பகுதி பதிநான்கு : களிற்றுநிரை
[ 5 ]
அன்று கருநிலவு. கோடைகாலமாதலால் வானம் விண்மீன்கள் செறிந்து அவற்றின் எடையால் சற்றுத் தொய்ந்து தொங்குவதுபோல வளைந்து தெரிந்தது. விண்மீன்களின் ஒளியில் அப்பால் நூறுமலைச்சிகரங்கள் நிழல்குவைகளாகத் தெரிந்தன. அங்கிருந்துவந்த பனிக்காற்றில் இந்திரத்யும்னத்தின் கரியநீர்ப்பரப்பு அதில் பிரதிபலித்த விண்மீன்களுடன் மெல்ல அலைபாய்ந்துகொண்டிருந்தது. குடிலின் முன்னால் நின்றிருந்த தேவதாரு மரத்தில் எண்ணைப்பந்தத்தைக் கட்டி அதன் ஒளியில் காட்டுமரப்பட்டைகளால் செய்யப்பட்ட பீடத்தைப்போட்டு குந்தி அமர்ந்திருந்தாள். அனகை குடிலின் திண்ணை அருகே நின்றிருந்தாள்.
குந்தி அனகையை ஏறிட்டுநோக்கி “இளையவளை நான் வரச்சொன்னேன் என்று சொல்” என்றாள். “அவர்கள் இந்நேரம் விழிசொக்கத் தொடங்கியிருப்பார்கள் அரசி” என்றாள் அனகை. “அவளும் வரவேண்டும். இது அவளும் அறிந்தாகவேண்டிய செய்தி” என்றாள் குந்தி. “நாம் இதை முதலில் அரசரிடம் பேசுவோம். அவர் ஒப்புக்கொண்டபின்னர் மெதுவாக சிறிய அரசியிடம் சொல்வோமே” என்று அனகை சொல்ல “அவர் ஒப்புக்கொள்வதைப்பற்றிய பேச்சே இப்போதில்லை. நான் என் குலத்துக்குரிய அறத்தையே இனிமேல் கைக்கொள்ளவிருக்கிறேன். என் மைந்தன் இனிமேலும் எங்கென்று அறியாமல் வாழமுடியாது” என்றாள் குந்தி.
அனகை பெருமூச்சுடன் உள்ளே சென்று சற்று நேரத்தில் மாத்ரியுடன் திரும்பிவந்தாள். “இளையவளே, அந்தப்பீடத்தில் அமர்ந்துகொள். நான் நம் அரசரிடம் முதன்மையான சிலவற்றைப் பேசவிருக்கிறேன். உன் வாழ்க்கையையும் இணைத்துக்கொண்டுள்ள செய்தி அது” என்றாள் குந்தி. மாத்ரி ஏதும் புரியாமல் அனகையை நோக்கியபின் அமர்ந்து கைகளில் முகவாயை தாங்கிக்கொண்டாள்.
வழக்கமாக அந்தி கடந்து இரவு தொடங்கியதுமே வேள்விச்சாலையில் இருந்து திரும்பிவிடும் பாண்டு அன்று நெடுநேரமாகியும் வரவில்லை. அனகை சென்று பார்க்கலாமா என்று கேட்பதற்காக இருமுறை அசைந்தாள். ஆனால் குந்தியிடம் அசைவில்லை என்று கண்டு மீண்டும் அமைந்தாள். மீண்டும் அவள் வாயெடுத்தபோது சோலைக்கு அப்பால் சுளுந்து வெளிச்சம் சுழல்வதைக் கண்டாள். பெருமூச்சுடன் “அரசர் வருகிறார் அரசி” என்றாள்.
இளம்மாணவன் ஒருவன் சுளுந்துவீசி முன்னால்வர பாம்புகளை எச்சரிக்கும் தடியை தரையில் தட்டியபடி பாண்டு பின்னால் வந்தான். அவன் கையில் வேள்விமிச்சத்தையும் சுவடிகளையும் கொண்டுவரும் மூங்கில் கூடை இருந்தது. முற்றத்தில் ஏறியதும் சீடனைத் திரும்பச்சொல்லிவிட்டு அவன் நேராக குந்தியை நோக்கி வந்தான். கூடையை அவளருகே பீடத்தில் வைத்துவிட்டு முன்னாலிருந்த பீடத்தில் அமர்ந்தான். “நான் வெறுக்கும் இந்தப் பாழுடலுக்குள் வாழும் பெருந்துயரம் என்னை பிறந்தநாள்முதல் ஆட்டிவைக்கிறது பிருதை. இங்கு வந்தநாளில் இருந்தே அதை மறந்து வாழத்தொடங்கினேன்… ஆனால் இன்றோடு அந்த நிறைவையும் இழந்துவிட்டேன்” என்றான்.
