பகுதி பதினாறு : இருள்வேழம்
[ 4 ]
இடைநாழியில் சத்யசேனையின் காலடிகளைக் கேட்டு காந்தாரி திரும்பினாள். காலடிகளிலேயே அவள் கையில் மைந்தன் இருப்பது தெரிந்தது. அவனுடைய எடையால் சத்யசேனை மூச்சிரைத்தபடியே வந்து நெஞ்சு இறுகக் குனிந்து மைந்தனை பொற்தொட்டிலில் படுக்கவைத்தாள். குழந்தை கைகால்களை ஆட்டியபோது தொட்டிலின் விளிம்புகளில் பட்டு தட் தட் என ஒலித்தது. “என்ன ஒலி அது?” என்று காந்தாரி கேட்டாள். சத்யசேனை சிரித்துக்கொண்டு “தொட்டில் மிகச்சிறியது அக்கா… அவனுடைய கைகால்கள் உள்ளே அடங்கவில்லை” என்றாள்.
காந்தாரி சிரிப்பில் முகம் மலர “அப்படியென்றால் அவனை என்னருகே படுக்கச்செய்” என்றாள். “பொற்தொட்டிலில் படுக்கவேண்டுமென்று மரபு” என்றபடி குழந்தையை சத்யசேனை தூக்கி காந்தாரியின் வலப்பக்கம் படுக்கச்செய்தாள். உடனே காந்தாரியின் முலைகளிலிருந்து பால் பொங்கி கச்சையையும் மேலாடையையும் நனைத்து பட்டுவிரிப்பில் பெருகத் தொடங்கியது. “அக்கா…” என்று சத்யசேனை சற்று திகைப்புடன் சொல்ல காந்தாரி மைந்தனை அணைத்து அவன் வாய்க்குள் தன் முலைக்காம்பை வைத்தாள். காந்தாரியின் மறுமுலையிலிருந்து மூன்று சரடுகளாகப் பீரிட்ட பால் குழந்தையின் உடலில் விழுந்து அவனைமுழுமையாக நனைத்தது.
“மைந்தனை பாலில் நீராட்டி வளர்க்கிறீர்கள் அக்கா” என்றாள் சத்யசேனை. காந்தாரி சிரித்து “ஆம்… எனக்கே வியப்பாக இருக்கிறது. பால்குடத்தில் துளைவிழுந்ததுபோல தோன்றும் சிலசமயம். என் குருதியனைத்தும் பாலாக மாறி வெளியே கொட்டுகிறதோ என்று நினைப்பேன். ஆனால் நெஞ்சுக்குள் பொங்கிக்கொண்டிருக்கும் பாலில் ஒரு துளிகூடக் குறையவில்லை என்றும் தோன்றும்” என்றாள். சத்யசேனை விழிகளை விரித்துப்பார்த்துக்கொண்டு நின்றாள். “எனக்கு அச்சமாக இருக்கிறது அக்கா.”
“ஏன்?” என்றாள் காந்தாரி. “இப்படி பால் எழுவதை நான் கண்டதேயில்லை…” என்றவள் பின்னால் நகர்ந்து “ஆ”‘ என்றாள். “என்னடி?” என்றாள் காந்தாரி. சத்யசேனை “மஞ்சத்திலிருந்து பால் தரைக்குச் சொட்டி தேங்கிக்கொண்டிருக்கிறது!” என்றாள். “இது வேழக்கரு. அன்னையானை இப்படித்தான் பால்கொடுக்கும்போலும்” என்று காந்தாரி சொன்னாள். “நான் கேள்விப்பட்டிருக்கிறேன். விளையாட்டுக்கு குட்டியானை வாயை எடுத்துவிட்டதென்றால் ஓடைபோல அன்னையின் பால் தரையில் கொட்டும் என்று. அங்கே ஒரு கலம் வைத்து அதைப்பிடித்து உலரச்செய்து மருந்துக்கு எடுத்துக்கொள்வார்களாம்.”
அறைமுழுக்க முலைப்பாலின் வாசனை நிறைந்தது. “என்ன ஒரு வாசனை!” என்றாள் சத்யசேனை. “குருதியின் வாசனைதான் இதுவும். அது காய்மணம், இது கனிமணம்…” என்றாள் காந்தாரி. குழந்தையின் தலையை தன் கைகளால் வருடி மெல்ல கீழிறங்கி அவன் தோள்களை கைகளை வயிற்றை கால்களை வருடிச்சென்றாள். அவனது நெளியும் உள்ளங்கால்களைத் தொட்டாள். “மிகப்பெரிய குழந்தைதான் இல்லையா?” என்றாள். “அதை நாமே சொல்லிச்சொல்லி கண்ணேறு விழவேண்டுமா என்ன?” என்றாள் சத்யசேனை.
சுஸ்ரவை உள்ளே வரும் ஒலி கேட்டது. சத்யசேனை ஒரு மரவுரியை எடுத்து தன் முன் தேங்கிய முலைப்பால்மேல் போட்டு அதை மறைத்தாள். சுஸ்ரவை உள்ளே வந்ததுமே “அக்கா…என்ன வாசனை இங்கே?” என்றாள். பின் திரும்பிப்பார்த்து “ஆ!” என்று மூச்சிழுத்தாள். “என்னடி?” என்றாள் சத்யசேனை. “இங்கேபார்… இது…” என்று சுஸ்ரவை சுட்டிக்காட்டினாள். சத்யசேனை அங்கே சுவரோரமாக முலைப்பால் குளம்போல தேங்கிக்கிடப்பதைக் கண்டாள். “முலைப்பாலா அக்கா?” என்றாள் சுஸ்ரவை. “ஆம், அதை எவரிடமும் போய் சொல்லிக்கொண்டிருக்காதே. அக்காவையும் இவ்வறையையும் நாம் மட்டும் பார்த்தால்போதும்.”
