பகுதி பதினாறு : இருள்வேழம்
[ 1 ]
காலையில் அம்பிகையின் சேடியான ஊர்ணை அந்தப்புரத்துக்குள் சென்று தன் அறைக்குள் சுவடிகளை பார்த்துக்கொண்டிருந்த அம்பிகை முன்னால் நின்று வணங்கி “அரசி, காந்தாரத்து அரசிக்கு வலி வந்திருக்கிறது” என்றாள். சுவடிகளை அப்படியே விட்டுவிட்டு எழுந்த அம்பிகை “மச்சர் இருக்கிறாரா?” என்றபடி வெளியே ஓடினாள். “நேற்று மாலையிலிருந்தே அவர் இருக்கிறார்” என்றபடி ஊர்ணை பின்னால் விரைந்தாள். “நேற்றுகாலை ஒரு முதிய பிடியானையை அவிழ்த்துவிட்டார். அது பிளிறியபடி நம் அரண்மனை முற்றத்துக்கு வந்து நின்று குரலெழுப்பியது. அரசி மைந்தனைப் பெறவிருக்கிறாள் என்று அந்த யானை சொல்கிறது, மகவை எடுக்க உதவவே அது வந்துள்ளது என்று சொல்லி அனைத்தையும் ஒழுங்குசெய்யத் தொடங்கிவிட்டார்.”
அம்பிகைக்குப்பின்னால் மூச்சிரைக்க ஓடியபடி ஊர்ணை “நேற்றே மருந்துகளனைத்தும் ஒருங்கிவிட்டன. சேடியர் பன்னிருவர் அங்கே அனைத்துக்கும் சித்தமாக நின்றுகொண்டிருக்கிறார்கள். காந்தாரத்து இளவரசியர் அனைவரும் அங்கிருக்கிறார்கள். காந்தார இளவரசருக்குச் செய்திசொல்ல சேவகன் சென்றிருக்கிறான்” என்றாள். அம்பிகை நின்று “பேரரசிக்கு செய்தி சென்றுவிட்டதா?” என்றாள். “ஆம் அரசி…” என்றாள் ஊர்ணை. “சிறியவளுக்கு?” ஊர்ணை திகைத்து “அதை நான் அறியேன்” என்றாள்.
“வேண்டியதில்லை… அவளுக்கு செய்தி ஏதும் செல்லவேண்டாம்… இது என் ஆணை. காரியகர்த்தரிடம் உடனே சொல்லிவிடு” என்றாள் அம்பிகை. “ஆனால் அவர்களுக்கு உடனே அனைத்தும் தெரிந்துவிடும் அரசி. நம் அரண்மனைச்சேடியரில் எப்படியும் அவர்களுடைய உளவுச்சேடி ஒருத்தி இருப்பாள். அதை நம்மால் தவிர்க்கவே முடியாது.” அம்பிகை “ஆம். அதை நானும் அறிவேன். அவள் ஒவ்வொரு கணமும் என்னையே நோக்கிக் கொண்டிருக்கிறாள். தீயகோளின் பார்வைபோல அவளுடைய தீவிழிகளை நான் உணர்கிறேன். ஆனால் நாம் முறையாக தெரிவிக்கக்கூடாது… அதுதான் என் ஆணை” என்றாள்.
ஊர்ணை அதன் பயன் என்ன என்று எண்ணியவள்போல பேசாமலிருந்தாள். “அந்த யாதவக்குழந்தை பிறந்தபோது அவள் முதல்செய்தியை எனக்குச் சொல்லியனுப்பினாள். அவளுடைய முதற்சேடி சாரிகை வந்து என்னிடம் சொன்னாள். அவள் தன் கண்களில் தேக்கியிருந்த இளிவரலை இப்போதும் நான் உணர்கிறேன். நஞ்சுபூசப்பட்டு ஒளிரும் கூரியவாள் அது. அணுக்கச்சேடிகள் தங்கள் அரசிகளின் அனைத்துத் தீங்குகளையும் தாங்களும் அகத்தில் நிறைத்துக் கொள்கிறார்கள்… உடைவாளை உருவி அவளை அங்கேயே வெட்டிவீழ்த்தவே நான் எண்ணினேன்” என்றாள் அம்பிகை.
ஊர்ணை “அவர்கள் முறைகளை பேணவேண்டுமென்றே சொல்லியனுப்பியதாகவும் இருக்கலாமல்லவா?” என்று சொல்ல அம்பிகை சீறித் திரும்பி “என்ன சொல்கிறாய்? அவள் எனக்கு எந்தச்செய்தியையாவது முறையாகத் தெரிவித்திருக்கிறாளா என்ன? ஏன் அந்தப் பாண்டுரன் பிறந்தபோதுகூட எனக்கு செய்தியறிவிப்பு வரவில்லை, தெரியுமல்லவா உனக்கு?” என்றாள். மூச்சு வாங்க “இந்தச்செய்தியை வேண்டுமென்றேதான் அவள் எனக்கு சொல்லியனுப்பினாள். பேரரசி ஜாதகர்மச் சடங்குகளை அறிவித்ததும் தன் கருவூலத்திலிருந்த செல்வமனைத்தையும் அள்ளி வீசி வைதிகர்களையும் சூதர்களையும் நிமித்திகர்களையும் கணிகர்களையும் கொண்டு தன் அவையை நிறைத்தாள். அரசவிழவு பன்னிருநாட்களில் முடிந்தது. அவள் ஒருமாதம் அதை நீட்டித்தாள்” என்றாள்.