குந்தி அவனுடைய சினத்தையும் தவிப்பையும் கண்டு வியப்புடன் “என்ன நடந்தது?” என்றாள். “நாளை அதிகாலையில் இங்கிருக்கும் நூற்றெட்டு முனிவர்கள் மாணவர்களுடன் உத்தரமலை ஏறிச்செல்கிறார்கள். பதினெட்டு மலையுச்சிகளுக்கு அப்பால் மலைகளின் மகுடம்போல கைலாய மலை இருக்கிறது. அடுத்த கருநிலவு நாளன்று அவர்கள் அங்கே சென்று சேர்வார்களாம். பதினைந்துநாட்கள் அங்கே தவம்செய்து முழுநிலவில் முக்கண்முதல்வன் உறையும் மலையைக் கண்டு வணங்கிவிட்டுத் திரும்புவார்கள்… நானும் வருகிறேன் என்றேன். என்னையும் சேர்த்துக்கொள்ளும்படி மன்றாடினேன். அந்தப்பயணத்தில் நான் இறந்தாலும் என் ஆன்மா விடுதலை அடையும் என்றேன்.”
சொல்லமுடியாமல் குரல் அடைக்க பாண்டு நிறுத்திக்கொண்டான். “ஆனால் மகாகௌதமர் என்னைத் தடுத்துவிட்டார். நான் துறவி அல்ல. இல்லறத்தான். எனக்கு என் பெற்றோரோ துணைவியரோ விடைகொடுத்து வழியனுப்பவேண்டும். அத்துடன் நான் கிளம்பும்போது என் மைந்தன் ஒருவன் எனக்கு எள்ளும் நீரும் மலரும் மந்திரமும் அளித்து வழியனுப்பியும் வைக்கவேண்டும். மைந்தர்கள் அற்றவர்கள் மலை ஏறலாகாது. ஏனென்றால் அவர்கள் தங்கள் மூதாதையரை உணவும்நீருமின்றி உதறிவிட்டு வருகிறார்கள் என்று கௌதமர் சொன்னார்.”
குந்தி விழித்த விழிகளில் உணர்ச்சியேதுமில்லாமல் நோக்கிக்கொண்டிருந்தாள். “நான் கௌதமரின் கால்களைப் பற்றிக்கொண்டேன். என்னை துறவுபூண அனுமதியுங்கள்… எனக்கு துவராடை அளியுங்கள் என்று அழுதேன். அவர் என்னிடம் பெருநெறி ஒன்றுக்காக தன் இகத்தையும் பரத்தையும் இழக்கத்துணிபவனே நைஷ்டிக பிரம்மசாரி எனப்படுகிறான். நைஷ்டிக பிரம்மசாரிகள் அன்றி பிறர் மைந்தர்களைப் பெற்று தன் முன்னோருக்கான கடனைத் தீர்க்கும் கடமை கொண்டவர்கள்தான். ஆகவேதான் நான் எனக்குரிய மனைவியை கண்டுபிடித்து அவளில் மூன்று மைந்தர்களைப் பெற்றேன். என் மைந்தர்களான ஏகதன், துவிதன், திரிதன் மூவரும் இங்கே இருக்கிறார்கள். நான் மலைமேல் ஏறுவதற்கு முன்னரே அவர்களிடமிருந்து எனக்கான எள்ளையும் நீரையும் பெற்றுக்கொண்டு விடைபெறுவேன் என்று சொன்னார்.”
பாண்டு உதடுகளை அழுத்தியபடி சிலகணங்கள் இருந்தான். அவன் முதுகு மூச்சின் விசையால் அசைவதை குந்தி கண்டாள். “நான் அதன்பின் சொல்வதற்கு ஏதுமிருக்கவில்லை. அந்தச் சபையில் வானில் இருந்து விழுந்த அடையாளம் தெரியாத சிறுபறவை போல கிடந்தேன். ஒவ்வொருநாளும் ஒவ்வொரு கணமும் என்னை பிறர் மன்னித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று உணர்ந்தேன். என்னைத் தாங்கிக்கொண்டிருக்கிறார்கள். பிருதை, மனிதர் உணரும் நரகங்களில் அதுவே கீழ்மையானது. விலங்கினங்களில் வல்லமையற்றவை உடனடியாக வலிமையானவற்றால் கொன்று உண்ணப்படுகின்றன. அது மிகமிகக் கருணையானது. மனிதர்கள் கருணையால் தங்களில் வல்லமையற்றவனை குரூரமாக வதைத்து வதைத்து தங்கள் அகந்தைக்கு உணவாக்கிக்கொள்கிறார்கள்.”