காந்தாரி “உலகுக்கே தெரியட்டும்… கண்ணேறெல்லாம் என் மைந்தனுக்கில்லை. நாளை அவன் ஹஸ்தியின் அரியணையில் அமரும்போது பாரதமே பார்த்து வியக்கப்போகிறது. அப்போது கண்ணேறுவிழாதா என்ன?” என்றபடி குழந்தையை முலைமாற்றிக்கொண்டாள். பாலில் நனைந்த குழந்தை அவள் கையில் வழுக்கியது. சத்யசேனை குழந்தையைப்பிடித்து மெல்ல மறுபக்கம் கொண்டுசென்றாள். குழந்தை இடமுலையை உறிஞ்சத்தொடங்கிய சற்றுநேரத்திலேயே வலதுமுலை ஊறிப்பீய்ச்சத் தொடங்கியது.
காந்தாரியின் முலை சிவந்த மூக்கு கொண்ட பெரிய வெண்பன்றிக்குட்டி போலிருந்தது. “என் முலைகளைப்பார்க்கிறாளா அவள்?” என்று காந்தாரி சிரித்தாள். சுஸ்ரவை பார்வையை விலக்கிக் கொண்டாள். “நான் இவன் பிறப்பது வரை வயிறுமட்டுமாக இருந்தேன். இப்போதுமுலைகள் மட்டுமாக இருக்கிறேன்” என்று காந்தாரி சொன்னாள். “என் கைகளும் கால்களும் தலையும் வயிறும் எல்லாமே இந்த இரு ஊற்றுகளை உருவாக்குவதற்கு மட்டும்தான் என்று தோன்றுகிறது.” அவர்கள் இருவருக்குமே அவள் சொல்வதென்ன என்று புரியவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
சுஸ்ரவை “அக்கா, பேரரசியின் சேடி வந்திருக்கிறாள். பேரரசி இன்னும் இரண்டுநாழிகையில் அவைமண்டபத்துக்கு வருவார்கள் என்று சொன்னாள்” என்றாள். காந்தாரி பெருமூச்சுடன் “நான் நீராடி அணிகொள்ளவேண்டும்” என்றாள். “வெளியே நகரம் விழாக்கோலத்திலிருக்கிறதல்லவா? ஒருமுறை ரதத்தில் நகரத்தைச் சுற்றிவந்தால்கூட மக்களின் கொண்டாட்டத்தை நான் செவிகளால் பார்த்துவிடுவேன்” என்றாள். “சென்ற பன்னிருநாட்களாக விழாவுக்கான ஒருக்கங்கள்தான் நடந்துகொண்டிருக்கின்றன அக்கா. நகர் மன்றுகள் முழுக்க விழவறிவிப்பு நிகழ்ந்தது. ஐம்பத்தைந்து நாட்டரசர்களுக்கும் செய்தி சென்றிருக்கிறது. அவர்கள் தங்கள் நிகரர்களை அனுப்பியிருக்கிறார்கள்” என்றாள் சத்யசேனை.
“வெளியே புதிய நித்திலப்பந்தலை நேற்று நானும் தங்கைகளும் சென்று பார்த்தோம்” என்று சுஸ்ரவை சொன்னாள். “இன்றுவரை அஸ்தினபுரி கண்டதிலேயே மிகப்பெரிய பந்தல் என்றார்கள். உள்ளே சபைமண்டபத்தில்வைத்து விழாவை நடத்தலாமென்று அமைச்சர் சொன்னாராம். அங்கே இடமிருக்காது என்று நம் மூத்தவர் சொல்லிவிட்டார். ஏன் என்று அதைப்பார்த்தபோதுதான் தெரிந்தது. அதை ஒரு பந்தலென்றே சொல்லமுடியாது. மேலிருப்பது பட்டுவிதானமா மேகங்கள் பரவிய வானமா என்றே ஐயம் வந்தது” என்றாள் சுஸ்ரவை. “ஆரியவர்த்தம் முழுக்க அனைத்துநாடுகளுக்கும் சூதர்களை அனுப்பி செய்தியறிவித்திருக்கிறார்கள். ஆகவே வைதிகர்களும் சூதர்களும் பாடகர்களும் வந்துகொண்டே இருக்கிறார்கள் என்று என் சேடி சொன்னாள். தேனை சிற்றெறும்பு மொய்ப்பதுபோல அஸ்தினபுரியையே அவர்கள் நிறைத்துவிட்டார்களாம்.”
மார்பில் கைகளைவைத்து முகமும் உடலும் விம்ம அதை கேட்டுக்கொண்டிருந்தாள் காந்தாரி. அதை ஒவ்வொருநாளும் அனைவர் வாயிலிருந்தும் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டு தான் இருந்தாள். ஒவ்வொருவரும் சொல்லச்சொல்ல அது வளர்ந்துகொண்டே இருந்தது. அவளுடைய உணர்ச்சிகள் சொல்பவரையும் தொற்றிக்கொண்டு அச்சொற்களை மேலும் மேலும் விரியச்செய்தன. “அஸ்தினபுரி மதம் கொண்ட யானைபோல சங்கிலிகளுக்குள் திமிறிக்கொண்டிருக்கிறது என்று என் சேடி சொன்னாள் அக்கா” என்றாள் சத்யசேனை. காந்தாரி சிரித்து “ஆம்…அது சரியான உவமை” என்றாள்.
“பீஷ்மபிதாமகர் நேற்றிரவுதான் திரும்பிவந்திருக்கிறார் அக்கா” என்றாள் சுஸ்ரவை. “அவர் நள்ளிரவில் நகர்புகுந்திருக்கிறார். காலையில் அவரது கொடி கோட்டைவாயிலில் பறப்பதைக் கண்டுதான் அவர் வந்திருப்பதை அறிந்தார்களாம்.” காந்தாரி “ஆம் அவரைத் தேடி ஒற்றர்கள் அனுப்பப்பட்டிருந்ததாகச் சொன்னார்கள்” என்றாள். “அவர் நாம் எண்ணியதுபோல கூர்ஜரத்தில் இல்லை. வேசரத்துக்கும் அப்பால் எங்கோ இருந்திருக்கிறார். சூதர்களின் பாடல்வழியாக மைந்தன் பிறந்ததை அறிந்து வந்திருக்கிறார்.” காந்தாரி “ஆம், அஸ்தினபுரியின் அரசன் குருகுலத்தின் பிதாமகரால்தான் நாமகரணம் செய்யப்படவேண்டும்” என்றாள்.
