இடது அறிவியக்கமும் இந்துத்துவ அறிவியக்கமும்

அன்புள்ள ஜெ,

உங்கள் “ஜோ – சில வினாக்கள்” படித்தேன். அதில் அழுத்தமான பகுதி நீங்கள் இந்துத்துவ அறிவியக்கத்தின் வெற்றிடத்தைச் சுட்டிக்காட்டுவது தான்.

“இந்தியாவின் வலதுசாரி அமைப்பான பாரதியஜனதாக் கட்சியும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் அடிப்படையில் அறிவார்ந்த அடித்தளம் அற்றவை. வெறும் தொண்டர் அரசியல் கொண்டவை. அறிவார்ந்த செயல்பாடுகள் மேல் ஈடுபாடோ அறிவுஜீவிகள் மேல் மரியாதையோ அறிவியக்கம் பற்றிய நவீன நோக்கோ , கருத்துக்களில் விரிந்த பார்வையோ, அடிப்படைச் சமநிலையோ அவர்களுக்கு இல்லை. தங்கள் கோஷங்களை எதிரொலிப்பவர்களை மட்டுமே அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியும்.

அத்துடன் அவர்களிடமிருக்கும் அறிவுப்புலம் என்பது மிகமிகப் பழைமையானது. பெரும்பாலும் பிராமண மேட்டிமைவாதம்தான் அது. அவர்கள் நாளை அதிகாரத்துக்கு வந்தால்கூட மிகப்பழைமையான நோக்குள்ள சில பிராமணர்களை கல்வியமைப்புகளில் கொண்டுசென்று நிறுவி அவர்களை உளறவிட்டு தங்களை கேலிக்குரியவர்களாக ஆக்கிக்கொள்வார்கள். இன்றையநிலையில் அதற்கப்பால் செல்ல அவர்களால் இயலாது” என்று நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை .

இடதுசாரிகள் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான ஆய்வரங்கங்கள் நடத்துகிறார்கள். பல்கழைக்கழக துறைகள் பல அவர்கள் கைவசம். எம்.என்.ராய், டி.டி.கோஸாம்பி போன்ற ஜாம்பவான்களை ஆதர்சமாக கொண்டு இடது சாரி அறிவியக்கத்தை நீட்டித்து அறிவுத்துறையை முழுவதுமாக அவர்கள் கையகப்படுத்தியுள்ளனர்.

இதற்கு எதிராக இந்துத்துவம் எடுக்கும் நிலைப்பாடு பற்றி கேட்கவே வேண்டாம். நீங்கள் சுட்டிக் காட்டியுள்ளது போல முரளி மனோகர் ஜோஷி போன்றவர்கள் நடத்தை கோமாளித்தனமாகவே இருந்தது. இவர்கள் கையில் இந்திய கல்வி சிக்கினால் நம் எதிர்காலமே கேள்விக்குறி என்று மக்களை நம்ப வைக்க இடது சாரிகளுக்கு மிகச் சுலபமாக்கி விட்டது ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க கூட்டணி நடந்து கொண்ட விதம் தான். அந்த கடும் எதிர்ப்பைக் கண்டு வலது சாரிகள் எதிர் குரலில்லாமல் அமுங்கி விட்டனர். முக்கிய காரணம் அவர்களிடம் எந்த அறிவார்ந்த குரலும் இல்லை என்பது தான். விவேகானந்தர் கட்டி எழுப்பிய மகத்தான நவீன இந்து அறிவுத்தளத்தைக் கடாசி விட்டு அவர் செயல்பாட்டை மற்றும் காப்பியடித்து வெறும் கோஷ அரசியலாக மாற்றி விட்டனர். இடது சாரி தலைவர்கள் மார்க்ஸையாவது சிறிது படித்திருப்பார்கள். வலதுசாரித் தலைவர்களில் இந்திய வரலாறு, மெய்ஞ்ஞானம் பற்றி சிறிதளவாவது அறிந்தவர்கள் உண்டா என்பதே சந்தேகம் தான்.

எந்த ஒரு அறிவியக்கமும் இல்லாததினால் அவர்களால் இடது சாரி இயக்கத்தை எதிர்க்க தர்க்க ரீதியாக முடியவில்லை. அதனால் உதாசீனப் படுத்தப்பட்டு இடது சாரிகளின் நக்கலால் பெரும் தாழ்வு மனப்பான்மை கொண்டு அந்த தாழ்வு மனப்பான்மையை மறைக்க மூர்க்கமாக எதிர் வினையாற்றுகிறார்கள். சுயமான சிந்தனைகளை அளிக்க இயலாததால் இடது சாரிகளின் அறிவியக்கதிற்கு எதிராக எப்போதுமே கண்மூடித்தனமான மாற்று நிலைப்பாட்டையே எடுக்கிறார்கள்.அவர்கள் படும் அவமானம் எல்லாவற்றையும் சந்தேகத்துடனும் அச்சத்துடனும் பார்க்க வைக்கிறது. நான் பெரிதும் மதிக்கும் சிறந்த வாசிப்பறிவுடைய அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு போன்றவர்களின் எதிர் வினைகளே இதற்கு எடுத்துக் காட்டு. இந்துத்துவத்தின் மேல் விழும் எந்த ஒரு விமர்சனத்தையும் தனக்குரியதாக ஆக்கிக் கொண்டு ஆத்திரத்துடன் தான் எதிர் வினையாற்றுகிறார்கள்.