மூச்சுவாங்க அம்பிகை நின்றாள். “அந்த யாதவமைந்தனை பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தி என்றும் தர்மதேவனின் நேர்ப்புதல்வன் என்றும் புலவர்களைக்கொண்டு எழுதச்செய்து பரப்பினாள். இந்த அஸ்தினபுரியின் முச்சந்திகள்தோறும் ஒலித்துக்கொண்டிருக்கும் அந்தப்பாடல்கள் எங்கே எப்படி முளைத்தன என்று நான் நன்றாகவே அறிவேன்.” வெறுப்பால் சுளித்த முகத்துடன் வெண்பற்கள் தெரிய சீறி அம்பிகை சொன்னாள் “அத்துடன் பிறக்கவிருக்கும் என் சிறுமைந்தனைப்பற்றி அவள் அனைத்து தீச்சொற்களையும் பரப்பினாள். அவன் கலியின் பிறப்பு என்றும் அவன் கருவுற்றநாள்முதலே அவச்செய்திகள் எழுகின்றன என்றும் இன்று அஸ்தினபுரியிலும் அனைத்து ஜனபதங்களிலும் பாடிக்கொண்டிருக்கிறார்கள் வீணர்களான சூதர்கள்…”
திரும்பி நடந்தபடி அம்பிகை சொன்னாள் “என் பெயர்கோள் மைந்தன் பிறக்கட்டும். மும்மடங்கு செல்வத்தை நான் வெளியே எடுக்கிறேன். காந்தாரத்தின் கருவூலத்தைக்கொண்டு நூறு பெருங்காவியங்களை உருவாக்கி பரப்பமுடியும். என் சிறுமைந்தனின் கால்களில் பரதகண்டத்துச் சூதர்குலத்தையே வந்து விழச்செய்கிறேன்!” அவள் எவரிடம் பேசிக்கொண்டு செல்கிறாள் என்று ஊர்ணை வியந்தாள். அவள் சொல்லும் ஒவ்வொரு சொல்லையும் ஊர்ணை பலநூறுமுறை கேட்டிருந்தாள். சென்ற இரண்டுவருடங்களாக விழித்திருக்கும் நேரமெல்லாம் அம்பிகை அதைத்தான் எண்ணிக்கொண்டிருந்தாள். எண்ணங்கள் ஓடி ஓடி வண்டித்தடம் போல மொழியில் பதிந்தபின் சொற்கள் அவளை அறியாமலேயே வாயிலிருந்து வந்துகொண்டிருந்தன.
“ஓலைகளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தேன்” என்றாள் அம்பிகை. “என் ஒற்றர்கள் அங்கே சதசிருங்கத்தில் இருக்கிறார்கள். அவளுக்கு மீண்டும் வயிறு நிறைந்திருக்கிறது. கரு ஏழுமாதத்தைக் கடந்துவிட்டிருக்கிறது. அதற்கான கருநிறைவுச்சடங்குகளை அங்கே செய்யவிருக்கிறார்கள். இங்கே இவள் அதையும் விடமாட்டாள். அதற்கும் இங்கே சூதர்களைக் கூப்பிட்டு விழா எடுப்பாள். அந்தக்குழந்தை எந்த தேவனின் மைந்தன் என்று சொல்லத்தொடங்குவார்கள் அந்த வீணர்கள்?” நின்று திரும்பி மெல்லிய பித்து வெறித்த நோக்குடன் அம்பிகை சொன்னாள் “நல்லவேளை இப்போதேனும் இவளுடைய வயிற்றுவாயில் திறந்தது. நான் அஞ்சிக்கொண்டிருந்தேன். யாதவப்பெண்ணின் அடுத்த குழந்தையும் பிறந்தபின்னர்தான் இவள் ஈன்றுபோடுவாளோ என்று.”
ஊர்ணை பெருமூச்சுடன் “காந்தாரத்து அரசி நலமுடன் இருக்கிறார்கள் அரசி. உடல் வலுவுடனிருக்கிறது. உள்ளமும் தெளிந்திருக்கிறது” என்றாள். “ஆம், அவ்வாறுதான் இருக்கும். வரவிருப்பவன் அஸ்தினபுரியின் பேரரசன். பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தி. அவன் கருவுறுவதற்கு முன்னரே அரியணை அவனுக்காகக் காத்திருக்கிறது” என்றாள். பின்பு உரக்கச்சிரித்து “ஒருவகையில் அவனுக்கு முன்னால் இந்த யாதவப்பதர்கள் பிறப்பதுகூட நல்லதுதான். ஒரு பூசல் நிகழட்டும். அவன் இவர்களைப்பிடித்து நகர்மன்றில் கழுவிலேற்றி வைக்கட்டும். சிம்மம் பிறக்கையில் தெய்வங்கள் அதன் இரைகளையும் மண்ணுக்கு அனுப்புகின்றன” என்றாள். அவளுடைய நகைப்பிலும் பித்து கலந்திருந்தது.