“தாங்கள் நீராடி வாருங்கள் அக்கா. அதற்குள் மைந்தனையும் நீராட்டுகிறோம்” என்றாள் சுஸ்ரவை. “இப்போதுதான் நீராடிவந்தான். மீளமீள நீராட்டுவதில் பொருளில்லை. அக்கா அவனை கையிலெடுத்தாலே அவன்மேல் பால்மழைபெய்யத்தொடங்கிவிடும். அவன் அதிலேயே ஊறிவளரட்டும் என்று விண்ணவர் எண்ணுகிறார்கள்” என்றாள் சத்யசேனை. காந்தாரி சிரித்துக்கொண்டு கைநீட்ட சுஸ்ரவை அதைப்பற்றிக்கொண்டாள்.
அவள் நீராடி ஆடையணிகள் பூண்டு மீண்டுவந்தபோது மைந்தனை அணிகள் பூட்டி ஒருக்கியிருந்தனர். பத்து இளம் காந்தாரிகளும் அணிக்கோலத்தில் வந்திருந்தனர். “சம்படை எங்கே?” என்று காந்தாரி கேட்டாள். “இங்கிருக்கிறாள் அக்கா. அவளை அழைத்துவரத்தான் நானே சென்றேன்” என்றாள் சத்யவிரதை. “அவளை என்னருகே வரச்சொல்” என்று காந்தாரி கைநீட்டினாள். சம்படையை சத்யவிரதை சற்று உந்திவிட அவள் காந்தாரியின் அருகே சென்று நின்றாள். சிறிய தலைகொண்ட பெரிய வெண்ணிற மலைப்பாம்பு போலிருந்த காந்தாரியின் கரம் சம்படையை தேடித் துழாவி தலையைத் தொட்டு கழுத்தை வளைத்து அருகே இழுத்துக்கொண்டது.
“ஏன் நீ என்னைப்பார்க்க வருவதே இல்லை?” என்றாள் காந்தாரி. சம்படை ஒன்றும் சொல்லவில்லை. தலைகுனிந்து பேசாமல் நின்றாள். “சொல் குழந்தை, என்ன ஆயிற்று? நீ எவருடனும் பேசுவதுமில்லையாமே? தனியாக இருக்கிறாய் என்றார்கள்.” சம்படை தலைநிமிர்ந்து அவர்களை யாரென்று தெரியாதவள்போலப் பார்த்தாள். “சொல் குழந்தை… என் செல்வம் அல்லவா? உனக்கு என்ன ஆயிற்று?” என்றாள் காந்தாரி. அவளை தன் உடலுடன் சேர்த்து கன்னங்களையும் கழுத்தையும் வருடியபடி “மிக மெலிந்துவிட்டாய். கழுத்தெலும்புகளெல்லாம் தெரிகின்றன” என்றாள்.
சம்படை திடுக்கிட்டு “கூப்பிடுகிறார்கள்” என்றாள். “யார்?” என்று காந்தாரி திகைப்புடன் கேட்டாள். “அங்கே, கூப்பிடுகிறார்கள்!” என்ற சம்படை சட்டென்று பற்களை இறுகக் கடித்து முகத்தைச் சுளித்து “பேசிக்கொண்டே இருக்கிறார்கள். நான் நிறுத்தச்சொன்னாலும் அவர்கள் நிறுத்துவதில்லை” என்றாள். சத்யவிரதை மெல்ல கைநீட்டி சம்படையைப் பிடித்து பின்னாலிழுத்து விலக்கிவிட்டு “அவளுக்கு ஏதோ அணங்கு பீடை இருக்கிறது அக்கா. யாரோ அவளிடம் பேசிக்கொண்டிருப்பதாகச் சொல்கிறாள்” என்றாள். காந்தாரி “அணங்கா?” என்று கேட்டாள். சுஸ்ரவை “ஆம், வைதாளிகரைக் கொண்டுவந்து பார்க்கலாம் என்று அரசி சொல்லியிருக்கிறார்கள்” என்றாள்.
அம்பிகையின் சேடி ஊர்ணை விரைந்து வந்தாள். அவள் புத்தாடை அணிந்து கொண்டையில் முத்தாரம் சுற்றி சரப்பொளியாரம் அணிந்திருந்தாள். அவளுடைய நடையில் ஆரம் குலுங்கி அதிர்ந்தது. “பேரரசி எழுந்தருளிவிட்டார்கள். அரசியாரும் அவையை அடைந்துவிட்டார்” என்றாள். அதற்குள் இன்னொரு சேடி ஓடிவந்து “அவைக்கு மைந்தனையும் அன்னையையும் கொண்டுவரும்படி ஆணை” என்றாள். சத்யசேனை “கிளம்புவோம் அக்கா” என்றாள்.
அவர்களுக்காக அணிப்பரத்தையரும் மங்கலத் தாலமேந்திய சேடியரும் காத்து நின்றனர். கையில் மைந்தனுடன் காந்தாரி வெளியேவந்தபோது சேடியர் குரவையிட்டனர். வாழ்த்தொலிகள் எழுந்து அவர்களைச் சூழ்ந்தன. பரத்தையரும் சேடியரும் முதலில் சென்றனர். தொடர்ந்து வலம்புரிச்சங்கை ஊதியபடி நிமித்தச்சேடி முன்னால் சென்றாள். இருபக்கமும் வெண்சாமரமேந்திய சேடியர் வர, தலைக்குமேல் வெண்முத்துக்குடை மணித்தொங்கல்களுடன் சுழன்றசைய கையில் செம்பட்டுத்துணியில் மைந்தனை ஏந்தியபடி காந்தாரி நடந்தாள். அவளுக்குப்பின்னால் காந்தாரிகள் சென்றனர்.
