ரூபாயைத் தூக்கி வீசுகிற வளப்பம் நம் கைக்கு வர வேண்டுமா, அறமா, பொருளா, ஆசையா, எது விளையாடுகிறது இந்த வினை-விளைவு-விற்பனை-துய்ப்பு வழக்குகளில்?
பணிவுடன்
ராஜசுந்தரராஜன்
*********
அன்புள்ள ஜெயமோகன்
என் திண்ணை கட்டுரையின் லிங் இது
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20806123&edition_id=20080612&format=html
இதுதான் சப்ளை செயினின் இலகுவான தத்துவம். ரிலையன்ஸீம் மற்ற பெருவணிக சில்லறை
கடைகளும் இதைத்தான் முறியடிக்க முனைகிறார்கள். இது தமிழக மட்டுமல்ல, எல்லாயிடங்களிலும்
காணப்படும் ஒரு சாதாரண போக்குதான். ஆபூஸ் என்கிற மாம்பழம் விலை சந்தைப்படுத்தலில் 175% அதிகரிக்கிறது.
சூரத்திற்கு பக்கத்திலுள்ள கிராமங்களில் பத்து முதல் இருபது ரூபாய் வரை கிடைக்கிற ஒரு பொருள்
மும்பை சந்தைக்கு வந்தவுடன் சர்வசாதரணமாக மூந்நூறையும், நானூறையும் தொட்டுவிடுகிறது.
காரணமென்ன ? இத்தனைக்கும் பொருளை ஒரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு
செல்லுவதற்கான செலவும், அதை சந்தைப்படுத்துவதற்கான செலவும் இவ்வளவுயிருக்கமுடியாது.
இடைத்தரகர்களும், செண்டிகேட்டர்களும் அதை நிறுவனப்படுத்துகிற அமைப்புமே இந்த செயற்கையான
விலையேற்றத்திற்கு காரணம் என்று பொதுவாக சொல்லிவிட்டு எளிமைப்படுத்திவிடலாம்தான்.
என்னைப்பொறுத்தவரையில் விவசாயிகள் நேரிடையாக சந்தையை கொஞ்சமாவது தொடர்பு கொள்ளல்
மூலமே இந்த குறையின் வீரியம் மட்டுப்படலாம். ITC Chappal என்கிற இணையதளம் அதைத்தான்
செய்ய முயற்சிக்கிறது.
எந்த உழைப்பையும் கொடுக்காது (No value addition) பலனை மட்டுமே அநுபவிக்கிற சங்கிலித்தொடர்புகள்
(சிண்டிகேட், அரசியல் தாதாக்களை) அதன் மூலமே மெல்லமாய் அழிக்கமுடியும்.
கே..ஆர்.மணி
*******
ஜெயமோகன்,
காய்கறியின் அரசியல் பற்றிய கட்டுரை கண்டேன். நீங்கள் ஒரு பாமரனின் கோணத்திலிருந்து இதை பார்ப்பதாக எனக்கு தோன்றுகிறது. ஒரு கேடியை அடிக்க அதைவிட பெரிய கேடி வரவேண்டும் என்ற ஒரு ஆசையே தெரிகிறது. ரிலையன்ஸ் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளூரில் உள்ள சுரண்டல்களை ஒழித்துவிடும் என்று சொல்ல முடியாது. அவை பெரிய அளவில் சுரண்டும் என்றே சொல்லத்தோன்றுகிறது. அவை ஏழை வணிகர்களையும் சேர்த்து அழித்துவிடும். பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக நாம் பேசக்கூடாது. அவர்கள் நம்மை அழிக்கும் சக்திகள்.நம்மை அவை விழுங்க முயல்கின்றன.
