இணையத்தில் விவாதம்…

அன்புள்ள ஜெயமோகன்,

எவ்வளவு அழகான உத்வேகமூட்டும் எழுத்து. எவ்வாறு முடிகிறது. கோபமும் பொறாமையும் அன்பும் தோன்றுகிறது. சிறப்பான தமிழ் நடை. ஏராளமாக உங்களிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கிறேன். அவ்வகையில் நீங்கள் என் குரு

உங்களிடம் பேச விவாதிக்க எனக்கு ஒரு கூகில் கணக்கு வேண்டுமென ஒரு இணைய பக்கத்தை ஆரம்பித்திருக்கிறேன். என் உணர்ச்சிகளை எழுதலாமென எண்ணுகிறேன்.

நீங்கள் வீண் பேச்சுகளை விரும்புவீர்களா என்று தெரியவில்லை. நீங்கள் மிகவும் ‘சீரியஸ்’ ஆனவர் என்றார்கள். ஆனால் உங்கள் எழுத்து நகைச்சுவை உணர்ச்சி கொண்டவர் என்று காட்டுகிறது

பூஷனா தேவி

http://neelabhumi.blogspot.com/2009/12/blog-post.html

அன்புள்ள பூஷனா தேவி அவர்களுக்கு

நீங்கள் எழுத ஆரம்பித்திருப்பது நல்ல விஷயம். நமது மனமெ ப்படி ஓடுகிறது என்பதை நாமே அவதானிப்பதற்கு எழுத்தே சிறந்தவழி.

தயங்காமல் எழுதுங்கள். நிறைய, தொடர்ச்சியாக எழுதுங்கள். ஒன்றே ஒன்று மட்டும்தான் சொல்வேன். செயற்கையான வேடிகை செயற்கையான கோபம் போல எதையும் பழகிக் கொள்ளாதீர்கள். விட்டுப்போகவே போகாது

நீங்கள் உற்சாகமானவராக இருப்பீர்கள் என நினைக்கிறேன். என்னைப்பொறுத்தவரை எப்போதுமே ‘சீரியஸ்’ ஆனவன். ஆனால் சீரியஸ் என்றால் அது விளையாட்டுத்தனமாகத்தான் இருக்க முடியும் என்று ஒரு நினைப்பு. நான் மதிக்கும் மிக சீரியஸானவர்கள் எல்லாமே மிகமிக விளையாட்டுத்தனமாவர்கள். நித்யா, சுந்தர ராமசாமி, ஆற்றூர் ரவி வர்மா…

க.நா.சுவுக்குப் பிடித்த ஒரு பொன்மொழி உண்டு ‘எல்லாமே முக்கியம்தான், ஆனால் எதுவுமே அத்தனை முக்கியமானதுமல்ல’ . ஆத்மானந்தா என்ற திருவனந்தபுரம் அத்வைத அறிஞர் கூறியது அது. அவர் ஒரு வக்கீல் குமாஸ்தா. மிகச்சாதாரணமாக வாழ்ந்து மறைந்தார். அவரைப்பார்க்க ஜூலியன் ஹக்ஸ்லியும் சி.ஜி.யுங்கும் வந்திருக்கிறார்கள். ஆனால் திருவனந்தபுரம் சந்தையில் காய்கறி வாங்குவார். கெட்டவார்த்தை பேசுவார். வேடிக்கையான ஒரு சாதாரண மனிதராகவே அவரை சாலைத்தெருவில் பலர் நினைவுகூர்கிறார்கள்.

இலைகளசையாமல் காட்டில் செல்பவன் புத்தன் என்பதே ஜென் ஞானம்.