பனிமுடிசூடிய மலைச்சிகரங்களில் ஒன்றின் உச்சியில் இருந்து இன்னொன்றுக்கு காலடியெடுத்துவைத்து நடப்பதைப்போல காந்தாரி உணர்ந்தாள். மானுடத்தலைகள் அலையடிக்கும் திரவப்பரப்பின்மேல் நடப்பதுபோல மறுகணம் தோன்றியது. பின் மேகங்களின் மேல் மைந்தனை அணைத்தபடி சென்றுகொண்டிருந்தாள். கீழே நகரங்கள் மக்கள்… சாம்ராஜ்ஜியங்கள்… வரலாறு… அவள் அகாலப்பெருவெளியில் நின்றிருந்தாள்.
பந்தலில் கூடியிருந்த மனிதத்திரளை அவள் ஒலிவெள்ளமாக உணர்ந்தாள். அங்கிருந்து கங்கைக்கரைவரையில் கங்கையைத்தாண்டி மறுபக்கம் பாரதவர்ஷத்தின் எல்லைவரையில் அதற்கப்பால் கடலின்மேல் மானுடவெள்ளம் நிறைந்திருக்கிறது. வாழ்த்தொலிகளும் வாத்தியஒலிகளும் இணைந்த முழக்கம். பல்லாயிரம் நாவுகளின் பல்லாயிரம் அர்த்தங்களை கரைத்துக்கரைத்து ஒற்றை அர்த்தமாக ஆக்கிக்கொண்டிருக்கிறது அது. அதையே மீளமீளக் கூவிக்கொண்டிருந்தது. அதுவேயாகி திசைகளை நிறைத்துச் சூழ்ந்திருந்தது.
அனைத்தும் ஒற்றை ஒரு மானுடனுக்காக. ஒருமானுடன்! மானுடனா? காலவெளிமடிப்புகளில் என்றோ ஒருமுறை மட்டுமே நிகழ்பவன். மானுட உடலில் விதியாக நிகழ்பவன். அவனே விதி. அவனே நியதி. அவனே நெறியும் முறையும் அறமும். அவன் மீறக்கூடாத எல்லையென ஏதுமில்லை. கடலை நிலவென அவன் மானுடத்தை கொந்தளிக்கச் செய்கிறான். அவனுக்காக அவர்கள் இட்டெண்ணி தலைகொடுக்கிறார்கள். குருதிப்பெருக்கை மண்முழுக்க ஓடச்செய்கிறார்கள். மட்கி மண்டையோடுகளாக சிரித்துக்கிடக்கிறார்கள். மானுடமென்னும் ஏரியின் உடைப்பு அவன். ஒட்டுமொத்த மானுடத்துக்காகவும் பிரம்மம் ஆணையிட்ட மீறலை தானேற்று நடத்துபவன்.
எங்கிருக்கிறோம் என்ன செய்கிறோமென்றே அவள் அறியவில்லை. யார் பேசுகிறார்கள்? எங்கே ஒலிக்கிறது வேதம்? எங்கே ஒலிக்கின்றன மணிகளும் சங்கும்? எங்கே அதிர்ந்துகொண்டிருக்கிறது பெருமுரசு? “அரசி, மைந்தனை நீட்டுங்கள்.” யார்? யாரது? “அரசே, அரசியுடன் சேர்ந்து கைநீட்டுங்கள். உங்கள் கைகளால் மைந்தனை கொடுத்து குருகுலத்தின் பிதாமகர் மைந்தனுக்குப் பெயர் சூட்டுவதற்கு ஒப்புதலளியுங்கள்.” அவள் மைந்தனை நீட்டினாள். “பிதாமகரே, இதோ அஸ்தினபுரியின் பேரரசன். தங்கள் அழியாத சொற்களால் அவனை வாழ்த்துங்கள். பாரதவர்ஷம் யுகயுகமாக நினைத்திருக்கப்போகும் பெயரை அவனுக்குச் சூட்டுங்கள்” என்றான் திருதராஷ்டிரன்.
பெயரா? அவனுக்கா? பெயர் நீங்கள் அவனுக்கிடுவது. அவன் விண்ணகவல்லமைகளால் ஏற்கெனவே இடியோசையாக மின்னலோசையாக பல்லாயிரம் முறை அழைக்கப்பட்டிருப்பான் மூடர்களே… பீஷ்மரின் கனத்தகுரலை அவள் கேட்டாள். “விண்முதல்வன் மைந்தனே பிரம்மன். பிரம்மனின் மைந்தனோ அத்ரி. அத்ரி பெற்றவன் சந்திரன். சந்திரனே எங்கள் மூதாதையே எங்கள் வணக்கங்களை ஏற்றருள்க. இதோ சந்திரகுலத்தின் வழித்தோன்றல். இவனை வாழ்த்துக!”
யார் இவனா? மூடர்களே இவனல்ல. இவன் என் மைந்தன். வான்கிழித்து காற்றில் நடந்து என்னுள் புகுந்த கொலைமதயானை. “சந்திரனின் மைந்தன் புதன். புதன் பெற்றெடுத்தவன் எங்கள் முதல்மன்னன் புரூரவஸ். ஆயுஷ், நகுஷன், யயாதி, புரு, ஜனமேஜயன், பிராசீனவான், பிரவீரன், நமஸ்யு, வீதபயன், சுண்டு, பஹுவிதன், ஸம்யாதி, ரஹோவாதி, ரௌத்ராஸ்வன், மதிநாரன், சந்துரோதன், துஷ்யந்தன், பரதன், சுஹோத்ரன், சுஹோதா, கலன், கர்த்தன், சுகேது, பிருஹத்ஷத்ரன், ஹஸ்தி என விரியும் எங்கள் மூதாதையர் நிரையே விண்ணில் வந்து நில்லுங்கள். உங்கள் குளிர்ந்த அருள்மொழிகளை எங்கள் மைந்தன்மேல் பொழியுங்கள்!”