சிவகுமார் சண்முகம்
*
நான் பொருளியல் ஆய்வாளன் அல்ல. எழுத்தாளன் மட்டுமே. நான் கண்டது, உணர்ந்தது ஆகியவற்றைப் பற்றி மட்டுமே எழுத முடியும். பொருளியல் ஆய்வாளர்களின் பகுப்பாய்வுகளில் சிக்காத சில விஷயங்கள் இம்மாதிரி எளிய நேரடிப்பதிவுகளில் வெளிவரக்கூடும் என்பதே இம்மாதிரியான எழுத்துக்களுடைய முக்கியத்துவம். அவ்வளவுதான்.
பொதுவாக ரிலையன்ஸ் போல உள்ள அமைப்புகள் மீதான அச்சம் என்பது ஒருவகை ·போபியாவாக மிதமிஞ்சிப்போகிறது என்பது என் கவலை. இந்த ·போபியாவால் ஒருகாலத்தில் நானும் பாதிக்கப்பட்டிருந்தேன். இருபது வருடங்களுக்கு முன் சாம் பிட்ரோடா தொலைதொடர்புத்துறையில் தனியார்மயத்துக்கான அடித்தளங்களை அமைத்தபோது அதற்கு எதிராக தொழிற்சங்கங்கள் கிளர்ந்தெழுந்தன. அந்த போராட்டங்களில் நானும் பங்கெடுத்தேன். துண்டுபிரசுரங்கள் எழுதினேன். மேடைகளில் பேசினேன். பன்னாட்டு நிறுவனங்கள் மீதான அச்சத்தை ஊழியர் நெஞ்சில் ஊட்டினேன்.
பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் பேரழிவு வரும் என்று சொல்வதற்கான எங்கள் அடிப்படையாக அமைந்தவை 3 குற்றச்சாட்டுகள். 1. அவை தானியங்கி முறையை கொண்டுவந்து ஊழியர்களை குறைக்கும். கடும் வேலையில்லா திண்டாட்டம் உருவாகும் 2. கட்டுப்பாடு அவற்றின் கைக்கு போனதுமே மிதமிஞ்சி கட்டணம் வைத்து கொள்ளையடிக்கும். 3. அவை தேசப்பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும்.
எங்கள் எதிர்ப்பு பன்முகம் கொண்டதாக இருந்தாலும் நாங்கள் நடைமுறையில் ஊழியர்களுக்கு ஊதிய- வேலை இழப்பு ஏற்படும் என்ற அச்சத்தையே முக்கிய ஆயுதமாகக் கொண்டிருந்தோம். 1997ல் ஊதியத்தை உயர்த்தி, வேலைக்கு உறுதியும் அளித்ததுமே எங்கள் எதிர்ப்பு முழுமையாக பிசுபிசுத்தது. அடுத்த பத்துவருடங்களில் நாங்கள் சொன்ன அனைத்துமே தலைகீழாக நிகழ்ந்தது. 1997 நாகர்கோயிலில் இருந்து மதுரைக்கு தொலைபேசியில் பேச 3 நிமிடத்துக்கு 12 ரூபாய். இப்போதைய கணக்கில் அது 48 ரூபாயாக இருக்க வேண்டும். இப்போ அதிகபட்சம் மூன்று ரூபாய் ஆகலாம். அதிலும் அன்றெல்லாம் தொலைபேசி அழைப்பை பதிவுசெய்து ஒருமணிநேரம் காத்தால் மட்டுமே இணைப்பு கிடைக்கும். அவசரமாக வேண்டுமென்றால் இருமடங்கு. மிக அவசரமென்றால் எட்டு மடங்கு. ஒரு தொலைபேசி இணைப்புக்கு எட்டுவருடம்வரை காத்திருக்கவேண்டும்.