பாண்டு சொன்னான். “பின்னர் எழுந்துவந்தேன். ஒவ்வொரு காலடியிலும் இந்த வீண்உடலை சபித்தேன். இது உண்டு உயிர்க்கும் இவ்வுலகையும், இதைநோக்கி கோடிவிழிகளால் பார்த்துநிற்கும் விண்ணகத்தையும், விண்ணையாளும் தேவர்களையும், தேவர்களை படைத்த தெய்வங்களையும் சபித்தேன். இந்த நோயுற்ற உடலை எனக்கு அளித்துவிட்டு நான் தீர்க்கவே முடியாத பெருங்கடனை என்னிடம் கேட்கும் என்முன்னோரை வெறுத்தேன்” பாண்டு சொன்னான். “அப்படியே திரும்பிச்சென்று ஏரியில் விழுந்தாலென்ன என்று எண்ணினேன். ஆனால் அதற்கான மன உறுதி என்னிடமிருந்தால் நான் இன்றுவரை வாழ்ந்திருக்க மாட்டேனே… நான் வாழ்க்கையை வெறுத்தவனல்ல. வாழ்க்கைமீதான விருப்பு நிறைந்தவன். இந்த மூழ்கும் படகுக்குள் இருந்துகொண்டு நான் தவிக்கிறேன்.”
விழிகளில் நீர் பளபளக்க அவன் சொன்னான் “தென்புலத்தோர், தெய்வம், விருந்து, ஒக்கல் என நால்வருக்கும் கடன்பட்டு மனிதன் பிறக்கிறான் என்கிறார்கள். அக்கடன்களை நிறைக்காமல் இப்பிறவிச்சுழலில் இருந்து மீட்பும் இல்லை. நான்கில் முதன்மையானது தென்புலம் ஆளும் மூதாதையருக்கான கடனே. நான் அந்தக்கடனில் இருந்து மீளமுடியாதென்றால் இப்பிறவிக்குதான் என்ன பொருள்? அடுத்தபிறவிக்கு இன்னும்பெரிய கடனைத் திரட்டிவைத்துவிட்டு போவதற்காகத்தான் இப்போது பிறந்திருக்கிறேனா?”
குந்தி பேச வாயெடுப்பதற்குள் அனகை “அரசே, நான் தங்களிடம் பேசவிருந்த செய்திக்கான தருணத்தை தாங்களே உருவாக்கியளித்துள்ளீர்கள்…” என்றாள். “தொல்நூல்கள் வகுத்தபடி நீர், நெருப்பு, காற்று, மண், வான் போல குழந்தையும் இயற்கையின் அழிவில்லாத முதலிருப்புகளில் ஒன்று. ஆகவே மண்ணில் பிறந்துவிட்ட அத்தனை குழந்தைகளையும் மானுடகுலம் முழுமனதுடன் உவந்து ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அது எவ்வகையில் எவரால் பெறப்பட்டிருந்தாலும் அது தெய்வங்களால் பேணப்படுவதே. எங்கு பிறந்திருந்தாலும் மூதாதையரால் வாழ்த்தப்படுவதே. ஒரு குழந்தையை விலக்கும் கரம் உறவுகளை மூதாதையரை தெய்வங்களை விலக்குகிறது” என்றாள்.
“அரசே, மைந்தர்கள் என்பவர்கள் தன் குருதியில் தன் மனைவியின் வயிற்றில் பிறந்தவர்கள் மட்டும் அல்ல” என்றாள் அனகை. “மண்ணில் பிறந்த குழந்தைகளில் எதை ஒருவன் இது என் குழந்தை என எண்ணி அகம் கனிந்து தந்தையாகிறானோ அவனுக்கு அது அக்கணமே மைந்தனாகிறது. அவனுடைய மூதாதையர் அக்கணமே சிரிக்கும் விழிகளுடன் நீத்தாருலகை விட்டு வந்து அவனைச் சூழ்ந்துகொள்கிறார்கள். அவர்களின் வாழ்த்துக்கள் அம்மைந்தனை காத்து நிறைகின்றன” அனகை சொன்னாள்.
