இலையப்பம்

பலவிதமான இலையப்பங்கள் குமரிமாவட்டத்து சமையலில் உண்டு. பழங்குடித்தனமான பலகாரங்கள் அவை என்று சொல்லலாம். எளிமையானவை. பெரும்பாலும் பச்சரிசி, வெல்லம் போன்ற அடிப்படையான சில பொருட்களால் ஆனவை. இன்றும்கூட அவை நீடிப்பதற்குக் காரணம் அவை தெய்வங்களுக்கு படையலாக உள்ளன என்பதுதான்.

இலையப்பங்களில் பொதுவாக இரு வகை உண்டு. சுடுபவை. அவிப்பவை. எளிமையாகச் சொன்னால் இலையில் மாவை வைத்துச் சமைக்கும் எல்லா அப்பங்களும் இலையப்பங்களே. இலையாக வாழை இலை, நவரஇலை , தென்னையின் குருத்தோலை, குடைப்பனையின் குருத்தோலை, பலாமரத்து இலை, பூவரசிலை போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. தெரளி இலை போல நறுமண இலைகள் அபூர்வமாக பயன்படுகின்றன

 

பச்சரிசி மாவில் தேங்காய்த்துருவல் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து இலையில் வைத்து அடுக்கி விறகுக்கனலில் சுட்டு எடுக்கும் இலையப்பம் மாதி, குளிகன் போன்ற மலைதெய்வங்களுக்குப் பிரியமானது. மாவுடன்  எள் சேர்த்து பிசையப்படும். வெந்தயம் சேர்த்து பிசைவதுமுண்டு. இஞ்சி நறுமணத்திற்காக சேர்த்துக்கொள்வதுண்டு. சுட்ட அப்பம் லேசாக இலை கரிந்து கடினமாக இருக்கும்.

பொதுவாக சுடப்படும் அப்பங்களில் வெல்லம் சேர்ப்பதில்லை. உயர்தரப் பச்சரிசி என்றால் பச்சரியின் வெந்த வாசனையும் ருசியுமே இப்பலகாரங்களை சிறப்பாக ஆக்கிவிடும். ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு வகையில் செய்கிறார்கள். பலசமயம் மலைதெய்வங்களுக்கு உப்பு சேர்க்காத அப்பங்களே படைக்கப்படுகின்றன.

மந்திரவாதச் சடங்குகளுக்கு அரிசிமாவு மட்டுமே சுட்டு எடுக்கும் அப்பங்கள் உண்டு. அவை வினோதமான ஒரு ருசி கொண்டிருக்கும். அரிசிமாவுக்குள் பச்சை மாமிசம் வைத்து அப்படியே சுட்டு எடுத்து ஜேஷ்டாதேவிக்கு [மூதேவி, அக்காள்] படைப்பார்கள். அதுவும் விசித்திரமான ஒரு ருசி கொண்டிருக்கும்.

பழங்குடிகளுக்கும் கார்த்திகை தீபம் முக்கியமானது. அரிசிமாவுடன் தேங்காய் கலன்ந்து தென்னங்குருத்துக்களில் சுருட்டி வைத்து சொக்கப்பனை நெருப்பிலேயே சுட்டு உண்பார்கள். அதற்கு சில இடங்களில் சுருளப்பம் என்று பெயர்.

அவிக்கும் இலையப்பங்களில் பச்சரிசி மாவுடன் வெல்லமும் தேங்காயும் சேர்க்கப்படுகிறது. உப்பும் தேங்காயும் சேர்த்து அவிப்பதும் உண்டு. மாவுடன் கதலிவாழைப்பழம் சேர்த்து பிசைந்து அவிக்கப்படும் அப்பம் பகவதி கோயில்களில் படைக்கப்படுகிறது. நறுமணத்திற்காக ஏலக்காய் சேர்க்கப்படும். இஞ்சி சேர்ப்பதும் உண்டு.

இன்று கார்த்திகை. அருண்மொழி ஊரில் இல்லை. மீண்டும் மதுரையில் ஒரு பயிற்சி. கார்த்திகைக்கு சைதன்யாவே விளக்கு வைப்பதாகச் சொன்னாள். அவளே முற்றத்தைக் கூட்டி பீங்கான் அகல்களில் எண்ணையும் திரியும் விட்டு விளக்கு வைத்தாள். நான் அப்பம் செய்யலாமென எண்ணினேன். பல வருடங்களுக்கு முன்னர் ஒரு பகவதிகோயிலில் சாப்பிட்ட அப்பம் மனதில் எழுந்தது. அதில் அரிசிமாவை தேங்காய்ப்பால் விட்டு பிசைந்தார்கள்.

பொதுவாக தேங்காய்ப்பால் பயன்படுத்தப்படும் எதிலும் பதிலுக்கு பசும்பாலை பயன்படுத்தலாம். துணிந்து பசும்பால்விட்டு பச்சரிசி மாவை பிசைந்தேன். கூடவே ஏழெட்டு கதலிப்பழங்களையும் சேர்த்தேன். மாவை நன்றாக ஊறி உப்ப வைத்துவிட்டு  வெல்லப்பாகு காய்ச்சி கொஞ்சம் சுக்கு, கொஞ்சம் ஏலக்காய் கலந்து அதில்விட்டு கெட்டியாகப் பிசைந்தேன்.

வாழை இலைத்துண்டுகளில் பச்சரிசி மாவைப் பரப்பி தேங்காய்த்துருவலுடன் வெல்லம் சேர்த்த பூரணத்தை உள்ளே வைத்து இலையை மடித்து இட்லி பாத்திரத்தில் வைத்து அவித்தேன். மணம் எழுந்தபோதே நன்றாக வந்துவிட்டது என்று தெரிந்தது. அப்போது ·போன் அடித்தது. அருண்மொழிதான்.

”என்ன கார்த்திகையா?” என்றாள். ”ஆமாம்..” என்றேன். ”என்ன செய்கிறாய்?” நான் அப்பத்தைப் பற்றிச் சொன்னேன். ”நெஜம்மாவே வாய்ல எச்சி ஊறுது ஜெயன்…” என்று ஏங்கினாள்.

சூடாகச் சாப்பிட்ட போது இலையப்பம் அபாரமாக இருந்தது. பொதுவாக தெய்வங்கள் எதற்குமே பசும்பாலால் ஆன உணவுகளை படைப்பதில்லை. காய்ச்சியபாலையே கடவுள்களுக்குப் படைப்பது கூடாது என மரபு. சரி, கார்த்திகைப் பலகாரம்தானே, படையல் இல்லையே என்று சமாதானம் செய்துகொண்டேன்.

அழகம் பெருமாளும் சுகாவும் திருவண்ணாமலை தீபம் பார்க்கச் சென்று மலையடிவாரத்தில் இருப்பதாக குறுஞ்செய்தி வந்தது. அண்ணாமலை உச்சியில் எழும் சுடரைக் கற்பனையில் எண்ணிக் கொண்டேன்.

வெளியே எல்லா வீடுகளிலும் தீபங்கள் எரிந்துகொண்டிருந்தன. இன்றைக்கு பார்த்து காற்றே இல்லை. தீபச்சுடர்கள் அசையாமல் எரியும் தியானம் மிக அழகான ஒரு காட்சி.

மறுபிரசுரம் முதற்பிரசுரம் நவம்பர் 2009

முந்தைய கட்டுரைமின்தமிழ் பேட்டி-கடிதம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 57