அந்தப்புர வாயிலில் சத்யசேனை நின்றிருந்தாள். “அரசிக்கு வணக்கம். தங்களைத்தான் எதிர்நோக்கியிருந்தோம்” என்றாள். “எப்படி இருக்கிறாள்?” என்றாள் அம்பிகை. “நேற்று மாலைமுதலே சிறுசிறு நோவு வந்து செல்லத் தொடங்கியது. அது பொய்நோவு என்றார் மச்சர். இன்றுகாலை முதல் கடுமையான நோவும் நீர்ப்போக்கும் நிகழ்ந்தது. பின்பு நின்றுவிட்டது. இப்போது மெல்லிய அதிர்வுகள் மட்டும்தான். மச்சரும் சீடர்களும் காத்திருக்கிறார்கள்” என்றாள் சத்யசேனை.
மச்சர் வெளியே வந்து “வணங்குகிறேன் அரசி” என்றபின் சத்யசேனையிடம் “உடனடியாக மூத்த யானைமருத்துவர் இருவரை வரச்சொல்லுங்கள்” என்றார். “ஏன் மச்சரே?” என்றாள் அம்பிகை. “எனக்கு இந்தக் கருவின் நெறிகளென்ன என்று இன்னும்கூடத் தெரியவில்லை. அவர்கள் இருவர் உடனிருந்தால் நன்றோ என்று எண்ணுகிறேன்” என்றார் மச்சர். “நான் சொன்ன அனைத்து மருந்துகளும் சித்தமாக உள்ளன அல்லவா?” சத்யசேனை “ஆம் மச்சரே” என்றாள். அவர் திரும்ப உள்ளே சென்றார். சத்யவிரதை வெளியே ஓடினாள்.
“அவள் அலறியழுதாளா?” என்றாள் அம்பிகை. “இல்லை. சிறு முனகல்கூட இல்லை. அவள் உடல் அதிர்வதிலிருந்துதான் கடும் வலி இருப்பதை உணரமுடிகிறது. நோவெடுத்தால் பிடியானைகள் அழுவதில்லை என்று மச்சர் சொன்னார்” என்றாள் சத்யசேனை. அம்பிகை “என்ன உளறல் இது…” என்று கூவியபின் தலையை பற்றியபடி “இந்த மைந்தன் வெளிவருவதற்குள் நான் என் அகத்தை சிதறவிட்டுவிடுவேன் என்று நினைக்கிறேன். சீராக ஓரிரு எண்ணங்கள் கூட என்னுள் எழுவதில்லை…” என்றாள்.
சியாமை வந்து அம்பிகையை வணங்கி “பேரரசி தன் மஞ்சத்தில் இருக்கிறார். மைந்தன் பிறந்ததும் செய்தியை முறைப்படி அறிவிக்கும்படி சொன்னார். நலம்பெற்று மைந்தன் மண்தீண்டுவதற்காக வாழ்த்தி இந்தப் பரிசிலை அனுப்பினார்” என்றாள். அவள் நீட்டிய தாலத்தில் சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், கடுக்காய், தானிக்காய், நெல்லிக்காய் என ஏழு மூலமருந்துகள் இருந்தன. அம்பிகை ஒருகணம் உதடுகள் இறுக ஏதோ சொல்லவந்து பின் எண்ணத்தை மாற்றிக்கொண்டு தலைவணங்கி “பேரரசியின் வாழ்த்துக்கள் நலம் பயக்குமெனத் தெரிவியுங்கள்” என்றாள்.
சற்றுநேரத்தில் யானைமருத்துவர் சீர்ஷரும் அவரது இளவல் சுதமரும் வந்து வணங்கினர். மச்சர் வெளியே வந்து “வாருங்கள் சீர்ஷரே. வலி நின்று அதிர்வுகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. கரு உயிர்த்துடிப்புடன் இருக்கிறது. ஆனால் கருவாயிலை அது இன்னும் முட்டவில்லை. ஆகவேதான் தங்களை அழைத்தேன்” என்றார். “மதங்கநூலின்படி யானையின் ஈற்றுநோவு இரண்டுநாட்கள் கூட எடுத்துக்கொள்ளும் மச்சரே” என்றார் சீர்ஷர்.