இந்துத்துவர்கள் இந்து ஞான மரபின் உரிமையாளர்களாக எப்போதும் ஆக முடியாது, ஆகவும் கூடாது. ஆனால் அவர்கள் இந்து மதத்தின் பன்முகத்தன்மையை , அதன் பாரம்பரியத்தை, பாரதவர்ஷத்தின் அடித்தளமான அதன் இருப்பை, பல துயர்களிலும் ஆறம் காக்கும் அதன் ஆற்றலை, அதன் பல நூற்றாண்டுக்கால சரிவை, சாதிப் புற்று நோயால் அதனில் எழுந்த மானுட துன்பத்தை , அதன் நவீனமயமாக்கலை, அதன் மகத்தான வேதாந்த அறிவுத்தளத்தை என்று அனைத்து முகங்களையும் ஒருங்கிணைத்து ஒரு அறிவியக்கத்தை தொடங்கினால் அது இடது சாரிகளுக்கு எதிரான முரணியக்கமாக அமையும். இரு சாராருமே அதனால் பயனடைவர். அதற்கு டி. டி.கோஸம்யின் மார்க்ஸிய வரலாற்றாய்வு நோக்கையும், விவேகானந்தரின் இந்து மதத்தை ஒருங்கிணைக்கும் பார்வையையும், காந்தியின் சமச்சீர்மையையும் அவர்கள் ஒருங்கிணைத்து அந்த அறிவுத்தளத்தைக் கட்டி எழுப்ப வேண்டும். பிராமண மேட்டிமைவாதமும் பழைய ஆச்சாரங்களும் அந்த அறிவியக்கத்தில் இருந்து விலக்கப்பட வேண்டும். எனக்கு என்னவோ அப்படி ஒன்று நடக்கப் போவதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. இந்திய அறிவியக்கத்தில்இடது சாரிகள் இன்னமும் பல்லாண்டு காலம் கோலோச்ச தான் போகிறார்கள் என்று தோன்றுகிறது.

அன்புடன்

சிவா – ஹியூஸ்டன்

அன்புள்ள சிவா,

இந்தியாவின் நவீனச்சிந்தனை என்பது ஐரோப்பியச் சிந்தனைமரபின் நேரடித்தாக்கத்தால் உருவானது. இந்தியாவை மறுகண்டுபிடிப்பு செய்ததும் ஐரோப்பிய சிந்தனைமரபுதான். அவர்களின் சாதனையை குறைத்துமதிப்பிடமுடியாது. மோனியர் வில்லியம்ஸ், குந்தர், ஷெர்பாட்ஸ்கி, ஆர்தர் ஆவலான், ஜெக்கோபி,ஆல்காட், மாக்ஸ் முல்லர் போன்ற பலரைச் சுட்டிக்காட்டலாம்.

மோனியர் வில்லியம்ஸ்
ஷெர்பாட்ஸ்கி
சர் ஜான் வுட்ரோஃப் [ஆர்தர் ஆவ்லான்]
மாக்ஸ்முல்லர்
ஹெர்மன் ஜெக்கோபி
ஆல்காட்

ஆனால் அந்த கோணத்தில் ஐரோப்பிய பார்வையின் குறுக்கல்நோக்கு உள்ளடங்கியிருப்பதை மெல்லமெல்ல உணர்ந்தபின்னர்தான் சுயமான இந்தியச் சிந்தனைக்கான குரல் எழுந்தது. அதன் தொடக்கப்புள்ளி விவேகானந்தர். இந்திய ஆன்மீகம், இந்திய இலக்கியம், இந்தியக் கலை ஆகியவற்றில் நாம் நம்முடைய தனித்தன்மையை கண்டுகொள்ளவும் வளர்க்கவும் அவர் அறைகூவல் விடுத்தார்.

அதன்பின் மெல்லமெல்ல இந்தியாவில் உருவாகிவந்த தேசியநோக்குள்ள பண்பாட்டு-வரலாற்று ஆய்வுக்கு பலகிளைகள். நாராயணகுருவின் இயக்கம் விவேகானந்தரின் நேரடியான செல்வாக்குள்ளது. காந்திய இயக்கத்திலும் பலர் விவேகானந்தரின் செல்வாக்கு கொண்டவர்கள். சுதந்திரம் கிடைக்கும் காலம் வரை இங்கிருந்தது இவ்விரு போக்குகள்தான். ஐரோப்பியநோக்கு மைய ஓட்டமாக இருந்தது, இந்தியதேசியப்பார்வைக்கான முயற்சி மாற்றுஓட்டமாக இருந்தது.

