அன்புள்ள ஜெயமோகன் சார்
இலையப்பம் பற்றி நீங்கள் எழுதியிருப்பதை படிக்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அருமனைக்காரனான எனக்கு இலையப்பம் மற்றும் தெரளியப்பத்தின் ருசி நல்லா தெரியும். சின்ன வயதில் திர்கார்த்திகை அன்று காலையிலேயே அப்பங்கள் தயாரிப்பதற்கான வேலைகளில் அம்மச்சி தயாராவதும், அப்புப்பன் தன் பருத்த கைகளால் பெரிய உருண்டையான மாவை பிசைந்து உருட்டுவதும், அதை நாங்களெல்லாம் வாழை இலைகளிலும் பிலாவிலைகளிலும் சுருட்டி, ஈர்க்கில் குத்தி கொருத்து கொடுத்து விட்டு, சூடாக சாப்பிடுவதற்கு காத்திருப்பதும் ஞாபகம் வந்தது. இன்று சென்னையில் இருக்கும் எனக்கு ஆசையாக இருக்கிறது. அடுத்த வருடம் கார்த்தியலுக்கு ஊருக்கு வந்துவிட வேண்டும்.
அன்புடன் சந்தோஷ்
—
http://ensanthosh.wordpress.com/
அன்புள்ள சந்தோஷ்
என்ன எங்களூர் ஆசாமிகள் எவருமே எழுதக்காணவில்லையே என எண்ணியிருந்தேன். எங்கே போனார்கள் வினோ கிங்க்ஸ்டன் கிறிஸ்டோபர் எல்லாம்…நீங்கள் எழுதிவிட்டீர்கள். நல்லது
என் கட்டுரையில் கிட்டத்தட்ட 10 ‘ரெசிப்பி’ இருந்தது. அவை எல்லாமே நாட்டுப்புற சமையல்கள். சாமிகள் கருணையால் அவை இன்னமும் நீடிக்கின்றன.
நாம் நம்முடைய நாட்டுப்புற சமையலை மெல்லமெல்ல இழந்துகொண்டிருக்கிறோம். அந்தச் சுவையை நம் குழந்தைகள் வாயில் இருந்து மறையச் செய்கிறோம். குழந்தைகள் பேக்கரி பலகாரம் சாப்பிட்டு பழகியவை. நாட்டுப்புற உணவின் சுவையை எடுத்துச் சொல்லி ‘பிரெயின் வாஷ்’ செய்து சாப்பிட வைத்தால் சுவைக்குப் பழகிவிடும் என்பதை கண்டிருக்கிறேன். பல உணவுகளை அவை ஊரில் எந்த தருணத்தில் எப்படியெல்லாம் சமைக்கப்படும், உண்ணபப்டும் என்ற கதைகளுடன் பரிமாறி அவர்களுக்கு ஆர்வமூட்டியிருக்கிறேன்
நாட்டுப்புறச்சமையல் கலோரிகள் குறைவானது. எண்ணை, நெய் போன்றவற்றை குறைவாகவே பயன்படுத்துவது. பெரும்பாலும் சுடுவதும் ஆவியில் வேகவைப்பதும்தான் வழக்கம். அதிகமான வறுக்கல் பொரிப்பு இல்லாமல் எளிமையான முறையில் செய்யப்படுவது. ஏன், புளிப்பு காரம்கூட குறைவாகவே இருக்கும். ஆகவே உடலுக்கு நல்லது. கலோரி அதிகமான நவீன சமையலுக்கு குழந்தைகளை பழக்கிவிடுவது நல்லதல்ல என்பது என் எண்ணம்
ஜெ
ஜெ..
நீங்க சொன்ன தெரளியப்பத்தின் ஒரு மரூஉ எங்கூர்ல இருக்குதுங் கோ..
அதுக்குப் பேரு தெவையம்.
