புரட்சி வருகுது!

”கட்டுரைகள் குறித்து உங்கள் கருத்துக்களை jeyamohan.writer@ gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம்”

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, கட்டுரைகளைக் குறித்து மட்டுமே கடிதம் அனுப்பவேண்டுமா? தெரியப்படுத்துங்கள். உங்களுடன் விவாதிக்க சில விசயங்கள் இருக்கின்றன.


தோழமையுடன்,
ஏகலைவன்.
http://yekalaivan.blogspot.com
***********

 

அன்புள்ள ஏகலைவன்

கண்டிப்பாக. என் வாசல்கள் எல்லாவிதமான விவாதங்களுக்கும் திறந்தே உள்ளன. நீங்கள் எழுதலாம்.நாம் விவாதிப்போம்

அன்புடன்

ஜெயமோகன்

 

*******************

 

அன்புள்ள ஏகலைவன்,

 

மன்னிக்கவும் உங்கள் இணைய தளத்தைப் போய் பார்த்தேன். அதி தீவிர மதநம்பிக்கை போன்ற ஒரு மனநோய்க்கூறான வெறியையே அதில் கண்டேன். உங்களுக்கு எதையும் விவாதிப்பதிலோ மாற்று குரல்களை பரிசீலிப்பதிலோ எந்த நம்பிக்கையும் இருப்பதாக அதில் இருந்து தெரியவரவில்லை. என் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.
ஜெ

 

  ******************************* On 7/1/08, yekalaivan A < [email protected]> wrote:

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களே!

உங்களுடைய வருகைக்கும் விமர்சனத்துக்கும் நன்றி. நீங்கள் பொதுப்படையாகக் குறிப்பிட்டுள்ள இவ்விமர்சனத்தில் என்னுடைய தவறுகளை நான் புரிந்து கொள்ள முடியவில்லை. குறிப்பிட்டு எதையும் நீங்கள் சொன்னீர்களானால் நான் பரிசீலிக்கக் காத்திருக்கிறேன்.

உங்கள் பதிலுக்காகவும் காத்திருக்கிறேன்.

நன்றி!

ஏகலைவன்.

****************
ஜெயமோகன் அவர்களே!

மேற்கண்ட எனது கேள்வி இன்னும் உங்களால் பதிலளிக்கப்படாமல் இருக்கின்றது. இப்படியான மேம்போக்கான விமர்சனத்தை உங்களைப் போன்ற ‘மாபெரும்’ இலக்கியவாதிகள் சும்மா போகிறபோக்கில் சொல்வது முறையா?

”அதி தீவிர மநம்பிக்கை போன்ற மனநோய்க்கூறான வெறியை அதில் கண்டேன்”

என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பது என்னைப் பற்றிய தனிப்பட்ட விமர்சனமாகக் கொள்ள முடியாது. இவ்விமர்சனத்தின் பின்புலமாக எமது அரசியல் குறித்த உமது ஏளனம் துருத்திக் கொண்டு வெளித்தெறிரிவதாக நான் உணர்கிறேன்.

விவாதம் என்றவுடன் பயந்து நடுங்கி பின்வாங்கினாலும் ‘மீசையில் மண் ஒட்டாத’ சவடாலாகவே உமது இவ்விமர்சனம் இருக்கிறது.

நான் உங்களுடன் விவாதிக்க நினைத்தது ‘இந்திய தத்துவவியல்’ குறித்த கருத்துக்களைத்தான். வேறொன்றுமில்லை.

இருப்பினும் உங்களுடைய இந்த நிலை குறித்து கவலை கொள்கிறேன் நண்பர் ஜெயமோகன்.

*********************

 

ஏகலைவன்,

சங்கராச்சாரியைப் போன்றோ, எந்த சங்ரக்சலக் போன்றோ ‘ஆரோக்கியமான’ மனநிலையோ அல்லது சு.ரா போன்ற ‘மேன்மக்களாகவோ’  நாம் இல்லாது போனது நமது (துர)அதிர்ஷ்டம். புதிய கலாச்சாரம் வெளியிட்ட ‘நினைவின் குட்டை, கனவு நதி’ எழுப்பிய அலைகளிலிருந்து மதிப்பிற்குரிய எழுத்தாளர் இன்னமும் விடுபடவில்லை போலிருக்கிறது. அதனால்தான், இந்திய தத்துவ மரபு குறித்து நீங்கள் விவாதிக்க முயன்றால் கூட அதற்கு சிக்மண்ட் பிராய்டாக ஐயா அவதாரம் கட்டிக் கொள்ள வேண்டியிருக்கிறது.. சொறிந்து விடும் அற்பவாதமே இலக்கியமாகவும், கொலைகாரப் பார்ப்பனியமே தத்துவத் தேடலின் மோட்சமாகவும் வாழும் கேடு கெட்ட மனநிலையை விட நமது மனநோய் பரவாயில்லை. ஐயாவின் வருத்தத்திற்கும் நமது மகிழ்ச்சிக்குமான விசயம் என்னவென்றால், ஐயா குறிப்பிட்ட ‘அதி தீவிர மனநம்பிக்கை போன்ற ஒரு மனநோய்க்கான வெறி ‘ நாடு முழுதும் பரவி வருகிறது. உலகின் ஒரே இந்து நாடு என்று அழைக்கப்பட்ட நேபாளத்தில் கூட இம் மனநோய் பரவி ஆட்சியையும், அதிகாரத்தையும் பிடித்து விட்டது. மேலும் பரவும். அது வரை ஐயா எந்தக் கவலையும் இல்லாமல் விவாதித்துக் கொண்டிருக்கலாம். நாம் வேலையைப் பார்க்கலாம்.*************************