“அரசே, மைந்தர்கள் பன்னிரு வகை. தன் மனைவியிடம் தனக்குப்பிறந்தவன் ஔரசன் எனப்படுகிறான். தன் மனைவியை தன் அனுமதியுடன் உயர்ந்தவர்களிடம் அனுப்பி கருவுறச்செய்து பெறப்பட்டவன் ஷேத்ரஜன். இன்னொரு குடும்பத்தில் இருந்து உரியமுறையில் தத்து எடுத்துக்கொள்ளப்பட்டவன் தத்தன். தன்னால் மனம்கனிந்து மகனாக ஏற்றுக்கொள்ளப்பட்டவன் கிருத்ரிமன், மனைவி அவள் விருப்பப்படி இன்னொருவனைக் கூடிப்பெற்ற குழந்தை கூடோத்பன்னன். உரியமுறையில் காணிக்கைகொடுத்து நாடோடி ஒருவனிடம் மனைவியை அனுப்பி பெறப்பட்டவன் அபவித்தன். இந்த ஆறு மைந்தர்களும் அனைத்துவகையிலும் மைந்தர்களே. தந்தையின் உடைமைக்கும் குலத்துக்கும் உரிமைகொண்டவர்கள் அவர்கள். தந்தைக்கும் மூதாதையருக்கும் முறையான அனைத்து நீர்க்கடன்களையும் செய்ய உரிமையும் பொறுப்பும் கொண்டவர்கள். அவர்களை மைந்தர்களல்ல என்று விலக்க எந்நூலும் ஒப்புக்கொள்வதில்லை.”
“இன்னும் ஆறுவகை மைந்தர்கள் உள்ளனர். மனைவி தன்னை மணப்பதற்கு முன் பெற்றுக்கொண்டவன் கானீனன். தன்மனைவி தன்னைப்பிரிந்துசென்று செய்துகொண்ட இரண்டாவது திருமணத்தில் இன்னொருவனுக்குப் பிறந்தவன் பௌனர்ப்பவன். நான் உனக்கு மைந்தனாக இருக்கிறேன் என்று தேடி வந்தவன் ஸ்வயம்தத்தன். மைந்தனாக விலைகொடுத்து வாங்கப்பட்டவன் கிரீதன். கர்ப்பிணியாக மணம்புரிந்துகொள்ளப்பட்ட மனைவியின் வயிற்றிலிருந்தவன் சகோடன். ஒழுக்கமீறலினால் தனக்கு பிறபெண்களிடம் பிறந்த பாரசரவன். அவர்களும் மைந்தர்களே. எக்குலத்தில் பிறந்தாலும், எத்தகைய ஒழுக்கமுள்ள பெண்ணிடம் பிறந்திருந்தாலும் தன் குருதியில் பிறந்த மகவு தன் மைந்தனே. அவனை ஏற்கமறுப்பது மூதாதையர் பழிக்கும் பெரும் பாவமாகும். இவர்கள் அனைத்து நீத்தார்கடன்களுக்கும் உரிமைகொண்ட மைந்தர்கள். மூதாதையரால் நீர்பெற்று வாழ்த்தப்படுபவர்கள். அவர்களுக்கு தந்தை மனமுவந்து அளிக்காவிட்டால் நாட்டுரிமையும் சொத்துரிமையும் இல்லை என்பது மட்டுமே வேறுபாடு” என்றாள் அனகை.
“உங்கள் குலத்திலேயே சிறந்த முன்னுதாரணங்கள் உள்ளன அரசே. முன்பு கேகயதேசத்து அரசனாகிய சாரதண்டாயனி என்னும் அரசனுக்கு மைந்தர்கள் பிறக்கவில்லை. ஆகவே அவன் தன் மனைவியிடம் தன் மூதாதையர் நிறைவுற மைந்தர்களைப் பெற்றுத்தரும்படிச் சொன்னான். அவள் ஆன்றோர் வாக்குப்படி இரவில் நான்கு சாலைகள் கூடுமிடத்துக்கு வந்துநின்று அங்கே தன் மனதைக் கவர்ந்த பிராமணப் பயணி ஒருவனைக் கண்டுகொண்டாள். பும்ஸவனம் என்னும் சடங்கில் நெருப்பை அவியளித்து வணங்கி மைந்தன் பிறக்கவேண்டுமென்று கோரியபின் அவனுடன் வாழ்ந்தாள். அவனிடமிருந்து மூன்று மாவீரர்களை மைந்தர்களாக அவள் பெற்றாள். அவ்வண்ணம் அவனை நரகத்திலிருந்தும் அவன் நாட்டை எதிரிகளிடமிருந்தும் காத்தாள்.”
