அன்புள்ள அர்விந்த்
கென் வில்பர் பற்றிய உங்கள் புதுக்கட்டுரை சிறப்பாக உள்ளது- தெளிவாக.[பறக்கும் யானையும் மண்ணில் வேரூன்றி நிற்கும் ஒரு பறவையும் – பாகம் 1 ]
இப்போதைய உங்கள் ஆர்வம் கென்வில்பரில் படிந்துள்ளமையால் அதை நீங்கள் கடந்து வரும்போது என்ன நிகழும் என இப்போது நான் பேச விரும்பவில்லை. ஆனால் தர்க்கம் மூலம் உள்ளுளுணர்வை அள்ள முயலும் நிலை மொழி மூலம் மௌனத்தை அள்ள முயல்வதுபோல. எனக்கு அப்படிப்பட்ட கொந்தளிப்பின் ஒரு காலகட்டம் இருந்தது. விஷ்ணுபுரத்தில் அஜிதன் தியானம்செய்யும் இடத்தின் சித்தரிப்பில் அதை புனைவாக ஆக்க முயன்றிருக்கிறேன்.
கென்வில்பர் பற்றி நீங்கள் எழுதியிருக்கும் விஷயங்களை நான் இப்போது படித்துக் கொண்டிருக்கும் தத்துவ விஷயங்களுடன் ஒப்பிட்டு நிறைய பொது விஷயங்களை ஊகிக்கிறேன். இந்து- பௌத்த ஞான மரபில் [சமணமரபில் இல்லை] யோகாத்மத என்று ஒன்று உள்ளது. ஏறத்தாழ யின்யாங் போல, ஏறத்தாழ முரணியக்கம் [டைலடிக்ஸ்] போல. ஆனால் யோகாத்மத என்பது முற்றிலும் மாறானதும் கூட. [யுஜ் என்ற சொல்லாட்சியில் இருந்துவந்தது] அதை டைலடிக்ஸை வைத்து விளக்கலாம், அவ்வளவுதான். இவற்றையெல்லாம் தமிழில் பேச இன்று நம்மிடம் கலைச்சொற்கள் இல்லை. [ஆகவே நான் விரிவாக வேதாந்த கலைச்சொற்களை தமிழில் அறிமுகம் செய்யவிருக்கிறேன்] யோகாத்ம நோக்கு இருந்தால் மட்டுமே பகவத்கீதையை புரிந்துகொள்ள முடியும். உதாரணமாக கீதையில் கர்மயோகம் ஒன்றைச் சொல்கிறது. அதை ‘மறுக்காமலேயே’ பக்தி யோகம் பிறிதொன்றைச் சொல்கிறது. அதை மறுக்காமல் விபூதியோகம் இன்னொன்றைச் சொல்கிறது. இதை உலக சிந்தனைக்கே பொருத்தி யோசிக்க முடியும். இதையே நாராயணகுரு ‘சமன்வயம்’ [முரணிணைவு] என்றார். கென் வில்பர் கூறுவதாக நீங்கள் சொல்லும் அதேவிஷயம்தான். அதாவது சிந்தனைகள் எல்லாமே ஒன்றையொன்று நிரப்புபவை என்ற நோக்கு. இந்த அம்சத்தை விளக்கும் நடராஜகுரு சிந்தனைகளை Vertical, horizontal என்று பிரித்து அணுகுவதைக் காணலாம் அவரது உரையாடலாக தமிழில் வந்துள்ள குருவும் சீடனும் நூலில் அதை அவர் எபப்டி பயன்படுத்துவார் என்பதற்கான உதாரணம் உள்ளது. நான் கலைச்சொற்களை எழுதிய பிறகு விரிவாகவே இவற்றை தமிழில் எழுதலாமென எண்ணுகிறேன். பார்ப்போம்
ஜெ
அன்புள்ள ஜெ:
கென் வில்பர் தொடர்ந்து வலியுறுத்தி வருவது இது – தன்னுடைய எழுத்து ‘பயிற்சிக்கான’ ஒரு அறைக்கூவலே தவிர ‘பயிற்சிக்கு பதில்’ அல்ல. தியானம், யோகம் போன்ற contemplative வழிமுறைகளின் மட்டுமே உண்மையான புரிதல் சாத்தியம் என்றும் கூறுகிறார். ‘Intellect is a good servant but a bad master’ என்பது இவர் அடிக்கடி சொல்லி வருவது. தர்க்கம் மூலம் உள்ளுணற்வை அள்ள வில்பர் முயல்வதில்லை. தர்க்கத்தின் போதாமைகளையே வலியுருத்துகிறார். ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகளில் இன்று இருக்கும் சில தீவிர போக்குகளான நவயுக பௌத்தம் மற்றும் தகர்பமைப்பு பின்நவீனத்துவம் போன்றவை ‘தர்க்கம்’, ‘அறிவு’ (Intellect) என்ற ஒன்றையே உதாசீனப்படுத்துகின்றன. இது நார்ஸிசத்திலும், முழுமறுப்புவாதத்திலும் தான் முடியும். இந்த போக்குக்கு எதிரான ஒரு குரலே வில்பருடையது. ‘அறிவு’ என்பது வெறுத்து, ஒதுக்கத்தக்க ஒன்று அல்ல. அதே போல் அறிவுத்துறைகள் அதிகார மையங்களாக முடிகின்றன என்பதற்கும் ‘அறிவே’ காரணம் போன்ற கொள்கைகள் தவறானவை என்பது வில்பரின் வாதம்.