சுதந்திரத்தை ஒட்டிய மதக்கலவரங்கள் நேரு போன்றவர்களில் ஆழமான அவநம்பிக்கைகளை உருவாக்கின. இந்தியதேசியநோக்கு என்பது இந்துத்துவ அரசியலாக ஆகிவிடும் என அவர்கள் அஞ்சினர். ஐரோப்பிய நோக்குதான் இந்தியாவின் ஒற்றுமைக்கு உதவக்கூடியது என்ற எண்ணம் உருவானது.மேலும் நேரு அழுத்தமான ஐரோப்பிய நோக்கு கொண்டவர்.

ஆகவே சுதந்திர இந்தியாவின் கல்வி-பண்பாட்டுத்துறைகளில் முழுக்கமுழுக்க ஐரோப்பியநோக்கே முன்வைக்கப்பட்டது. இந்தியதேசிய அணுகுமுறை முழுமையாகவே நிராகரிக்கப்பட்டது. உதாரணமாக இந்தியாவின் சிந்தனைமுறையைத் தீர்மானிக்கும் ஆறுதரிசனங்கள் பற்றிய ஒரு வரி அறிமுகம்கூட இல்லாமல் ஒருவர் இங்கே மொழி- வரலாறு- பண்பாடு துறைகளில் பட்டம்பெற்றுவிடமுடியும். இது சாக்ரடீஸ், பிளேட்டோ பற்றி அறிமுகமில்லாமல் ஐரோப்பியன் பட்டம்பெறுவதற்கு நிகரானது

சுதந்திரத்துக்குப்பின் ஐரோப்பியப் பார்வையின் வளர்ச்சிநிலையாக இங்கே உருவானது இடதுசாரிப்பார்வை. அதன் முன்னோடிகளான எம்.என்.ராய், டி.டி.கோஸாமி ஆகியோர் தெளிவான ஐரோப்பியச் சார்புநிலை கொண்டவர்கள். அதுவே இன்றும் வலுவாக நீடிக்கிறது. அப்போதே கல்வித்துறைக்கு வெளியேத்தள்ளப்பட்ட தேசியநோக்கு அப்படியே தேய்ந்து ஒரு கண்காணா மரபாக, உதிரி முயற்சிகளாக நீடிக்கிறது.

இவ்வாறு தேசியநோக்கு புறக்கணிக்கப்பட்டு சூம்பிப்போயிற்று.ஐரோப்பியநோக்குள்ள இடதுசாரி அணுகுமுறை எங்கும் பீடமேறியது. விளைவாக ஐரோப்பியநோக்கின் குறுக்கல்வாதமும் முன்முடிவுகளும் முன்வைக்கப்படும்போது அதற்கு எதிராக வெறும் பாமரமூர்க்கம் மட்டுமே வெளிப்படுகிறது. இன்று ஐரோப்பியநோக்குள்ள மார்க்ஸியம் X தெருக்குண்டர் அரசியல் என்ற ஒரு இருமை இங்கே உருவாகிவந்துவிட்டது.

எம்.என்.ராய்
டி.டி.கோஸாம்பிi
தேபிபிரசாத் சட்டோபாத்யாய

ஐரோப்பியமைய நோக்கு இந்தியாவை குறுக்குகிறது, முன்முடிவுகளுடன் அணுகுகிறது. அத்துடன் அது நம்மை சிந்தனை அடிமைகளாக்குகிறது. அதற்கு எதிராக நமக்குத்தேவையாக இருப்பது ஒரு தேசியஅணுகுமுறை. இந்தியாவின் பண்பாட்டுமரபை, அறிவுமரபை ஒட்டி முன்னகர்வதைத்தான் தேசிய அணுகுமுறை என்கிறோம்

அதற்கு இந்தியசிந்தனை மரபுகளை முறையாக விரிவாக கற்கவேண்டும். அதன் அனைத்துத் தரப்புகளையும் சமநிலையில் அணுகவேண்டும். மதநம்பிக்கைகள், வழிபாட்டுமுறைகள், வட்டாரச்சார்புகள், குருகுலமுறைகள், சாதிமரபுகள், தத்துவநிலைபாடுகள் ஆகியவற்றைச் சாந்ந்த தன்னிலைகளை உதறி இந்தியாவின் மரபுகள் அனைத்தையும் தன்னுடையதாகக் கண்டு அனைத்தையும் உள்வாங்கி ஒரு நோக்கை உருவாக்கிக்கொள்ளவேண்டும். அது ஓர் ஆக்கபூர்வச் செயல்பாடாகவே இருக்கமுடியும், எதிர்மறைச் செயல்பாடாக இருக்கமுடியாது.