“இவன் ஹஸ்தியின் சிம்மாசனத்தை நிறைப்பவன். அஜமீடன், ருக்ஷன், சம்வரணன், குரு என வளரும் மரபினன். குருவம்சத்து கௌரவன்!” ‘கௌரவன் கௌரவன் கௌரவன்’ என வானம் அதிர்ந்தது. அவள் ஏமாற்றத்துடன் கைகளை பிணைத்துக்கொண்டாள். அச்சொல்வழியாக குழந்தை அவளுடைய மடியிலிருந்து விலகிச்சென்று விட்டதுபோல, இன்னொன்றாக ஆகிவிட்டதுபோல உணர்ந்தாள். “ஜஹ்னு, சுரதன், விடூரதன், சார்வபௌமன், ஜயத்சேனன், ரவ்யயன், பாவுகன், சக்ரோத்ததன், தேவாதிதி, ருக்ஷன், பீமன், பிரதீபன், சந்தனுவின் சிறுமைந்தன் இவன். விசித்திரவீரியனின் பெயரன். அஸ்தினபுரியின் முதல்வன் திருதராஷ்டிரனின் குருதி. இவனை எங்கள் மூதாதையரின் கரங்கள் வானில் குவிந்து வாழ்த்துவதாக!”‘
அலைகள் தள்ளித்தள்ளி விலக்கிச் செல்வதுபோல அந்தப் பெயர்களால் அவன் அகன்றுகொண்டிருந்தான். தவிப்புடன் அவள் தன் கைகளை குவித்துக்கொண்டாள். “வீரர்களில் முதல்வனாக இவன் அமைவதாக. நாடும் செல்வமும் புகழும் வீடுபேறும் வீரமொன்றாலே கூடும் என்று சொன்ன நம் மூதாதையர் வாழ்க. அவர்களின் வாக்குப்படி யோதன கலையில் சிறந்தவன் என்று இவனை அழைக்கிறேன். சுயோதனன் புகழ் என்றும் வாழ்வதாக!” மும்முறை அவர் அப்பெயரை கூறினார். “சுயோதனன் சுயோதனன் சுயோதனன்.”
வாழ்த்தொலிகள் மணற்புயலென சூழ்ந்து ஐம்புலன்களையும் செயலற்றதாக்கின. அவள் அதனுள் அவளே உருவாக்கிக்கொண்ட மறைவிடத்துக்குள் ஒடுங்கிக்கொண்டாள். என்மகன் என்மகன் என்மகன் என்று அவள் அகம் சொல்லிக்கொண்டே இருந்தது. வேள்விகள் வழியாக, சடங்குகள் வழியாக, பலநூறு வாழ்த்துக்கள் வழியாக, அவள் அச்சொல்லை மட்டும் மந்திரமென சொல்லிக்கொண்டு கடந்து சென்றாள். முனிவர்கள், வைதிகர்கள், குடித்தலைவர்கள், குலமூத்தார், வேற்றுநாட்டு முடிநிகரர்கள், வருகையாளர்கள்.
திருதராஷ்டிரனும் அவளும் முனிவர்களையும் பிதாமகரையும் பேரரசியையும் வணங்கியபின் வெண்குடைக்கீழ் அமர்ந்து பரிசில்களை வழங்கினர். மைந்தனுக்கு அதற்குள் இளம்காந்தாரியர் மும்முறை பசும்பால் அளித்தனர். அவனை பொன் மஞ்சத்தில் படுக்கச்செய்து குடிகளின் வாழ்த்துக்கு வைத்தனர். மக்கள் நிரைவகுத்து வந்து அவனை வாழ்த்தினர். அவனுடைய பாதங்களுக்கு அருகே இருந்த பெரிய தொட்டியில் மலர்கள் குவியக்குவிய சேவகர் எடுத்து விலக்கிக் கொண்டிருந்தனர்.
காந்தாரியின் முலைகள் இறுகி வெண்சுண்ணப்பாறைகளாக ஆயின. முலைகளைத் தாங்கிய நரம்புகள் இழுபட்டுத் தெறிக்க கைகளில் படர்ந்த வலி தோள்களுக்கும் முதுகுக்கும் படர்ந்தது. அழுத்தம் ஏறி ஏறி தன் முலைகள் வெடித்து பாலாகச் சிதறிவிடுமென எண்ணினாள். ஆனால் ஒரு சொட்டு கூட வழியவில்லை. பின்னர் மூச்சுவிடமுடியாமல் நெஞ்சு அடைத்துக்கொண்டது.
சத்யசேனை அவளருகே குனிந்து “அக்கா தாங்கள் சற்றுநேரம் ஓய்வெடுக்கலாம். சூதர்களுக்குரிய பரிசில்களை அளிக்கும் நிகழ்ச்சி அதற்குப்பின்னர்தான்” என்றாள். “என் மைந்தன்” என்று காந்தாரி கைநீட்டினாள். “தாங்கள் நடக்கமுடியாது. அறைக்குச்செல்லுங்கள். நான் மைந்தனைக் கொண்டுவருகிறேன்.” சத்யசேனை, சத்யவிரதை இருவரும் அவளை மெல்லப்பிடித்து தூக்கினர். குருதி கனத்துறைந்த கால்களை மெல்லத் தூக்கிவைத்து காந்தாரி இடைநாழியை அடைந்தாள்.
சத்யவிரதை “அஸ்தினபுரியே அல்ல இது அக்கா. மொத்த பாரதவர்ஷத்தையே நேரில் பார்ப்பதுபோலிருந்தது. என் எண்ணங்களெல்லாம் உறைந்துவிட்டன. நான் எங்கிருக்கிறேன் என்றே எனக்குத்தெரியவில்லை” என்றாள். காந்தாரி “சிறிய அரசி வந்திருந்தார்களா?” என்று கேட்டாள். சத்யவிரதை திகைத்து “நான் அதை அறியவில்லை அக்கா” என்றாள். சத்யசேனை “இல்லை அக்கா, அவர்கள் வரவில்லை” என்றாள். காந்தாரி பேசாமல் சென்றாள். சத்யசேனை திரும்பி அங்கே நின்றிருந்த சேடியிடம் “சிறிய அரசி ஏன் வரவில்லை என்று கேட்டுவிட்டு வா” என்றாள்.