“அரசே, நீர் அனைத்து விதைகளையும் மரமாக்குகிறது. மழையாகப்பொழிகிறது. ஓடைகளாகவும் நதிகளாகவும் வருகிறது. ஏரிகளாக நிறைகிறது. அத்துடன் காலுக்கு அடியில் ஊறி நிறைந்திருக்கிறது. கண்ணுக்குத் தெரிந்த நீராலும் தெரியாத நீராலும் பாலிக்கப்படுவதே இவ்வுலகு. தாய்மையும் அவ்வண்ணம்தான். தாய்மையை அறியாதவன் காமத்தை அறிவதில்லை. காமம் வழியாக தாய்மையை அறிபவரும் எவருமில்லை” என்று அனகை சொன்னாள்.
பாண்டு நடுங்கும் கைகளால் தன் தலையைப் பற்றினான். அவனுள் உருப்பெறாத எண்ணங்களைச் சொற்களாக்க முயல்பவை போல அந்தக்கைகள் தலைக்கும் மார்புக்குமாக அலைபாய்ந்தன. பின்பு அவன் பாய்ந்து எழுந்து “ஆம், அதுதான் உகந்த வழி… அனகை, நீ கற்றவள். சொல்லும் நூலும் நெறியும் முறையும் அறிந்தவள். நீ சொன்னதைப்போல சிறந்தவழி வேறொன்றில்லை…”
தன் தலையை கையால் தட்டிக்கொண்டான். “இந்த நோயுடலை நான் வெறுக்கிறேன் என்னும்போது இதிலிருந்துதான் எனக்கு மைந்தன் பிறக்கவேண்டுமென்று எண்ணுவதைப்போல பேதைமை வேறென்ன? வேண்டாம்… பிருதை நீ என் மனைவி. நெருப்பையும் மூதாதையரையும் சான்றாக்கி நான் கட்டிய மங்கலநாண் உன் கழுத்தில் இருக்கும்வரை உன் மைந்தன் எனக்கும் என் மூதாதையருக்கும் மைந்தனே” என்றான். “எனக்கு உன்னைப்போல ஆற்றலும் அறிவும் கொண்ட மனைவி அமைந்தது என்னை மூதாதையர் வாழ்த்தியமையால்தான். என்னை அவர்களிடம் கொண்டுசேர்க்கும் மைந்தர்கள் பிறப்பதற்காகத்தான்.”
தன் இரு கைகளையும் விரித்து ஆட்டியபடி நெடுந்தொலைவு ஓடிவந்தவனைப்போல மூச்சுஇரைக்க பாண்டு சொன்னான் “போதும்… இதற்குமேல் எதையுமே சிந்திக்க வேண்டியதில்லை. பிருதை நீ இக்கணமே சென்று உன் மனம் விரும்பிய ஒருவருடன் கூடி எனக்கு ஒரு மைந்தனைப் பெற்றுக்கொடு!” அவன் உடனே மலர்ந்து சிரித்தான். “இப்போது சொல்கிறேனே, இவ்வுலகில் நான் எதையாவது விழைகிறேன் என்றால் அது மைந்தனைத்தான். தெய்வங்களும், விண்ணுலகமும், முக்தியும், அரசும், வெற்றியும், புகழும், செல்வமுமெல்லாம் எவருக்கு வேண்டும்? எனக்கு வேண்டியது என் கையை நிறைக்கும் மைந்தன்… ஒவ்வொருநாளும் நான் கனவில் காண்பவன் என் மைந்தனே!”
“அரசே, எனக்கு முன்னரே ஒரு மைந்தன் இருக்கிறான்” என்றாள் குந்தி. மாத்ரி திகைத்து எழுந்து நின்றுவிட்டாள். பாண்டு “என்ன சொல்கிறாய்?” என்றான். “ஆம், அரசே. எங்கள் குலவழக்கப்படி மணமுடிப்பதற்குமுன் மைந்தரைப்பெறுவது பிழையல்ல. நான் எனக்கு துர்வாச முனிவரளித்த அருள்மொழியை இளமையின் துடுக்கு காரணமாக சோதித்துப்பார்த்தேன்” என்றாள் குந்தி.
பாண்டு மெல்ல அமர்ந்துகொண்டு “சொல்” என்றான். அவன் கண்களை நோக்கியபோது குந்தி ஒருகணம் தயங்கினாள். உடனே அந்தத் தயக்கத்தை வென்று, அவனைக் கூர்ந்து நோக்கியபடி சொல்லத்தொடங்கினாள். ஒவ்வொரு முறை சொல்லும்போதும் அந்தவாழ்க்கையை மீண்டும் வாழ்வதுபோல உணர்ந்தாள். அந்த கணங்களை அவள் சொற்கள் தொட்டுத்தொட்டுச் சேர்த்தன.