அவர்கள் உள்ளே சென்றபின் அம்பிகை சோர்ந்து பீடத்தில் அமர்ந்தாள். காந்தாரிகள் அவளைச்சூழ்ந்து அமர்ந்துகொண்டனர். “இன்னொருத்தி எங்கே?” என்றாள் அம்பிகை. அந்தக்கூட்டத்தில் சம்படை இருக்கவில்லை. அம்பிகை “சிறியவள்? சம்படைதானே அவள் பெயர்?” என்றாள். சத்யசேனை சற்று தயங்கியபின் “சிலநாட்களாகவே அவள் தனித்து இருக்கத் தொடங்கியிருக்கிறாள் அரசி” என்றாள். “எப்போதும் மேற்குமூலை உப்பரிகையில் அமர்ந்து வெளியே பார்த்துக்கொண்டிருக்கிறாள். உணவு அணிகள் எதிலும் ஈடுபாடில்லை. முன்பு அவளுடைய இளையவள் தசார்ணையுடன் எப்போதும் விளையாடிக்கொண்டிருந்தாள். இப்போது விளையாட அழைத்தால் வெறித்துப்பார்க்கிறாள்.”
அம்பிகை கண்களைச் சுருக்கியபடி “அணங்குபீடை அது” என்றாள். “அரண்மனைகள் எல்லாமே தொன்மையானவை. இந்த அரண்மனை மாமன்னர் குருவின் காலகட்டத்தில் கட்டப்பட்டது. அன்றுமுதல் எத்தனையோ அரசிகளும் அந்தப்புரப்பெண்டிரும் இங்கே வாழ்நாள் முறிந்து இறந்திருப்பார்கள். அவர்களின் ஆன்மாக்களில் புவர்லோகத்தை அடையாதவை இங்கேதான் வாழ்ந்துகொண்டிருக்கும். ஆகவேதான் இங்கே எந்த மூலையிலும் எப்போதும் இருள் இருக்கலாகாது என்றும் ஒட்டடையும் கரியும் தூசியும் எங்கும் இருக்கக்கூடாதென்றும் சொல்கிறார்கள்.”
தசார்ணை அச்சத்துடன் கையைநீட்டி சுஸ்ரவையின் ஆடையைப் பற்றிக்கொண்டாள். “பெண்களை அந்தியில் தனியாக இருக்க விடாதே. அவர்களுடன் எப்போதும் இன்னொருத்தி இருக்கவேண்டும். சேடியே ஆனாலும் சரி. அந்தியையும் இரவையும் விட சோர்ந்த நடுமதியம் இன்னும் இடர்மிக்கது” என்றாள் அம்பிகை. “அணங்கு பற்றிய பெண்களுக்கு வகைவகையான பூசனைகளும் வெறியாட்டுகளும் செய்துபார்த்ததுண்டு. எவரும் மீண்டதில்லை. அங்கே வடக்கு அரண்மனையில் விதுரனின் அன்னை சிவை இப்படித்தான் அணங்குகொண்டு அமர்ந்திருக்கிறாள். இருபதாண்டுகாலமாக.”
சத்யசேனை பெருமூச்சுவிட்டாள். “எப்போதும் அணிசெய்துகொள்ளுங்கள். வைரங்கள் அணிந்த பெண்களை அணங்குகள் அண்டுவதில்லை” என்று அம்பிகை சொன்னாள். சத்யசேனை “நாங்கள் அவளிடம் பேசவே முடியவில்லை. அவள் நாங்கள் அறிந்த சம்படையே அல்ல என்று தோன்றுகிறது” என்றாள். “ஆம் அவள் நீங்கள் அறிந்த பெண்ணே அல்ல. அவள் வேறு. அவளுக்கு பூமியைச்சுற்றிச் சூழ்ந்திருக்கும் பெரும்பாழ் கண்ணுக்குத் தெரிந்துவிட்டது.”
மதியம் காந்தாரிக்கு மீண்டும் வலி வந்தது. வலி ஏறிஏறிச்சென்று அந்தியில் நின்றுவிட்டது. வலியில் அவள் மஞ்சத்தின் சட்டத்தைப் பற்றிக்கொண்டு உடலை அசைத்து கைகால்களை நெளித்தபோது எழுந்த ஒலிகள் கிளைமுறிவதுபோலவும் பாறைகள் உரசுவதுபோலவும் கேட்டுக்கொண்டிருந்தன. பின்னர் அவளுடைய கனத்த மூச்சொலிகள் கேட்டன. “நீந்தும் யானையின் துதிக்கைமூச்சு போலவே ஒலிக்கிறது” என்றாள் சுஸ்ரவை. சத்யசேனை அவளைநோக்கி “வாயைமூடு” என்று அதட்டினாள்.