“என் பாதங்கள் நன்றாக வீங்கியிருக்கின்றன” என்றாள் காந்தாரி. “என் முலைகள் உடைந்துவிடுமென்று படுகிறது… மைந்தனைக் கொண்டுவாருங்கள்!” “மைந்தனை சுஸ்ரவை கொண்டுவருகிறாள் அக்கா.” அறைக்குள் சென்றதும் காந்தாரி தன் மஞ்சத்தில் படுத்துக்கொண்டாள். சுஸ்ரவை மைந்தனைக் கொண்டுசென்று அவளருகே படுக்கவைத்தாள். அவள் கைகளை நீட்டி அவனைத் தொட்டாள். வாசனைமாறிப்போன குட்டியை ஐயத்துடன் முகர்ந்துநோக்கும் மிருகம்போல அவளுடைய கைகள் குழந்தையைத் தொட்டன.
“என் மைந்தனுக்கு அவர்கள் பெயரிட்டனர். குருவம்சத்தின் எளிய மன்னர்களின் வரிசையில் அதையும் சேர்த்து உச்சரித்தனர். இவ்வுலகு என் மைந்தனுக்கு அளிக்கும் முதல் அவமதிப்பு” என்று காந்தாரி பல்லைக்கடித்தபடி சொன்னாள். மைந்தனை எடுத்து தன் மடியில் வைத்து மார்கச்சை அவிழ்ப்பதற்குள் அவள் நெஞ்சின் தசைகள் வெம்மையாக உருகி வழிவதுபோல பால் பீரிடத்தொடங்கியது. மைந்தனின் வாயை அருகே கொண்டுசெல்வதற்குள் அவன் ஆறு சரடுகளாகப் பொழிந்த பாலில் நீராடியிருந்தான்.
“அவன் அழுவதேயில்லை, வியப்புதான்” என்றாள் சுஸ்ரவை பாலை உறிஞ்சும் குழந்தையைப் பார்த்தபடி. “அழுகை என்பது இறைஞ்சுதல். என் மைந்தன் எவரிடமும் எதையும் கேட்பவனல்ல” என்று காந்தாரி சொன்னாள். “அந்தப்பெயர்களையும் அடையாளங்களையும் எல்லாம் பாலால் கழுவிவிட்டீர்கள் அக்கா” என்றாள் சுஸ்ரவை சிரித்துக்கொண்டு. “இவன் எத்தனை வளர்ந்தாலும் இவனுடலில் இருந்து இந்த முலைப்பால் வாசம் விலகாதென்று தோன்றுகிறது.”
சேடி வந்து வணங்கினாள். “சொல்” என்றாள் சுஸ்ரவை. “இளைய அரசிக்கு கடும் வெப்புநோய். அரண்மனையின் ஆதுரசாலையில் இருக்கிறார்கள். ஆகவேதான் பெயர்சூட்டுவிழவுக்கு அவர்கள் வரவில்லை” என்றாள் சேடி. சுஸ்ரவை தலையசைத்ததும் அவள் தயங்கி நின்றாள். “என்ன?” என்று சுஸ்ரவை கேட்டாள். “ஒரு முதுநாகினி வந்திருக்கிறாள். அரசியை பார்க்கவேண்டுமென்கிறாள்.” “முதுநாகினியா? அவள் எப்படி உள்ளே வந்தாள்? அதுவும் இந்தநாளில்?” என்று சத்யசேனை திகைப்புடன் கேட்டாள். “அவளை எவராலும் தடுக்கமுடியாதென்று சொல்கிறாள்” என்றாள் சேடி.
“அவளை உடனடியாக திரும்பிச்செல்ல சொல். அரசி ஓய்வெடுக்கிறார்கள்” என்றாள் சத்யசேனை. காந்தாரி கைநீட்டி “அவளை வரச்சொல்” என்றாள். “அக்கா…” என சத்யசேனை சொல்லத்தொடங்க “அவள் என் மைந்தனைப்பற்றி எதையோ சொல்லப்போகிறாள்” என்றாள் காந்தாரி. அனுப்பும்படி சத்யசேனை கைகாட்ட சேடி தலைவணங்கி வெளியே சென்றாள். காந்தாரி பெருமூச்சுடன் மைந்தனை இன்னொரு முலைக்கு மாற்றிக்கொண்டாள்.
உள்ளே வந்த முதுநாகினி இமைக்காத பளிங்குவிழிகள் கொண்டிருந்தாள். மலைப்பாளையாலான நாகபட முடியும் தக்கைக்குழைகளும் அணிந்திருந்தாள். “அரசிக்கு என் வணக்கம்” என்றாள். காந்தாரி “நீ என்னை எதற்காக பார்க்க வேண்டும்?” என்றாள். “நாகங்களின் அரசனை வாழ்த்திவிட்டுச்செல்ல வந்தேன்” என்றாள் முதுநாகினி. காந்தாரி சிரித்தபடி “அவன் இவ்வுலகிலுள்ள அனைத்து உயிர்களுக்கும் அரசனே” என்றாள்.
முதுநாகினி அனைவரையும் விலகிச்செல்லும்படி சொன்னாள். காந்தாரி சைகை செய்ய இளம் காந்தாரியர் வெளியே சென்றனர். முதுநாகினி கதவை மென்மையாக மூடினாள். பின்னர் திரும்பி அவளருகே வந்து தணிந்த குரலில் “அங்கே மலைநாகர்களின் ஊரில் வெறியாட்டெழுந்தது. அதைச் சொல்லவே நான் வந்தேன். பிறந்திருப்பவன் நாகங்களின் காவலன். நாககுலத்தை அழிக்கவிருப்பவர்களின் எதிரி. அவனைக் காப்பது நாகர்களின் கடமை” என்றாள். “அக்னிசர அஸ்வினி மாதம் ஒன்பதாம் கருநிலவில் நாகர்களின் அரசனாகிய வாசுகி பிறந்த ஆயில்யம் நட்சத்திரத்தில் உன் மைந்தன் பிறந்திருக்கிறான்.”