அவன் முகம் மாறவில்லை. கண்கள் கதைகேட்கும் சிறுவனுடையதுபோல விரிந்திருந்தன. அவள் சொல்லிமுடித்ததும் அவன் பெருமூச்சுடன் “ஆம், அவன்தான் என் மைந்தன். இளங்கதிரவன். அவனைத்தேடிக்கொண்டுவர அஸ்தினபுரியின் ஒற்றர்படைகள் அனைத்தையும் அனுப்புகிறேன். அவன் வந்ததும் என் மணிமுடியை அவன் காலடியில் வைக்கிறேன்” என்றான்.
அவன் கண்களில் மிகச்சிறிய ஓர் அசைவு வந்துமறைந்ததை குந்தி கண்டாள். “அவன் மாத்ரநாட்டு சல்லியனின் மைந்தன் அல்லவா?” என்றான். குந்தி “அவன் சூரியமைந்தன். மானுடர் எவராக இருந்தாலென்ன?” என்றாள்.
“ஆம், எவராக இருந்தாலென்ன? பிருதை, அவன் வரட்டும். என் முழுப்படைகளையும் அவனைத்தேட அனுப்புகிறேன்… ஆனால் இப்போது எனக்கு ஒரு மைந்தன் வேண்டும். அவனைத் தேடிக்கண்டடைவதுவரை என்னால் காத்திருக்கமுடியாது. என் மைந்தன் கருவறை புகுவதை வயிற்றில் வளர்வதை குருதிவாசனையுடன் பிறந்து ஒளியைப் பார்த்துச் சிரிப்பதை நான் பார்க்கவேண்டும்… நான் எவ்வளவு நாள் வாழ்வேன் என்று தெரியாது. ஆகவே காத்திருக்க எனக்குப்பொறுமை இல்லை” என்றான். “நான் கனவுகாணும் குழந்தைக்கால்களும் குருத்துக்கைகளும் என் மடியை நிறைக்கவேண்டும் பிருதை.”
“என்ன சொல்கிறீர்கள்?” என்று பிருதை உரத்த படபடப்பான குரலில் கேட்டாள். “உன் குலநெறியும் முன்னைநூல்நெறியும் ஒப்புகின்றன. உன்னிடம் துர்வாசரின் சொல் உள்ளது. அதைக்கொண்டு எனக்கு உடனே ஒரு மைந்தனைக் கொடு. அஸ்தினபுரியை ஆளப்போகும் என் மைந்தன் மாவீரன் என்றாய். அப்படியென்றால் அவனருகே நின்று அறமுரைக்கும் ஒரு இளையவன் அவனுக்குத்தேவை. என் தம்பி விதுரனைப்போன்ற ஒருவன். அவனைப் பெற்றுக்கொடு!”
அவனால் கால்தரித்து நிற்கமுடியவில்லை. முற்றத்தில் நிலையழிந்து சுற்றிவந்தான். “ஆம், இன்று கருநிலவு நாள். தருமதேவனுக்குரிய இரவு. பிருதை நீ இன்றே உன் முனிவர் சொல்லின் வல்லமையால் தருமதேவனை வரவழை. எனக்கொரு மைந்தனைக் கொடு!” அனகை திகைத்தவளாக குந்தியைப் பார்த்தாள். குந்தி திகைத்து “இல்லை, அரசே என்னை வற்புறுத்தாதீர்கள்… நான் மீண்டும் அவ்வனுபவம் வழியாகச் செல்லவிழையவில்லை” என்றாள்.
“ஏன்? மகத்தான மைந்தன் ஒருவனைப் பெறும் தருணமல்லவா அது?” என்றான் பாண்டு. “ஆம், ஆனால் நான் வெறும் பாத்திரமாக ஆகும் தருணமும் கூட. என் பெண்மை அவமதிப்புக்குள்ளாகிறது… இப்போது தெரிகிறது, ஏன் என் மைந்தனை முதற்கணம் வெறுத்தேன் என. அதிலிருக்கும் அவமதிப்பை என் ஆன்மா ஏற்கமறுக்கிறது. இப்போது தாங்கள் சொன்னபோதும் அதே கூச்சத்தையே அடைந்தேன்” என்றாள் குந்தி.