வில்பரின் கருத்துக்களுக்கும் நம் மரபில் உள்ள கருத்துக்களுக்கும் ஒற்றுமைகள் இருந்தால் அது ஆச்சரியப்பட வேண்டிய ஒன்றே அல்ல. வில்பர் ஒரு தொகுப்பாளரே. வேதாந்தம் மற்றும் தாந்தீரகத்தில் உள்ள பல கருத்துக்களை தொகுத்துள்ளார். நாராயண குருவின் ‘அறிவு’ என்ற புத்தகத்தை ஆங்கிலத்தில் சில மாதங்கள் முன் படித்தேன். அதில் அவர் கூறும் ‘அறிவில் அமர்தல்’ என்பதற்கும் வில்பர் கூறுவதற்கும் பல ஒற்றுமைகள் இருப்பதாகப் எனக்குப் படுகிறது.
*-*-*
வில்பரின் மீது ஏன் எனக்கு ஈடுபாடு ஏற்பட்டது என்று நான் இப்பொழுது யோசித்துப் பார்க்கிறேன்.
ஒரு வருடம் முன்பு எங்கோ இதை படித்தேன் – ஜாதி ஒழிப்பு போன்ற சீர்திருதத்தில் நாற்பதுகளில் ஒருவர் திருவண்ணாமலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். ரமணரின் தீவிர பக்தர். திடீரென ஒரு நாள் இறந்து போனார். ரமணருக்கு செய்தி போயிற்று. ‘முக்தி அடைந்திருப்பாரா?’ என்று யாரோ ஒருவர் கேட்க அதற்கு ரமணர்
மறுப்பு தெரிவிப்பது போல் தலையாட்டி பிறகு ‘ஜாதி ஒழிப்பு போன்ற சங்கல்பம் அவரிடம் ஒட்டிக் கொண்டு இருந்ததே..பிறகு எப்படி முக்தி? என்றாராம். முன்பு இதே போல் நாராயண குரு ரமணரை சந்தித்துச் சென்ற பிறகு ஒருவர் இதே போன்ற ஒரு கேள்வியை கேட்க அதற்கும் ரமணர் ‘சங்கல்பம் உள்ள ஒருவர் ஆத்ம ஞானம் அடைவது கடினம்’ என்றாராம்.
இன்று வரை எனக்கு இது புரியவில்லை. ஏற்றுக் கொள்ள மிகவும் கடினமாக இருக்கிறது. சங்கல்பமே கூடாது என்றால் இந்த வாழ்க்கை தான் எதற்கு?
இதற்கு மறுபுறம் ஓஷோ. ஓஷோவின் கனவுப் பாத்திரம் Zorba the Buddha. லௌகீகமும் ஆன்மீகமும் இணையும் புள்ளி. அப்படி ஒருவனால் வாழ முடியுமா என்பதும் எனக்கு தெரியவில்லை. ஓஷோவின் வாழ்க்கையையே நாம் பார்த்தால் அதில் ‘ஸோர்பா’ தனமே மேலோங்கி இருப்பது போல் எனக்குப் படுகிறது.
இந்த இரண்டு முறைகளையுமே என்னால் மனதார ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ஒரு அடர்த்தியான, தீவிரமான வாழ்க்கையை தன்முனைப்பின் குறுகிய அடையாளத்தை மீறி, அதன் உந்துத ல்களை மீறி வாழ முடியும் என்பது எனக்கு வில்பரின் எழுத்துக்களை படித்த பின் தான் மனதார புரிந்தது.
அஜிதன் தியானம் செய்யும் இடம் என்னை பாதித்தது. அதே அளவு பாதித்தது – யோகவிரதரின், லாமா பிட்சுவின் மரணம். ஆனால் இவைகளை மீறி என்னுள் நிற்கும் கேள்வி – ‘சுடுகாட்டுச் சித்தன் பிறகு என்ன ஆனான்?’ என்பதே.
தங்கள் இணையதளத்தில் உள்ள கலைச்சொற்கள் உபயோகமாக இருந்தது. முதல் கட்டுரை எழுதும் போது அது என் கண்ணில் படவில்லை.