“நாகர்குலத்தை அழிப்பவன் யார்?” என்றாள் காந்தாரி திகைத்தவளாக. “அவன் இன்னும் பிறக்கவில்லை. அவன் கைவில்லால் எங்கள் குலம் அழியவிருக்கிறது என்று பல நூறாண்டுகளுக்கு முன்னரே வெறியாட்டுமொழிகள் சொல்லத்தொடங்கிவிட்டன. ஏனென்றால் இங்கு நிகழ்பவை அனைத்தும் முன்னரே வகுக்கப்பட்டுவிட்டன.” காந்தாரி “அப்படியென்றால் எதற்கு எதிராக நீங்கள் போரிடுகிறீர்கள்?” என்றாள். “விதிக்கு எதிராக! தெய்வங்களுக்கு எதிராக! பிரம்மத்துக்கு எதிராக!” என அவள் உரக்கக் கூவினாள். “அதுவே எங்கள் விதி. அந்தப் போரின்வழியாகவே நாங்கள் பிறக்கிறோம். பெருகுகிறோம். வாழ்கிறோம். ஆகவே போரிட்டாகவேண்டும்.”
காந்தாரி “எனக்குப்புரியவில்லை” என்றாள். “உனக்குப்புரியும்படி சொல்ல என்னாலும் இயலாது. இதோ உன் மடியில் இருக்கும் இம்மைந்தன் அவனுடைய எதிரி என்பதை மட்டும் தெரிந்துகொள். இவனைக் கொல்லப்போகும் மைந்தன் பிறந்து விட்டான்.” காந்தாரி அனிச்சையாக தன் மைந்தனை அள்ளி மார்போடணைத்துக்கொண்டாள். “ஆம், இவனுடைய எதிரிகள் பிறந்துகொண்டே இருக்கிறார்கள். இவனைக்கொல்லவிருப்பவன் மண்நிகழ்ந்துவிட்டான். அவனுடைய கைகளும் கால்களும் நெஞ்சும் சிரமும் வளர்ந்துவருகின்றன.”
“யார் அவன்?” என அடைத்த குரலில் காந்தாரி கேட்டாள். “அதைச் சொல்ல எங்களால் இயலாது. எங்கோ எவனோ ஒருவன். அவன் வருகையிலேயே அடையாளம் காணமுடியும். அவனிடமிருந்து இவனைக் காப்பதே எனக்குரிய பணி.” கைகள் நடுங்க மைந்தனை மார்புடன் அணைத்துக்கொண்டு காந்தாரி அமர்ந்திருந்தாள். வெளியே விழவுகொண்ட நகரம் ஓசையிட்டுக்கொண்டிருந்தது.
நாகினி சொன்னாள் “அரசி, முதல்முடிவில்லாது ஓடும் காலவேகத்தின் அலைகள்தோறும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அமுதவேளை என ஒரேஒரு கணம் வருகிறது என்பது நாகர்களின் கணிதம். அப்போது ராகுவும் கேதுவும் ஒருவரை ஒருவர் மட்டுமே பார்க்கிறார்கள். அந்த ஒற்றைக்கணத்தில் ஓர் அன்னை தன் மைந்தனை முதன்முதலாகப்பார்ப்பாள் என்றால் அவ்வன்னையின் விழிகளில் அமுதம் நிறைகிறது. அவளால் பார்க்கப்படும் மைந்தன் உடல் அவ்வமுதத்தால் நீராட்டப்படுகிறது.”
அவளுக்கு மட்டுமே கேட்கும்படி நாகினி சொன்னாள் “அரசி, நல்லூழால் நீ இன்னும் உன் மைந்தனைப் பார்க்கவேயில்லை. மண்ணில் வாழ்ந்த அன்னையரில் இத்தனை மாறாநெறிகொண்ட எழுவரே இதுவரை பிறந்துள்ளனர். அவர்களை ஏழுபெரும் பத்தினிகள் என நூல்கள் கொண்டாடுகின்றன. நீ சதி அனசூயையின் அருள் கொண்டவள். உன் விழிகள் பேரன்பின் விளைவான பெருந்தவம் செய்தவை அரசி. இத்தனைநாள் அவை காணமறந்த உலகின் அமுதமெல்லாம் அவற்றில் திரண்டுள்ளன. அவைமட்டுமே இவனைக் காக்கமுடியும்…”
அவள் அருகே வந்து மெல்லியகுரலில் சொன்னாள் “இதோ இன்னும் சற்றுநேரத்தில் அமுதவேளை வரப்போகிறது. அடுத்தசாமத்தின் முதல்மணி ஒலிக்கும் அக்கணம் உன் கண்களைத் திறந்து இவனைப்பார். இவன் உடலில் ஆடைகளிருக்கலாகாது. முழு உடலும் ஒரே கணத்தில் உன்விழிகளுக்குப் படவேண்டும்… உன் விழிதீண்டிய இவனுடலை எந்த படைக்கலமும் தாக்காது. இவன் அமுதில் நீராடி அழிவற்றவனாவான்.”
காந்தாரி “நானா?” என்று கேட்டாள். “ஆம், நீ பாரதத்தின் பெருங்கற்பரசிகளில் ஒருத்தி. உன் விழிகளால் மைந்தனைப்பார்க்கும் அக்கணத்தில் உன் பெருந்தவத்தின் பயனை முழுமையாக மைந்தனுக்கு அளித்துவிடுவாய். அதன்பின் உன்னில் அதன் துளியும் எஞ்சாது. விண்ணுலகு ஏகும்போது கூட ஏதுமற்ற எளியவளாக மட்டுமே நீ செல்வாய்.” காந்தாரி “என் ஏழுபிறவியின் நற்செயல்களின் பயனையும் மைந்தனுக்கு அளிக்கிறேன்” என்றாள். “ஆம், அவ்வண்ணமே என்ணியபடி உன் விழிகளைத் திறந்து அவனைப்பார்” என்றாள் நாகினி.