“பிருதை, நான் உன்னிடம் கேட்கும் அன்பு என்பது ஒரு மைந்தனாக மட்டுமே என்னிடம் வரமுடியும்… என் துணைவியாக வேறெதையும் நீ எனக்கு அளிக்கமுடியாது” என்றான் பாண்டு. குந்தி மாட்டேன் என்பதுபோல தலையை ஆட்டி “அரசே” என ஏதோ சொல்ல வர பாண்டு சட்டென்று குனிந்து அவள் பாதங்களைத் தொட்டான். “கணவனாக நான் ஆணையிடவில்லை பிருதை… வாழ்க்கையில் எதையும் அடையாதவனாக இரக்கிறேன்… இது ஒன்றை எனக்குக்கொடு!” உடைந்து அழுதவளாக குந்தி நிலத்திலமர்ந்து அவன் தலையை தன்மார்பில் அணைத்துக்கொண்டாள்.
பெருமூச்சுகளுடன் பாண்டு முற்றத்தில் பீடத்தில் மரவுரியை விரித்து மல்லாந்து படுத்துக்கொண்டு வானைப்பார்த்திருக்க குந்தி குடிலுக்குள் புகுந்து “நான் கிளம்புகிறேன் அனகை. என்னுடன் வா” என்றாள். “எங்கே தேவி?” என்றாள் அனகை. “தென்திசை நோக்கி… அதுதான் தருமதேவனுக்குரியது…” அவள் குடிலருகே ஓடிய சிற்றோடையில் நீராடி ஆடையை மாற்றி நறுமணவேர்ப்பொடியை கூந்தலில் அணிந்துகொண்டு கிளம்பினாள். மாத்ரி எழுந்து பந்தத்தின் அடியில் நின்று திகைத்த விழிகளுடன் பார்த்தாள். குந்தி படுத்திருந்த பாண்டுவை திரும்பிப்பாராமல் நடந்தாள்.
தென்திசையும் ஏரியைநோக்கித்தான் சென்றது. ஒற்றையடிப்பாதை இருளில் கண் பழகியபோது கருங்கூந்தலில் வகிடுபோலத் தெரியத்தொடங்கியது. அனகை பாம்புகளைத் துரத்த வலுவாக காலடி வைத்து நடந்தாள். தொலைவில் இந்திரத்யும்னம் கரியபளபளப்பாக அசைந்துகொண்டிருந்தது. அதன்மேல் வெண்ணிறமான அன்னங்கள் சில மிதப்பது புள்ளிகளாகத் தெரிந்தது.
குந்தி கைகாட்டி “நீ இங்கேயே நின்றுகொள்” என்றாள். “யார் தேவி?” என்றாள் அனகை. “தெரியவில்லை. யாராக இருந்தாலென்ன? இவ்விரவின் தனிமையில் தென்திசைநோக்கி தனித்திருக்க வந்தவர் தவசீலராகவே இருக்கவேண்டும். அவரை தர்மதேவன் தன் ஊர்தியாகக் கொள்வானென்றே எண்ணுகிறேன்” என்றாள். அனகை பெருமூச்சுடன் அங்கே ஒரு தேவதாருவின் கீழே நின்றுகொண்டாள். குந்தி தயக்கமேயற்றவளாக ஒற்றையடிப்பாதையில் நடந்து சென்றாள். ஏரியின் நீரொளியில் அவளுடைய நிழல்தோற்றம் தெரிந்தது. அவளுடைய காதோரச் சுரிகுழலின் ஒவ்வொரு முடியையும் பார்க்கமுடியுமெனத் தோன்றியது.
அவள் சென்று மறைந்தபின் அப்பகுதியின் ஒளி குறைவதுபோல அனகை எண்ணினாள். ஒன்றும் நிகழாத கணங்கள் நீண்டு நீண்டு சென்றபோது இரவே நிகழ்ந்து முடியப்போவதுபோலப் பட்டது. பின்னர் அப்பால் பெருமூச்சொலி போல, இலைக்கூட்டம் காற்று வீசுவது போல ஏதோ கேட்டது. ஓர் ஆண்குரல் பேசுவதும் பிருதை பதிலிறுப்பதும் கேட்டதா தானே எண்ணிக்கொண்டதா என்று அனகை திகைத்தாள். மூச்சுவிட முடியாமல் அகம் கல்லாக மாறியிருப்பதுபோலத் தோன்றியது.
யமனுக்கான இரவை நெடுந்தொலைவில் யாரோ வேதமந்திரத்தால் வாழ்த்திக்கொண்டிருந்தனர். அங்கிருந்து செவிகூர்ந்தபோது வேதத்தின் சந்தத்தை மட்டுமே கேட்கமுடிந்தது. அலையலையாக எழுந்து அடங்கிக்கொண்டிருந்த குரல்தொகையில் ஏழுபேர் இருக்கலாமென்று தோன்றியது.