மாலை சகுனியின் தூதன் வந்து என்ன நிகழ்கிறது என்று விசாரித்துச்சென்றான். திருதராஷ்டிரனின் அணுக்கச்சேவகனாகிய விப்ரன் வந்து விசாரித்தான். அந்தியில் மீண்டும் வலிதொடங்கியது. நள்ளிரவில் வலி நின்றுவிட்டது. அம்பிகை ஊர்ணை கொண்டுவந்த சிற்றுணவை பீடத்திலமர்ந்தபடியே அருந்தினாள். அவளைச்சுற்றி இளம்காந்தாரிகள் தளர்ந்து அமர்ந்தும் ஒருவர்மீதொருவர் சாய்ந்தும் கண்ணயர்ந்துகொண்டிருந்தனர். நாட்கணக்காக தொடரும் உணர்வுகளின் எழுச்சி வீழ்ச்சியை அவர்களால் தாங்கமுடியவில்லை என்று அம்பிகை எண்ணிக்கொண்டாள். அவளுக்கும் உடலின் அனைத்துத் தசைகளும் வலித்தன. மூட்டுகளில் இறுக்கம் ஏறியிருந்தது.
அவள் அசைவைக்கண்டு கண்விழித்து “தாங்கள் சற்று ஓய்வெடுங்கள் அரசி… நான் வேண்டும்போது வந்து அழைக்கிறேன்” என்றாள் சத்யசேனை. தேவையில்லை என்று அம்பிகை கையை அசைத்தாள். பெருமூச்சுடன் ஆடைகளைத் திருத்திக்கொண்டு பீடத்தருகே ஒரு சிறுபீடத்தை இழுத்துப்போட்டு கால்களைத் தூக்கிவைத்து அமர்ந்துகொண்டாள். யானை தனக்கு வலிவந்தபின்னர்தான் சரியான இடத்தைத் தேடிச்செல்லும் என்று அவள் கேட்டிருந்தாள். சரியான இடம் அமைவது வரை அதற்கு வலி நீடிக்குமா என்ன?
அவள் யானைகளை பார்த்துக்கொண்டிருந்தாள். யானை குறு வாலைச் சுழற்றி பட் பட் என அறைந்துகொண்டது. தலையறுபட்ட பாம்பு போல வால் துவண்டு சொடுக்கிக்கொண்டது. வாலை நனைத்துக்கொண்டு கோழை ஒழுகியது. கால்களைத் தூக்கி வைத்துக்கொள்ளும்போது பாறைத்தோல் உரசி ஒலித்தது. அதன் கண்களில் நோவின் ஈரம் வழிந்து தோல்சுருக்கங்களில் பரவி ஊறி கீழிறங்கியது. அவள் கண்விழித்து வாயைத் துடைத்தபடி “என்ன ஒலி அது?” என்றாள். “அக்கா கைகளால் அடித்துக்கொள்கிறாள் அரசி” என்றாள் சத்யவிரதை. அம்பிகை பெருமூச்சுவிட்டபடி “விடியவிருக்கிறதா?” என்றாள். “இரண்டாம்சாமம் ஆகிறது. நாழிகைமணி சற்றுமுன்னர்தான் ஒலித்தது” என்றாள் சத்யவிரதை.
அக்கணம் அவர்களைக் கிழித்துச்செல்வதுபோல ஓரு பேரலறல் உள்ளிருந்து எழுந்தது. ஒரு மனிதத் தொண்டை அவ்வொலியை எழுப்பமுடியாதென்று தோன்றியது. கைகால்கள் நடுங்க எழுந்த அம்பிகை மூட்டுகள் வலுவிழக்க மீண்டும் அமர்ந்துகொண்டாள். சத்யசேனையும் சத்யவிரதையும் ஓடிச்சென்று அறைவாயிலில் நின்றனர். அலறல்கள் அறைச்சுவர்களை விரைக்கச் செய்தன. தலைவிரித்த பேய்கள் போல காற்றில் நின்று சுழன்றாடின. சத்யசேனை “சுஸ்ரவை, நீங்கள் உங்கள் அறைகளுக்குச் செல்லுங்கள்” என்றாள். “அக்கா!” என சுஸ்ரவை ஏதோ சொல்லவர “இது என் ஆணை!” என்றாள் சத்யசேனை.
சுஸ்ரவை நடுங்கிக்கொண்டு நின்ற தங்கைகளை கைகளால் அணைத்து “வாருங்கள்” என்றாள். அவர்கள் விழித்த சிலைக்கண்களுடன் திறந்து நடுங்கிய உதடுகளுடன் கைகளை மார்பில் கட்டியபடி திரும்பித்திரும்பி நோக்கியபடி சென்றனர். செல்லும்வழியில் தசார்ணை கால்தளர்ந்து விழுந்தாள். சுஸ்ரவை குனிந்து அவளை அள்ளித்தூக்கி முகத்தைப்பார்த்தாள். “மயங்கிவிட்டாள்” என்றாள். “அவளை அந்தப்புரத்துக்குக் கொண்டு செல்லுங்கள். அங்கே அவளை மருத்துவச்சிகளிடம் சேருங்கள்” என்றாள் சத்யசேனை.