ஓர் எழுத்தாளனாக இன்றுவரை நான் தக்கவைத்துக்கொண்டிருப்பது என்னவென்றால் இருபது வயதில் இருந்த அதே பொறுப்பற்ற விளையாட்டுத்தனமனான சிறுவன்  மனநிலையைத்தான். சிலசமயம் எழுத்தாளர் என நெருங்கிவருபவர்களுக்கு அந்த ‘ஆழமின்மை’ கஷ்டத்தை கொடுக்கிறது. ‘நீங்க இன்னும் கொஞ்சம் சீரியசா இருக்கலாம் சார்’ என்று என்னிடமே சொல்லியிருக்கிறார்கள் ஆனால் எனக்கு அது முக்கியமாகப்பட்டதில்லை

இதுவே என் ஆளுமை. என் குழந்தைகள் என்னுடன் சமானமாக விளையாடாமல் ஆனால் நான் எழுதுவதர்கான பொருளை இழந்துவிடுவேன் …

ஜெ

வாழ்த்துக்கள்

ஜெ

அண்ணன்
உங்களது தெரளி பதிவைப் பார்த்தவுடன் ஏற்பட்ட உந்துதலால் எழுதிய பதிவு ‘குருத்தோலையும் கொளுக்கட்டையும்’. வாசியுங்களேன்!
காட்சன்

http://pastorgodson.wordpress.com/

அன்புள்ள காட்சன்

கேரளத்தில் குருத்தோலைத்திருநாள் அன்று தென்னங்குருத்தோலையில் இதேபோன்ற அப்பம் அவிக்கிறார்கள். கிறித்தவர்கள்தான்.

கார்த்திகை மாதத்தில் கிறித்தவர்கள் பஜனைபாடியபடி ஊரைச்சுற்றிவருவது நெய்யூர் டாக்டர் சாமர்வெல் அவர்களால் உருவாக்கப்பட்ட சடங்கு. அது காலரா மாதம். பல இடங்களில் தோப்புக்குள் உள்ள ஒதுக்குபுறமான வீடுகளில் பலர் கைவிடப்பட்டிருப்பார்கள். அவர்களை சென்றுபார்ப்பதே நோக்கம். பயமில்லாமல் இருக்க ஏசு பஜனை. அக்காலத்தில்  பயமில்லை பயமில்லை என்றே பாடிச்செல்வார்களாம் இந்துக்கள் வீடுகளுக்கும் செல்வார்கள். பின்னர் வெறும் மதச்சடங்காக ஆகியபோதுதான் கிறித்தவ வீடுகள் மட்டும் கணக்கில்கொள்ளப்பட்டன

ஜெ

அன்புமிக்க‌ ஜெய‌மோக‌ன் அவ‌ர்க‌ளுக்கு.என‌து சிறுக‌தை ஒன்றை உங்க‌ள் பார்வைக்கு அனுப்பியுள்ளேன்.

http://www.vallinam.com.my/issue12/story5.html

ந‌ன்றி
ம‌.ந‌வீன்

அன்புள்ள நவீன்

கதை அங்கதச்சுவையுடன் குறிப்பிடும்படி உள்ளது. பொதுவாகச் சிறுகதைகளை எல்லா வரிகளிலும் அதன் மைய உணர்ச்சி நீடிக்கும்படியாக கவிதைக்கிணையான செறிவுடன் எழுதவேண்டும் என்பதே விதியாகும். முயலுங்கள்

ஜெ

வணக்கம் அண்ணாச்சி!
தங்களின் ‘இணைய உலகமும் நானும்’ என்ற கட்டுரையைப் படித்தேன். இணைய தளம்  குறித்து நான் எனது வலைப்பூவில் ஒருகட்டுரை எழுதியுள்ளேன். நம்மிருவரின் கருத்துக்களும் ஒத்துள்ளதை அறிந்து மகிழ்ந்தேன்.
அதன் முகவரி

http://tamilwritersaravanan.blogspot.com/2009/06/blog-post_24.html
தங்கள் வாசகன்
சரவணன்.

அன்புள்ள சரவணன்

நீங்களும் வலைப்பூ வாசகராக இருப்பதனால்தான் இப்படி எழுதியிருக்கிறீர்கள். எழுதுபவராக எண்ணிக் கொண்டிருந்தால் இப்படி எழுதியிருக்க மாட்டீர்கள். நேற்று தமிழில் வெளிவந்த முக்கியமான சில நாவல்களை பற்றி இணையத்தில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்று தேடிப்பார்த்தேன். மாபெரும் ஏமாற்றம்.

ஜெ

முந்தைய கட்டுரைமேகமலை, கடிதங்கள்
அடுத்த கட்டுரைசு.வேணுகோபாலின் மண்-1