காந்தாரி திகைத்தபடி அமர்ந்திருக்க நாகினி ஓசையற்ற காலடிகளுடன் கதவைத் திறந்து வெளியே சென்றாள். கதவின் ஒலி கேட்டதும் காந்தாரி சற்று அதிர்ந்தாள். சிலகணங்கள் அகம் செயலிழந்து அமர்ந்திருந்த பின் திடுக்கிட்டு எழுந்து குழந்தையின் மீதிருந்த ஆடைகளைக் கழற்றினாள். பொன்னூல் நுண்பின்னல்கள் செறிந்த அணியாடைக்கு அடியில் மென்பட்டாடையும் அதற்கடியில் பஞ்சாடையும் இருந்தது. நேரமென்ன ஆயிற்று என்று அவளால் உய்த்தறிய இயலவில்லை. கைகள் பதறியதனால் ஆடைகளின் முடிச்சுகளை கழற்றுவதும் கடினமாக இருந்தது. முலைப்பாலில் ஊறிய ஆடைகளின் சரடுகள் கையில் வழுக்கின.
ஆடையை முழுமையாக விலக்கியபின் குழந்தை வெற்றுடலுடன்தான் இருக்கிறதா என்று அவள் தடவிப்பார்த்தாள். பின்பு பெருமூச்சுடன் கைகளைக்கூப்பிக்கொண்டு காத்திருந்தாள். நிகழ்ந்தவை வெறும் நனவுருக்காட்சியா என்றும் அவளுக்கு ஐயமாக இருந்தது. அக்குரல் கேட்டதா இல்லை அவள் அகம் அதை நடித்ததா? இல்லை. காலம் சென்றுகொண்டிருந்தது. அவள் கையை நீட்டி மீண்டும் மைந்தனைத் தொட்டுப்பார்த்தாள்.
நாழிகை மணியோசை கேட்டதும் அவள் தன் இருகைகளாலும் கண்களைக் கட்டிய பட்டுத்துணியைத் தூக்கி திரும்பி மைந்தனைப்பார்த்தாள். அவன் இடைமேல் அவள் அவிழ்த்திட்ட பட்டாடை காற்றில் பறந்து வந்துவிழுந்திருந்தது. அவள் உடல் விதிர்த்தது. உடனே மீண்டும் பட்டுத்துணியால் கண்களை கட்டிக்கொண்டாள். தன் கைகளும் கால்களும் நடுங்கிக்கொண்டிருப்பதை உணர்ந்தாள். எவ்வெண்ணமும் இல்லாமல் அகம் கரும்பாறைபோல நின்றது. நாழிகைமணி ஓய்ந்தபோது அது இருளாகக் கலைந்து சுழித்து ஓடத்தொடங்கியது. அவள் ‘என் மகன்!’ என்ற குரலாக தன் அகத்தை உணர்ந்தாள்.
ஆம், என் மகன். என் மகன். அச்சொல்லில் இருந்து அவள் அகத்தால் விடுபடவே முடியவில்லை. பெருக்கெடுத்த நதிபோல அச்சொல் அவளைக் கொண்டுசென்றது. கைகள், கால்கள், தோள்கள், வயிறு, முகம், கண்கள். நான் பார்க்கவேயில்லை. நான் என் மைந்தனை இன்னும் பார்க்கவில்லை. மீண்டும் கண்கட்டை அவிழ்த்துப்பார்த்தாலென்ன? ஆனால் பார்த்ததன் பலன் அவனிடமிருந்து அகலக்கூடும். ஆனால் அவனை நான் பார்க்கவில்லை. என் மைந்தன். என் மைந்தன். கைகள், கால்கள், தோள்கள், வயிறு, முகம், கண்கள். நான் பார்க்கவேயில்லை. நான் பார்க்கவேயில்லை!
ஆனால் நான் பார்த்தேன். முழுமையாகவே பார்த்தேன். அவனை துல்லியமாக என்னால் மீண்டும் பார்க்கமுடிகிறது. ஒவ்வொரு தசையையும் ஒவ்வொரு மயிர்க்காலையும் என்னால் பார்க்கமுடிகிறது. இது என்னுள் இருந்து இனி என்றென்றும் அழியாது. என்னுடன் இருந்து இது சிதையில் வெந்து நீறாகும். இதை கண்ணுள் தேக்கியபடிதான் நான் என் முன்னோருலகை அடைவேன்.
இருளில் ஓடி பாறையில் முட்டிக்கொண்டவள் போல அவள் ‘ஆ!’ என அலறிவிட்டாள். அவள் மைந்தனை முழுமையாகப் பார்க்கவில்லை. அவன் இடையும் தொடைகளும் மறைந்திருந்தன. நெஞ்சு படபடக்க அவள் கைகளால் மார்பைப்பற்றியபடி கண்ணீர்வழிய அமர்ந்திருந்தாள். அவன் தொடைகள்! கையை நீட்டி அவன் தொடைகளைத்தொட்டாள். இன்னொருகையால் தன் தலையை தானே ஓங்கி அறைந்துகொண்டாள். உதடுகள் துடிக்க நெஞ்சு ஏறியமர விம்மியழுதாள்.
கதவு திறந்து சத்யசேனையும் சுஸ்ரவையும் சத்யவிரதையும் உள்ளே வந்தனர். சத்யசேனை “அக்கா…என்ன? என்ன ஆயிற்று?” என்று கூவியபடி ஓடிவந்தாள். “எங்கே? எங்கே பிறர்? அத்தனைபேரையும் அழைத்துக்கொண்டுவாருங்கள். என் மைந்தனுக்கு தம்பியர் வேண்டும். ஒருவர் இருவரல்ல. நூறுபேர் அவனைச்சூழ்ந்திருக்கவேண்டும். அவன் தொடைகளைக் காக்கும் இரு நூறு கைகள் அவனுக்குத்தேவை…” என்று காந்தாரி கூவினாள்.
அவர்கள் திகைத்து நிற்க அவள் கைகளை விரித்தபடி “இவனை எவரும் வெல்லலாகாது. இவன் படைக்கலங்கள் எங்கும் தாழக்கூடாது. ஆகவே இவன் இனி சுயோதனன் அல்ல, துரியோதனன். வெல்வாரற்றவன்…” என்றாள். அவளுடைய முகம் சிவந்திருந்தது. மூச்சிரைத்தபடி தன் மைந்தனை எடுத்து மார்போடு அணைத்துக்கொண்டாள்.