செங்குருதி பச்சைவெம்மை வீச்சத்துடன் அலையலையாக வந்து நுரைத்துப் பெருகுவதுபோல கூடத்துக்குள் வந்து நிறைந்த அலறல் ஒலிகளைக் கேட்டபடி அம்பிகை அமர்ந்திருந்தாள். அது என்ன கொடுங்கற்பனை என அவள் அகமே வியந்து கொண்டது. பின்பு எழுந்து மஞ்சத்தறை இடைநாழி வாயிலை அடைந்து “மச்சரே… என்ன ஆயிற்று? மச்சரே?” என்று கூவினாள். மச்சரின் மாணவனாகிய கிலன் ஓடிவந்து “குழந்தை வாயிலுக்கு தலைகொடுக்கத் தொடங்கிவிட்டது. அதன் வலிதான்” என்றான். “ஆனால் ஏன் இத்தனை அலறல்?” என்றாள் அம்பிகை. “மிகப்பெரிய குழந்தை அரசி…” என்றபின் உள்ளே ஓடினான்.
சிலகணங்கள் தயங்கியபின் அம்பிகை உள்ளே சென்றாள். அலறல் நின்றுவிட்டிருக்க உள்ளே மெல்லியபேச்சுக்குரல்கள் கேட்டன. அவள் அஞ்சி திரும்பிவிடலாமா என்று எண்ணினாள். அங்கே நிறைந்திருந்த பச்சைக்குருதி வீச்சத்தை அப்போதுதான் அவள் அகம் உள்வாங்கியது. அதுதான் அந்த கொடுங்கற்பனையைத் தூண்டியது போலும். இடைநாழியைத் தாண்டி மஞ்சத்தறை வாயிலை அடைந்து நடுங்கும் கைகளால் சுவர்களைப் பற்றிக்கொண்டு உள்ளே எட்டிப்பார்த்தாள்.
ஒருகணம் அவளால் எதையுமே புரிந்துகொள்ளமுடியவில்லை. அங்கே அவள் கண்டது ஒன்றுடன் ஒன்று முட்டிமோதும் உடல்களை மட்டுமே. அவள் காந்தாரியை சில மாதங்களாகப் பார்க்கவில்லை. மச்சரும் சீடர்களும் அவளை தங்கள் காவலுக்குள் வைத்திருந்தனர். எவரும் அவளைப்பார்ப்பதை அவர்கள் விரும்பவில்லை. மஞ்சத்தில் கிடந்த உருவத்தை ஒரு பெண்ணென்றே அவளால் எண்ணமுடியவில்லை. இரு தொடைகளும் ஆற்றுக்குள் இறங்கிய வெண்ணிறமான பெருமரத்து வேர்களைப்போல விரிந்திருந்தன. அதற்குமேல் பீதர்களின் மாபெரும் தாழி போல அவள் வயிறு. தொப்புள் கரிய கறைபோல இழுபட்டு விரிந்து பரவியிருந்தது. வயிற்றின் தோல்பரப்பில் நீலநரம்புகளின் வலை. அவள் ஒருபெரிய வெண்ணிற நத்தை போலிருந்தாள்.
கண்களைமூடிக்கொண்டு உடல்நடுங்க நின்றவள் திரும்ப நினைத்தாள். ஆனால் அதைப்பார்க்காமல் திரும்பமுடியாதென்றும் அறிந்திருந்தாள். அப்போதுதான் சாளரத்துக்கு அப்பால் கரியஇலைகளைக்கொண்ட புதர் ஒன்று அடர்ந்து காற்றிலாடுவதைக் கண்டாள். அவை காகங்கள். சாளரங்கள் வழியாக அவை உள்ளே வராமலிருக்க வலைகட்டியிருந்தார்கள். கரியசிறகுகள் அலையலையாக வந்து அதில் மோதிக்கொண்டிருந்தன. அப்பால் நகரமெங்கும் காகங்களின் குரல்களாலான பெருமுழக்கம் எழுந்தது.
மீண்டும் காந்தாரி அலறத்தொடங்கினாள். அம்பிகை காந்தாரியின் பருத்தமுகமும் கழுத்தும் தோள்களும் குருதியெனச் சிவந்திருப்பதைக் கண்டாள். கழுத்தில் வேர்புடைத்த மரம்போல குரல்வளையும் நரம்புகளும் விம்மி எழுந்து அதிர்ந்தன. இன்னும் சிலகணங்களில் அவளுடைய நரம்புகள் உடைந்து குருதி சீறி எழுமென்று அம்பிகை எண்ணினாள். காந்தாரி இருகைகளாலும் மெத்தையை ஓங்கி ஓங்கி அறைந்தாள். அம்பிகை எண்ணங்கள் அழிந்து விழியாலேயே ஒலிகளைக் கேட்பவள் போல நின்றாள். பட்டுகிழிபடும் ஒலி கேட்டது. வெம்மை எழ கொழுத்த நிறமற்ற திரவம் எழுந்து மஞ்சத்துக்குக் கீழே விரிக்கப்பட்டிருந்த தோல்பரப்பில் விழுந்தது.