அன்புடன்,
அர்விந்த்
***
அன்புள்ள அரவிந்த்
உங்கள் கடிதத்துக்கு நான் மேலும் விரிவான பதிலை அளிக்க வேண்டியிருக்கும். ஆனால் அதை கீதை பற்றிய கட்டுரைகளில் பிற்பாடு விரிவாக எழுதலாமென எண்ணியிருக்கிறேன். நாராயணகுருவின் அறிவு என்ற நூலை முனி நாராயணபிரசாத் அவர்களின் முன்னுரையுடன் நான் மொழியாக்கம்செய்து சொல் புதிது இதழில் வெளியிட்டிருக்கிறேன். நாராயணகுரு முன்வைக்கும் ‘அறிவு’ என்பது அத்வைதம் கூறும் நிலையே. நாம் அறிவதெல்லாம் நம் அறிவையே, அறியாமையும் ஓர் அறிவே என்று அதை விளக்கலாம். அது உண்மையில் திக்நாகரின் அறிவகவாத பௌத்தம் [விக்ஞானவாதம்] கண்டடைந்த உண்மையின் விரிவாக்கமே. அறிவது அறிவையே என்பதனால் அறிதலென்பதும் இருத்தல் என்பதும் வேறுவேறல்ல என்று திக்நாகர் சொல்கிறார். உங்கள் அறிவு எனது அறிவு என்று பிரிந்துநாம் அறிவதெல்லாம் ஒன்றான பேரறிவே முழுமைப்பேரறிவு [ஆலயவிஞ்ஞானம்] அது மகாதர்மத்தின் ஒரு தோற்றம் என்பது அவர்களின் கொள்கை. அஜிதன் திக்நாகரின் நேரடி மாணவராக விஷ்ணுபுரத்தில் வருகிறான். அவன் பேசுவது திக்நாகர் முதல் நாராயணகுருவரை வரும் அறிவிலமர்தலைப்பற்றி மட்டுமே.
ரமணரைப் பற்றி எனக்கு நிறைய சிக்கல்கள் உண்டு.பலரும் நான் ஏன் ரமணர் பற்றி எழுதுவதில்லை என்று கேட்டிருக்கிறார்கள். நான் அவரை கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறேன். மூன்று ரமணர்கள் நமக்குக் கிடைக்கிறார்கள். பால்பிரண்டன் போன்றவர்களால் நுட்பமாக கவனித்து பதிவுசெய்யப்பட்ட ரமணரின் புறவய ஆளுமை ஒன்று. ரமணரே எழுதிய செய்யுட்கள் வழியாக கிடைக்கும் அவரது அறிதல்கள் ஒன்று. சிதறுண்ட பதிவுகள் வழியாக அவரைப்பற்றி பலரும் எழுதியது. நான் முதல் ரமணரை அவற்றை எழுதியவர்களின் எல்லைகளை கருத்தில் கொண்டு கணக்கில் கொள்கிறேன். இரண்டாவது ரமணரை புரிந்துகொள்ள முயல்கிறேன்.
மூன்றாவது ரமணர் பெரும்பாலும் பிராமணர்களால் அவர்களின் குறுகிய நோக்கங்களுக்கும் சில்லறை ஆசைகளுக்கும் ஏற்ப திரிக்கப்பட்ட ரமணர். அவற்றை எவ்வகையிலும் நான் பொருட்படுத்த நான் தயாராக இல்லை. ரமணரை முழுமுதலில் வடிவம் என்று நிறுவுவது, அவரையன்றி பிறரை நிராகரித்தல், அவர் அனுஷ்டானங்களுக்கு ஆதரவளித்தார் என்று காட்டுதல் என இக்குறிப்புகளில் உள்ள ஜாலங்கள் ஏராளமானவை. அவரை ஒரு மையமாக ஆக்கி மதம் ஒன்றை கட்டி எழுப்புவதற்கான முயற்சிகள் அவை. இதைப்போலவே நாராயணகுருவுக்கும் நிகழ்ந்து வருகிறது.நான் இவற்றை முற்றாக நிராகரிக்கிறேன்.
உதாரணமாக ரமணரிடம் ஒரு பிராமணர் அவ்ந்து ‘நான் ஹனுமார் உபாசனைசெய்கிறேன். செய்யலாமா?’ என்றால் ‘செய்யுங்க்கோ ரொம்ப நல்லது’ என்றுதான் அவர் சொல்வார். அவர் உடனே ரமணர் தனக்கு ஹனுமார் உபாசனைக்கு உபதேசம் தந்ததாக எழுதிவிடுவார். இவ்வாறு ஏராளமான குறிப்புகள் உள்ளன. மேலும் அனுஷ்டானங்களில் ஊறி, சித்தர்கள் முதல் நமது மறைஞான மரபையே ஒட்டுமொத்தமாக நிராகரிக்கும் பிராமணர்களில் பெரும்பாலானவர்களுக்கு பிராமணர் என்பதனாலேயே ரமணர் மேல் ஏற்படும் பக்தி மிக மிக அருவருப்பானது என்பது என் எண்ணம். அந்தக் கண்களை முற்றாக தவிர்த்து ரமணரை அணுகுவது இக்காலகட்டத்தில் மிகவும் சிரமமானது.
சங்கல்பம் உள்ள ஒருவருக்கு ஆத்மஞானம் கிடைக்குமா என்பதற்கு விடையாகத்தான் நம் மரபிலேயே ஆகச்சிறந்த தத்துவ நூல் பதில் சொல்கிறது– கீதை. முடியும் என்று. அது மிகச்சிறந்த வழியே என்று. செயலாற்றுதல் மூலமே செயலைக் கடந்துசெல்ல முடியும் என்று.
ஜெயமோகன்