2008/7/3 yekalaivan A <[email protected]>:

தோழர் அரசு அவர்களுக்கு,

தங்களுடைய பதிலுக்கு நன்றி. மேற்கண்ட எனது மின்னஞ்சல்களுக்கு சுவற்றிலடித்த பந்து போன்று உடன் பதில்களை வாறியிறைத்த இந்த மாபெரும் இலக்கியவாதி!!!!! கடந்த நான்கு நாட்களாக இந்த ஒரு கேள்விக்காக மட்டும் மவுனம் சாதிக்கிறார்.

“என்னிடத்தில் நீங்கள் துப்பறிந்து கட்டுபிடித்த அந்த ‘மனநோய்க்கூறான’ தன்மையைக் கொஞ்சம் விளக்குங்கள்” என்பதுதான் கேள்வி. அதற்கு இதுவரை மவுனத்தையே பதிலாகத் தந்து கொண்டிருக்கிறார். ஒருவேளை இதற்கான பதிலையும் எங்கேயாவது துப்பறிந்து கொண்டிருக்கிறார் போலும்!

இவருடைய நண்பர் நாகார்ஜூனன் கூட ‘பாரதி’ குறித்த நமது கேள்விகளுக்கு நாணயமாகவே பதிலளித்தார். அவருடைய இயலாமையைக் கூட தயக்கமின்றி வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார். தமது எழுத்துக்களின் மூலமாக இந்த சமூகத்தையே மேன்மையுற்ச் செய்வதற்காகவே வின்னிலிருந்து அவதரித்து வந்த இந்த மாபெரும் இலக்கியவாதியின் வெற்றுப் புல்மபலே அவரின் என்மீதான கருத்துக்கள் என்று கொள்ளலாமா?!

தோழமையுடன்,ஏகலைவன்.

 

*****************
தோழர் ஏகலைவன்
வெற்று ஜம்பங்களையும் பார்ப்பனீய பயங்கரவாதத்தின் மீதான அற்ப வழிபாடும் மட்டுமே தமது இலக்கியங்களாகப் படைத்துவரும் இதுபோன்ற அற்ப எழுத்தாளர்கள் சாதித்ததைவிட நாம் களத்தில் சாதித்துவருவது ஏராளம்.கம்ப்யூட்டருக்கு முன்னால் அமர்ந்து கொண்டு வெட்டியாகப் பொழுதைக் கழிக்கும் இதுபோன்ற இலக்கியப் புலிகளுடன் நம்முடைய நேரத்தை விரயமாக்குவது தேவையில்லை என்றே கருதுகிறேன்.

பகத்.

**********************

 

வணக்கத்திற்குரிய தோழர்

என்னை தாங்களும் தங்கள் சமூகமும் இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்பதை மிகவும் பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். நான் உலகத்தில் நடந்த பல புரட்சிகளை கூர்ந்து படித்து புரிந்துகொண்ட விஷயம் என்னவென்றால் கமிசார்கள் அளவுக்கு சாமானியர்களுக்கு ஒருபோதும் அறிவு இருப்பதில்லை என்பதும் ஆகவே ஒரு சந்தர்ப்பத்திலும் அவர்கள் கமிசார்களுடன் விவாதிக்கக் கூடாது என்பதுமாகும். தங்கள் கடிதத்தில் உள்ள மிரட்டல் என்னை குலைநடுங்கச் செய்கிறது. தயவுசெய்து அதை மறுபரிசீலனைசெய்யவேண்டும். புரட்சி நெருங்கும் தகவலை ஒரு மின்னஞ்சல் மூலம் தெரிவித்தால் அதற்கு விசுவாசமாக இருப்பேன் என்பதை தாள்பணிந்து தெரிவித்துக் கொள்கிறேன்

தங்கள் விசுவாசம் மிக்க ஊழியன்

ஜெயமோகன்

முந்தைய கட்டுரைகாய்கறியும் அரசியலும் (மறுபிரசுரம்)
அடுத்த கட்டுரைவசைப்புரட்சி