மச்சரின் மாணவன் ஒருவன் குனிந்து அவள் கைகளை அணுக அவள் அவனை ஓங்கி அறைந்தாள். அவன் தெறித்து சுவரை மோதி விழுந்தான். தட் என அவன் தலை மரச்சுவரில் மோத அவன் சுருண்டு தரையில் விழுந்து ஒருகாலையும் கையையும் உதைத்துக்கொண்டு அடங்கினான். ஏதோ பேசவருபவன்போலிருந்தது அவன் முகம். இன்னொரு சீடன் அவனைநோக்கி ஓட மச்சர் சமநிலை இழக்காமல் “அவனை விட்டு விடு… அவன் இறந்துவிட்டான்… அவள் கைகளருகே செல்லவேண்டியதில்லை” என்றார்.
அப்பால் யானைக்கொட்டிலில் யானைகள் சின்னம் விளிக்கும் ஒலியை அம்பிகை கேட்டாள். அவை அப்படி இணைந்து ஒலியெழுப்பி அவள் கேட்டதேயில்லை. சுவர்களில் தொங்கிய செந்நிறமான கலிங்கப்பட்டுத் திரைச்சீலைகள் நெளிந்தாடின. ஒவ்வொன்றையும் கிழித்துக்கொண்டு ஒரு குழந்தை பிறக்கவிருப்பதுபோல. குளிர்ந்த நிணநீர் பீரிடுவதுபோல காற்று ஒன்று அறைக்குள் வந்து சுழன்றுசென்றது. தென்திசைக்காற்று. அதில் கோடையில் எரிந்த காட்டின் அனல்வாசனையும் சாம்பல்வாசனையும் இருந்தது. அலறியபடியே காந்தாரி வில்லென வளைந்து எழுந்து மீண்டும் மஞ்சத்தில் விழுந்தாள். அவள் உயிர்பிழைக்கமுடியாதென்று அம்பிகை உணர்ந்தாள். அத்தனை வலி அதற்காகவே. அவளைப்பிளந்தபடிதான் அந்தக்கரு வெளியே வரும். அவள் வெறும் விதையுறை மட்டும்தான். அதைக்கிழிக்காமல் அது முளைக்கமுடியாது.
ஒருவேளை அவள் சாகவில்லை என்றால்? அத்தனை பெருவலிக்குப்பின் பெற்ற மைந்தன் அவளுக்கு என்னவாக இருப்பான்? அவன் கையும் காலும் கண்ணும் குழலும் ஒலியும் மணமும் அவளுக்கு எப்படிப் பொருள்படும்? தேனீயின் முன் விரிந்த தேன்கடல் போல என்று சூதர்கள் சொல்வதுண்டு. அம்பிகை அப்போது ஒரு கணம் காந்தாரியிடம் பொறாமை கொண்டாள். இறந்து பிறந்தெழுவதென்பதன் பொருளென்ன என்பதை பெண்ணன்றி பிறர் அறிவதில்லை. ஏழுமுறை ஏழாயிரம் முறை இறந்து இறந்து பிறந்துகொண்டிருக்கிறாள் இவள்… ஒரு மைந்தனுக்காக.
காந்தாரியின் அலறல்கள் வேறெங்கோ இருந்து ஒலிப்பதுபோலத் தோன்றியது. அவை நாழிகைக் கணக்காக ஒலித்ததனால் பாறைகளை அதிரச்செய்து இழியும் அருவியினருகே நிற்பதுபோல அவ்வொலியை சித்தம் முற்றிலும் விலக்கிக் கொண்டது. அறைக்குள் மருத்துவர்கள் மெல்லப்பேசிக்கொள்வதும் அவர்களின் கையிலிருந்த உலோகக்கிண்ணங்களின் ஒலியும் தெளிவாகவே கேட்டன. மீண்டும் வெந்த மணத்துடன் தென்திசைக்காற்று கடந்துவந்து திரைச்சீலைகளை அள்ளிப் பறக்கவைத்தது. அறைக்குள் கட்டப்பட்டிருந்த மூலிகைநிரைகளைச் சுழற்றியது.
காந்தாரியின் குரல் நின்றது. அம்பிகை நோக்கியபோது அவளுடைய தொண்டை புடைத்திருக்க வாய் திறந்து அடிநா தெரிந்தது. அவள் அலறிக்கொண்டுதானிருந்தாள். தன் செவிகள் பட்டுவிட்டனவா என்று அம்பிகை நினைத்தாள். ஆனால் மீண்டும் அறைக்குள் சுழன்று வந்து மருந்துத் தொங்கல்களை அறுத்து வீசி திரைகளைப் பிய்த்து மறுபக்கச் சுவரில் எறிந்த காற்றின் ஒலியை அவள் நன்றாகவே கேட்டாள். அவள் தொண்டையின் குரல்சரடு அறுந்துவிட்டதென்று அவளுக்குத் தெரிந்தது.