இப்போது எல்லா அழைப்புமே மிக அவசர அழைப்புகள்போலத்தான். கட்டணம் முப்பதில் ஒருமடங்கு குறைவு! அன்று தொலைதொடர்புத்துறையில் இருந்த ஊழியர்களைப்போல பன்னிரண்டுமடங்குபேர் இப்போது எல்லா நிறுவனங்களிலும் சேர்த்து வேலைசெய்கிறார்கள். சில்லறை விற்பனைக் கடைகள் போன்றவற்றை கணக்கில்கொண்டால் ஐம்பது மடங்குபேர். இணைப்புகள் நூறு மடங்கு. இன்று மீண்டும் எண்பதுகளின் அரசுடைமை நிலை தேவை என்று சொல்பவனை ஊழியர்களே கல்லால் அடித்துக் கொல்வார்கள். சமீபத்தில் ஒரு தொழிற்சங்க தலைவர் சொன்னார், ‘நல்ல வேளை அரசாங்கம் அன்னிக்கு நம்மபேச்சை கேட்டு தனியார்மயத்தை வேண்டாண்ணு சொல்லலை தோழர். சொல்லியிருந்தா இந்தியா எங்கியோ இருட்டுக்குள்ள இருந்திருக்கும்!’
மார்க்ஸிய அடிப்படையில் நோக்கினால்கூட ரிலையன்ஸின் வருகை இயல்பானது மட்டுமல்ல முற்போக்கானதும்கூட. நிலப்பிரபுத்துவத்தை நோக்க முதலாளித்துவம் பலமடங்கு முற்போக்கானது, கருணையானது என்றுதான் மார்க்ஸே சொல்கிறார். காய்கறி வணிகம் போன்றவற்றில் இப்போது இருப்பது நிலப்பிரபுத்துவகாலச் சுரண்டல்முறை. சாதி ரீதியாக, பிராந்தியரீதியாக முழுமையதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு, அடாவடி ஆட்கள் மற்றும் ஊழல் ஆகியவற்றின் துணைகொண்டு லாபக்கொள்ளையடித்தல். ரிலையன்ஸ் அதைவிட பலமடங்கு மேம்பட்ட முதலாளித்துவ சக்தி. இந்த வழிப்பறிக் கொள்ளையர்களை விட எவ்வளவோ மேலானது. அதற்கென ஒரு நீதியும் முறைமையும் கண்டிப்பாக அதற்கு உண்டு.
ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் போட்டியையே உருவாக்கும்– இப்போது தொலைதொடர்புத்துறையில் நிகழ்வதுபோல. அது கண்டிப்பாக விவசாயிகளுக்கு லாபகரமானதே. அதில் தவறுகள் இருக்காதா? கண்டிப்பாக இருக்கும். அது முதலாளித்துவபமைப்பு. லாபமே குறியானது. அதை எதிர்கொள்ள அதைவிட மேம்பட்ட அமைப்புகளை உருவாக்கலாம். நுகர்வோர் கூட்டமைப்புகள், விற்பனையாளர் கூட்டமைப்புகள் போல. ஆனால் அதைவிட பின்னால்நிற்கும் இன்றைர ரவுடிமைய வணிகர்கள் அல்ல அவர்களுக்கான மாற்று. இன்றைய அரசியல்வாதிகள் மோசம் என்று பழையகால ஜமீந்தார்களை கொண்டுவர எண்ணுவோமா என்ன?
ராஜசுந்தரராஜன் பல வேறு வழிகளைச் சொல்கிறார். தமிழகத்தில் உள்ள அரசியலில் அவை எதுவுமே நடைமுறையில் சாத்தியமல்ல என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. உற்பத்தியாளர் கூட்டுறவு அமைப்புகள் முழுக்க சுத்தமான ரவுடித்தனம் மூலம் கைப்பற்றப்பட்டுள்ளன. எந்தவிதமான நுகர்வோர் அமைப்புகளும் இயங்கமுடியாத வன்முறைச் சூழல். இங்கே இந்த சக்திகளை எதிர்க்க ரிலையன்ஸால் மட்டுமே முடியும். ஆம், வேறுவழியில்லை நிலப்பிரபுத்துவச் சுரண்டலுக்கு முதலாளித்துவமே சிறந்த மாற்று.
அன்புடன்
ஜெயமோகன்