நீங்க சொன்ன பக்குவப்படி அரிசி மாவையும் வெல்லப் பாகையும், தேங்காய்த் துருவலையும் போட்டுப் பிசைந்து, பின்னர் அதை வாணலியில் போட்டு, எம்.ஜி.ஆர், நம்பியாரைக் குத்துவது போல் பத்து நிமிடம் குத்தினால், மாவு சிறு சிறு துகள்களாகப் பிரிந்து , கொஞ்சம் பழுப்பு நிறம் அடைந்து உண்ணுவதற்கு இனிய பண்டமாக மாறிவிடும்.
எங்கம்மாவிடம் கோவித்துக் கொண்டு, கரும்புக் காட்டில் ஒளிந்து கொண்ட ஒரு நாள் மாலை தெவையம் செஞ்சு குடுத்தாங்க. இன்னும் இனிக்குதுங்கோ!
அன்புடன்
பாலா
அன்புள்ள பாலா
எங்கள் வீட்டில் எல்லாம் கோபித்துக்கொண்டு ஒளிந்து கண்டுபிடிக்கப்பட்டால் வேறு ஒரு அப்பம் கிடைக்கும். தடியப்பம் என்பார்கள். சூடாக நன்றாக இருக்கும்
ஜெ
அன்புள்ள ஜெ
நீங்கள் அளித்த இரு சமையல்குறிப்புகள் படித்தேன். கார்த்திகைக்கு என் வீட்டில் நான் முறுக்கு செய்தேன். உங்கள் இரண்டாவது குறிப்பை வாசித்த பிறகு அந்த அப்பத்தைச் செய்து பார்த்தேன். அருமையாக இருந்தது. பழங்களை மாவுடன் சேர்த்து பிசைந்து அப்பம் செய்வது ஆச்சரியமான விஷயம். ஆனால் செய்தபோது மிகவும் மணமாகவும் சுவையாகவும் இருந்தது
அதில் சமையல் மெனு மட்டுமல்லாமல் எச்சரிக்கையையும் நீங்கள் அளித்திருந்தது சிரிப்பை அளித்தது. ஆனால் நீங்கள் சமையல் அனுபவத்தில் இருந்து எழுதியிருக்கிறீர்கள் என்பது தெரிந்தது. ஆண்கள் சமையல் தெரிந்திருப்பது மிகவும் சிறந்த விஷயம். என்னுடைய பாராட்டுக்கள் , நன்றி.
கோகிலா சிவமுருகன்
அன்புள்ள கோகிலா,
நன்றி. இந்த சமையற்குறிப்பு இல்லையேல் நீங்கள் ஒரு கடிதம் எழுதியிருக்க வாய்ப்பில்லை அல்லவா?
பொதுவாக எந்த அப்பத்திற்கும் மாவுடன் புளிப்பு இல்லாத பழங்களைச் சேர்த்து பிசையலாம். பச்சைவாழைபப்ழம் தவிர உள்ள எல்லா வாழைப்பழங்களும் நல்லதுதான். பலாப்பழச்சுளைகளை மிக்ஸியில் அரைத்து பிசையலாம். மாம்பழக்கதுப்பைச் சேர்த்து பிசையலாம். அப்பத்துக்கு அவை அபாரமான சுவையை அளிப்பதைக் காணலாம்.
கார்த்திகைக்கு எண்ணைப்பலகாரம் செய்யக்கூடாது. உண்மையில் தீயில் -சொக்கப்பனையில் -நேரடியாக சுட்ட அப்பங்கள் மட்டுமே சாப்பிடவெண்டும் என ஐதீகம். போகட்டும் என அவிக்கலாம். பொரிப்பது மரபுமீறல்))
எச்சரிக்கைகள் சமையலுக்கு மிகவும் தேவையானவை. ஆனாலும் சமையலறையில் பெண்களின் சமநிலையும் சமயோசித புத்தியும் ஆண்களுக்கு வருவதில்லை. இன்று குக்கரில் வெயிட் வால்வை மாற்றி வைத்து அது தூக்கி அடித்து விட்டது. ஒருவழியாக மூடினால் அருண்மொழி லட்ச ரூபாய் செலவில் அமைத்த ‘மாடுலார்’ கிச்சன் முழுக்க குழம்பு. துடைத்து ஒரு வழியாக சரி செய்துவிட்டு இதை எழுதுகிறேன்
ஜெ.