கிழிபடும் ஒலி பெரிதாகக் கேட்ட கணத்திலேயே அடுப்பிலிருந்து தூக்கப்பட்ட அண்டா கைதவறிக் கவிழ்ந்தது போல வெந்நிணநீர் தரையில் கொட்டி சிதறிப்பரவியது. அத்தனை பெரிய நீரை எதிர்பாராத மருத்துவர்கள் பின்னடைந்தனர். ஒருவர் அதில் சறுக்கி நிலத்தில் விழுந்தார். மேலுமொரு வெந்நீர்க் கொப்பளிப்பில் நீர்த்த குருதிவெள்ளம் அறையை முற்றிலுமாக நிறைத்தது. அங்கே நின்றவர்கள் அனைவருடைய கால்களிலும் ஓடைநீரின் விளிம்பென குருதியலை வந்து சூடாகத் தீண்டியது.
மச்சர் மெல்லக்காலெடுத்து வைத்து அருகே செல்ல முயல சாளரத்தின் வலையைப் பிய்த்துக்கொண்டு காற்று காட்டருவி வெள்ளம்போல உள்ளே வந்தது. சருகுத்தூள்களும் புகையும் தூசும் நிறைந்த காற்று அனைவரையும் அள்ளி வீசியது. அவள் இடைநாழியில் சென்று சுவரில் மோதிவிழுந்தாள். அவள் மேல் ஒரு சீடன் வந்து விழுந்தான். மச்சர் மறுபக்கம் சுவரில் அறைபட்டு விழுந்து கிடக்க அவர் மேல் சீர்ஷர் விழுந்தார். காற்றுக்குள் நூற்றுக்கணக்கான சிறகசைவுகள் தெரிந்தன. கரிய சிறகுகள். காகங்களின் குரல்கள்.
காற்று அடங்கியபோது அறையெங்கும் தூசும் சருகுக்குப்பைகளும் பரவியிருந்தன. காகங்கள் சென்றுவிட்டிருந்தன. அம்பிகைதான் முதலில் எழுந்தாள். ஓடிச்சென்று அறைக்குள் காந்தாரியை நோக்கினாள். அவள் கால்களுக்கு நடுவே தரையில் விரிக்கப்பட்டிருந்த மான்தோலில் பொழிந்து பரவிக்கிடந்த செந்நிணத்தில் மிகப்பெரிய குழந்தை விழுந்து கிடந்தது. வளர்ச்சியுற்ற இரண்டுவயதான குழந்தையின் அளவிருக்கும் என்று அவளுக்குத் தோன்றியது. “மச்சரை எழுப்புங்கள்… மச்சரை எழுப்புங்கள்” என்று அவள் கூவினாள்.
சீடர்கள் மச்சரை எழுப்பினர். அவர் அவர்களின் கைகளைப்பற்றியபடி தள்ளாடினார். “குழந்தையைப்பாருங்கள்… அவன் நாசி அடைத்திருக்கப்போகிறது” என்று அம்பிகை கூவினாள். சீர்ஷரும் மச்சரும் இரு மாணவர்களுமாக சென்று குனிந்து குழந்தையை தூக்கினார்கள். கனத்த பெரிய கைகளும் கால்களும் மயிரடர்ந்த மிகப்பெரிய தலையுமாக இருந்த குழந்தை இரு கைகளையும் விரித்துக்கொண்டு பெருங்குரலில் அலறி அழுதது. மச்சர் அச்சத்துடன் “அரசி!” என்று காட்டினார். அதன் வாய்க்குள் சிறு வெண்பற்கள் நிறைந்திருந்தன.
குழந்தையின் அழுகை காட்டுக்கழுதைகள் இரவில் எழுப்பும் ஒலி போன்று செவிகளைத் துளைத்தது. “இச்செய்தியை எவரும் அறியக்கூடாது. இது என் ஆணை. செய்தி வெளிவருமென்றால் இங்குள்ள ஒவ்வொருவரும் கழுவிலேற்றப்படுவீர்கள்” என்று அம்பிகை வெறிகொண்டவள்போல கூச்சலிட்டாள். அவிழ்ந்த கூந்தலை சுற்றிக்கட்டியபடி “என் சிறுமைந்தனை என்னிடம் கொடுங்கள்… நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றாள். மச்சர் “அவருக்கு ஒன்றுமில்லை அரசி… மைந்தர் நலமாகவே இருக்கிறார்” என்றார்.
சீர்ஷர் “சற்று விலகியிருங்கள் அரசி… நாங்களே குழந்தையை தூய்மைசெய்கிறோம்” என்றார். அப்போதுதான் வெளியே திகழ்ந்த அமைதியை அம்பிகை கேட்டாள். இலைகள் கூட அசையாத முற்றமைதி. “அரசியைப்பாருங்கள் மச்சரே… அவள் எப்படி இருக்கிறாள்?” என்றாள். மச்சர் அவள் நாடியைப்பற்றியபடி “பேற்றுமயக்கம்தான். நலமாகவே இருக்கிறார்கள்” என்றார்.