அந்த நோக்கு இங்குள்ள இந்துத்துவர்களிடம் இதுவரை இல்லை. ஆகவே அவர்கள் ஐரோப்பியவெறுப்பில் தொடங்கி மெல்லமெல்ல தாங்கள் சார்ந்துள்ள குழுவுக்கு வெளியே அனைவரையும் வெறுப்பதில் சென்று முடிகிறார்கள். இந்துத்துவர்களால் பௌத்ததையும் சமணத்தையுமே ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. ஒருமுறை இன்று பிரபலமாக உள்ள ஒரு ஆர்.எஸ்.எஸ்.-பாரதியஜனதாக் கட்சித் தலைவரிடம் பேசும்போது நாத்திகமும் இந்துசிந்தனையின் ஒரு அம்சமே, சார்வாகரில் தொடங்கி பலவகை இந்துநாத்திக மரபுகள் உண்டு என்று சொன்னேன். ‘ஆம், ஆனால் அவர்கள் எல்லாம் அசுரர்கள், அவர்களை பகவான் வதம்செய்தார்’ என்றார். இவர்கள்தான் இங்கே மாற்றுத்தரப்பாக செயல்படுகின்றனர்.

இந்தியசிந்தனை என்பது நாத்திகசிந்தனை மட்டும்தான் அதை எதிர்த்தவை நசிவுப்போக்குகள் என்ற கடும்நிலைபாட்டைப் பிரச்சாரம் செய்யும் தேபிபிரசாத் சட்டோபாத்யாயவின் மார்க்ஸியநோக்குக்கு மிகமிக உதவியானவர் யார்? மேலே சொன்ன பாரதியஜனதா தலைவர்தான். ஆகவேதான் இடதுசாரிகள் இந்துசிந்தனை என்றால் அது இந்துத்துவசிந்தனையாகவே இருக்கமுடியும் என்று சொல்கிறார்கள். எதிர்ப்பவர்களை எல்லாம் இந்துத்துவர் என்று முத்திரைகுத்தியபின் இந்துத்துவர்களை அடிக்க அவர்களிடமிருக்கும் வழக்கமான ஆயுதங்களைக் கையிலெடுக்கிறார்கள்

விவேகானந்தர்
நடராஜகுரு
நித்ய சைதன்ய யதி

ஆகவே இன்றையதேவை ஐரோப்பியநோக்கின் சாதனைகளை கருத்தில்கொண்டு அதிலிருந்து விலகி சுயமாகச் சிந்திக்கமுடியுமா என்று பார்ப்பது. இந்துத்துவம் என்றபேரில் இந்தியசிந்தனைமரபை எளிய அரசியல் வாய்ப்பாடுகளாக குறுக்குவதற்கு முற்றிலும் எதிரான நிலைபாட்டை எடுப்பது.இந்தியசிந்தனைமரபின் அனைத்துக்கூறுகளையும் [இந்து,பௌத்தம்,சமணம்,சீக்கியம்,சூஃபி இஸ்லாம்] உள்வாங்கிக்கொண்டு சிந்திப்பது. எந்நிலையிலும் ஆக்கபூர்வமாக மட்டுமே யோசிப்பது

இன்று அனைத்துத் தரப்புகளிலிருந்தும் தாக்குதல் அடைந்து திகைத்து நிற்கும் ஒரு சிந்தனைமரபு இது. ஒருபக்கம் இடதுசாரிகள் இதை ஒரு இந்துத்துவநோக்கு என முத்திரையிட்டு வசைபாடுவார்கள். இன்னொருபக்கம் இந்துத்துவர்கள் இதை சமரசப்போக்கு என்றும் நசிவுப்போக்கு என்றும் இடதுசாரிப்போக்கு என்றும் சொல்வார்கள். இருசாராருமே மனம்குறுகிய அரசியல்வாதிகள்.

அவற்றை மீறிச் செயல்படமுடியும் என நடராஜகுருவின் நித்ய சைதன்ய யதியின் குருமரபு நிரூபித்துள்ளது. இந்தியசிந்தனைமரபை உறுதியாகவே தழுவி நவீன விவாதக்களத்தில் ஒரு வலுவான விவாதத்தரப்பை அது உருவாக்கியிருக்கிறது. நூற்றுக்கணக்கான நூல்கள் வழியாக அதை தொடந்து நிலைநாட்டி வருகிறது

ஜெ

முந்தைய கட்டுரைவைரஸ் எச்சரிக்கை – சரிசெய்யப்பட்டது
அடுத்த கட்டுரைஜெ.சைதன்யா :ஓர் எளிய அறிமுகம்