அப்போது அவள் கனத்த மூச்சொலி ஒன்றைக் கேட்டாள். பாம்பு சீறுவதுபோன்ற ஒலி. அது மரங்களின் ஒலியா? பாம்பேதானா? அவளுக்கு அரசநாகத்தைப் பார்த்த நினைவெழுந்து மெய்சிலிர்த்தது. ஓடிவிடலாமென்ற எண்ணம் எழுந்தது. அப்போது செவிகள் அடிபடும் ஒலியைக் கேட்டாள். ஆம், பசுதான். ஆனால் அது எங்கிருக்கிறது. அந்த எண்ணம் வந்தபின் மாட்டின் வாசனையையும் உணர்ந்தாள். மீண்டும் மூச்சொலி. கனத்த குளம்பு ஒன்று மண்ணை மிதிக்கும் ஒலி. மீண்டும் காதுகள் அடிபடும் ஒலி.
அனகை புதருக்கு அப்பால் அது நிற்பதைக் கண்டுவிட்டாள். கருமைக்குள் கருமை என அது நின்றது. அதை அவள் கண்கள் பார்க்கவில்லை, கண்ணாகிநின்ற கருத்தே பார்த்தது என்று தோன்றியது. கழியை முன்னால் நீட்டியபடி அவள் நெருங்கிச்சென்றாள். அங்கே இரு சிறிய மரக்கன்றுகளுக்கு அப்பால் அவள் ஓர் எருமைக்கடாவைக் கண்டாள். ஏரியின் கரியநீர் பளபளப்பதுபோல அதன் புட்டங்களின் வழவழப்பு ஒளிவிட்டது. வாலின் சுழற்சி தெரிந்தது. ஒரு சிறு பறவை பறந்து சுற்றுவதுபோல வால்முடி காற்றில்பறந்தது. கனத்த கொம்புகள் வளைந்து தோளைத் தொட்டிருந்தன.
அனகை ஓசையில்லாமல் கால்களை மெல்ல எடுத்துவைத்து பக்கவாட்டில் நடந்தாள். எருமைக்கடாவின் முகத்தை நன்றாகவே பார்க்கமுடிந்தது. நீலநிறமான வைரம் போல அதன் விழிகள் ஒளிவிடுவதைப் பார்த்தபடி நின்றாள்.
ஏரியின் தென்மேற்குக்கரையில் நெருப்பை மூட்டி சுற்றி அமர்ந்து கௌதமரின் மூன்று மைந்தர்களான ஏகதன், துவிதன், திரிதன் ஆகியோர் நண்பர்களுடன் வேதமோதிக்கொண்டிருந்தனர்.
பலிகளனைத்தைக்கொண்டும்
யமனை, பேரரசனை,
விவஸ்வாவின் மைந்தனை,
மானுடரை ஒன்றுதிரட்டுபவனை,
தலைக்குமேல் விரிந்த
மகத்தான உயரங்களில் செல்பவனை,
வழிதேடுபவனை,
வழிகாட்டுபவனை,
வணங்குகிறேன்.
யமன்
நாங்கள் குடியமர ஓரிடத்தை
முதலில் அளித்தான்.
இந்த இனியபுல்வெளி
எங்களிடமிருந்து
ஒருபோதும் விலகாதிருப்பதாக!
மண்ணில்பிறந்தவர்களே
உங்கள் கால்கள்
மறைந்த மூதாதையரைச்
சென்றடையும் வழிகளைத்
தேடிக் கண்டடையட்டும்!
காவியங்களுடன் இணைந்து வளரட்டும்!
நட்பின் தெய்வம் மிதாலி.
அங்கிரஸின் மைந்தர்களுக்கும் யமனுக்கும்,
பிரகஸ்பதிக்கும் ரிக்வானுக்கும் நடுவே
அன்பு வளரட்டும்.
தெய்வங்களை மேலெழுப்புக!
தெய்வங்கள் நம்மை மேலெழுப்பட்டும்!
மகிழட்டும் விண்ணகத்தோர்!
சிலர் வாழ்த்துக்களால்
சிலர் பலிகளினால்!
யமனே வருக!
இந்த தருப்பைப்புல் இருக்கையில் அமர்க!
யம தேவனே,
அங்கிரஸ் மற்றும் மூதாதையர்
துணையுடன் பீடம் கொள்க!
முனிவர்கள் இசைக்கும்
இப்பாடல் வரிகள்
உன்னை எங்களிடம் கொணர்க!
யமதேவனே, அறத்தோனே,
இந்தத் தூய பலி
உன்னை மகிழ்விப்பதாக!